தமிழக எம்எல்ஏ-க்களின்
ஊதியம் ரூ. 55,000-த்தில் இருந்து ரூ. 1.05 லட்சமாக
உயர்த்தப்படுகிறது. மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியும் ரூ. 2 கோடியில் இருந்து 2.5 கோடியாக உயர்த்தப்படுகிறது. எம்எல்ஏ-க்களின்
ஓய்வூதியமும் ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக
அதிகரிக்கப்படுகிறது.
இப்படி பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தை ஆளும் இந்த அரசு நீடிக்குமா என்ற
நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தக்கவைக்க இருமடங்கு அவர்களின் சம்பளத்தை
அதிகரித்திருப்பது தெளிவாக புலப்படுகிறது.
இதே போன்றதொரு சூழல் மத்திய அரசை தலைமையேற்ற
அன்றைய பிரதமர். பி.வி. நரசிம்ம ராவ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தக்கவைக்க தொகுதி
மேம்பாட்டு நிதி என்று நாடளுமன்றத்தில் திடீரென 23.12.1993 அன்று ஒப்புதல் பெற்று ஒரு அறிவிப்பு
செய்தார்.
முதலில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 1 கோடி என்று அறிவிக்கப்பட்டது. இன்றைக்கு அது
5 கோடி வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதில் கமிஷன்கள் பெற்று கொண்டு நிதியை தனது விருப்பத்திற்கேற்றவாறு
வழங்குகின்றன என்று உச்ச நீதிமன்றம் வரை வழக்கு சென்றது. நரசிம்ம ராவ் நாடாளுமன்ற உறுப்பினர்களின்
ஆதரவை தக்கவைக்க முன்னறிவிப்பு இல்லாமல் நாடாளுமன்றத்தில் இந்த அறிவிப்பின் தாக்கீது யை
வைத்து அவசர அவசரமாக ஒரே நாளில் எட்டு மணி நேரத்தில் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றார். இந்த அறிவிப்பின் மீது பல்வேறு
சந்தேகங்களை உருவாக்கியது. நித்ய கண்டம் பூர்ண ஆயுசு என்ற நிலையில் நரசிம்ம ராவ் அரசு
அன்று இருந்தது. அது போல தான் இன்றைக்கு தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு இரண்டுங்கெட்டான்
நிலையில் உள்ளது.
இன்றைக்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் வறுமையில்
வாடுகிறார்களா? தொகுதி மேம்பாட்டு நிதி வருடத்திற்கு 2 கோடி ரூபாயில் குறைந்தபட்சம்
30 இலட்சம் ரூபாய் கமிஷன், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சி துறை, பசுமை வீடுகள்
திட்டம், மணல் குவாரி என இன்னும் பல வகையில் கோடிக்கணக்கில் வருமானங்கள் எம். எல். ஏக்களுக்கு கிடைப்பது என அனைவருக்கும் தெரியும்.
அடியிற்கண்ட படத்தை பார்த்தால் வேதனையாக
இருக்கின்றது. விவசாயிகள் மாற்று வேஷ்டி கட்ட கூட வழியில்லாமல் கோவணத்தோடு திரிகிறார்கள்.
இன்னொரு படத்தில் மின்சார கம்பம் ஏவுகணையை ஏவுவது போல பல ஆண்டுகளாக தமிழகத்தில் பல
கம்பங்கள் நிற்கின்றன. இதையெல்லாம் கண்ணில்படாமல் எம்.எல்.ஏ க்களுக்கு சம்பள உயர்வை
அள்ளிக் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம். அப்படி எம்.எல்.ஏக்கள் எதாவது சாதித்துள்ளார்கள்
என்றால் அதுவும் இல்லை.
வணிக அரசியலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து, தேர்தலில் வெற்றி
பெற்று, மக்களை வாட்டும் வகையில் வருவாயை ஈட்டிக் கொண்டால் போதுமென்ற மனப்பான்மையை
கொண்ட இவர்களுக்கு மக்கள் பணியை பற்றி எப்படி நினைவுக்கு வரும்.
தகுதியற்றவர்கள், தரமற்றவர்கள் மக்கள் பிரதிநிதி
ஆகும் போது மக்கள் நலனை விட தங்கள் நலனைத் தான் சிந்திப்பார்கள். ஏனென்றால் அரசியலில் தகுதியே தடை.
அராஜக சாம்ராஜ்யங்கள் சரியும் என்பது வரலாற்று
செய்தி.
#தமிழ்நாடு_அரசு
#சட்டமன்ற_உறுப்பினர்கள்_ஊதியம்
#பொது_வாழ்வு
#MLAs_Salary
#Tamil_Nadu
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
19-07-2017
No comments:
Post a Comment