நேற்று (06.07.2017) The Hindu Centre ல் நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள்
மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் நதிகளை இணைப்பது பெரும் பாதிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுவும் தேசிய நதிகளை இணைக்க வேண்டுமென்று முயற்சிகளை மேற்கொண்டு; கே.எல். ராவ் தலைமையில்
இதற்காக குழு அமைத்த இந்திரா காந்தி அவர்களுடைய பசுமைக் கொள்கை நிகழ்ச்சியில் இவருடைய
இந்த பேச்சு முரணாக உள்ளது. அனைத்து தேசிய நதிகளில் ஓடும் நீரை முழுமையாக இணைத்து திருப்பும்
திட்டம் கிடையாது. கடலுக்கு செல்ல வேண்டிய நீரை தவிர்த்து தான் இந்த நதிநீர் இணைப்புத்
திட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரையில் நீராதாரம் இல்லாமல் பெரும் பாதிப்புக்கு
உள்ளாகி வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கின் காரணமாக நதிநீர் இணைப்பின்
சாத்தியங்கள் மெய்ப்பட வேண்டுமென்று உச்ச நீதிமன்றமே ஆணையிட்டுள்ளது. வடபுலத்தில் வெள்ளமும்,
தீபகற்ப இந்தியாவான தக்கான பீடபூமி மற்றும் தென்மாநிலங்கள் வறட்சி சிக்கலில் மாட்டித்
தவிக்கின்றது.
இதற்கு ஒரே தீர்வு, வடபுலத்தில் பாயும் நதிகளில் உள்ள வெள்ள
நீரையும், உபரி நீரையும் திருப்பி அதை சேமித்து பயன்படுத்தும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
இந்த சூழலில் ஜெயராம் ரமேஷின் பேச்சு ஏற்புடையதல்ல. இந்த நிகழ்ச்சியில் இன்னொரு முரண்
என்னவென்றால், தமிழகத்தில் முதன்முதலாக நதிகளை இணைக்க வேண்டுமென்று குரல் கொடுத்தவர்
சி.பி. இராமசாமி ஐயர்.
இவர் யாரென்றால், சென்னை
ராஜதானியின் ஆளுநராக இருந்தவர். இவர் 1920-லிருந்து 1923 வரை சென்னை மாகாணத்தின் தலைமை வழக்குரைஞர் (அட்வகேட்-ஜெனரல்), 1923-லிருந்து 1928 வரை சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் சட்ட உறுப்பினர், 1931-லிருந்து 1936 வரை இந்திய கவர்னர் - ஜெனரல் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்
மற்றும் 1936-லிருந்து 1947 வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்தார்.
மேலும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக பொறுப்புகளில் இருந்தார். நதிநீரை
குறித்து பல செய்திகளை அப்போது ஏடுகளுக்கு எழுதியவர். இவருடைய பேத்தியான நந்திதா கிருஷ்ணனும்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜெயராம் ரமேஷின் கருத்தை ஆதரித்தது வேடிக்கையாக உள்ளது.
இதே அம்மையார் தன்னுடைய பாட்டனார் சி.பி.ஆர் ஆதரித்தார் என்று
பெருமையாக ஊடகங்களில் பேட்டியும் அளித்தார்.
தமிழ்நாட்டில் நதிநீர் ஆதாரங்கள் இல்லை. இந்நிலையில் அண்டை மாநிலங்களும்
நதிநீர் பிரச்சனைகளில் நியாயமாக நடந்துகொள்வதும்
இல்லை. எதிர்காலத்தில் நதிநீர் இணைப்பு தான் தமிழகத்தின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையையும்
நாசப்படுத்துவது தான் ஜெயராம் ரமேஷின் இந்த பேச்சு.
#நதிநீர்_இணைப்பு
#cp_ramasamy_iyer
#river_linking
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07-07-2017
No comments:
Post a Comment