Tuesday, July 18, 2017

தகுதியேதடையா.....?

மூத்த பத்திரிகையாளர்,படைப்பாளி திரு மனாவின் பதிவு:

#தகுதியேதடையா?
மனப்பூர்வமானதொரு அஞ்சலி!!
கழனியூரனுக்கான எளிய அஞ்சலி 
-------------------------------------
நேற்று முன்தினம் சமீபத்தில் மறைந்த கழனியூரனுக்கான நினைவு அஞ்சலிக் கூட்டம் சென்னை கே.கே.நகரில் நடந்தது. தலைமை ஏற்றவர் பொதுவுடமைக் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.நல்லகண்ணு.கூட்டத்தை நடத்தியவர் வழக்கறிஞரும்,நண்பருமான கே.எஸ்.ராதா கிருஷ்ணன்.
அளவான கூட்டம். மனதை நிறைத்த நெகிழ்வான பேச்சுக்கள். நெய்வேலி பாலுவின் கச்சிதமான தொகுப்பு என்று கழனியூரனை நினைவுகூர்ந்தவிதம் சிறப்பு.
" சங்க இலக்கியத்தைப் பதிவு செய்த ஓலைச் சுவடிகளை வாழ்நாள் முழுவதும் தேடி அலைந்து அச்சு வடிவத்திற்கு மாற்றிய உ.வே.சா-வைப் பாராட்டினோம்.விருதுகள் அளித்து மரியாதை செய்தோம்.நல்லது தான்!
அதே சமயம் சாதியப் பிரச்சினைகள் மலிந்த கிராமப் புறங்களில் அலைந்து வாய்மொழி மரபாகக் கிடந்த கதைகளை,சொலவடைகளை,கிராமத்துச் சாமிகளின் கதைகளை எழுதி அச்சுவடிவத்திற்குக் கொண்டு போய்ப் பல நூல்களாகப் பதிவு செய்திருக்கிற கழனியூரனைப் போன்றவர்களுக்குத் தமிழ்சமூகத்தில் என்ன மதிப்பும்,அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது?"என்று பேசிய மணா கிராமங்களுக்குக் கள ஆய்வுக்குப் போகிறபோது கிடைத்த சாதியச் சிக்கல்கள் குறித்தும் பேசினார்.
கழனியூரனுக்குக் காலம் தாழ்ந்தாவது விருதளிக்க வேண்டும் என்றார் கல்கி ப்ரியன். முதல் சந்திப்பின் போது தன்னிடம் காட்டிய அக்கறையைப் பகிர்ந்து கொண்டார் எழுத்தாளரான மதுமிதா. 
பத்திரிகையாளரான சுந்தரபுத்தன் வ.உ.சி.யின் தியாகம் மறக்கடிக்கப் பட்டதைப் போல, கழனியூரனின் பங்களிப்பு மறக்கடிக்கப் பட்டுவிடக்கூடாது என்றார்.
"விருதுகள் எளிதாக வாங்கப்படும் இன்றைய சூழலில்-விருதுகள் ஏதும் பெறாதது தான் கழனியூரனுக்குக் கிடைத்த கௌரவம்"என்றார் கழனியூரனின் நூல்களை வெளியிட்டிருக்கிறவரான காவ்யா சண்முக சுந்தரம்.
கழனியூரனுடன் சுமார் நாற்பது ஆண்டுகளாக நெருங்கிப் பழகிய நண்பரும்,வழக்கறிஞருமான ராதா கிருஷ்ணனின் பேச்சு உணர்ச்சிப் பிழம்பு.
நெல்லையில் முதலில் அவரைச் சந்தித்ததை நினைவுகூர்ந்த அவர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகருடன் நெருக்கமாக இருந்த காலத்தில் கழனியூரன் அறிமுகமானதைக் குறிப்பிட்டார்.
"பிரபாகரனுக்கு கழனியூரன் கிராமிய மண்மணத்துடன் பேசுவது மிகவும் பிடிக்கும்."என்ற கே.எஸ்.ஆர் கி.ரா.வுடனும்,தி.க.சி.யுடனும் கழனியூரன் நம்பிக்கைக்குரிய விதத்தில் பழகிய தருணங்களை நினைவுபடுத்திய தனக்காக அரசியல் களத்தில் கழனியூரன் ஆவேசத்துடன் ஒன்றுகலந்த சந்தர்ப்பங்களைப் பகிர்ந்தபோது அரங்கிலும் அதே நெகிழ்வு.....
#தகுதியேதடையா?

 கே.எஸ்.ராதா கிருஷ்ணன் சமீபத்தில் முன்வைக்கிற கருத்து "தகுதியே ஒரு தடையா?"
அன்றைக்கு மூத்த தலைவரான ஆர்.நல்லகண்ணு அவர்களைச் சுட்டிக்காட்டி " இவரைப் போன்றவர்கள் தேர்தலில் தோற்றதற்குக் காரணம் யார்?"என்றவர் மூத்த அரசியல்வாதியான இரா.செழியன் அண்மையில் மறைந்தபோது குறைந்தபட்ச கால அவகாசம் கூடத் தரப்படாமல் அடக்கம் செய்யப்பட்டதை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார்.
தமிழக அரசியலில் நாடாளுமன்ற வேட்பாளர் தேர்வில் தான் புறக்கணிக்கப் பட்டதை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.
யதார்த்ததில் இது முக்கியமான கேள்வி. இன்றைக்கு நிலவும் தந்திரமானதும்,கேவலமானதுமான நிலையை வெளிப்படுத்தும் கேள்வியும் தான்!
நம்பிக்கையின்மையைப் பட்டவர்த்தனமாக இது  வெளிப்படுத்துகிறது என்றாலும், இந்த நிலை தொடர்வதோ,தொடராமல் போவதும் மக்கள் கையில் தானிருக்கிறது.காலத்தின் கையிலும் கூட!
அண்மையில் தமிழகத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் காமராஜரைத் திறமையும்,நேர்மையுமான முதல்வராகப் பலர் முன்மொழிந்திருப்பது குறைந்தபட்ச ஆறுதல்!
காலப் பெருவெளியில் தகுதி மிக்கச் சிலர் பொதுமறதியை மீறி நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார்கள்.கறை படிந்தவர்களை நிகழ்காலத்தில் சுற்றி இருப்பவர்கள் தங்கள் ஆதாய சுகத்திற்காகத் தூக்கிப்பிடிக்கலாம்! ஆனால் காலம் தூக்கிப் பிடிக்குமா?
தகுதியுள்ளவர்களுக்கு அந்தத் தகுதியே முன்னேறத் தடையாகி விடுகிறதே.ஏன் தமிழக அரசியலிலும்,இலக்கிய உலகிலும் இந்த அவலம்?"என்று கேட்டபோது சுற்றிலும் கனத்த மௌனம்.
நிறைவாக ஆர்.நல்லகண்ணுவின் கனிவான உரை.
" கழனியூரனுடன் பல ஆண்டுகள் பழகியும் அவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது நீண்ட காலம் கழித்தே தெரியும்.அந்தவிதத்தில் தன்னுடைய அடையாளத்தையே வெளிப்படுத்தாமல் இயங்கியவர் கழனியூரன்.கிராமியப் பண்பாட்டைப் பதிவு செய்ய அவர் பட்டிருக்கிற சிரமங்கள் அதிகம். மக்களிடம் சேகரித்ததை நம் முன் விட்டுச் சென்றிருக்கிறார்." என்றார் ஆர்.நல்லகண்ணு.
கே.எஸ்.ஆரும்,டிஸ்கவரி பேலஸ் புத்தக நிறுவனமும்

 இணைந்து நடத்திய இந்தக் கூட்டம் கழனியூரனுக்கான எளிய அஞ்சலி என்றாலும், ஆத்மார்த்தமான முயற்சியும் கூட!

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".