Tuesday, December 8, 2020

 #கிரா_கரிசல்_காட்டுக்_கடுதாசி'யில் இருந்து…

———————————————-




(நாமெல்லாம் காபி, டீ சாப்பிட முடியுமா ; அதெல்லாம் கட்டுப்படி ஆகுற சமாசாரமா ?" என்பார்கள் ஒரு கலத்தில் ......)

"அப்போதெல்லாம் காபி பொடி கிடையாது. காபி வில்லைதான் உண்டு" என்று சொன்னேன். கேட்டவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. "ஏன் வில்லையாக வந்தது?" என்று கேட்டார்கள். "அது தெரியலை. ஒருவேளை, பைசாவுக்கு ஒரு வில்லை என்று விற்பதற்கு வசதியாக இருக்கலாம். அதோடு முதல்முதல் என்பதால் மக்களுக்கு ஒரு அளவு தெரிய வேணுமே, அதுக்காககவும் இருக்கலாம்" என்றேன். "முதல்முதலில் உங்கள் ஊருக்குள் காபி நுழைந்த கதையைக் கொஞ்சம் சொல்லுங்களேன்" என்றனர்.
காலையில் எழுந்திருச்சதும் நீத்துப்பாகம் - நீராகாரம் குடிப்பது என்கிற வழக்கம் இருந்தது அப்போதெல்லாம். இப்பவுங்கூட சிலரிட்டே இருக்கு. நீத்துப்பாகத்துக்குப் பல பெயர்கள் - வட்டாரத்துக்கு வட்டாரம் வேறுபடும் - 'நீச்சுத்தண்ணி' ன்னு கூட சொல்லுவாங்க.
சோற்றை வடிக்கும்போது கிடைக்கும் வடிநீரை ஒரு மண்பானையில் விட்டு, அதில் உப்பும் தண்ணீரும் சேர்த்தால் நீராகாரம். கிடைக்கிற வடிநீரையெல்லாம் பானையில் சேர்த்து வைப்பார்கள். மூன்று நான்கு நாட்கள் வரைகூட அது கெட்டுப்போகாது. நாள் அதிகமாகும்போது புளிப்பு அதிகமாகும். அதுக்குத் தக்கபடி தண்ணிரையும் உப்பையும் சேர்த்து ருசி சமன் செய்து கொள்ளலாம். வெயிலுக்கேற்ற அருமையான பானம். காட்டில் அலைந்து திரிந்து வருகிறவர்களுக்கு உயிர் கொடுக்கும் பானம்.
வடிநீரை ஆற்றிக் குடிப்பதுண்டு சற்று சூடாக. ஒவ்வொரு வகை அரிசியின் மணமும் அதில் மணக்கும். குதிரைவாலி அரிசி, வரகரிசி, தினையரிசி, காடைக்கண்ணியரிசி இப்படி. அனைத்திலும் ருசியும் மணமும் கொண்டது நெல்லரிசியின் வடிநீர்தான் என்று சொல்ல வேண்டியதில்லை. கடும்பசியினால் ஏற்படும் ஆயாசத்தைக் குறைக்க இந்தவகை நீராகாரங்கள் ரொம்பப் பயன்படும் செலவில்லாத பானங்கள். உடம்புக்கு நலம் தரும் இவற்றின் இடத்தை இப்போது காபியும் டீயும் வந்து பிடித்துக் கொண்டுவிட்டன.
காபி, டீ வந்த புதுசில் அவற்றைப் பாவித்தவர்கள் செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். "நாமெல்லாம் காபி, டீ சாப்பிட முடியுமா ; அதெல்லாம் கட்டுப்படி ஆகுற சமாசாரமா ?" என்பார்கள் மற்றவர்கள்.
இப்போது காபி,டீ இல்லாத வீடே கிடையாது என்றாகிவிட்டது. எங்கள் ஊரில் முதல்முதலில் யார் வீட்டில் 'காபி' சாப்பிட்டார்கள் என்பது ஒரு ரெக்கார்டாகவே இன்னும் பேசப்படுகிறது. காபியும் டீயும் வெகுஜன பானமாக ஆரம்பித்த போது நடந்த சுவையான விஷயங்கள் பற்றியும் பேச்சு வரும்.
திருவாளர் மேயன்னா வீட்டில் அவர் காபி குடிக்கிற லெச்சணம் இதோ : சாப்படு முடிந்த கையோடு அதே கும்பாவில் - கழுவக்கூடச் செய்யாமல் - அதில் காபியை ஊற்றச் சொல்லி, கும்பாவோடு எடுத்துக் குடிப்பார். அந்தக் கும்பா ரண்டு லிட்டருக்கு மேலேயே கொள்ளும் ! இப்படிக் கும்பாவோடு குடித்தால் தான் நிறைவு. "எங்க வீட்லே தெனமும் ரண்டு தரம் காபி போட்டாகணும் !" என்கிற பெருமை வேறு இதில்.
திருவாளர் கீயன்னா வீட்டில் அவர் காபி சாப்பிடுகிற 'அளகு' இதோ : கீயன்னா வீட்டின் உள் திண்ணையில் அமர்ந்திருப்பார். அவருடைய இல்லாளு ஒரு லோட்டாவில்( லோட்டா என்பதும் டம்ளர் தான். ஆனால் பெரிசு. 600 முதல்700 மில்லி வரை கொள்ளும். லோட்டாவின் விளிம்பு டம்ளரின் விளிம்பு போல மடக்கி விடப்பட்டு இருக்காது) முக்கால் லொட்டா காபி கொண்டுவந்து வைக்கிறாள். பக்கத்தில் இன்னொரு லோட்டாவில் குளிர்ந்த தண்ணீரும் கொண்டுவந்து வைக்கிறாள். விரல் இடுக்கில் கீயன்னா 'சிம்டா' பிடித்திருந்த சேலம் பொடியைத் தனது பல்லில் இழுகிக் கொண்டு விட்டு, காபி உள்ள லோட்டாவுக்குள் லேசாக விரலை விட்டுப் பார்க்கிறார். காபி சுடுகிறது.
சூட்டைத் தணிக்க கொஞ்சம் குளிர்ந்த தண்ணீரை அதில்விட்டு(!) திரும்பவும் விரலை விட்டுப் பார்க்கிறார். இன்னும் காபி சூடாகவே இருப்பதாகப் படுகிறது. மேலும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றுகிறார் காபியில். இப்போது விரலைவிட்டுப் பார்த்ததில் பாந்தமாகத் தெரிகிறது. காபியை எடுத்துக் குடிக்கிறார். காபியின் இந்தச் சூட்டைத் தணிக்கும் பழக்கம், அவருக்கு வெந்நீரில் பச்சைத் தண்ணீரை விட்டு விளாவிக் குளிப்பதிலிருந்து வந்தது என்று தெரிந்துகொள்ளலாம்.
இலையில் சாதம் சாப்பிடச் சாப்பிடப் பரிமாறிக் கொண்டிருப்பதுபோல, அந்தக் காலத்தில் எங்கள் ஊர்களில் காபியும் குடிக்கக் குடிக்க ஊற்றிக் கொண்டேயிருப்பார்கள். 'முடியாது' என்றாலும் லேசில் விடமாட்டார்கள். சாதம் ரெண்டாந்தரம் (தடவை) கட்டாயம் வாங்கிக் கொள்ளவேணும் என்று 'சாஸ்திரம்' இருப்பதுபோல காபிக்கும் உண்டு. மறுத்தால் வீட்டுக்காரரை விருந்தாளி அவமதிப்பது போல. (இப்பேர்பட்டவர்கள் ஹோட்டல்களில் முதல்முதலில் அளவுச்சாப்பாடு என்று ஒரு 'உண்டக்கட்டி'யைக் கொண்டு வந்து வைத்தபோது அதிர்ந்துபோனார்கள் என்பது இன்னொரு கதை. நன்றாகச் சாப்பிட்டவர்களைப் பார்த்துச் சந்தோஷப்பட்ட காலம் அது !)
'பில்டர் காபி'யெல்லாம் அப்போது கிடையாது. ஒரு வட்டுக் கருப்பட்டி - பனைவெல்லம் எடுத்து, அதை ரெண்டு மூணு துண்டுகளாக ஆக்க தரையில் ஓங்கித் தட்டி, பானையில் சுடு தண்ணீரில் போட்டு, கணிசமாக காபிபொடியோ, தேயிலையோ போட்டு, கொதிக்கவிடப்பட்ட அந்தப் பானை அப்படியே ராத்திவரை அடுப்பின் மேலேயே உட்கார்ந்திருக்கும். (மத்தியில் மத்தியில் தூளையும் கருப்பட்டியையும் போட்டுக் கொள்கிறதுதான்). வேண்டிய அளவு அதிலிருந்து எடுத்துப் பால் கலந்து கொடுப்பார்கள். பாலும் கருப்பட்டியின் இனிப்பும் கலந்த ஒரு பானமாகவே அது இருக்கும். கொஞ்சம் காபி அல்லது தேயிலை வாடையும் இருக்கும் !
வீட்டுக்கு யார் வந்தாலும் காபியைக் கொண்டு வந்து நீட்டி 'குடி…குடி…' என்று பிராணனை வாங்குவார்கள். இப்பதான் இன்னார் வீட்டில் காபி குடித்தேன் என்று சொன்னாலும் விடுவதில்லை. "அட, சும்மா சாப்பிடப்பா ; ஒரு நேரம் உக்காந்து எந்திரிச்சா போச்சி" என்பார்கள்! வருகிறவர்களை ஏன் இப்படி உபத்திரவப்படுத்த வேண்டும் என்று பேசாமல் இருந்துவிட்டால், "அவன் வீட்டுக்குப் போனேன்; ஒரு மடக்கு காபி குடின்னுகூட சொல்லலை பாத்துக்கோ" என்றும் சொல்வார்கள்.
வீடு தவறாமல் இப்போது இப்படிப் புழங்கும் காபியையும் டீயையும் மக்களுக்கு மத்தியில் பிரபலப்படுத்த - காபித்தோட்ட, தேயிலைத்தோட்ட அதிபர்கள் - என்னவெல்லாம் 'உக்கிக்கரணம்' போட்டார்கள் என்கிற விஷயம் இப்போதைய தலைமுறையினருக்குத் தெரியாது.
சிறு பையனாக நான் இருந்தபோது ஒரு நாள், பாட்டியோடு கோவில்பட்டிக்குப் போயிருந்தேன். கிருஷ்ணன் கோயில் தேர் நிலை கொண்டிருக்கும் தெருவில் எங்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டில்தான், நாங்கள் அங்கே போகும்போதெல்லாம் தங்குவது.
அன்று மத்தியானம் ஒரு மணியிருக்கும். ஒரு ஆள் அவர்கள் வீட்டுக்கு வந்து, "விருந்தாட்கள் யாராவது வந்திருக்கிறார்களா ?" என்று கேட்டார். "ஆமா ரண்டு பேர் வந்திருக்காஹெ" என்று வீட்டிக்காரர்கள் சொன்னார்கள். அவர் அதைக் குறித்துக்கொண்டார். எனக்கு இது வேடிக்கையாக இருந்தது. காரணம், 'விருந்தாளியை அறுத்துக் கறி வை' என்று வேடிக்கையாகச் சொல்லப்படும் கதை ஞாபகத்துக்கு வந்தது !
மத்தியானச் சாப்பாடு முடித்துப் பெரியவர்கள் ஓய்வாகப் படுத்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தார்கள். அப்போது 'விருந்தாட்கள் வந்திருக்கிறார்களா?' என்று கேட்டுவிட்டுப் போன அந்த ஆள், ஒரு பெரிய பாத்திரத்தில் சூடாக டீ கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போனார்.
பிறந்தாம் பிறப்பிலேயே அன்றைக்குத்தான் நான் முதல்முதலில் டீ குடித்தது. குடிக்க ரொம்ப ருசியாக இருந்தது ! பாட்டி, "அந்தச் சனியனை நான் தொடவே மாட்டேன்" என்று சாதித்து விட்டதால், அவள் பங்கு டீயும் எனக்கே கிடைத்தது.
பிறகு வீட்டுக்காரர்கள் விவரத்தைச் சொன்னார்கள். சாய்ந்திரம் சாய்ந்திரம் இப்படி மணி டாண் என்று நாலு அடித்ததும், சூடாக டீ வந்துவிடுமாம் இனாமாக ! அடை மழை பிடித்துப் பெய்தாலும், டீ அந்த நேரத்துக்கு வந்துவிடுமாம்.
நான் தெருவில், சிறுவர்கள் கண்ணாடிக் கோலிகள் வைத்து விளையாடிக் கொண்ட்டு இருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தாலும், என்னுடைய எண்ணம்…ஊருக்குப் போகிற "மோட்டார் கார்" - பஸ் - பேரில்தான் இருந்தது. 'எப்படா சாய்ந்திரம் வரும்' என்று காத்துக் கொண்டிருந்தேன். சாய்ந்திரம் ஆனதும் பஸ் ஸ்டாண்டில் போய்த் தகவல் சொன்னால் போதும்… எங்களை ஏற்றிக்கொண்டுபோக நாங்கள் இருக்கும் இடத்துக்கே பஸ் வந்துவிடும். இது எங்களுக்கு மட்டுமில்லை...யார் சொன்னாலும் அவர்கள் இருக்கும் இடம் தேடி பஸ் வந்துவிடும்.
ஊருக்குப்போய் எந்த இடத்தில் நீங்கள் இறங்க வேண்டுமோ, அந்த இடத்துக்கே - பஸ் வருகிற அளவுக்கு ரோடு வசதி இருக்குமானால் - கொண்டுவந்து இறக்கி விட்டுவிட்டுப் போவார்கள். நம்ப முடிகிறதா இதை உங்களால் ? இப்போ செய்கிற மாதிரி நம்மை பஸ் ஸ்டாண்டில் கொண்டுவந்து அம்போ என்று இறக்கி விட்டுவிடாது அந்தக் காலத்திய பஸ் !

பஸ் அதிபர்கள் மக்களைப் பஸ்ஸில் ஏற்றிப் பழக்குவதற்கு அப்படி அரும்பாடுபட்டார்கள். நடந்து போகிற மக்களை, எப்படியாவது பஸ்ஸில் பயணம் செய்ய வைத்துவிடவேண்டும் என்கிற வேகம் அவர்களுக்கு. ரோட்டில் நின்று கொண்டிருந்தாலே போதும்… பஸ்ஸை நிறுத்தி "ஏறிக்கொள்கிறீர்களா' என்று கேட்ட பஸ், இப்போது நிப்பாட்டச் சொல்லி ரண்டு கைகளை நீட்டினாலும் நிற்பதில்லை. சாட்சாத் அந்த திருவள்ளுவரே வந்தாலும் திருவள்ளுவர் பஸ் அவருக்கு நிற்காது !
டீயையும் காபியையும் ஜனங்களிடம் இனாமாகக் கொடுத்துப் பழக்கினார்கள் சிரம்ப்பட்டு என்று சொன்னேனல்லவா, அப்போதெல்லாம் அழகழகான டப்பாக்களிலும் டின்களிலும் விலை ஒசந்த டீயை மலிவு விலைக்கு விற்றார்கள். சாம்பிள் பாக்கெட் என்று சொல்லி, கேட்டவர்களுக்கெல்லாம் கேட்ட போதெல்லாம் இனாமாகத் தந்தார்கள். அந்தத் தேயிலையின் ருசி இப்போது வருகிற தேயிலையில் இல்லைதான். என்னவென்று விசாரிக்கிறபோது, 'அந்த மாதிரி தரமான தேயிலையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிடுகிறார்கள்' என்று சொல்லுகிறார்கள்.
ரொம்ப அநியாயம்தான் ! 'சாப்பிடு..சாப்பிடு..' என்று கொடுத்ததைக் கண்ணிலே காட்டாமல் இருப்பதும், 'ஏறு..ஏறு..' என்று தாங்கிவிட்டு, இப்போது இடம் இருந்தாலும்கூட நிற்காமல் பஸ் போவதும் காலக்கொடுமைதானே !

-கிரா(கரிசல்_காட்டுக்_கடுதாசி)

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
11.05.2020.
#ksrpost 

No comments:

Post a Comment

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது இன்று

———————————————————-  இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து. இதில்   தமிழர்கள்    அதிகம்   வாழும்பகுதி யாழ்ப்பாணம்   இங்கு   6. எம்பிக்கள்,...