Wednesday, December 9, 2020

 #வெள்ளாமை (#நாவல்#கரிசல்_காட்டு #சம்சாரிகளின்_பாடு

*#பெ_மகேந்திரனின்வெள்ளாமை*

————————————————





‘’வெள்ளாமை’’,வானம் பார்த்த கரிசல் காட்டில் வாழும் விவசாயக் குடும்பத்தைப் பற்றிய புதினமாக சிவகாசி அருகேயுள்ள புலிப்பாறைப்பட்டி கிராமத்தில் பிறந்த பெ. மகேந்திரன் அற்புதமான படைத்துள்ளார்.மதுரையில் இருந்து செம்மலரின் முன்னாள் ஆசிரியர் அண்ணன் எஸ். ஏ. பெருமாள் படித்துவிட்டு அற்புதமான படைப்பு என்று தொலைபேசியில் என்னிடம் சிலாகித்தார். திரு. மகேந்திரன் அவர்களும் வெள்ளாமை படைப்பை அனுப்பி வைத்திருந்தார். படிக்க ஆரம்பித்தவுடன் அதை இறுதி வரை படித்து முடிக்காமல் அதை வைக்க முடியவில்லை.

கி.ரா வின் கோபல்ல கிராமம், வடக்கே ஆந்திரத்திலிருந்து இங்கே வந்து தங்களுக்கான பணிகளை செய்து, இந்த மண்ணில் ஜீவிக்க வேண்டும் என்று இருத்தலை நியாயப்படுத்தக் கூடிய கடமைகள் ஆற்றிய ஒரு குடும்பத்தைப் பற்றி சொல்கின்ற கதையாகும். கோபல்லபுரத்து மக்கள் என்பது விவசாய பூமிகளில் பயிர் செய்து பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் விவசாயத்தில் தாங்கள் பட்ட பாடுகளை சொல்வதாகும். நாட்டில் விடுதலைப் போராட்டம். காங்கிரஸ், காந்தி, பகத்சிங் பற்றியும் விடுதலைப் போராட்ட தரவுகளைப் பற்றிச் சொல்வது தான் கோபல்லபுரத்து மக்கள்.

அந்தமான் நாயக்கர் என்பது சிறைக்குச் சென்று விடுதலையாவது என்ற கடந்த கால சங்கதிகளைச் சொல்லுகின்ற 3 தொகுதிகளாக அமைந்தது. கோபல்லபுரத்து மக்கள் என்ற படைப்புக்கு தான் கிராவுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

அந்தமான் நாயக்கர் என்ற புதினத்தின் காலத்திற்குப் பின் மையப்படுத்தக் கூடிய வகையில் கரிசல் காட்டு விவசாயியின் பாடுகளை சொல்கின்றது இந்த வெள்ளாமை. விவசாயத்தை எப்படி கண்ணும் கருத்துமாக பல சிக்கல்களுக்கு மத்தியில் கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பது தான் இந்தக் கதையின் போக்கு. மழை பெய்வது, உழவு, கிடை, விதைத்தல், பயிரை களைகளிலிருந்து பாதுகாத்தல், கொளஞ்சி இயற்கை உரங்கள் போடுதல் இப்படித்தான் பருத்தி, மிளகாய், எள், வேர்க்கடலை, உளுந்து, சோளம், குதிரைவாலி, பருப்பு வகைகளை கரிசல் காட்டு விவசாயிகள் விளைவிப்பார்கள். மாடுகள், கோழிகள், நாய்கள் என்பதும் முக்கியமான அங்கமாகத் திகழும்.

இந்த வெள்ளாமை நாவலின் சுருக்கம் என்னவெனில்,தொலைக்காட்சிகள் கிராமப்புறத்திற்கு வருவதற்கு முன் 1975 வரை கரிசற்காட்டின் நடுத்தர சம்சாரியின் விவசாய குடும்ப கதையாடல் ஆகும். பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் இந்த குடும்பத்தில் இந்த கதையின் நாயகர் பெரியவர். இவருக்கு மூன்று மகன்கள், மூத்தவர் வரதன், அடுத்தவர் கோபால், இளையவர் சுப்புராஜ். மகளை பக்கத்து கிராமத்தில் திருமணம் செய்து வைத்திருந்தார். வரதனுக்கு திருமணமாகி ஒரு மகன் உண்டு. அவனை ராஜாராம் என்று பெரியவரிடம் தாத்தா தாத்தா என்று ஒட்டிக் கொண்டு இருப்பான். பெரியவர் தன் பேரனுக்கு விட்லபட்டரின் கதைசொல்லி போற்றி வளர்க்கிறார்.
வரதனும் கோபாலும் பெரியவரோடு சேர்ந்து விவசாய வேலைகளை கவனித்துக் கொண்டு வந்தார்கள். மூன்றாவது மகன் சுப்புராஜ் நகரத்தில் படித்துக் கொண்டிருந்தார். இந்த சூழலில் அந்த கிராம வட்டாரத்தில் தீப்பெட்டி ஆபிஸ் என்று சொல்வார்கள், அப்படி தீப்பெட்டி ஆலைகள் உருவாகிக் கொண்டிருந்தன. விவசாய வேலைக்கு கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. இப்படியான பல சிக்கல்களுக்கிடையே மிளகாய், பருத்தி பயிர்செய்து வந்தார். விவசாய கிணற்றில் நல்ல தண்ணீர், கமலைகளும் உண்டு. மானாவாரி விவசாயமாக இருந்த இந்தப் பகுதி தீப்பெட்டி தொழில் எட்டிப் பார்த்தவுடன் விவசாயம் சிறுக சிறுக அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டது. பெரியவர் மனவேதனைப் பட்டார். அவருடைய சகாவான சுப்பன் ஆசாரி நன்றாக பாடுவார், அவரிடம் மன வேதனைகளை கொட்டித் தீர்ப்பார். பெரியவரின் நண்பர் அவர் அடிக்கடி “புட்டுதயு நிஜமு…நட்டநடு நீபனி நாடகமு….” (பிறப்பும் நிஜமே இறப்பும் நிஜமே—இறப்பும் நிஜமே—இடையில் நாம் செய்வதெல்லாம் நாடகமே) இது பண்டைய லோகாயதவாதிகளின் கருத்தை ஆதிசங்கரர் சுவீகரித்தே–புனரபி ஜனனம்–புனரபி மரணம்–புனரபி ஜனனே ஜடரே சயனம் என்றுார். அதையே இந்தத் தெலுங்குப்பாடலும் உரைக்கிறது.

பெரியவருடைய மனைவி கோப்பம்மாள் பக்குவமான கைருசியோடு சமையல் செய்யக் கூடியவர். அவருடைய பேரன் ராஜாராம் தான் உருதுணை, ஆறுதல். பெரியவருடைய மருமகன் வெங்கடேசன் கோபாலை தீப்பெட்டி ஆபிஸ் ஆரம்பி என்று தூண்டில் போட்டு தீப்பெட்டி ஆலையும் திறக்கப்பட்டது. இப்படியே நாட்கள் போக தன் கடைசி மகன் சுப்புராஜ் படித்து வேலைக்கு கோயமுத்தூருக்கு சென்று விட்டான். அவரோடு இருந்த பேரன் ராஜாராமனும் கல்லூரியில் படிக்க கோயமுத்தூர் போய் விட்டான். கோபால் தீப்பெட்டி ஆலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மூத்த மகன் வரதன் இவரோடு விவசாயத்தை கவனித்து வந்த போது ஜோடி மாட்டில் ஒரு மாட்டை விற்று விடலாம் என்று சொன்ன போது பெரியவருக்கு பகீரென்று ஆனது. நம் காலத்திலேயே விவசாயம் அழிகின்றதே. நிலைமை நம் சக்திக்கு மீறி செல்கின்றதே என்ற வேதனையில் தனிமைப்பட்டுள்ளதாக தன் மனைவியிடம் சொல்லாமல் தவித்தார் பெரியவர். ஆனால் ஊரில் சைக்கிள், மோட்டார் பம்ப் வந்து சுவேகா என்ற போக்குவரத்துக்கு பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இப்படியாக கதையின் போக்கு போகின்றது. எல்லாம் நகரமயமாக்கல் என்ற நிலைக்கு தள்ளப்பட்டதால் பெரியவரின் மனதிற்குள்ளேயே வாட்டம் ஏற்பட்டது. அவருடைய சகா சுப்பன் ஆசாரி திடீரென இறந்தவுடன் மேலும் ரணப்பட்டார். ஏதோ நிலையில்லாத நிலை என்ற சூழல் வந்துவிட்டது எதுவும் சரியில்லை என்ற சிந்தனையோடு நடமாடிக் கொண்டிருந்தார் பெரியவர்.

ஒரு தைப் பொங்கல் நாளில் பேரன் மகன்களெல்லாம் வீட்டுக்கு வந்து பொங்கலைக் கொண்டாடினார்கள். விசேஷமாக கிடைப்பொங்கல் தன் குடும்பத்தார் மட்டுமல்லாமல் கிராமத்தரோடும் தன்னுடைய தோட்டத்திலே பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.

கடைசி வரை வைராக்கியமாக காடை தரிசாக போடாமல் விளைச்சல் நிலமாக மிளகாய் பருத்தி சாகுபடி செய்துக் கொண்டிருந்தார். அடுத்த நாள் தன் குடும்பத்தாரோடு வேலையாட்கள் கிடைக்காமல் மிளகாய் பருத்தியை மனைவி, மகன்கள், மருமகள்கள், பேரன் மற்றும் வேறு சில வேலையாட்களை வைத்து மிளகாயை பிடுங்கியும் பருத்தி எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் கிணற்றுக் கமலைக் கல்லில் உட்கார்ந்திருக்கும் போது கண்ணை மூடிவிட்டார் பெரியவர்.

புது விதமான உணவுகள் வருவதும் பழைய கஞ்சி களி மறைவதையும் கதை கூறுகிறது. மக்கள் தங்கள் கிராமவாழ்விலிருந்து புதியஎந்திரக் கைத்தொழிலில் இறங்குவதும் பழைய வாழ்க்கை அடியோடு மாறுவதும் தவிர்க்கமுடியாது என்ற நிதர்சனத்தை நாவல் காட்டுகிறது.

பெரியவர் காலத்தில் நிலங்கள் தரிசாக இல்லாமல் பச்சை பசேலென்று விவசாயம் செய்து விட்டு தான் மறைந்தார் என்று ஒரு கரிசல் காட்டு விவசாயியின் மனத் திடத்தை சொல்கின்ற பாங்கு இந்த புதினத்தின் ஆசிரியர் பெ. மகேந்திரன் உணர்ச்சிபூர்வமாக சொல்லியுள்ளார். இது தான் இன்றைய கரிசல் வட்டாரத்தின் நிலை.

இந்த கிராமத்தில் காங்கிரஸ்காரர்களும் பொதுவுடைமை கட்சிக்காரர்களும் இருந்தார்கள். குருசாமியை குருசேவ் என்று ஓமாந்தூரார் கடை என்றெல்லாம் அரசியல் குறியீடுகள் இந்த கதையில் வருகின்றன.

கி. ரா குறிப்பிடுவதைப் போல சுளுவா, யாவகம், கொடாப்பட்டி (கடகம்), குறுக்கம், தொலவட்டு, அல்லாட்டம், ரோசனை, பிக்கூறு மிளகாய் போன்ற கரிசல்காட்டு வட்டார மொழியின் பல சொற்கள் இந்த புதினத்தின் ஆசிரியர் கையாண்டுள்ளார். தீம்புலிப்பாகரில் இது குறித்து தமிழ் இலக்கியம் குறுந்தொகையில் 167வது பாடலாக சொல்லப்பட்டது. இந்த தீம்புளிப்பாகரில் வெல்லம், புளிப்பி, கசப்பு ஆகிய சுவைகள் உள்ளடங்கிய குழம்பாகும். பெரியவரின் மனைவி இந்த தீம்புளிப்பாகரில், சோள தோசை, மோர் கலந்த கம்புகஞ்சி,அதே போல திருவிழாக் காலங்களில் இட்லி, தோசை, பணியாரம், முந்திரிக் கொத்துப் போன்றவை மற்றும் எள்ளை கணக்கோடு சேர்த்து பக்குவமாக இட்லி மிள்காய்ப் பொடியினை செக்கு நல்லெண்ணெய்யோடு சேர்த்து சாப்பிட்டால் அதுக்கு ஒரு தனி சுவையுண்டு. பில்டர் காபி, டீ போன்றவற்றை பெரிய டம்ளரில் வாசனையோடு தருவதில் பெரியவருடைய மனைவி கோப்பம்மாளுக்கு கைப் பக்குவத் திறமை உண்டு. கோப்பம்மாள் கம்புகுத்தி காய்ச்சுவதும் அதற்கான குழம்பு வைப்பதிலும்–கேப்பைக்களி கிண்டுவதிலும் அதைப் பரிமாறுவதிலும் களியின் மையத்தில் குழி தோண்டி நல்லெண்ணையும் வெல்லமும் சேர்த்து உண்ணும் சுவை அலாதியானது. இவையெல்லாம் அந்தக் காலத்தில் கரிசல் காட்டின் சில உணவு வகையறாக்கள் என்பதை நூலாசிரியர் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

இந்த நாவலைப் படித்து முடித்தவுடன் சில காட்சிகள் 1950-60களில் கிராமத்தில் நான் பார்த்த நிகழ்வுகள் மங்கலாக நினைவுக்கு வந்தன. காலச் சக்கரம் வேகமாக ஓடி விட்டது. அது ஒரு சுகமான வாழ்க்கை, நேர்மையான நல்ல அப்புராணி மனிதர்கள் கிராமங்களில் வாழ்ந்த காலம். அதை நாம் எண்ணிப் பார்க்கலாம். அந்த நிலைமை இன்றைக்கு வருமா என்பது சாத்தியமற்றது.

இந்தக் கதையினை படிக்கும்போது நானறிந்த வகையில் சிவகாசி, திருத்தங்கல், சாத்தூர் ஒட்டிய பகுதியைச் சார்ந்த குட்டி கிராமத்தில் இந்தக் கதையின் களம் அமைந்துள்ளது.

இராஜபாளையம், ஸ்ரீவில்லிப் புத்தூர், ஆலங்குளம் சிமெண்ட் ஆலை, கோவில்பட்டி, சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர் என்ற ஊர் பெயர்களும் ஆங்காங்கே சொல்லப்படுகின்றன. கரிசல் காட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கிராவைப் பின்பற்றி பெ. மகேந்திரன் எழுதிய இந்த வெள்ளாமை புதினத்தைக் கொண்டாட வேண்டும், படிக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் இரண்டு மூன்று சங்கதிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தொடர்புண்டு.

1)சிவகாசி வட்டாரத்தில் உள்ள தீப்பெட்டித் தொழிற்சாலையில் குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துகின்றனர் என 1970களில் பிரச்சினை எழுந்தன. இதை ஆராய மைசூரைச் சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவராக இருந்த குருபாதசாமி, பின்பு, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பிரிட்டீஷ் ஹை கமிஷ்னராக இருந்து உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எல். எம். சிங்வி தலைமையில் சிவகாசி குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி ஆராய இரண்டு குழுக்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்து. அதில் நான் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்தேன். தமிழக அரசு இது குறித்து ஹர்பன் சிங் ஐஏஸ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் தீப்பெட்டி தொழிலால் சிவகாசி வட்டாரத்தில் விவசாயம் எப்படி பாதிக்கப்பட்டது என்பதற்கான தரவுகள் சொல்லப்பட்டிருந்தன.

2)சிவகாசி ராஜபாளையம் இடையில் உள்ள ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையால் வரும் புகை தூசு மாசினால் அந்த வட்டாரத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டது. 1970ல் இருந்தே அந்த வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. மிளகாய், பருத்தி மற்றும் விவசாயப் பயிர்கள் அனைத்தும்மே நாசமாகியது. எனவே இந்த நிலையைப் போக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் 1983ல் நான் தொடுத்த பொதுநல வழக்கின் உத்தரவின் பேரில் இரண்டு மாதங்கள் அந்த ஆலை மூடப்பட்டு 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அப்போது தூசி வெளியேறாமல் இருக்க ETPS அமைக்கப்பட்டது. ஆலங்குளம் சிமெண்ட் ஆலை பழைய கால முறைப்படி dry processல் இயங்கும் ஆலை ஆகும். நவீன படுத்தாமல் நிர்வாகம் காலம் கடத்தி வருகிறார்கள். இதுவரை இந்த ஆலையை குறித்து பொது நல வழக்குகள் இரண்டு முறை தொடுத்துள்ளேன். இந்த ஆலையினால் விவசாயத்திற்கு ஏற்படும் பாதிப்பைக் கண்டு இந்த கதையில் பெரியவர் பெரும் வேதனைப்படுகின்றார்.

3)உச்ச நீதிமன்றத்தில் கங்கை-மகாநதி-கிருஷ்ணா-காவிரி-வைகை-தாமிரபரணி-குமரி மாவட்ட நெய்யாறோடு தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்றும் என்னுடைய வழக்கில் இன்றைய விருதுநகர் மாவட்டம் பயன் பெறும் வகையில் அழகர் அணைத் திட்டமும் மற்றும் கேரளாவில் இருந்து அச்சன்கோவில் – பம்பை நீர்ப்படுகை நீரை சாத்தூர் வைப்பாற்றோடு இணைக்கும் திட்டமும் என்னுடைய கோரிக்கையாக மனுவில் குறிப்பிட்டிருந்தேன். இந்த நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேறினால் தெற்கே தென்காசி, திருநல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமல்லாமல், வடக்கே மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வரை பயன்பெறும்.

இந்த இரண்டு திட்டங்களுமே இந்த வெள்ளாமை நாவலில் சொல்லப்பட்டிருந்த வட்டாரத்திற்கு வளம் சேர்க்கும் திட்டங்களாகும்.

இந்த கதைப் போக்கில் சொல்லப்பட்ட செய்திகள் மனதை ஈர்த்தது.
கொங்கு மண்டலத்தில் அமராவதி, பவானி, பி ஏ பி போன்ற பல பாசன வசதிகள் கொண்ட விவசாயம் வேறு, திருச்சி தஞ்சை காவிரி டெல்டா பாசன விவசாயம் வேறு, தேனி மதுரை வைகை பாசன விவசாயம் வேறு, தாமிரபரணி பாசன விவசாயம் என்பவையெல்லாம் தீராவாசம் என்ற செழுமையான விவசாயமாகும். ஆனால் கரிசல் காட்டு விவசாயம் என்பது மழை தண்ணீர் இல்லாமல் வெக்கை வெயிலில் வியர்வை சிந்தி வேதனையை அறுவடை செய்யும் நிலை தான் கரிசல் காட்டு விவசாயி. அந்த விவசாயி தான் வெள்ளாமை புதினத்தில் சொல்லப்பட்ட பெரியவர் என்ற அப்பிராணி.

அன்புக்குரிய சகோதரர் பெ. மகேந்திரன் அருமையான படைப்பை பல தரவுகளோடு தான் பிறந்த கரிசல் மண்ணுக்காக படைத்துள்ளார். காவல்துறையில் உயரதிகாரியான இவர் தமிழ் ஆசிரியர் பெருமாள்சாமியின் மகன் ஆவார்.

கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்களான, கி. ராஜநாராயணன், கு. அழகிரிசாமி என்ற ஆளுமைகளை பின்பற்றி இந்த வட்டார பேச்சு வழக்கான புதினங்கள் குறிப்பாக இன்றைய விருதுநகர் மாவட்டம் திருநல்வேலி -சங்கரன்கோவில் பகுதி, தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், இராமநாதபுரம் மாவட்டத்தின் சாயல்குடி, முதுகுளத்தூர் வரை, விருதுநகருக்கு வடக்கே திருமங்கலம் வரை கரிசல் வட்டாரமாகும். இங்கே எத்தனையோ கரிசல் வட்டார படைப்பாளிகள் அதில் புதிதாக
பெ. மகேந்திரனும் அந்த படைப்பாளிகளின் பட்டியலில் இணைந்தது மகிழ்ச்சியான விஷயம் தான்.

தீபம் நா. பார்த்தசாரதி, பன்மொழிப் புலவர் ராஜபாளையம் ஜெகந்நாத ராஜா, தனுஷ்கோடி ராமசாமி, , மேலாண்மைப் பொன்னுச்சாமி, நாச்சியார்பட்டி சுபகோ , வீர வேலுச்சாமி, எஸ். ராமகிருஷ்ணன், எஸ். ஏ. பெருமாள், தமிழ்ச்செல்வன், கோணங்கி, கொமா. கோதண்டம், லட்சுமணப் பெருமாள்,
ரா. அழகிரிசாமி (எஸ். ஆர். நாயுடு கல்லூரி, சாத்தூர்) என்ற ஓர் நீண்ட ஆளுமைகளின் பட்டியல் உண்டு. இந்த வரிசையில் பெ. மகேந்திரனும் தொடர்ந்து கரிசல் இலக்கிய தளத்தில் களமாடுவார் என்ற பெருமையும் நம்பிக்கையும் உள்ளது. வாழ்த்துகள்.

கரிசல் காட்டு மக்களின் சார்பில் அவருக்கு என்னுடைய சல்யூட்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
K. S. Radhakrishnan
1.05.2020

No comments:

Post a Comment