Tuesday, December 1, 2020

 


#ஈழம்
#சர்வதேச_காணாமலாக்கப்பட்டோர் #தினம். ஆகஸ்ட் 30.*
——————————————






உள்ளத்தை மூடியபின்
கேட்க முடியாதுன்னால்
ஈனத்தில் முனகும்
எம்மவர் குரலை

பிள்ளைகளைக் காணாமலாக்கினர்
பூர்வீக நிலங்களை வனங்களென்றனர்
பின்னர் வரப்புச்சாறவெனத்
தூக்கிய மண்வெட்டியை பிடுங்கி
புராதன இடங்களென்றனர்
தோண்ட முடியாத நிலமென்றானபின்
புதிதாய் ஒரு புத்தரை நட்டு ஆழமாக்கினர்
அரசமரத்தடியை
விஜயனின் எச்சங்களென்றனர் வெளித்தெரிந்த
விலா எலும்பை
இன்னும்
மகாவலியை வளைப்பதாய் சொல்லியும்
மல்வத்து ஓயா அது வளமென்று சொல்லியும்
இருத்தலின் பேரில் கங்கொன்று கனலும்
முறைப்பாடேந்தி அனுங்கி முனகும் சனங்களின் வாயும்
மெல்லமாய் மூடிக்கொள்ளும்
இலட்சினை வானகனங்கள் சில ஊருக்குள்
உலவுகயில்

அன்றொருநாள் நீ
சொன்னாய்
அமைதியை சுமந்து
தனியனாய் அலைதல்
அடையாளம் அல்லவென்று

அறிக நண்பனே!
உள்ளம் விழித்திருக்க
சீற்றமிகு அலைகடலை
காவித்திரியும் மனமோ
வார்த்தைகளை வெறுத்துநிற்கும்.

Sharmila Vinothini Thirunavukarasu



போர் மற்றும் அரசியல் காரணங்களால் காணாமல் ஆக்கப்படும் மக்களின் மீட்பு நடவடிக்கைகள் சர்வதேச கவனம் பெற, ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 30ம் நாள், ஐ.நா.வின் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

சிரியா, சூடான், ஜிம்பாவே, அர்ஜென்டினா என பல நாடுகளில் இதுவரை பல்லாயிரம் பேர் காணாமல் போயுள்ளனர். இதில் அதிகமாக காணாமல் போனவர்களில் இடத்தில் தமிழர்கள் உள்ளனர்.

1980களில் இருந்து இலங்கையில் பல ஆயிரக்கணக்கான ஈழ தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் துவங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை, போராடுபவர்கள் கடத்தி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்படுவது, அவர்களுடைய போராட்டத்தை நசுக்கும் ஒரு செயல்திட்டமாக இலங்கை அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இராணுவத்தினர் விசாரிப்பதற்கு அழைத்து சென்றும், அரசியல் காரணங்களால் கைது செய்யப்பட்டும், "வெள்ளை வேன்" கடத்தல் என சட்டத்திற்கு புறம்பாக தமிழர்களை கடத்தி சென்று இலங்கை அரசினால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, 60,000 முதல் 1 லட்சம் வரையிலான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அப்படியாக கடத்தி செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஈழ தமிழர்களின் நிலை இன்று வரை என்னவென்று தெரியவில்லை.

2017 பிப்ரவரியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர்களால், குறிப்பாக பெண்களால், கிளிநொச்சியில் துவங்கி தமிழீழம் முழுவதும் போராட்டம் பரவ, 1000 நாட்களை கடந்தும் தொடர் போராட்டமாக நடைபெற்று வருகின்றது.
இதில் 53 பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நிலை அறியாமலே இறந்தும் போயுள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள தமிழ் குடும்பங்களுக்கு, இந்த நாளானது ​​கோபமும் துக்கமும் நிறைந்த நாளாக இருக்கும்.

காணாமல் போனவர்களின் குடும்பங்கள் அதிகாரிகளின் ஆதரவை நாடும்போது, ​​அவர்கள் உதவி கேட்கவில்லை, அவர்கள் சட்டத்தின் கீழ் தங்கள் உரிமைகளை கோருகின்றனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அந்த மக்களின் நீதிக்கான போராட்டத்திற்கு உறுதுணையாய் நிற்க வேண்டியது தமிழர்களின் கடமை.

#Justice4DisappearedTamils

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்