Thursday, July 30, 2026

#தமிழகநீர்வளம்

 #தமிழகநீர்வளம்

தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் 90 அணைகள் மற்றும் பல நீர்த்தேக்கங்கள் உள்ளன! இவற்றின் ஒட்டுமொத்தக் கொள்ளளவு 224 டிஎம்சி ஆகும்! இதில் மேட்டூர் பவானிசாகர் பெரியாறு உள்ளிட்ட 35 முக்கிய அணைகளின் கொள்ளளவு மட்டும் 198 டிஎம்சி! இந்த அணைகள் பல்வேறு மாவட்டங்களில் பாசனத்திற்கும் குடிநீர் தேவைக்கும் மட்டுமின்றி தொழிற்சாலைகளின் நீர் தேவையையும் பூர்த்தி செய்கின்றன! தற்போது 20 அணைகளிலும் சேர்த்து 70.29 டிஎம்சி அதாவது 33.33% நீர் மட்டுமே உள்ளது! இதன் மூலம் மாநிலம் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது! அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் 36.47 டிஎம்சி, ஈரோடு பவானிசாகர் 6.25,கோவை பரம்பிக்குளத்தில் 3.65, சாத்தனூர் 2.12 டிஎம்சி, பேச்சிப்பாறை இரண்டு டிஎம்சி தண்ணீர் என்ற அளவில் அதிகபட்சம் இருப்பு உள்ளது! இப்படியாக “அணைகளில் சேமிக்கப்பட்டுள்ள நீர் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்காகத் திறக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 14 ஆயிரத்து 141 பாசன ஏரிகள் உள்ளன! அவற்றில் 419 ஏரிகள் 100% மும்,579 ஏரிகள் 76 முதல் 90% மும்,51% முதல் 75 சதவீதமும் நிரம்பியுள்ளன.! அதேபோல் 2476 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும் 6119 ஏரிகள் 1 முதல் 25 சதவீதமும் நிரம்பி இருக்கின்றன 3488 ஏரிகள் நீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது! இதில் அதிகபட்சமாக மதுரையில் 1340 ஏரிகளில் 162 ஏரிகள் வறண்டு கிடக்கின்றன! அதேபோல் சிவகங்கை 1459-ல் 523 ஏரிகளும் திருவண்ணாமலையில் 697 -ல் 39 ஏரிகளிலும்,தஞ்சாவூரில் 641-ல் 156 ஏரிகளிலும் திருவள்ளூரில் 578-ல் 156 ஏரிகளிலும், திண்டுக்கல்லில் 190-ல்151 ஏரிகளிலும், நெல்லையில் 780-ல் 132 ஏரிகளிலும் தண்ணீர் இல்லை!! இதற்குத் தற்போது கடும் வெயில் கொளுத்துவதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது! கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது! சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் பூண்டி ஏரிக்குத் திறக்கப்படும் கிருஷ்ணா நதி நீர் இப்போது 330 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது! சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்க் கண்டிகை, செம்பரம்பாக்கம், மற்றும் வீராணம் ஆகிய நீர் நிலைகளையும் சேர்த்து 5.77 டிஎம்சி மட்டுமே கையிருப்பில் உள்ளது. இதிலிருந்து சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைக்காக மாதம் ஒரு டிஎம்சி வீதம் தண்ணீர் எடுக்கப்படுகிறது! ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8 டிஎம்சி கையிருப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது! தமிழகத்தில் அக்டோபர் மாதம் இறுதியில்தான் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்! அதற்கு இன்னும் மூன்று மாதங்கள் இடைவெளி இருக்கிறது! அதுவரை தமிழக அணை மற்றும் ஏரிகளில் உள்ள தண்ணீரை வைத்துத் தான் நாம் சமாளிக்க வேண்டும்! ஆனால் இந்த ஏரிகள் வற்றிக் கிடப்பது ஆழ்ந்த கவலையாகவும் பற்றாக்குறை ஏற்படும் போது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவர்கள் என்றும் தோன்றுகிறது. என்னை பொறுத்தவரையில் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் நீண்ட மழைக்காலங்களில் இவ்வாறு நீரைச் சேமிப்பதற்கு வேறு என்ன வழிகள் இருக்கிறது என்பதைத் தமிழ்நாடு அரசு யோசிக்க வேண்டும்! ஏற்கனவே அது வறட்சி மாநிலம் என்று சொல்லப்பட்டிருப்பதால் வருங்காலத்தில் நீர் ஆதாரத்திற்கான தொலைநோக்குத் திட்டங்கள் தேவை என்பதையே மேற்கண்ட ஏரிகளின் வறட்சி ஒரு அபாயமாகச் சுட்டிக்காட்டுகின்றது.. இதற்கிடையே நிறைய ஊர்ப்பகுதிக்குளங்களையும் ஏரிகளையும் மண்ணள்ளிப் போட்டு மூடி அதை வீட்டடிகளாக மாற்றி விற்று விட்ட கொடுமை எல்லாம் இந்தத் தமிழகத்தில் நடந்திருக்கிறது! இவற்றை அடையாளம் காண்பது இனி மிகச் சிரமம்! #tamilnadu_waterresources #தமிழகநீர்நிலைகள் #dam #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost #KSRadhakrishnan



No comments:

Post a Comment

#மேகாதாட்

  #மேகாதாட் மேகாதாட்வில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்டுவற்கான திட்ட அறிக்கை (DPR) திருப்பி அனுப்பிவைப்பு!! தமிழகத்தின் ஒப்புதலின்றி இத...