Sunday, October 29, 2023

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் #*மக்களின் முதல்வர்!* #*முதல்வர்களின் முதல்வர்!!*

#*மக்களின் முதல்வர்!*
#*முதல்வர்களின் முதல்வர்!!* 
—————————————

நேற்று (28-10-2023) மாலை திருமதி தேவி  மோகன் தனது ‘ஓமந்தூரார் - முதல் முதல்வர்’ பாரதி புத்தகாலயம் வெளியிட்டள்ள நூலை சந்தித்து வழங்கினார். பத்திரிகையாளர் மணி மாறன் உடன் இருந்தார். இந்த புத்தகத்தில் எனது அணிந்துரை வேண்டும் என கேட்டு பெற்றனர். அமைச்சர் கே.என். நேரு, தமழக முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மாநில செயலாளர் நண்பர் ஜி. ராமகிருஷ்ணன, நடிகர் சிவகுமார் ஆகியோர்களின்  அணிந்துரைகள் இடம் பெற்றுள்ளது.




 திருமதி தேவி  மோகன் இலங்கையில் பிறந்து அங்கு படித்து பின் திருச்சி சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் கற்றார்.
***
எனது அணிந்துரை:

*மக்களின் முதல்வர்!
முதல்வர்களின் முதல்வர்!!* 
••••
பொது வாழ்வு, அரசியலில் நேர்மையின் இலக்கணமாகத்திகழ்ந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை ராஜதானியின், ஏன் தமிழ்நாட்டின் முதல் முதல்வர். உத்தமர்காந்தி அடியொற்றி விடுதலைப் போராட்டம், காங்கிரஸ் கட்சிகளப்பணிகள் என ஆரம்ப கட்டத்தில் பங்கேற்றவர். நிலக்கிழாராக இருந்தாலும் எளிமையான வாழ்வு வாழ்ந்தவர். காங்கிரஸ்வாதியாக விடுதலைப் போராட்டக் காலத்தில் நடந்தே சென்று கிராமம் கிராமமாக தண்டோரா போட்டு, கூட்டங்களை நடத்தி விடுதலை உணர்வை மக்கள் மத்தியில் ஊட்டியவர்.
 அன்றைய திருநெல்வேலி ஜில்லாவுக்கு 1936-ல் கோவில்பட்டியிலிருந்து கழுகுமலை வந்து மதிய உணவிற்கு எங்கள் கிராமத்திற்கு வந்ததாகவும் அங்கே மதிய உணவை முடித்துக்கொண்டு எங்கள் வீட்டின் பெரிய திண்ணையில் பாயை விரித்து எளிமையாக படுத்து உறங்கி சங்கரன்கோவில் சென்றார் என்றும் எங்கள் தந்தையார் சொல்வார். என்னுடைய தந்தை கே.வி.சீனிவாசநாயுடுவிடம் அன்பு பாராட்டியவர் ஓமந்தூரார். அவர் எழுதிய கடிதங்களை எங்கள் தந்தையார் பாதுகாத்து வந்தார் என்பதெல்லாம் எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. எங்கள் வீட்டில் இந்த உத்தமரின் காலடி பட்டது எங்களுக்கு காலம் வழங்கிய அருட்கொடை என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
திண்டிவனம் காங்கிரஸ் கமிட்டி தலைவராகத் துவங்கி முதலமைச்சர் பொறுப்பு வரை உயர்ந்த விவசாயிகளின் முதல்வர்.  தென்னார்காடு மாவட்டத்தில் படையாச்சிகளை குற்றப்பரம்பரை என ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் சட்டம் கொண்டு வந்தபோது அதை கடுமையாக எதிர்த்தவரும் ஓபிஆர்.
ஓமந்தூரார் முதல்வரான பின் 1949-ல் நிலச் சீர்த்திருத்தங்கள் குறித்தான நடவடிக்கைகளை ஜே.சி.குமரப்பா அறிக்கைக்கு சற்றுமாறுபட்டு விவசாயிகளின் நலன்கருதி தன் கருத்தில் ஆணித்தரமாக இருந்ததெல்லாம் உண்டு. பின் புதுச்சேரி மாநிலம் பிரெஞ்ச் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியாவில் இணைய எடுத்துக் கொண்ட போராட்டங்கள் அதிகம். அதேபோல ஹைதராபாத் நிஜாம் இந்தியாவோடு இணைய யோசித்து சற்று எதிர்வினைகள் ஆற்றியபோது இரும்பு மனிதர் சர்தார்படேலுக்கு உதவியாக சென்னை ராஜதானியில் பாதுகாப்பு படையை அனுப்பி ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவோடு இணைக்க பட்டேலோடு பெரும் பங்காற்றியவர். தமிழக தலைவர்கள் அந்தக் கால கட்டத்தில் ராஜாஜி, காமராஜர் என பல்வேறு திசைகளில் பயணித்தாலும் அத்தனை காங்கிரஸ் தலைவர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய - விரும்பிய தலைவராக ஓமந்தூரார் இருந்தார்.
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேசம், விவசாய நலன்களுக்கான திட்டங்களைத் தீட்டியவர் ஓமந்தூரார். இன்றைக்கு சமூகநீதி என்று பலர் முழங்குகிறார்கள். ஆனால், நாட்டின் விடுதலைக்குப் பின் நீதிக்கட்சி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முத்தையா முதலியார் கம்யூனல் ஜீவோவிற்கு அடுத்து செயல்பாட்டிற்கு வரக்கூடிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக சமூகநீதி உத்தரவை முதன்முதலாக பிறப்பித்த ஒரு காங்கிரஸ் முதலமைச்சராக ஓ.பி.ஆர். திகழ்ந்தார். 
இப்படியெல்லாம் மக்களின் உரிமைகள், நலன்களைப் போற்றி கடமையாற்றிய ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை இன்றைய இளைஞர்கள் அறியவோ, புரியவோ இல்லை என்பது எங்களைப் போன்றோர்க்கு ரணமான செய்திகள். பொதுவாழ்வில் நீண்டகாலம் எங்களைப் போன்றோர் பணியாற்றினாலும் எங்களுக்கு என்றைக்கும் ரோல் மாடலாக ஓமந்தார் இருக்கின்றார். தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் வடலூர் வள்ளலார் சுத்த சன்மார்க்க அமைப்புக்கு வழங்கி அந்த அமைப்புக்கான கட்டிடங்கள் கட்டி, வள்ளலாருடைய வடலூர் ஆசிரமத்தை மேலும் சீராக்கி கொண்டாடியவர் ஓமந்தூரார். 
இந்த இடத்தில் ஒன்றை பதிவு செய்ய வேண்டும். இன்றைக்கு எத்தனையோ அமைச்சர்கள் தேசியக்கொடி கட்டி சிகப்புவிளக்கு கார்களில் காதைப் பிளக்கும் ஒலி எழுப்பான்கள் (ஹாரன்) அடித்துக் கொண்டு செல்வதைப்பார்க்கின்றோம். அவர்கள் ஒருசிலரிடம் ஓமந்தூராரைத் தெரியுமா? என்று நான் கேட்டபோது மேலும் கீழும் பார்க்கிறார்களே தவிர பதிலில்லை. 
தமிழ் வளர்ச்சி, தமிழ்இலக்கியங்கள், பெரியசாமி தூரன் தலைமையில் அமைந்த தமிழ்க் கலைக்களஞ்சியம் உருவாக்குதல், உயர்கல்வி சீராக்குதல், நீர்ப்பாசன திட்டங்கள், மின்சார வசதி, தமிழக திருக்கோவில்களின் சீர்திருத்தங்கள் என பலதுறைகளில் சீரமைப்பை திட்டமிட்டு செய்தவர் ஓமந்தூரார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரத்தையே அரசு சின்னமாக அறிவித்து, தமிழருடைய கலாச்சாரத்தைப் போற்றி வளர்த்தவர். ஒருமுறை இங்கிலாந்து எலிசபெத் ராணி சென்னை வந்தபோது அவரை வரவேற்கச் செல்ல வேண்டும். குளித்துவிட்டு தயாராகி கசங்கிய கதர் சட்டையோடு வெளியே வருகிறார் ஓமந்தூரார். இவரை எதிர்பார்த்து அழைத்துச் செல்ல இருந்த அதிகாரிகள், “ஐயா, நீங்க கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு வருவீர்கள் என நினைத்தோம். ஆனால் என்றும் போல கதர் ஆடைகளோடு சென்றால் ராணியை வரவேற்க நல்லாவா இருக்கும்” என்று கேட்டவுடன் ஓபிஆர், “இதோ பாருங்க... இதுதான் என் இயல்பு... நீங்க சொன்னாப்புல நான் வரமுடியாது. என்னால் வேஷங்கட்ட முடியாது. இப்படி வரவேற்க வருவதே நல்லது. இல்லையென்றால் நான் வரலை.. நீங்க எல்லாம் போங்க...”என்ற பதிலளித்தவர் தான் ஓமந்தூரார்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய முண்டாசுக் கவி பாரதியின் பற்றாளர். எட்டயபுரத்தில் பாரதியின் மண்டபம் அமைய கல்கிக்கு உதவியாக இருந்தவர் ஓமந்தூரார். பாரதியுடைய கவிதைகள் மேல் இருந்த தடையை நீக்க வேண்டும் என்று ரசிகமணி டி.கே.சியோடு குரல் கொடுத்தவர்.
இவர் நேர்மையின் திருவிளக்கு! நேர்மையற்றோர்க்கு அவர்களை அழிக்கும் அக்கினி! ஏழை பாழைகளை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச்செல்லும் ஒப்பற்ற ஜோதியாக விளங்கியவர்.
இப்படிப்பட்ட மாமனிதருடைய படத்தை தமிழகச் சட்டப் பேரவையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னால்தான் பல்வேறு கோரிக்கைகளுக்குப் பின் வைக்கப்பட்டது. பலருடைய படம் ஏதோ ஒரு ஆதாயத்திற்காக அங்கே வைக்கப்பட்ட போது இந்த மாமனிதனுடைய படத்தை வைக்க நாடு விடுதலைப்பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகு தான்ஆட்சியாளர்களுக்குத் தெரிகிறது.
தகுதியே தடை என்ற நிலையில் இன்றைய அரசியல் இங்கே நடக்கின்றது. ஓமந்தூரார் போல் இன்றைக்கு பார்ப்பது சிரமம். இவ்வளவு நெறியான வாழ்க்கையை வாழ்ந்த மாமனிதர் 25 ஆகஸ்ட் 1975-ல் காலமானார்.
இப்படி ஒரு ஆளுமையினுடைய நூலினைத் திருமதி தேவிமோகன் அவர்கள் எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியிடுகின்றது. திருமதி தேவிமோகன் என்ற பாரததேவியின் தந்தையார் பெயரும் ராமசாமி ரெட்டியார். நூலாசிரியரின் பிறந்த தேதியும் ஓமந்தூரார் பிறந்தநாளன்றே.
ஒரு பொருத்தமான நுண்மான் நுழைபுலம் கொண்ட திருமதி தேவிமோகன் சிறப்பாக இன்றைய தலைமுறைக்கு ஓமந்தூராரை புரிந்து அவரையே வழிகாட்டியாக எடுத்துக்கொள்கின்ற அளவில் இந்த நூலை வடித்துள்ளார். இந்த நூல் ஓமந்தூரார் முதல் முதல்வர் என்ற தலைப்பில் தமிழக மக்களிடம் சென்றடைய வேண்டும். இந்நூல் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய வேண்டும். இதை படைத்த நூலாசிரியர் திருமதி தேவிமோகனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

முகாம்: கோவில்பட்டி​​​​​​  
தேதி: 29.07.2023

*#மக்களின்_முதல்வர்!
#முதல்வர்களின்_முதல்வர்!!* 
#ஓமந்தூர்_ராமசாமிரெட்டியார்
#Omandur_Periyavalavu_RamasamyReddiyar

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
29-10-2023.


No comments:

Post a Comment

*Run your own race. No one cares what you are doing*

*Run your own race. No one cares what you are doing*. Think yourself as a powerful creator. You will see opportunities to get your goal, and...