Monday, October 23, 2023

*தமிழ்நாடு அரசே!* *காவிரி நீரும் இல்லை!* *பருவமழையும் இல்லை!* *பேரிடர் நிவாரணம் போல்* *ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கு!* -*காவிரி உரிமை மீட்புக் குழு*

*தமிழ்நாடு அரசே!*
*காவிரி நீரும் இல்லை!* 
*பருவமழையும் இல்லை!* 
*பேரிடர் நிவாரணம் போல்* *ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கு!*
-*காவிரி உரிமை மீட்புக் குழு*

*1. பேரிடர் நிவாரணம் போல் ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தருக!*
சட்டப்படி உரிமையாய் உள்ள தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைக் கர்நாடகத்திடமிருந்து இந்திய அரசு பெற்றுத் தராததாலும், காவிரி நீரைப் பெறத் தமிழ்நாடு அரசு பல்முனை முயற்சிகள் எடுக்காததாலும் நடப்பு ஒரு போகச் சம்பாவும், தாளடியும் நடவும் முடியாமல், நேரடி விதைப்பும் செய்ய முடியாமல், காவிரி டெல்டா மாவட்டங்களில் பல இலட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன.

திக்கற்ற அனாதைகள் போல் உழவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

தமிழ்நாடு அரசு நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் ஒரு போக சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யலாமா, செய்தால் பாதுகாக்கப்படுமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் செய்யாமல் இருப்பது மிகப்பெரும் திண்டாட்டமாக உழவர்களுக்கு உள்ளது. தீராத மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசே, டெல்டா மாவட்டங்களில் பருவ மழையும் உரியவாறு பெய்யவில்லை. எங்கள் விளைநிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. எங்களுக்கு நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்தும் பம்பு செட்டுகளும் இல்லை. நிலத்தடி நீரும் இல்லை. எங்கள் கதி என்ன?

பயிர்க் காப்பீட்டுச் சூதாட்டம் நடத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களைக் கைகாட்டிவிட்டுத் தமிழ்நாடு அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது.

காலம் காலமாக நாங்கள் செய்து வந்த காவிரி ஆற்றுப் பாசனச் சாகுபடி கர்நாடகத்தின் அடாவடியால் தடுக்கப்பட்டு விட்டதால், பல இலட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. இயற்கைப் பேரிடர் போல் ஏற்படுத்தப்பட்டுள்ள இப்பேரழிவிலிருந்து உழவர்கள் குடும்பங்களைப் பாதுகாக்க, இந்திய அரசின் பேரிடர் நிவாரணத்தில் டெல்டா மாவட்டங்களைச் சேர்த்து, தண்ணீரின்றி சாகுபடி செய்ய முடியாமல் தரிசாய் போட்டுள்ள உழவர்களுக்கு 1 ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை கிடைக்க தமிழ்நாடு அரசு உறுதியாக வழிவகை செய்ய வேண்டும்.

தரிசு நிலங்களை இப்போதுள்ள காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு வழங்கப் பதிவு செய்து கொள்ள மாட்டா என்பது தமிழ்நாடு அரசுக்கு நன்கு தெரியும். எனவே, நேரடியாகத் தமிழ்நாடு அரசு உழவர்களுக்கு நிவாரணம் வழங்க, இந்திய அரசிடமிருந்து பெற்றோ அல்லது தனது சிறப்புத் திட்டத்தின் மூலமோ வழிவகை செய்ய வேண்டும். எந்தத் திட்டமாக இருந்தாலும், இழப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும்.

பிரான்சு உள்ளிட்ட மேலை நாடுகள் பலவற்றில், தரிசு நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.  

*2. பம்பு செட்டு மூலம் சாகுபடி செய்யும் உழவர்களுக்குக் குறைந்தது ஒரு நாளைக்கு 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். இருமுனை மின்சாரத்தால் போதிய நிலத்தடி நீரை எடுத்துப் பயிர் செய்ய முடியாது.*

பம்பு செட் சாகுபடியிலும் போதிய நீரின்றி பயிர் காய்ந்து அழிவு ஏற்பட்டால் ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தக் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை எல்லா உழவர்களுக்கும் தமிழ்நாடு அரசே செலுத்த வேண்டும்.

ஓர் ஊரில் 25 விழுக்காடு நிலத்தில் சாகுபடி காய்ந்து போனால்தான் அவ்வூரைக் காப்பீட்டு வழங்கலில் சேர்க்க முடியும் என்ற ஈவிரக்கமற்ற கார்ப்பரேட் வேட்டையைக் கைவிடச் செய்ய வேண்டும். தனி ஒரு உழவர் நிலம் தண்ணீரின்றியோ வேறு காரணத்தாலோ காய்ந்து விளையாமல் போனால் அந்த நிலத்திற்கும் காப்பீடு வழங்க வேண்டும்.

சம்பா காப்பீடுப் பதிவுக் கடைசி நாள் 15.11.2023 என்பதை மாற்றி, 15.12.2023 என்று கால நீட்டிப்பு செய்ய தமிழ்நாடு அரசு உரியவாறு செயல்பட வேண்டும்.

சாகுபடி செய்யும் உழவர்களுக்கு கூட்டுறவு வங்கி மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் அனைத்திலும், சாகுபடிக் கடன் எந்த நிபந்தனையுமின்றி எளிதாகக் கிடைக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேற்கண்ட உயிர்க் கோரிக்கைகளை நிறைவேற்றி, உழவர் குடும்பங்களையும் மக்களுக்கான உணவு உற்பத்தித் தொழிலையும் பாதுகாக்குமாறு தமிழ்நாடு அரசைக் காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது.

உழவர்களின் துயரக் குரலைச் செவிமடுத்து, தமிழ்நாடு அரசு நீதி வழங்காவிடில் டெல்டா மாவட்டங்களில் உழவர்கள் உயிர் காக்கும் பெருந்திரள் அறப் போராட்டங்களை அங்கங்கே நடத்துவதென்று மேற்படி பூதலூர் உழவர் கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

- காவிரி உரிமை மீட்புக் குழு
#காவேரி
#cauveri


No comments:

Post a Comment

*Run your own race. No one cares what you are doing*

*Run your own race. No one cares what you are doing*. Think yourself as a powerful creator. You will see opportunities to get your goal, and...