Saturday, October 28, 2023

#*சிலப்பதிகாரம்-ஊழ்* #*இன்றைய அரசியல்* #*குற்றாலம் மௌனசாமி மடம்* #*பிரதமர் பி.வி.நரசிம்மராவ்* #*பிரதானமான நிலக்காட்சி*



—————————————
தமிழின் கவிதை பாரம்பரியத்தில் வள்ளுவர் இளங்கோ பாரதி வள்ளலார் என பலரும் எழுதி வந்த வழக்காற்றில் இன்றைய நவீன கவிதைகளும் அதன் தொடர்ச்சியில் சமூக வாழ்க்கை பற்றி தனது படைப்புகளை  அரசியலாக முன் வைத்து தான் வருகின்றன. அந்த வகையில் கவிஞர் யவனிகா ஸ்ரீராமின் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன் என்கிற முறையில் இன்றும் அவரது ஒரு கவிதையை முன்வைத்து எனது பதிவை முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

இக்கவிதையில்   சிலப்பதிகாரத்தின் கூற்றுகளும் இருக்கின்றன என்பதை இதைத் தேர்வு செய்ய முக்கிய காரணம்.
இதில் அவரும ஒரு ஊழ்வினையை இறுதியில் முன் வைக்கிறார்.

‘பிரதானமான நிலக்காட்சி’

பல்முனை வணிகத்தின் பிரதான பிச்சைக்காரனாகிய நான்
அழுகிய காய்கறிகள் விரயமாகும் சந்தைக்குள் தெருவில் அலையும் மிருகத்தின் சாவதானத்தோடு பலவற்றிலும் வாய் வைத்து முதுகு தண்டில் அடிவாங்குகிறேன்.
நீங்கள் பார்த்திருக்கலாம்
 சிறிய பாலித்தீன் பைகளில் காய்ந்த முள்ளங்கிகளைச்சுமந்து திரிபவனை 
அல்லது 
  மேம்பாலத்தின் நடைபாதையில் தன் கந்தல்களை வைத்துக்கொண்டு தனியே குடித்தனம் பண்ணும் ஒரு காலழுகிய பெண்ணை
பார்க்காதவர்கள் பாக்கியவான்கள்
 மற்றபடி தேசத்தின் பிரமாதமான நிலக்காட்சி அது
இவர்கள் தான்  காலத்தில்
சந்தையின் நடுவே மோசடிக்காரர்களை அறைந்து கொல்லும் சதுக்கப்பூதமாக இருந்தார்கள்
என்பது எவ்வளவு கேலிக்குரியது
என் பிச்சைக்காரத்தனத்தின் மீது ஆணையிட்டு சொல்கிறேன் விமான தளங்கள் மென்மேலும் புதுப்பிக்கப்படட்டும்
ஒரு நாளைப் போல் இன்னொரு நாள் இல்லை என்பவர்களுக்கும்
பூமியின் விலை பன்மடங்கு ஆகிவிட்டது என்று ஆறுதல் கொள்பவர்களுக்கும்
பெண்களிடம் துரோகம் மட்டுமே எஞ்சியிருக்கிறதென முறையிடுபவர்களுக்கும்
 சேர்த்தேதான் சாபம் இடுகிறேன்
ஒரு நாள் இவ்வுலகின் வீடுகள் 
மது விடுதிகளாகவும் வேசைத்த்தனத்தின்
 படுக்கையறைகளாகவும்  மாறும் போது
உங்கள் நிலக்காட்சிகளை பங்குச்சந்தைகள் அல்ல மன்றாட்டும் கடவுளும் அல்ல ஆயுதச் சந்தைகளே தீர்மானிக்கும்.

சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். 

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

மன்னர்களையும் கடவுள்களையும் பாடிய காவியங்களுக்கு அப்பால் குடிமக்கள் காவியத்தை  எழுதிய இளங்கோவடிகளின் நூலான சிலப்பதிகாரத்தில் காணப்படும்  நீதிகள் தான் நாம் மேற்கண்ட மூன்று அசைக்க முடியாத உண்மைகள். அவற்றின் மீது மிக விரிவான உரைகளையும் விவாதங்களையும் தமிழ் கூரும் நல்லுலகம்  மேற்கொண்டு இன்று வரை அதைப்பேணி வந்திருக்கிறது. அதை மக்கள் வழக்காகவே நாம் இன்றளவும் தொடர்ந்து காணலாம்.

அப்படியான சிறப்பு பெற்ற தமிழின் தொன்மையான அரச நிர்வாக அதன் அடிப்படையான  குடும்ப வாழ்க்கை முறைகள் இன்றைய நவீன அரசாட்சி முறையில் எவ்வளவு கேவலமாக திரிந்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

எங்கு பார்த்தாலும் ஊழல்கோடிக்கணக்கான ஆயிரக்கணக்கான பொருளாதார ஊழல் முறையில் தான் இன்றைய நவீன அரசாங்கங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

கொஞ்சமும் மனம் கூசாமல் பொதுமக்களின் பணத்தை  மட்டுமல்லாமல் பன்னாட்டு மூலதனத்தையும் பயன்படுத்தி இன்னும் பலவற்றையும் நிலங்களையும் கேளிக்கை விடுதிகளைத் திறந்து வைத்துக்கொண்டு லட்சக்கணக்காக  சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் யார் யாரிடம் கூட்டில் இருக்கிறார்கள்!  அரசுகள் எந்த வகையான வணிக தந்திரத்தை மேற்கொள்கிறன! எத்தனை யூக பேர ஊழல்கள்! வங்கியை வைத்து ஏமாற்றும் தில்லுமுல்லுகள்  அரசியல் புரோக்கர்கள் என்று சொல்லக்கூடிய கமிஷன் முறையில் ஒரு அரசாங்கத்தை நடத்துவதற்கு பெயர்தான் மக்களாட்சியா?

உண்மையில் நாட்டு வளர்ச்சிக்கு தான் இத்தனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர்கள் எத்தனை முறை சொன்னாலும் இன்னும் ஏன் அதிகமான கடன் தொகைகளை பெற்று இந்த அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது
என்பது மட்டும் புரியவில்லை. மக்களுக்குத் தெரியாது தெரிவிக்க அவசியமில்லாத குழப்பமான வகையில் தான் அரசுகள் நடந்து கொள்கின்றன. ஆனால் தனியார் சொத்துக்கள் ஏன் இவ்வளவு பெருக்கம் அடைகின்றன என்பதற்கான முறையான விசாரணையும் வருமானங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் ஏதும் நடைமுறையில் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.

அமலாக்கத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சோதனை இடுகிறார்கள்.
ஆனாலும் அதையும் மீறி அதிகம் சொத்துக்கள் மடைமாற்றப்படுகின்றன என்றால் ஊழல்கள் அதிகமாகிவிட்டது என்று தான் அர்த்தம்.

யாரோ பாதிக்கப்பட யாரோ கண்ணீர் விட அழுது அழுது ஆற்றாமல் வாழ்விழந்து பலரும் தெருவில் திரிய  இந்த பாவப்பட்ட ஊழல் பலரை பிரமிக்க வைக்கும் அளவில் பணக்காரர்கள் ஆக்கிவிடுகிறது.

கல்வி மருத்துவம் பொதுச் சொத்துக்கள் அனைத்திலும் அபகரிப்பும் ஊழலும் மலிந்து விட்டன. இதற்கு அதிகாரமும் துணை போகிறது. யார் வாழ்ந்தாலும் என்ன இறந்தாலும் என்ன தன் பை நிரம்பினால் போதும் என்கிற போக்கு ஒரு சமூகத்தை அதன் தொடர்ச்சியில் மிக மோசமான முறையில் நாசகரமாக்கி வருகிறது! இதைத்தான் நாம் ஊழ்வினையின் சமூக்காட்சிகள் என்று சொல்கிறோம்.

மிகச் சிறந்த இந்திய பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் இந்த வளர்ச்சி என்பது மறுபுறத்தில் வறுமையை பிரதிபலிக்கிறது என்று சொல்லி நோபல் பரிசை பெற்று கொண்டார்.

ஏறத்தாழ நான்கு கோடி மக்கள்  கடந்த 30 வருட இடைக்காலத்தில் பட்டினியால் இறந்துவிட்டார்கள் என்று சொன்ன அவரது கண்டுபிடிப்பு மிக அதிர்ச்சியை அளித்தது. 

அதை யார் இப்பொழுது நினைவு கொள்கிறார்கள் எல்லாம் மறந்து வேகம் வேகம் போக நேரம் என்பது பணம் என்கிற முறையில் இந்த சமகாலம் எல்லோரையும் பரபரக்க வைத்திருக்கிறது. இதைக் கண்டு தன்னிச்சையான இயற்கையே சுற்றுச்சூழல் மாசால் நடுங்குகிறது. பல அபூர்வ விலங்குகள் அழிந்து விட்டன.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றம். என்பதற்கு இணங்க அதற்கான ஊழ்வினைகளை எப்போது அவர்கள் சந்திப்பார்கள் என்பதைத்தான் நாம் நியூட்டனின் மூன்றாம் விதி போல பார்க்க வேண்டி இருக்கிறது.

இன்றைய பின் நவீன காலத்தில் நகர பன்னாட்டுக் கட்டுமானங்கள் ஏன் எதற்கென்று தெரியாமல் மிகையாக உற்பத்தி செய்யப்பட்டு அதிக அளவில் பெருகி அழகியல்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. சூதாட்ட விடுதிகள் கோடைவாசஸ்தலங்கள்  தனித்தீவுகள். அங்கே ஏராளமாக விரையம் ஆகும் உணவு கழிவு மது போத்தல்கள் பல்வேறு  உபயோகிக்கப்பட்ட பண்டங்கள் கடலில் விடப்படும் வீணான பொருட்கள் சுற்றுச்சூழல் கெடுதல் என்று எதற்கும் முறையான நீதிகள் விசாரணைகள் கிடையாது!

ஒரு பத்து சதவீத பணக்காரர்களுக்காக உருவாக்கப்படும் இந்த உலகத்தை நாம் யாருக்கு இறையாண்மை பரியந்தம் அளிக்கப் போகிறோம்.எளிய மக்களுக்கு அதனால் ஒரு பலனும் இல்லை! நான்கு கார்கள் 15 பங்களாக்கள் 28 தொழிற்சாலைகள் வைத்துக் கொண்டு யாரோ ஒருவர் ஆறடி படுக்கையில் படுத்து கொண்டிருக்கிறார். உண்மையில் இந்த வளர்ச்சியின் மறுபக்கத்தில்
 மனிதம் தன் உடல் வளங்களை இழந்து நலம் கேட்டு சீர் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது என்பதைத்தான் நாம் விளக்கமாக சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

இந்திய பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் 1988 இல் தனக்கும் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அரசியல் ஒத்து வராது. இதனால் அரசியலில், ஓய்வு பெறுவது நல்லது என்று நினைக்கிறேன் என சொந்த ஊர் ஐதராபாத் செல்ல மூட்டை முடிச்சி கட்டி விட்டார். பின்,ஐதராபாத்தில் சில காலம் இருந்துவிட்டு,  தன் இறுதி காலத்தில் தென்காசி  குற்றாலம் மௌனசாமி மடத்தில் தங்கி அங்கேயே  இருக்கப்போவதாக தன் அரசியல் அவஸ்தைகளுக்கு அப்பால் முடிவெடுத்தார். ஆனால் 1991 பிரதமர் என்ற மாலை எதிர்பார்க்கமல் அவரின் மேல் வந்து விழந்தது. அதுதான் ஊழ்.

உண்மையில் தாம் செய்த ஊழ்வினைகள் தம்மை துரத்துவது அறியாது பலரும் அதிகார பதவியில் தான் நிலைத்திருக்கப் போவதாகக் கனவு காண்கிறார்கள். யார் யாரோ எந்த வகையிலோ முதல்வராக ஆகிவிடுகிறார்கள்.

கடந்த பல காலங்களில் வைகோ பழ நெடுமாறன் நல்லகண்ணு போன்ற இன்னும் பலருக்கு இந்த முதல்வர் பதவி கிடைத்திருக்கலாம். அவர்களும் அதற்கு முயன்றும் கூட இருக்கலாம். எந்த ஊழ் வினைகளோ அதை யார் சொல்ல இயலும்.

தகுதி திறமை என்பது அனுபவத்தில் தான் கிடைக்கிறது என்றாலும் இன்றைய முதல்வர் ஸ்டாலின் 40 வருடங்களாக அரசியல் இருந்திருக்கிறார். ஆனால் அதற்கு முன்பு அவருக்கு இந்த முதல்வர் பதவி கிடைக்குமா என்பதை ஒருவரும் அனுமானிக்கக் கூட இயலவில்லை.

யாருக்கு எப்போது எது கிடைக்கும் என்பதெல்லாம் முன்வினை பின்வினைப் பயன்களை ஒட்டி தான் என்றாலும் தகுதியையும் திறமையும் தேர்ந்தெடுக்க ஒரு முழு சமூகமும் அறிவார்ந்த நிலையில் மன உயரங்களை கொண்டதாகவும் அறிவியல் சார்ந்து இன்னும் பல ஆற்றல்களைத்திறனாக அதையே உழைப்பாக பெற்ற சமூகத்தில் தான் நடைபெறுமே ஒழியஅதுவரை அத்தனை அவலங்களையும் ஒரு ஊழ்வினையாக நாம் சந்தித்து தான் ஆக வேண்டும். லட்சியவாதம் மிக அழகிய சில மனிதர்களையும் மிகப் பல கோரமான உருக்களையும் வரலாற்றில் உருவாக்கி இருக்கிறது. வரலாற்றில் மிகப் பெரிய கொடுங்கோலர்கள் லட்சியவாதிகள்தான்.

அத்தகைய முன்னேறிய சம நீதி பேசிய சமூகங்கள் கூட நிலைத்திடுமாறி போன வரலாற்றை நாம் பார்க்கும் போது எல்லாவற்றுக்கும் மேலான ஒரு சக்தி அதன் செயல்விளைவில் ஊழ்வினை மீது நிகழ்ந்து தான் மாற்றமாகி இயக்கமாக மாறும் என்பதை ஒரு பக்கத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒளியின் தாளம் எனச்சக்தியின் ஊழிக்கூத்தனை பாரதி இப்படித்தான் குதித்துக்கொண்டாடினான். அற்பங்களை பொசுக்கும் அக்கினி குஞ்சொன்றை ஆழ்ந்த சிந்தனையில் வைத்தான். அந்த மாபெரும் சக்திக்கும் ஊழ்வினைக்கும் இடையே  யாரொருவரும் தன்னை ஒப்படைத்து நிற்கத்தான் வேண்டும்.

ரிஸ்கா முக்தார் வரிகள்…
இப்போதெல்லாம்
எல்லோரையும் நேசிக்க முடிகிறது 
எதனையும் மன்னிக்க முடிகிறது
எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடிகிறது 
எல்லாவற்றோடும் சமரசமாகிட முடிகிறது

எவர்மீதும் வெறுப்புகள் இல்லை
எதனோடும் வருத்தங்கள் இல்லை
இதுதான் வேண்டுமெனும் பிடிவாதங்கள் இல்லை
என்ன இந்த வாழ்க்கை என்ற 
அங்கலாய்ப்புகள் இல்லை

இன்னும்
இழந்தவைக்காக மனம் கசியாமல்
அவமானங்களை அசை போடாமல்
விட்டுப்பிரிந்தவர்களை வீணே நினைத்துக்கொள்ளாமல்

வாழ்வு 
அதன்போக்கில் 
சுவாரஸ்யம் கூட்டுகிறது

இனி
தொலைந்தவை எவையும் 
மறுபடி நான் தொலையும் பொருட்டு
மீண்டும் கிடைக்காமலிருக்கட்டும் 
ஆமின்

-ரிஸ்கா முக்தார் 

மனிதனுக்கு மேலான சக்தி என்பது மனிதனால் உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் தான் இன்னும் இருக்கிறது.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
28-10-2023.

No comments:

Post a Comment

*Run your own race. No one cares what you are doing*

*Run your own race. No one cares what you are doing*. Think yourself as a powerful creator. You will see opportunities to get your goal, and...