Monday, October 30, 2023

# *இருப்பதற்கென்று வருகிறோம் இல்லாமல் போகிறோம்* -நகுலன் இன்றைய அரசியல் கட்சிகள் மிக தெளிவாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்

# *இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல் 
போகிறோம்* -நகுலன்

இன்றைய அரசியல் கட்சிகள் மிக தெளிவாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

அதுபோக இந்த ஐடி விங் காரர்கள் மொத்த ஊடகத்தையும் கையில் எடுத்து தான்ஆதரிக்கும்  தலைவர்களுக்கு எதிராகப் பேசுபவர்களை இவர்களே உருவாக்கி ஆதரவாகப் பேசுபவர்களை எதிரே அமர வைத்து மோத வைத்து அவர்களை  ஒரு விவாத பொருளாகவே எப்பொழுதும் லைம் லைட்டில் வைப்பதில் விற்பன்னர்கள் .இந்த ஐடி விங் காரர்கள்   செயல்படாத அரசாங்கத்தை கூட தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறஒருஅரசாங்கமாகக்காட்டு
வதில் கைதேர்ந்தவர்கள்.

ஒரு காலத்தில் மதன் மித்ரா லேகிய விளம்பரங்களை போல லக்ஸ் சோப்பு பெடிக்ரிம் நாய் உணவுகள் குப்பை பொறுக்கும் எந்திரங்கள் போல
 இந்தத் தலைவர்களை ஒரு விற்பனைப் பொருளாக்கி திரும்பத் திரும்ப காட்டுகிறார்கள்.

அதைத் தங்களுக்கு விளம்பரமாக பயன்படுத்திக் கொள்ளும்
தலைவர்களும் கட்சிக்காரர்களும் அவர்களைக் காட்டிலும் மிகத் தெளிவானவர்கள். தேர்தலில் மக்களுக்கு பணம் கொடுத்து விட்டால்ப் போதும் வாக்கு கிடைத்து விடும் என்று தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.இதுதான் இன்றைய ஜனநாயகத்தின் கோலம் வேடிக்கை வெக்கக்கேடு.ஒரு பக்கம் ஊடக வெளிச்சம் இன்னொரு பக்கம் பணம் செல்வாக்கு இது இரண்டும் இருந்தால் இன்று ஒருவர் அரசாங்கத்தை பிடித்து விடலாம் என்கிற அளவில் இந்த அவலமான போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உண்மை ஒரு எட்டு எடுத்து வைப்பதற்குள் பொய் உலகைச் சுற்றி வந்துவிடும் என்பார்கள் வேறு வழியில்லை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஊடகங்கள் எல்லாம் வெறும் நாடகங்கள் என்கிற உண்மை புரிதல் வேண்டும் அரசாங்கமும் என்பதே வியாபாரமாக ஆகிவிட்டது.

இந்த லட்சணத்தில் ஆயிரம் கூட்டணிகளை வைத்துக் கொள்கிறார்கள். கூட்டணியில் இல்லாத போது மிக கேவலமாக தம்மை திட்டிய அசிங்கப்படுத்திய சவால் விட்ட கட்சி அமைப்புகளை எல்லாம் மறுபடியும் கூட்டணியில் சேர்த்து அவர்களின் தோளில் கை போட்டுக் கொண்டு செல்வதை பார்க்கும் போது அரசியல் ஒரு சாக்கடை என்று சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.

இவையாவும் சாதி மத கூட்டணிகள் !அந்த சாதிகளுக்கு ஒரு நீதி அந்த நீதிகளுக்கு ஒரு ஒரு தேவை இதற்கு ஒரு அரசு அதிகாரம் அதற்கான  கூட்டணிகள் வெட்க்கமின்றிக் கைகோர்த்து திரிகின்றன !இப்பொழுது இருப்பவர்கள் எல்லாம் கொள்கைவாதிகள் அல்ல சாதியை வைத்து சுற்றுப்புறத்தில் தனக்கான  சாதிஅடியாட்களை சேர்த்துக்கொண்டு தன் சுயலாபத்தை பெருக்கிக் கொள்ள கூட்டணி சேரும் கும்பல்கள்தான்.! இதைச் சொன்னால் பிழைக்கத் தெரியாத முட்டாள் என்று நம்மளை ஒதுக்குவார்கள்.

என்னிடம் நண்பர்களாக இருப்பவர்கள் என்னால் பலன் பெற்றவர்கள் கூட நீங்கள் ஏன் அந்தக் கட்சிக்கு போனீர்கள் ஏன் அவரிடம் போனீர்கள் ஏன் இங்கே சென்றீர்கள் என்று ஓயாது குற்றம் சொல்கிறார்கள். தன்மானமும் சுயமரியாதை என்ற நிலையில் நான் இந்த முடிவுகள எடுத்தேன். கட்சிகள் கூட்டணிகளை விருப்பம் போல மாற்றி மாற்றி நேற்று ஒர் பேச்சு இன்று வேறு பேச்சு என்று  அர்த்தமற்ற  மாற்றி அமைப்பது எப்படி நியாயம்? என் உழைப்பு எடுத்துக்கொண்டு
என்னை  மதிக்க வேண்டும் அல்லவா.. நேற்று உங்களை திட்டி தீர்த்தவர்களுக்கு மரியாதை, பதவிகள் அள்ளி தரும் போது நம் சுயமரியாதை அந்த இடத்தை விட்டு விலகி போ என என்னை சொல்கிறது. இதில் பிழை ஒன்றும் இல்லை. இவர்கள் விருப்பம் போல
1967 இல் இருந்து  தேர்தல்களில் அறமற்ற கூட்டணிகளை மாற்றும் போது; நான் தன்மானம் என முடிவு எடுத்ததுதான் ரௌத்திரம் -அறச்சீற்றம்! என புரிதல் தேவை.

கொள்கைகளில் வேறுபாடு ஏற்படும் போது அது நடைமுறையில் சாத்தியமில்லாமல் போகும்போது அதை நிறைவேற்ற தகுதியுடைய அமைப்புகளின் பின்னால் செல்வது ஒன்றும் தவறல்ல. அவர்களைப் போல கூட்டணி கட்சிகளை மாற்றிக்கொண்டு சுய லாபம் அடையலாம் என்கிற எண்ணத்தில் நான் செல்லவில்லை. நான் சென்றதெல்லாம் அந்த கட்சித் தலைமை எடுக்கும் உறுதியான கொள்கை முடிவுகளுக்குப் பின்னால் அதன் அடிப்படையில் அங்கே சேர்ந்து அந்த இடத்திற்கும் காலத்திற்கும் செயலுக்கும் பொறுப்பாக இருந்திருக்கிறேன். நிறைய வேலைகளை செய்து கொடுத்திருக்கிறேன்.  கொள்கை மீதான பிடிப்பு அதன் வழியாக அமைப்பை காப்பாற்ற வேண்டும் என்கிற நற்சிந்தனை தான் அதற்கு காரணமாக இருந்தது.

அக்காலத்தில் எல்லாம்  மக்களைத் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்தார்கள். பல இடங்களில் விழா நடத்தி அரசு நிர்வாகத்தின் மூலமாக மனுக்களை பெற்று வகுப்பு வாரியாக எந்தெந்த பகுதி என்னென்ன பிரச்சனை என்றெல்லாம் ஆராய்ந்து புண்ணுக்கு மருந்து இட்டு தீர்வு செய்தார்கள்.

இன்றைய அரசியல்வாதிகள் எங்கே எந்த இடத்தில் புறம்போக்கு நிலம் இருக்கிறது! யாரிடம் இருந்து எந்த சொத்து கைமாறுகிறது! எங்கே மணல் கொள்ளையிடலாம்! எங்கே இடங்களை வாங்கி போடலாம் பின்னாளில் விற்பதற்கு போவதாக எங்கே  குறைந்த விலையில் வயிற்று வலிக்காரனிடம்  இருக்கிறது.! அனாதைச் சொத்துஎது? எங்கே வியாபாரம் செய்தால் பங்கு வர்த்தகத்தில் லாபம் பெறலாம் அதில் கிடைக்கும் பணத்தை மக்களுக்கு கொடுத்தால் ஓட்டையும் வாங்கிவிடலாம் பேராசை பிடித்து வாழ்றார்கள். இப்படியான புள்ளியில் வந்து நிற்கிறது இந்த அரசியல் அவலம். தனியார்கள் குடி தண்ணீரை விற்கிறார்கள் அரசு மதுபானம் விற்கிறது ?என்ன வகையான சுரண்டல் இது? இதற்கிடையில் பாழ் பட்டுக் கொண்டிருக்கிறது ஒரு மனித சமூகம்.

எனக்கு புத்திசெல்வர்களுக்குச் சொல்லிக்கொள்ள என்னிடம் ஒன்றுதான் இருக்கிறது!
வேறுபாடுகளும் மாறுபாடுகளும் தோன்றும் போது ஒரு மனிதன் எடுக்க கூடிய முடிவுகள் தான் நானும் எடுத்தது! என்னை ஓரங்கட்டுகிறார்கள் புறம் தள்ளுகிறார்கள் எதற்கென்று புரிந்துகொள்கிறேன். அது குறித்து கவலைப்படவோ சிக்கலாகிக் கொள்ளவோ நான் எப்போதும் தயாராக இல்லை! என்னை பொறுத்தவரை நிம்மதியாக தான் இருக்கிறேன்! ஒரு எதிர்ப்பு குரல் கொடுக்கக் கூடிய வலிமையுடன் இருக்கிறேன்! இவர்களின் இத்தகைய போக்கு அப்போதே தொடங்கிவிட்டது .கவிஞர் கண்ணதாசன் ஈவிகி சம்பத் இரா செழியன் தமிழருவி மணியன் எல்லோரின் மீதும் இத்தகைய நடவடிக்கை தான் எடுத்தார்கள். காங்கிரஸ் ஜனதா கட்சி போன்ற அமைப்புகள் இருந்த தீவிர சிந்தனையாளர்களை அவர்களின் அறிவை மலினப் படுத்தினார்கள் என்னை மட்டும் ஓரம் கட்டவில்லை இப்படியான முக்கியமான நபர்களை எல்லாம் கூட இவர்கள் ஓரங்கட்டி அரசியலுக்ப்பால் வெளியேதள்ளினார்கள்.அவர்களின்நோக்கம் நிறைவேறி விட்டது.அதைப் பெருமையாக  கூறிக்கொண்டு  மற்றவர்களைப் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் அற்பப்பதர்களெல்லாம் கூட்டணி வைத்து பிழைத்துக் கொண்டிருப்பதை வசதியாக மறந்துவிட்டு அறிவுரை சொல்ல வரும்போது  இது ஒரு பிழைப்பா என்று தன்மானமும் சுயமரியாதை உள்ள ஒருவருக்கு  தோன்றுவது  அறச் சீற்றமின்றி வேறென்ன.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
29-10-2023.


No comments:

Post a Comment

*Run your own race. No one cares what you are doing*

*Run your own race. No one cares what you are doing*. Think yourself as a powerful creator. You will see opportunities to get your goal, and...