Wednesday, June 3, 2026
#பெண்ணியம் #Feminism
அவரிற்கு 80 வயது ஆகிறதாம். அவரது பிறந்த நாளை கொண்டாட தனியாக வந்திருப்பதாக சொன்னார். அவர் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர். பார்த்தால் 60 வயதை தாண்டி சொல்ல முடியாது. அழகாக மிகவும் நேர்த்தியாக ஆடை அணிந்திருந்தார். வண்ண வண்ண ஆபரணங்கள் அணிந்திருந்தார். மேக்கப் கூட நேர்த்தியாக பூசியிருந்தார்.
பேச்சுக்கொடுக்கலாம் என்று
“உங்கள் ஆடைத்தேர்வு அழகாக இருக்கிறது” என்று ஆரம்பித்தேன். பிறகு சரளமாக பேசினோம். அவர் தன்னை இளமையாக வைத்திருக்க நிறைய பிளாஸ்டிக் சர்ஜரிகள் செய்திருப்பதாக சொன்னார். அதை சொல்வதில் அவரிற்கு எந்த தயக்கமும் இல்லை. கண்களை உயர்த்தி இருக்கிறார்களாம். மூக்கை சீராக்கி இருக்கிறாராம். முகத்தின் வடிவத்தை நேர்த்தி செய்திருப்பதாகவும் சொன்னார். இதை சொல்லும்போது அவர் மீது அவரிற்கு எவ்வளவு காதல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.
80 வயதில் எது உங்களை பயணிக்க தூண்டியது என்ற கேள்வியை கேட்டபோது அவரைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். அவர் 18 வயதில் திருமணம் செய்து கொண்டாராம். 20 வயதில் ஆண் பிள்ளைக்கு தாயானாராம். கணவன் தன்னை போட்டு அடிப்பாராம். அதனால் கணவனை விட்டு விலகி பிள்ளையை வளர்த்தாராம். வறுமை, அதுவும் இளமையில் ஒரு பிள்ளையுடன் வறுமை. எதையும் அனுபவிக்கவே முடியாமல் போனதாம். பிள்ளையும் நல்ல சீரான பிள்ளையாக வளரவில்லையாம். இளமை கடக்க ஆரம்பித்த நாட்களில் புற்றுநோய் வந்துவிட்டதாம். 15 வருடங்கள் அதனுடன் போராடினாராம். பின் கடைசியாக ஒரே ஒரு அறுவை சிகிச்சை செய்து பார்க்கலாம், அது பயனளிக்காத பட்சத்தில் இறந்து போவீர்கள் என்று விட்டார்களாம்.
வாழாமலேயே வறுமையிலேயே இறக்கப்போகிறோம் என்று நினைத்தபோது சிகிச்சை பயனளித்து புற்றுநோயில் இருந்து விடுபட்டாராம். பிறகு real estate தரகராக பணியாற்ற ஆரம்பித்து, முதலீடுகள் செய்து இப்பொழுது அவர் பணக்காரியாம். அப்படி ஒரு வீடு விற்பனையில் ஈடுபட்டபோது அங்கு இருந்த ஒரு பெண் தான் சீன நாட்டிற்கு போகப்போவதாகவும் “என்னுடன் வரப்போகிறீர்களா?” என்று கேட்டதாகவும், தானும் அமெரிக்காவை விட்டு எங்கும் போயிராததால் ஆம் என்று அவருடன் சீனா சென்றதாகவும் சொன்னார்.
அந்த பயணம் அவர் வாழ்வை மாற்றிப்போட்டதாம். இந்த உலகில் எதையும் பார்க்காமல் இறந்து விடக்கூடாது என்று அன்றிலிருந்து பயணப்படுகிறாராம். இன்னும் ஒரு 5 வருடங்கள் பயணப்படத்தான் உடலில் தெம்பு இருக்குமென்றார். 100 வயது வரை வாழ உத்தேசித்துள்ளதாகவும் சிரித்துக்கொண்டு சொன்னார். இதுவரை 60 நாடுகள் போயிருக்கிறாராம். ஆனால் உடல் தள்ளாட்டம், மருந்துகளில் வாழும் சூழலில் இளமையாக இருக்கும் ஒருவரைப் போல தன்னால் பயணப்பட முடியாதென்று வருந்தினார்.
இன்னும் தான் பார்க்க வேண்டிய உலகம் நிறைய இருப்பதாக சொன்னார். நீங்கள் இளமையிலேயே பயணப்பட முன்வந்தது நல்ல முடிவென்றார். தன் இளமை வறுமையோடு போனதாகவும், பணம் இருக்கும்போது உடல் நலம் இல்லையென்றும் சொன்னார். ஆனாலும் 80 வயதிலும் தனியாக பயணப்படும் அளவு இருக்கிறார்.
“ஏன் பயணப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?” என்றேன். அதற்கு சொன்னார்:
“உலகத்தில் பார்க்க, பேச ஆயிரம் இடங்களும் மனிதர்களும் இருக்கிறார்கள். பயணப்படும்போது என்றும் நான் தனியாளாக உணர்ந்ததே இல்லை” என்றார். கணவனை பிரிந்த போது பிள்ளைதான் எல்லாம் என்று இருந்து, இப்பொழுது மகனும் உடன் இல்லையாம். உலகம் இருக்கிறது தனக்கு என்றார்.
பின் சொன்னார்
நாம் எதிர்காலத்தை நினைத்து பயப்படுகின்றோம். அதனால் நிலழ்காலங்களை தொலைத்துவிடுகிறோம். நான் செத்துப்போவேன் என்று நினைத்தபோது எனக்கு வாழ்க்கை இரண்டாவது சந்தர்ப்பத்தை தந்தது. தான் அதை வீணாக்க விரும்பவில்லை. இந்த உலகம் செய்திகளில் காட்டுவது போல முற்றாக பயங்கரமானது இல்லை. உலகத்தில் இருக்கும் பெரும்பான்மை மனிதர்கள் நல்லவர்கள் ஆனால் அவர்கள் சாமானியர்கள். உலகில் நடந்துகொண்டிருக்கும் நன்மைகளை எந்த செய்தியும் வெளியிடாது. கெட்டதை சொன்னால்தான் அவர்களின் பணப்பை பெருகும். நமக்கு முன்னால கொட்டப்படும் உலகில் நடக்கும் கெட்டது மட்டுமே முழு உலகமும் இல்லை. திக்கற்று நிக்கும் ஒவ்வொரு மனிதனையும் தூக்கிவிட ஒரு கை நீழும் என்றார்.
அவரோடு இந்த உரையாடலை முடித்துவிட்டு கைத்தொலைபேசியை எடுத்தேன்… இரண்டு தற்கொலை செய்திகள் கண்ணில் பட்டது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் 19 வயது பெண் தற்கொலை. கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு என்பதால் 21 வயது பெண் தற்கொலை.
பெண் பிள்ளைகளிற்கு யாரும் இல்லாமல் வாழும் துணிவையும் நம்பிக்கையையும் கொடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் எப்பொழுது புரிந்துகொள்ள போகிறோம். இதை தலைமுறையினரிற்கு கடத்தவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
No comments:
Post a Comment