Thursday, July 8, 2021

தென்பெண்ணையாறு_சிக்கல்_3

#தென்பெண்ணையாறு_சிக்கல்_3 
———————————————————
தென்பெண்ணையாறு, மார்க்கண்டேய நதியில்  கர்நாடக அரசு யார்கோளில் 1410 அடி நீளம் 164 அடி உயரத்தில், தடுப்பணை கட்டியது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதற்கு ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மத்திய அமைச்சரையும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரையும் சந்தித்து இதுகுறித்து முறையிட்டார்.

கடந்த2014இல்மத்தியநீர்வளகுழுமத்
தின் பொறியாளர்கள், இதுகுறித்து ஆய்வு செய்தனர். தமிழக அரசும் இந்த அணை கட்டுவதைக் குறித்து 2019 நவம்பரில் வழக்கும் தொடுத்து உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. யார்கோள் அணை தடுப்பு குறித்த பல முரண்பாடுகளும் உள்ளன. 

யார்கோள் தடுப்பணை: 
கர்நாடக நகர நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், யார்கோள் திட்டத்தை 2006ல் முன் மொழிந்தது2007 ஆக., 22ல், கர்நாடக அரசு ஒப்புதல் அளித்தது
நீர் வழங்கல் வாரியம்,  நிலம் எடுப்பதற்கான வரைவறிக்கை தாக்கல் செய்ய தடுமாறியது
வனத்துறை, வருவாய் துறை, மாவட்ட நிர்வாகத்தில் முரண்பாடுகள் அதிகரித்தன 2006 ஏப்., 3 முதல், 2007 அக்., 22 வரை, அதிகாரிகள் இடையே பேச்சு நடைபெற்றது கடந்த, 1892ம் ஆண்டின்படி, மைசூர் அரசால் வன நிலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகள், வருவாய்பதிவுகளில்குறிப்பிடப்பட
வில்லை
கோலார் பிரிவு வன அலுவலர், 2007 ஏப்., 19ல், 'வன நிலத்தில் அணை கட்டினால், மத்திய அரசின் அனுமதி வேண்டும். மீறி கட்டினால், அது உச்ச நீதிமன்ற அவமதிப்பு' என்றார்
2009 மே, 14ல், வனப்பகுதி இல்லாத இடத்தில் மட்டுமே அணை கட்ட உள்ளதாக, நீர் வழங்கல் வாரிய துணை கமிஷனர் தெரிவித்தார்
மத்திய அரசை மீறாமல், மாநில கட்டுப்பாட்டுக்குள், வனத்துறை, நீர் வழங் கல், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இணைந்து தீர்வு காண, கர்நாடக அரசு வலியுறுத்தியது
இந்தபிரச்னைகள் முடிந்து, அணை கட்ட முயன்றபோது, தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. 

இப்படியான சிக்கலில் கர்நாடகா தொடர்ந்து காவிரி ஆற்றில்தான் தென்பாணையாற்றில்தான், தமிழகத்தின்க்கு வருகின்ற நீர்களைத் தடுத்து  தமிழகத்தைப் பாலைவனமாக்க அக்கறையோடு செய்கின்றது ., நடுவர் மன்ற தீர்ப்பு எல்லாம் கொடுத்தாலும், சட்டத்திற்கு மீறி அடாவடித்தனமாக யார் வந்தாலும் எந்த ஆட்சி வந்தாலும் கர்நாடக அரசு  செய்வது வாடிக்கையாகிவிட்டது.  இதை  மத்திய அரசு கவனிக்க வேண்டும். 

காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பும் அப்படியே கைவிடப்பட்டது. இப்படியே காலங்கள் சென்றால், தமிழ்நாடு தன் உரிமைகளை எப்படி மீட்க போகின்றது என்பதுதான் கவலையாக இருக்கின்றது.

தமிழகத்தின் அனுமதியில்லாமல் கர்நாடகா அணை கட்டக்கூடாது என்பது 1892, 1924 மைசூர்-மெட்ராஸ் காவிரி நதிநீர் ஒப்பந்தம். ஆனால் இந்த ஒப்பந்தங்கள் நிலுவையிலிருக்கும் போது கட்டப்பட்ட அணைகள் இவை.

கபினி அணை (1974)
---------------------------
கபினி அணையானது கபினி ஆற்றின் குறுக்கே மைசூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. 1974-இல் கட்டப்பட்டட இந்த அணையின் நீளம் 696 மீட்டர்கள். இந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி 2,141.9 சதுர கிலோமீட்டர்கள்

பானாசூரா சாகர் அணை(1974)
--------------------------------------
பானாசூரா சாகர் அணை கேரள மாநில மின்சார வாரியத்தினால் கரமனதோடு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது பனமரம் ஆற்றின் துணை ஆறாகும். பனமரம் கபினி ஆற்றின் துணை ஆறாகும். பானாசுர சாகர் திட்டம் 1979-ம் ஆண்டு தொடங்கப்பட்டது,

ஹேமாவதி அணை (1979)
---------------------------------
ஹாசன் மாவட்டம் கொரூர்(Gorur) பகுதியில் ஹேமாவதி அணை அமைந்துள்ளது. இது காவிரியின் துனை ஆறான ஹேமாமதியிம் குறுக்கே கடந்த 1979-ம் ஆண்டு கட்டப்பட்டது. 

ஹாரங்கி ஆறு (1970)
--------------------------
ஹாரங்கி ஆறு காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றாகும். சங்கப்பாடல்கள் அயிரி ஆறு எனக் கூறுவது இது எனக் கொள்ளத் தக்கது. இது 50 கிமீ நீளமுடையது. குடகு மாவட்டத்திலுள்ள புஷ்பகிரி மலையில் உற்பத்தியாகும் ஹாரங்கி குசால்நகர் அருகே காவிரியுடன் கலக்கிறது. ஹாரங்கி அணை 1970 ஆம் ஆண்டு ஹட்கர்(Hudgar) கிராமத்திற்கு அருகில் கட்டப்பட்டது.
இப்படி, காவிரி நதிநீர் ஒப்பந்தம் என்பதை மீறி கர்நாடகத்தின்  போக்கு
யுள்ளது

மேகதாட்டில் நிச்சயமாக அணை கட்டி விடுவோம் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் கூறியுள்ளார். தமிழக முதல்வருக்கு, கர்நாடக முதல்வர் இதுகுறித்து சில நாட்கள் முன்பு கடிதம் எழுதினார். அதற்கு தமிழக முதல்வர், “அணைக்கட்டு கட்டுவது நல்லதல்ல, கட்ட வேண்டாம், அந்த முயற்சியைக் கைவிடுங்கள்” என்று  கர்நாடகமுதல்வருக்கு பதில் அனுப்பி
னார்.

யார்கோளில் தென் பெண்ணையாற்றின் குறுக்கே ஏற்கனவே அணையை கட்டி முடித்துவிட்டார்கள். இப்பொழுது மேகதாட்டிலும் அணையை கட்டுகின்றார்கள். இது மேலும் தமிழகத்திற்கு நீர்வரத்து வருவதை தடுத்துவிடும் என்பதை தமிழக மக்கள் அறிந்து கொள்ள  வேண்டும்.
வீணாக பல விஷயங்களுக்குக் கூப்பாடு போடுகின்றோம், எழுதுகின்றோம் தேவையற்ற விஷயங்களை விவாதிக்கின்றோம். நீர்நிலைகளும், நீர் ஆதாரங்களும், நீர்வரத்துகளும் இல்லை என்றால், , மற்ற மாநிலங்களில் இருந்து அவர் வேண்டிய நதி நீர் வரத்து வரவில்லை என்றால், நமக்கு கடும் பாதிப்பு ஏற்படும். 
காவேரி, முல்லைப் பெரியாறு மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட பதினாறு பதினேழு அண்டை மாநிலத்தோடு உள்ள பிரச்சனைகளை அறியாமலேயே இருக்கின்றோம். குமரி மாவட்டத்தில் நெய்யாறு அணை மூடி கிட்டத்தட்ட 13 முதல் 14 ஆண்டுகள் ஆகின்றன. அதேபோல நெல்லை மாவட்டம் அடவிநயினார் பிரச்சனை, கொடுமுடியாறு ஆறு  பிரச்சினை, அப்படியே வடக்கே வந்தால்  செண்பகவல்லி அணையை அடாவடித்தனமாக கேரள அரசு, நெல்லை -தென்காசி மாவட்டத்தில் பயன்படும் தடுப்பணையையும் இடித்து விட்டது. அங்கும் நீர்வரத்து இல்லை. 
அதேபோல  ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அழகர் அணைத் திட்டம், முல்லை பெரியாறு, கொங்கு மண்டலத்தில் ஆழியார்-பரம்பிக்குளம், பாண்டியாறு- புன்னம்புழா, சிறுவாணி, பம்பாறு என பல பிரச்சினைகள் கொங்கு மண்டலத்தில் இருக்கின்றன. இவை எல்லாம் கேரளா மாநிலத்தோடு உள்ள பிரச்சினைகள். 
கர்நாடகத்தோடு ஏற்கனவே நாம் அறிந்த காவேரி பிரச்சனை இப்போது நடக்கின்ற சர்ச்சையிலிருக்கின்ற தென்பெண்ணை யார்கோள் அணைத்திட்டம்,  காவிரியில் மேகதாது அணை கட்டுவது, அதேபோல தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் குளங்களுக்கு வருகின்ற மழை நீரை, கர்நாடக அரசு தடுத்து கொண்டு வருகின்றது. இப்படி பல பிரச்சனைகள் கர்நாடாகாவிடம் உள்ளது. 

அதேபோல ஆந்திராவோடு பாலாறு, பொன்னி ஆறு, பழவேற்காடு ஏரியிலும் பிரச்சினை. இவையெல்லாம் பேசாமல், தேவையில்லாத விஷயங்களுக்கு கவனம் செலுத்தும், நாம் ஏன் இந்த நீராதாரங்களை, அடிப்படையை கவனிக்காமல் இருக்கின்றோம். இது முக்கியம் அல்லவா.

ஏற்கனவேபிரிட்டிஷார்  நாட்டை விட்டு செல்லும்போதுசுதந்திரம்அடைந்தவுடன் தமிழகத்தில் கிட்டத்தட்ட 65 ஆயிரம், நீர்நிலைகள் ஏரி குளங்கள் இருந்தன. 
ஆனால் இன்றைக்கு  அதில் சரி பாதியாக்கி 30,000 தான் இருக்கின்றன. இவற்றையாவது பாதுகாக்க வேண்டாமா? இது குறித்து வழக்கு தொடுத்துள்ளேன். அவையெல்லாம் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. இதையெல்லாம் விட்டுவிட்டு சமூக ஊடகங்களில் தேவையில்லாத  பிரச்சினைகள் விவாதித்து அதனால், என்ன பயன் இருக்கின்றது என்பதை சற்று உணர வேண்டும்.
நான் சொல்ல வேண்டியதை சொல்கின்றேன், நான் மனசாட்சியோடு பேசுகின்றேன். முதலில் நாட்டின் வளங்களை பெருக்குங்கள், இயற்கை  ஆதாரங்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். வனம், மலை, நீர்,மணல்   வளங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அடுத்த யாரையும் பற்றி கூப்பாடு போடாமல் அவர் பெரியவர் இவர் பெரியவர் இந்த மண், அந்த மண் அவர் மண் என்று பேசி எந்த பயனும் இல்லை. வெட்டி கூப்பாடு வேண்டாம். உங்களுடைய கூப்பாடு நேர்மையாக இருக்க வேண்டும். நான் யாரையும் குறை சொல்லி பேசவில்லை. நான்  எனது வாழ்க்கையில் நீதிமன்றத்தில் ஐம்பதாண்டு காலம்  பொதுநல வழக்குகளையெல்லாம்  கடந்து வந்துள்ளேன். சொல்ல வேண்டியது என் கடமை சொல்லிவிட்டேன். மற்றபடி இதைக் குறித்து என்ன எதிர்வினை ஆற்றுவதில் எனக்கு கவலையில்லை. இதுபற்றி பொது தளத்தில் சொல்ல வேண்டிய கடமையும் உரிமையும் எனக்கு இருப்பதால் சொல்லிவிட்டேன். வெட்டி கூப்பாடு வேண்டாம். இயற்கை வளங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

"ஆற்றுநீர் உபயோக உரிமை" பன்னாட்டு சட்டத்தின் படி; கீழ் அமையும் பகுதிக்கு(LOWER RIPARIAN) ஹெல்சிங் கோட்பாடு Helsinki principals முன்னுரிமை அளிக்கிறது.

மேலை நாடுகளில், பல நாடுகளுக்கு இடையே பாயும் ஆறுளின் பிரச்சனைகள், இந்த சட்ட நடைமுறையில் தீர்க்கப் படுகிறது. இது குறித்து பல பதிவுகள் செய்தும்யுள்ளேன். நமது நாட்டில் மாநிலங்களுக்குள் ஆற்றுநீர் பிரச்சனைகள் தீர்க்க முடியாத அளவுக்ககு நமது "தேசிய ஒருமைப்பபாடு"  செயல்டுகிறது.

ஆட்சியை பிடிக்க மட்டும் அந்த அந்த மாநிலங்களில் அரசியல் தலைவர்கள்  திட்டம் தீட்டுகிறார்களே தவிற; அணைத்து மாநிலங்களும் நாட்டு வளத்தை பகிர்ந்து முன்னேறத் திட்டமிடும் தேசத் தலைவர்கள் நம்மிடையே இல்லாதது, 
நமது போதாத காலம்.

தென் இந்திய ஆறுகளான மகாநதி, கோதாவரி,கிருஷ்ணா, காவேரி ஆகிய ஆறுகளின் உபரி நீர்க் குவியம் (PENINSULAR RIVERS SURPLUS WATER GRID) மூலமாக நமது தமிழகத்தின் தண்ணீர் தேவைகளை நம் நாடு நிறைவு செய்யலாம்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
08.07.2021.
#ksrposts

(Map of Pennar, 1906 - 1948)


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...