Tuesday, July 20, 2021

#தோழர்_ஏ_நல்லசிவன்_அவர்கள்_

#தோழர்_ஏ_நல்லசிவன்_அவர்கள்_நினைவு_நாள்(20..07..2021)
———————————————————
“ உணர்ச்சிபூர்வமாக அல்லாமல் அறிவுபூர்வமாக
மார்க்சீயத்தைப் புரிந்து கொண்டவன் நான்.அரசியல் களத்திலும் சமுதாயத்திலும் 
நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகே
சோசலிச மாற்றம் ஏற்படும் என்ற புரிதலுடன்தான் பொது வாழ்வைத் தொடங்கினேன் . இன்றைக்கு நம் மக்கள் அனுபவிக்க முடிகிற உரிமைகளும் முன்னேற்றங்களும் இதுவரை நடந்த போராட்டங்களின் விளைவுதான் “ 

 தோழர் நல்லசிவன் மனம்திறந்து சொன்ன வார்த்தைகள் இவை.



பகைவனையும் நண்பராக்கும் பணிவு நிரம்பியவராக தோழர் நல்லசிவன் விளங்கினார் .

1940 ஆம் ஆண்டு நாடு அடிமைப்பட்டிருந்த காலம் . கோரக்பூரில் ஜவஹர்லால்நேரு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நெல்லை மாவட்டம் அம்பையில் மாணவர்களின் கண்டன ஊர்வலம் நடக்கிறது. அதில் கலந்து கொண்டபோது நல்லசிவனுக்கு வயது 18. 

அப்போது அவருக்கிருந்த தேசப்பற்றும் , சமூக அக்கறையும் , அநீதியை எதிர்க்கும் ஆற்றலும் ,அவருடைய 75 ஆவது வயதிலும்  குன்றிமணி அளவும்குறையாது இருந்தது.

சந்தனவீரப்பன் வேட்டை என்ற பெயரில் வாச்சாத்தி மலைமங்கையரை காவல்துறை
சின்னாபின்னப்படுத்தியதை எதிர்த்து நீதி விசாரணை வேண்டி டில்லி உச்சநீதிமன்றம் வரை பிரச்சினையைக் கொண்டு சென்றபோதும், 

சிதம்பரம் அண்ணாமலைநகர்
காவல்நிலையத்தில் பத்மினி என்ற ஏழைப்பெண்மணி பாலியல் கொடுமைக்கு
ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து அவர் நடத்திய
போராட்டத்திலும் ..18 வயதிலிருந்த அதே வேகத்தைக் காட்டியவர் தோழர் நல்லசிவன்.

ஆசிரியராக, அன்னைபூமியின் விடுதலை வீரராக  , தொழிலாளர்களின் அன்பிற்கினிய துணைவனாக , கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டனாக, தலைவனாக இருந்து புதிய தலைமுறைக்கு எளிய பாதையைக் காட்டியவர் நல்லசிவன் .

1946-47 இல் விக்கிரமசிங்கபுரம் கொலை வழக்கில் விசாரணைக்கைதி.

1949-52 இல் நெல்லை சதி வழக்கில் விசாரணைக் கைதி

1962-63இல் பாதுகாப்புக் கைதியாக மதுரை, மேலூர் சிறைச்சாலைகளில் .

1965-66இல் பாதுகாப்புக் கைதியாக கடலூர் சிறையில் .

1978-84இல் மேலவை உறுப்பினராக 

1989-95இல் மாநிலங்களவை உறுப்பினராக
டில்லி நாடாளுமன்றத்தில் .

சிறைச்சாலையானாலும் , கட்சிப் பொறுப்புகள் ஆனாலும் மக்கள்மன்றப் பதவிகளானாலும் எல்லாம் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கே என்ற ஈடுபாட்டோடு தொண்டால் பொழுதளந்தவர் தோழர் நல்லசிவன் .

தோழர் ஏ என் ஒரு நல்ல மேடைப் பேச்சாளர் அல்ல..! ஆனால் மூன்று முறை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் . 

அதற்குக் காரணம் ஓய்வற்ற அவரது உழைப்பும் ,ஒருங்கிணைக்கும் வலிமையும் நிர்வாக மேன்மையும்தான் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ தலைவர்களின் கருத்து. அவர் மாநிலச் செயலாளராக இருந்த காலத்தில்தான் தமிழகத்தில் 17  எம் எல் ஏக்களை சிபிஎம் பெற்றிருந்தது.

உடல் நலிவுற்று திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நல்லசிவனை 1996இல் பார்க்கச் சென்ற தோழர்களிடம் அவர் தெரிந்துகொள்ள விரும்பியதெல்லாம் தமிழகத்தில் கலவரத் தீ அணைந்துவிட்டதா என்பதைப் பற்றித்தான்.

“ தோழர், நீங்கள் அமைதியாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் “ என்று வேண்டிய தோழர்களிடம் ,” நிலைமைகள் இப்படியிருந்தால் எப்படித் தோழர்களே தூக்கம் வரும்?” என்று கலங்கினாராம் தோழர் நல்லசிவன்.

என் மீது அன்பு கொண்டவர். எனது 
உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற
நூலுக்கு நல்ல அணிந்துரையும் 1994இல் ஏஎன்வழங்கினார்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPost
19-7-2021.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...