Friday, July 16, 2021

#இது_மாவு_தோசை_வியாபாரம்_அல்ல.#இது_கண்ணியமான_அரசியல்…

#இது_மாவு_தோசை_வியாபாரம்_அல்ல.#இது_கண்ணியமான_அரசியல்…
———————————————————

நேற்று சங்கரய்யாவின் நூற்றாண்டு விழா-பிறந்தநாள். தேவையில்லாமல் சிலரின் சங்கரய்யா குறித்தான பதிவுகளை சமூக வலைத்தளத்தில் பார்க்க முடிந்தது. நூறாண்டுகள் கடந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மாபெரும் தலைவராகத் திகழ்ந்தவர் சங்கரய்யா. அவரைப் பற்றி  பேசுவது நியாயம்தானா? 
எவ்வளவு அனுபவம், எவ்வளவு போராட்டங்கள், தியாகங்கள் என்று நினைக்க வேண்டாமா?.  முறையற்ற தனமாக பேசுவது நியாயம்தானா?. 

நான் சொல்ல வர வேண்டிய விஷயத்துக்கு வந்து விடுகிறேன். 
திமுகவிலிருந்து, மறுமலர்ச்சி திமுக பிரிந்தது. அப்போது நான் முக்கியமான களப்பணியில் அந்த இயக்கத்தில் இருந்தவன். மறுமலர்ச்சி திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டியக்கம் நடத்தலாம், மக்கள் நலனுக்காக பல்வேறு பிரச்சனைகளை எடுத்துச் சென்று போராடலாம் என்று முடிவெடுத்தோம்.அன்றைக்கு அதற்கான பணிகளில்  நான் முக்கியமாக இருந்தேன். வைகோவிற்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் ஒரு பாலமாகக் கூட இருந்திருக்கலாம். இன்றைக்கும் சங்கரய்யா இருக்கின்றார். 
மறைந்த திண்டுக்கல் என்.வரதராஜன் இல்லை. ஜி.ராமகிருஷ்ணன் இருக்கின்றார். மறைந்த உமாநாத், பரமேஸ்வரன் மற்றும் டி.லட்சுமணன் இருந்தார் அன்றைக்கு. ஓரளவு டி.கே.ரங்கராஜன் அவ்வப்போது சந்திப்புகள் நடக்கும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இருப்பார். ஜவஹர் இருக்கின்றார். இப்படி எல்லாம் பல கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இருக்கின்றார்கள். 

வைகோ, மு.கண்ணப்பன், பொன்முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் சில நேரங்களில் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்குச் சென்று பேசுவோம். அவர்களும் மதிமுக அலுவலகமான ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்த அலுவலகத்திற்கு  வந்ததுண்டு அப்போது.எல்.கணேசன் அவ்வப்போது இரு கட்சிகளின் சந்திப்பிலும் சில நேரங்களில் கலந்து கொண்டார். எல்லா சந்திப்புகளிலும் நான் உடன் இருந்துள்ளேன். சங்கரய்யா ஒரு நாளும் எங்கள் மறுமலர்ச்சி திமுக அலுவலகத்திற்கு வந்ததில்லை. என் வரதராஜன் தலைமையில் வருவார்கள். 
அதேபோல் நாங்களும் அங்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு பழைய அலுவலகத்திற்கு (தியாகராயநகரில் இப்பொழுது புதுப்பிக்கப்பட்டுள்ளது) செல்வது வாடிக்கை. அங்கே சென்றால் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் மத்திய, மாநில அரசியலைப்பற்றி வைகோ மற்றும் அங்குள்ள தலைவர்களுடன் பேசுவோம். அன்றைக்கு மாநில செயலாளர் சங்கரய்யா. 

இதில் ஜாதியை சம்பந்தப்படுத்திப் பேசுவது அர்த்தமற்றது. இப்படி பேசற மனிதர்கள் எத்தனை நாள் அரசியல் களத்தில் இருந்தவர்கள். முட்டாள்தனமாக பேசுவது வாடிக்கையாகி விட்டால், இதைத் தடுக்க வேண்டாமா? இதற்கு எல்லை இல்லையா? எதுவேண்டுமானாலும் எழுதலாம், எது வேண்டுமானாலும் பேசலாம், எவரை வேண்டுமானாலும் அர்த்தம் இல்லாமல விமர்சிக்கலாம் என்பது என்ன உலகம். 
சங்கரய்யா நூறாண்டு கடந்து விட்டார். நான் அரசியலில் 50 ஆண்டுகள் கடந்து உள்ளேன். நான் எந்தப் பொறுப்பிற்கும் வரவில்லையே. திடீரென்று வருகின்றார்கள்,.திடீரென்று அரசியலில் தென்பட்டு ; எப்படியோ ஏதோ பொறுப்பு பெற்று  அர்த்தமற்று பேசுகிறார்கள். அவர்களும் பேசுவதால்  அவற்றை உண்மை என்றால் என்ன சொல்ல…. அந்த விதன்ட வாதத்தில் என்ன நியாயம் இருக்கும். 
நூறாண்டு வாழ்ந்தவர்களை விமர்சனம் பண்ணுகிறீர்கள், உங்களுக்கு என்ன யோக்கியதை தகுதி இருக்கிறது.? எதையும் புரிந்து கொண்டு பேசுங்கள்,
அளந்து பேசுங்கள், நாவடக்கி பேசுங்கள், வரலாறு என்று ஒன்று உண்டு, இவை அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. எது வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசாதீர்கள். 
சங்கரய்யா கம்யூனிஸ்ட் கட்சியாக இருக்கலாம். ஆனால் வயதில் மூத்தவர். அரசியல் களத்தில் நின்றவர், அவர் எல்லாருக்கும் சொந்தம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, பாரதிய ஜனதா கட்சியாக இருந்தாலும் சரி, அல்லது திராவிட இயக்கமாக இருந்தாலும் சரிதான் அவரை மதிக்க வேண்டும் என்பதை உணருங்கள். 
அதேபோல் 1994-96 வரை மறுமலர்ச்சி திமுகவுக்கும் அவருக்கும் வேறு எதுவோ காரணத்திற்காகவோ தோழமை என்பது அபத்தம் திடீரென்று சற்றும் உண்மையற்று இப்படி வேற மாதிரி ஜாதி சமூகத்தைப்  பற்றி  பேசுவதில் அர்த்தமில்லை என்பதை உணர
வேண்டும். இப்போது இது தேவையா? என்ன அவசியம்.

இப்படித்தான் கடந்த கால வரலாறுகளை அறியாமல் கடந்த கால தலைவர்கள் பலரைப் பற்றி தெரியாமல், 

தன் போக்கில் பேசுவது நல்லதல்ல. பேசுகிறார்களே, எத்தனை பேருக்கு அவர்களுக்கு ஓமந்தூராரைப் பற்றி தெரியுமா?
குமாரசாமி ராஜா பற்றி தெரியுமா? காமராஜரை முதலமைச்சராக்கி, அந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சேலம் வரதராஜநாயுடு பற்றி தெரியுமா? பெரியாருக்கு தலைவராக இருந்த வரதராஜ் நாயுடு தெரியுமா? ஆனால் பெரியாரின் தோழர் என்றுதான் போட்டிருக்கிறார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸையும், தமிழ்நாடு பத்திரிகையும் நிறுவியவர், அவர் கடைசி காலத்தில் சாப்பாட்டிற்கே வழியில்லாத, ஒரு சீமான் வீட்டுப்பிள்ளை. 
இப்படி வரலாறு தெரியாமல் பேசுவது வேதனையாக இருக்கின்றது. சங்கரய்யா அரசியலின் ஒரு முத்திரை. இப்படித்தான் அரசியலில் இருக்க வேண்டும் என்று ஒரு பாலபாடத்திற்கு வழியமைத்து கொடுத்தவர் என்எஸ். மார்க்சிஸ்ட் கட்சியில் இருக்கலாம், பொதுவுடமை இயக்கத்தில் இருக்கலாம், அது வேறு விஷயம், அரசியல் களத்தில் நெடிய நீண்ட பல இருந்திருக்கின்றார் அல்லவா? எவ்வளவு எளிமையானவர், எவ்வளவு  நேர்மையானவர். 
புரிந்து கொள்ளாமல், போகிற போக்கில் எது வேண்டுமானாலும் பேசலாம், எது வேண்டுமானாலும் பதிவு பண்ணலாம் என்று இருப்பது நல்லதல்ல.இது மாவு தோசை வியாபாரம். இது கண்ணியமான
அரசியல்…
அன்றைய நிகழ்வை சொல்ல வேண்டியது எனது கடமை ஆகும்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPost
16-7-2021.

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...