Thursday, August 12, 2021

#தமிழ்_தேசியத்தை_உள்ளடக்கியதே_திராவிட_தேசியம்!


 #தமிழ்_தேசியத்தை_உள்ளடக்கியதே_திராவிட_தேசியம்!

——————————————————
(இன்றைய (12.08.2021) தினமணியில், நேற்று திராவிடம் அல்ல என்ற கட்டுரைக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ் தேசியத்தை உள்ளடக்கியதே திராவிட தேசியம் என்ற கட்டுரை வெளியாகியுள்ளது.)
••••
தமிழ், திராவிடம் இரண்டையும் வெவ்வேறாகவும் ஒன்றுக்கொன்று எதிரானதாகவும் சித்தரிக்க சிலர் விரும்புகின்றனர். திராவிடம் என்பது மண், மக்கள், மரபு, பண்பாடு ஆகிய பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய ஒரு அடையாளம். கால்டுவெல் ஏதோ உள்நோக்கத்துடன் அறிமுகப்படுத்திய வார்த்தை அல்ல. பல நூறு ஆண்டுகளாக இந்தியத் துணைகண்டத்தில் வழக்கில் இருந்துவரும் சொல். சமஸ்கிருத, தமிழ் பக்தி இலக்கியங்கள் தொடங்கி கல்வெட்டு, செப்பேட்டுச் செய்திகள் வரைக்கும் இதற்கு எத்தனையோ வலுவான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.
மனு ஸ்மிருதியிலிருந்தே தொடங்குவோம். “பௌண்டரம், ஓளண்டரம், திராவிடம், காம்போசம், யாவரும் சகம் பாரதம் பால்ஹீகம் சீநம் கிராதம் தரதம்கசம் இந்தத் தேசங்களை யாண்டவர்கள் அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரர்களாய் விட்டார்கள்”. (அதிகாரம் – 10, 44வது செய்தி, மனுதர்ம சாஸ்திரம்). நமது தமிழ்நாடு திராவிட தேசமாக இரண்டாயிரம் ஆண்டுகளாக அறியப்பட்டு வருகிறது என்பதற்கான ஆதாரம் இது. “தயாவத்யா தத்தம் திராவிட சிசுஹூ ஆஸ்வாத்ய தவயத்” என்கிறது ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரி.
பனிரெண்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ‘ராஜ தரங்கணி’ என்ற சமஸ்கிருத காஷ்மீர் சுவட்டில் தென்னாட்டு பிராமணர்களை திராவிட பிராமணர்கள் என்று குறிபிட்டுள்ளது. பார்பனக் கருத்தியலில் மாறுபட்டிருந்தாலும் திராவிடம் பற்றிய இந்தப் பதிவுகள் ஏடுகளில் இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
வைணவ ஆச்சாரியார் வேதாந்த தேசிகரின் தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் தொகுப்பை திராவிட மொழிகள் தொகுப்பு என்று உறுதி செய்கின்றார் எல்லீஸ்.
சமண, பௌத்த சமயங்களும், பாலி, சமஸ்கிருதம் மொழிகளும் திராவிடம் என்பதை மொழிவாரி அமைந்த பகுதிகள் என்று குறிப்பிட்டுள்ளன. அதேபோல பாகவதம் என்ற நூலிலும் திராவிடம் எனப் பொருள் கொள்ளும்படி “த்ரமிடம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது அழைக்கப்பட்ட 56நாடுகளில் திராவிட நாடும் ஒன்று. விந்திய மலைக்குத் தென்புறத்தில் உள்ள வட்டாரங்களை ”பஞ்ச திராவிட நாடுகள்” என்று அழைத்ததாக தகவல்கள் உள்ளன. விந்திய மலைக்கு வடக்கே உள்ள பிரதேசங்கள் ”பஞ்ச கௌட நாடுகள்” என்றும் அழைக்கப்பட்டுள்ளன. இப்படியாக பக்தி இலக்கியங்களில் குறிப்பிட்டாலும், திராவிடம் என்று முதன்முதலில் பயன்படுத்திய காலத்தை அறுதியிட்டு சொல்லமுடியாத நிலையில் உள்ளோம்.
இராமானுஜர் காலத்தில் வைணவப் பாசுரங்களை ‘திராவிட வேதம்’ என்று குறிப்பிட்டதும், திருக்கோளூர் ‘பெண்பிள்ளை இரகசியத்தில்’ இராமானுஜரிடம் பாடல் வழியாகப் பேசும் பொழுதுகூட வைணவ வேதங்களைப் பற்றி குறிப்பிடும் போது திராவிடம் என்றே அனுமானித்து பேசப்பட்டுள்ளதாக வழக்கில் உள்ளது. திருஞானசம்பந்தரை திராவிடசிசு என்று அழைப்பதும் உண்டு.
“திரமிளம்”, “திராவிடம்” என்ற இரு சொற்களும் ஒன்றே எனத் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. ”திரமிள சங்கம்” மதுரை சமண முனிவர் வஜ்ர நதியால் கி.பி 470ல் நிறுவப்பட்டது. திரமிள் என்பது திராவிட என்றப் பொருளையே குறிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். நிலவியல் அடிப்படையில் முக்கடலும் சங்கமிக்கும் பகுதி என்பதைக் குறிக்க த்ரையம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு பின்பு இது திராவிடமாக மருவியிருக்கலாம் என்ற பார்வைகளும் உண்டு.
தமிழ்க் கல்வெட்டுச் சான்றுகளும் செப்பேடுகளும் தமிழ்நாடு திராவிட நாடு என்று அழைக்கப்பட்டதை உறுதிசெய்கின்றன. சோழ மன்னர் விக்கிரம சோழனின் 11வது ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட தமிழ்க் கல்வெட்டு ஒன்றில் திராவிட தேசம் என்ற சொல் இடம்பெறுள்ளது. “திரிபுவன சக்கிரவர்த்திகள் கோனேரி மேலக் கொண்டான் திராவிட தேசம், கிழக்கு நாட்டு ஸ்ரீகெருவூரான வீர சோழச் சதிர்வேதி மங்கல(த்து)முடைய நாயனாருக்கு” (சாசனம் – 714, பக் – 670, South Indian Temple Inscriptions Volume – 2). தேசம் என்பது பெரிய அலகு. அதில் உள்ள சிறிய அலகு நாடு என்றாகிறது. இந்த கல்வெட்டின் காலம் கி.பி.1129 ஆக இருக்கலாம்.
இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கெரூர் தற்போதைய தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். கடந்த காலத்தில் திராவிட தேசத்தில் கொங்கு பகுதியும் உள்ளடக்கியுள்ளது என்பதைச் சொல்வதாக வெட்டப்பட்டுள்ளது.
அதுபோலவே அந்த காலத்தில் பல்வேறு செப்பேடுகளில் திராவிடம் குறித்து எழுதப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றைக் காணலாம்.
“யிப்படி அநேகஞ் சதுர்யுகம் பூசை கொண்டருளிய தேவர் தேவன் தெய்வ சிகாமணி தேதேவோர்த்தமஞ் தேவதாசாரப்பூமன் பத்தர் பிரியன் பக்தவத்சல பார்பதி வல்லவன் பார்பதி மநோகரன் பார்பதினாயகன் முத்திக்குவித்து முக்கணிசுபர னின்றகோல மழகிய நிமலன் நேரமொரு பஞ்சவர்ன்னப் பிரகாசன் திருமுகவோவன் தெண்டாயுத அஷ்த்தன் சம்புத்தீவில் திராவிட தேசத்தில் தொண்ட மண்டலத்தில் காஞ்சிமானகரில் திருக்கம்பை யாத்திலே பார்பதா தேவி அற்தபாகம் பெற வேண்டி தபசு பண்ணுகையில்” (பக் – 152, அல்லாள இளையோன் செப்பேடு, கொங்கு சமுதாய ஆவணங்கள் – புலவர் ராசு)
இந்தச் செப்பேட்டிலும் திராவிட தேசத்தின் ஒரு பகுதியாக தொண்டை மண்டலமும் உள்ளதாக புலவர் செ. ராசு தனது நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செப்பேடும் 1584ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் உண்டு. இதற்கு வலுசேர்க்கும் விதமாக மற்றொரு செப்பேடான மொரூர்காங்கேயர் ஏடு எனப்படும் செப்பேட்டில் பின்வருமாறு குறிப்புகள் உள்ளது.
“செம்புத்தீவில் திராவிட தேசத்தில் தொண்டை மண்டலத்தில் காஞ்சி மாநகரில் திருக்கம்பையாற்றில் பார்வதி தேவியம்மான அர்த்த பாகம் பெற வேண்டிய அரியதபசி பண்ணுகையில்… (பக் – 222, கொங்கு சமுதாய ஆவணங்கள். இந்த ஆவணம் தமிழ் துந்துவி ஆண்டில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.) இந்த ஆவணத்திலும் தொண்டை மண்டலம் திராவிட தேசத்தின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, கருமாபுரம் செப்பேட்டில், “ திராவிட தேசத்திச் சௌந்திர பாண்டியன் தனது மண்டலத்தில் நாடாளுவாரென்றும், னாடாழ்வாரென்றும், சோழ மண்டலத்திழ்க் கவண்டப்பட்டந்தனைப் பேர் பெற்றவரான, சான்றோர் குளத்தில்”, “மதுராபுரியில் பாண்டியனிடத்தில் வாளது பற்றி மதுரை மண்டலீகர் சோழ மண்டலமும், திராவிட தேசமும் கம்பை மாநதியும் காஞ்சிபுரமும் கல்யாநிபுரியும் காணிப்பெற்றவரான…” (பக் – 231, மேலது). ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர், ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கராச்சாரியார் போன்றவர்களைப் பற்றிய குறிப்புகள் எல்லாம் காணப்படுவதால் இந்த செப்பேடு பிற்காலத்தில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட சான்றுகள் அனைத்தும் தமிழ்நாடு திராவிட தேசத்தின் ஒரு பகுதியாகக் குறிப்பிடப்பட்டதை உறுதிப்படுத்துபவை.
சம்ஸ்கிருத வேதசாத்திர பேரரறிஞர் “காவ்ய கண்ட” கணபதி முனிவரின் (1878 – 1936) வாழ்க்கை வரலாற்றைக் கபாலி சாஸ்திரி எழுதினார். வாசிஷ்ட வைபவம் என்ற தலைப்பிலான அத்தியாயத்தில் “திராவிட தேசத்தில் ‘சேர்மாதேவி’ என்ற இடத்தில் கிர்த்திமானாவை. வே.சுப்பிரமணி அவர்களால் பாரத்வாஜாச்ரடம் ஒன்று நிறுவப்பட்டது…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ( சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் – பழ. அதியமான்.)
திராவிடம் என்ற சொல்லை தாயுமானவரும் கையாண்டுள்ளார். ஒன்பதாம் நூற்றாண்டில் ‘சேந்தன் துவாரகம்’ திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளது என்று பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன் தன்னுடைய ஆய்வில் குறிப்பிடுகின்றார். பிஷப். கார்டுவெல் 1856ல் திராவிட- தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் திராவிடம் என்ற பதம் நிலைநாட்டப்பட்ட அதே காலக் கட்டத்தில் அயோத்தி தாசர், ‘திராவிட ஜன சபை’ என்ற அமைப்பையும் தொடங்கினார். 1899-ல் பதிப்பிக்கப்பெற்ற சபாபதி நாவலரின் தமிழ் இலக்கண நூலுக்கு திராவிடப் பிரகாசிகை என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
பிஷப் கார்டுவெல்லுக்கு முன்பே மனோன்மணியம் சுந்தரனார், “திராவிட நல் திருநாடு” என்று குறிப்பிட்டிருக்கிறார். பெரியாருக்கு முன்பே எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு 1907ல் “திராவிடாபிமானி” என்ற தனி வார இதழை தொடங்கி நடத்தியிருக்கிறார். “திராவிட உத்கல வங்கா” என்று பாடுகிறது ரபிந்திரநாத் தாகூரின் தேசிய கீதம்.
பெரியார், திராவிடக் கழகத்தை தொடங்கும் போதும், பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கிய போதும், தலைவர் கலைஞர் திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்திச் செல்லும் போதும் முன்னிறுத்திய திராவிடம் என்ற சொல்லின் பழமையை இந்த தரவுகள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. இந்த வார்த்தை தமிழர் வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலும் தொன்று தொட்டு இந்த வார்த்தை புழக்கத்தில் உள்ளது.
சோழ அரசர்கள் இன்றைய கர்நாடகத்தில், அந்த காலத்தில் அமைந்த சாளுக்கிய ராஜ்யத்தை ஆண்டதும் உண்டு. சாளுக்கிய நாட்டோடு அவர்களின் மண உறவுகளும் உண்டு. இன்றைய ஆந்திர மண்ணை நோக்கி சோழ அரசர்கள் சென்று ஆட்சி அதிகாரம் மட்டுமில்லாமல் கோதாவரி, கிருஷ்ணா, ராஜ முந்திரி பகுதிகளில் மேற்கொண்ட திருப்பணிகளும் இன்றைக்கு அடையாளமாக திகழ்கின்றன.
திருமலை-திருப்பதியில் தமிழ் எழுத்துக்கள் இருந்ததெல்லாம் வரலாற்றுச் செய்திகள். இன்றைய கேரளம் (சேரநாடு) தமிழர்களின் வரலாற்று அங்கம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. எனவே இன்றைய கர்நாடகம், அந்திரம், கேரளம், தமிழ் மன்னர்களுடைய தொடர்பும் தமிழ் வீச்சும் அங்கிருந்ததை மறுக்க முடியாது.
திராவிடம் என்பது விசாலமான தமிழ் தேசியத்தின் ஆதிகாலத்து புவி அரசியல் ஆகும்.தமிழ் கல்வெட்டுகள் இருந்த இருக்கும் கர்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளடங்கிய திராவிட பார்வையில் இணைப்பே தமிழ்மொழி, மண், கலாச்சார தொடர்புகள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
திராவிடம் என்பது 19ம் நூற்றாண்டில் புழக்கத்திக்கு வந்த சொல் அல்ல. வரலாற்று ரீதியாக பண்டைய காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்ட சொல் என்பது இதன்மூலம் நமக்குத் தெரியவருகின்றது. இவை குறித்து மேலும் நாம் ஆய்வுகள் செய்யவேண்டும். பிறகு எப்படி தெலுங்கும், மலையாளமும், கன்னடமும், தாய்த் தமிழிலிருந்து தோன்றியிருக்க முடியும்?.
”கன்னடமும் கலிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன் உதிரத்தில் உயிர்த்தெழுந்து ஒன்று பலவாயிடினும்” என்று பழமையான இலக்கியத்தில் பாடப்பட்டிருக்கின்றதே......
திராவிடம் என்பது 19ம் நூற்றாண்டில் திடுதிப்பென்று புழக்கத்திக்கு வந்த சொல் அல்ல. வரலாற்று ரீதியாக பண்டைய காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்ட சொல். தீபகற்ப இந்தியாவுக்குப் பொதுப்பெயர் அது. திராவிடத் தேசியமும் தமிழ் தேசியமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. தமிழ்த் தேசியத்தையும் உள்ளடக்கியதே திராவிடத் தேசியம்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12-8-2021.

No comments:

Post a Comment

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்!

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்! அந்த மாவட்டத்தின் அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரனையும் தங்கம் தென்னரசுவையும் அதற்கா...