பரந்து திரிந்து பாய்ந்தோடும் கிருஷ்ணா நதி தீரத்தில் ஐம்பது கிராமங்களை அடங்கிய பகுதியில் ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகராக அமராவதி அமைய இருக்கின்றது. நாளை (22-10-2015) அதற்கான அடிக்கல் நாட்டு விழாவை வெகு சிறப்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நடத்துகிறார்.
ஆந்திராவை இருமாநிலங்களாகப் பிரித்து தெலுங்கானா உருவாக்கப்பட்டது. முந்தைய தலைநகர் ஐதராபாத் தெலுங்கானாவுடன் சேர்க்கப்பட்டதால் ஆந்திராவுக்கு புதிய தலைநகரை தேர்வு செய்ய முன்னாள் மத்திய நகர்புற அபிவிருத்தி துறை செயலாளர் கே.எம். சிவராமகிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.
இக்குழுவினர் ஆந்திராவின் அனைத்து மாவட்டங்களையும் பார்வையிட்டனர். பின்னர் பல்வேறு அம்சங்களை ஆய்வுசெய்து மத்திய அரசிடம் தங்களது அறிக்கையை தாக்கல் செய்தனர்.
ஆந்திராவி்ன் வட பகுதியான விசாகப்பட்டினத்திலும், ராயலசீமாவின் ஒரு பகுதியிலும், காளஹஸ்தி நாடி குடி பகுதியிலும் இந்தப் புதிய தலைநகரை அமைக்கலாம் என்று கூறியிருந்தது. இவ்வாறு தலைநகர் அமையும் பட்சத்தில் மாநிலம் சீரான வளர்ச்சியை பெரும் என்று கே.என்.சிவராமகிருஷ்ணன் குழு குறிப்பிட்டிருந்தது.
விஜயவாடா - குண்டூர் இடையே புதிய தலைநகர் அமையும் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறிவந்த சூழ்நிலையில் மத்திய குழு அவரது கருத்தை நிராகரித்துவிட்டது. விஜயவாடா - குண்டூர் இடையே தலைநகர் அமைந்தால் அது உள்கட்டமைப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும், விவசாய உற்பத்தி பாதிக்கும் என்றும் மத்திய குழு கூறியது.
இந்நிலையில் கிருஷ்ணா நதி அருகில் அமையும் இந்த புதிய தலைநகரால் குண்டூர் அருகில் உள்ள வளங்கொழிக்கும் நிலங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்று ஆந்திராவில் உள்ள இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. வெறும் 2500 ரூபாய் மாதாந்திர ஊதியமாக கையகப்படுத்தும் நிலங்களுக்குத் தருவது விவசாயிகளின் வயிற்றிலடிப்பது போலானது என்று எதிர்ப்புகளும் கிளப்பியுள்ளது.
சந்திரபாபு நாயுடு சிங்கப்பூர் அரசிடம் பேசி, அமராவதியை சிங்கப்பூர் நகரம் போல் ஆக்குவேன் என்று கூறியுள்ளார். இந்த நகரங்களின் கட்டமைப்பு மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு முதல் கட்டமைப்புப் பணிகளுக்காக 50ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முதல்கட்டப் பணிகளில் அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டிமுடிக்கப்படும்.
அடுத்தடுத்த இரண்டு கட்டங்களில் நகரத்தின் வீட்டு வசதி மற்றும் மற்ற அத்யாவசிய வசதிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு வீட்டுவசதியும், விரும்பும் விவசாயிகளுக்கு வணிகவளாகக் கட்டிடங்களும் பத்தாண்டுகளுக்குள் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளிவந்துள்ளது.
வலுவான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் புதிய தலைநகரை கட்டமைக்கும் பணிகள் நடைபெறத் துவங்கியுள்ளன. நில கையகப்படுத்துதல் குறித்த வழக்குகள் ஆந்திரா உயர்நீதிமன்றங்கள் வரை கொண்டு செல்லப்பட்டு இடைக்காலத் தடைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகரை உருவாக்க அமராவதியில் நாளை அடிக்கல் நாட்டப்படுகின்றது.
சந்திரபாபு நாயுடு, அமராவதி நகர் ஆந்திர மாநிலத்தின் மத்தியில் அமைந்துள்ளது என்றும், தென்கோடி ராயலசீமா மற்றும் குப்பத்திலிருந்து ஐந்துமணி நேரத்தில் சாலைவழியாக தலைநகரை வந்தடையமுடியும், வடக்கே ஸ்ரீகாகுளத்திலிருந்தும் அதே நேரத்தில் வந்துசேர முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். இப்படியாக மாநில மக்களின் நன்மைகளைக் கருதியே அமராவதி நகர் அமைக்கப்படுகிறது என்று தெளிவுபடுத்தியுள்ளார் சந்திரபாபு நாயுடு.
எது எப்படியோ பிரச்சனைகளும் இருக்கின்றன. வசதியான தலைநகரமும் இல்லாமல் ஒரு மாநிலமும் இயங்கமுடியாது.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-10-2015
#AndhraPradesh #APStateCapital #Amaravathi #KsRadhakrishnan #KSR_Posts
No comments:
Post a Comment