Thursday, October 15, 2015

கன்னியாகுமரி மீட்புப் போராட்ட தளபதிகளுக்கு வீரவணக்கம் - Kanyakumari Annexation.


கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இணைந்து இந்த நவம்பரோடு 59ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த பதிவோடு இணைக்கபட்டுள்ள கருப்பு வெள்ளை புகைப்படம் 60 ஆண்டுகளுக்கு முன்னாள் எடுக்கப்பட்டது.
அந்த மாநாட்டில் குமரி மாவட்ட பகுதிகளில் தமிழகத்தோடு இணைக்கவேண்டும் என்று தீர்மானங்கள் வடிக்கப்பட்டு போராட்ட களங்களும் அமைக்கப்பட்டது.
______________________________________________________________
11-08-1954 அன்று, தென் குமரிப் பகுதிகளை கேரளாவிடமிருந்து தமிழகத்தோடு இணைக்க, மார்த்தாண்டம் புதுக்கடையில் நடந்த போராட்டத்தில் 11 தமிழர்கள் துப்பாக்கிச் சூட்டில் மடிந்தனர். 61 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த கோரச் சம்பவத்தில் உயிரிழந்த குமரி மாவட்டத் தளபதிகளுக்கு வீரவணக்கம்.
இன்றைய “தமிழ்நாடு” 1956ல் அமைந்தது. 2006ம் ஆண்டு “தமிழ்நாடு பொன்விழா” என்று 11-11-2006ல் நிகழ்ச்சி எடுத்தேன். அந்த நிகழ்வில் நான் எழுதிய “தமிழ்நாடு-50” என்ற நூல் வெளியிடப்பட்டது.
அந்நூலில், குமரி மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தைப் பற்றியும், புதுக்கடையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களைப் பற்றியும் பதிவு செய்திருந்தேன்.
அந்தப் பதிவு பின்வருமாறு :
தெற்கு எல்லை (குமரி) மீட்புப் போராட்டம்.
இந்திய விடுதலைக்கு முன்பு திருவிதாங்கூர் அரசும், மலையாள ஆதிக்க வெறியர்களும் தமிழர்களுக்கு எதிராக நடத்தி வந்த கொடிய ஆட்சியில் தமிழர்களை முற்றிலும் புறக்கணித்தனர். தமிழ்க் கல்வியும் மறுக்கப்பட்டது. தமிழ்ப் பகுதிகளில், குறிப்பாக, தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் மலையாளிகள் குடியேறுவதை அரசே ஊக்குவித்தது. இதனார் தமிழர்களிடையே அச்ச உணர்வும், தமிழ்த் தாயகம் வாங்க வேண்டும் என்ற உணர்வும் உருவானது.
மலையாளப் பிரதேச காங்கிரஸ், மலபார் மாகாண காங்கிரஸ் கமிட்டி, கொச்சி பிரஜா மண்டல், திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் என மூன்று பிரிவாகச் செயல்பட்ட மலையாளப் பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் ஒன்று கூடி ‘காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரையுள்ள பகுதிகளைக் கேரள மாநிலமாக ஆக்க வேண்டும்’ என்று தீர்மானம் செய்தனர்.
இதை பி.எஸ். மணி கடுமையாக எதிர்த்தார். “நாஞ்சில் நாட்டையும் சேர்த்து கேரள மாநிலம் அமைக்க காங்கிரஸ் திட்டமிடுவது தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் ஆகும். திருவாங்கூரில் உள்ள தமிழ்ப் பகுதிகள் தமிழ்நாட்டோடுதான் இணைக்கப்பட வேண்டும்” என்று அவர் குரல் கொடுத்தார்.
இருப்பினும், மாநிலப் பிரிவினையின்போது, தமிழகத்தின் தெற்கு எல்லையான நாஞ்சில் நாடு கேரள மாநிலத்துடன் சேர்க்கப்பட்டு விட்டது. ஆனால், நாஞ்சில் நாட்டு மக்கள் தாய்த் தமிழகத்துடன் சேரவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி, போராட்டங்களை நடத்தினர்.
நாஞ்சில் மண்ணில் தமிழர் இயக்கங்கள்
சுந்தரம் பிள்ளை எழுதிய ‘மனோன்மணியம்’ நாடகமும், கவிமணி தேசிய வினாயகம் பிள்ளையின் கவிதைகளும், ஆராய்ச்சி அறிஞர் கே.என்.சிவராஜா பிள்ளை எழுதிய ‘வஞ்சி கேசரி’ இதழ் மூலமும், பி. சிதம்பரம் பிள்ளை ‘தமிழன்’ என்ற பத்திரிகை மூலமும் நாஞ்சில் நாட்டு மக்களுக்குத் தமிழ் உணர்வை ஊட்டினார்கள்.
நெய்யூர் காஞ்சான்குழி எம். குஞ்சன் நாடார் 1923இல் திருவிதாங்கூர் மக்களின் துயர் கண்டு ‘தமிழர் விடுதலைக் காங்கிரஸ்’ என்னும் இயக்கத்தைத் துவக்கி, மலையாளிகளையும் எதிர்த்தார். எம். சுப்பிரமணிய நாடார், ஏ. பொன்னம்பல நாடார், கல்லங்குழி பாக்கியநாதன், பரமானந்தம், கருத்துடையான், மாசான முத்து, தாளக்காவிளை செறியான், சிவஞானம், குளச்சல் பண்டாரவிளை நாராயணன் நாடார் போன்றோர் இவ்வியக்கத்தை நடத்தினர்.
1935இல் அப்பாவு ஆசான் தலைமையில், காளிக்காவிளையைத் தலைமையகமாகக் கொண்ட ‘தமிழர் கட்சி’ துவக்கப்பட்டது.
1938ஆம் ஆண்டு அக்டோபரில் இராஜாக்கமங்கலத்தில் நடந்த கூட்டத்தில், தமிழர்களுக்கெனத் தமி மாவட்டம் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் அவருடைய பேச்சு எடுபடாததால், ‘நாஞ்சில் தமிழர் காங்கிரஸ்’ என்ற அமைப்பை உருவாக்கினார். தமிழ் அறிஞரான பி. சிதம்பரம் பிள்ளை அறிவுரையின் பேரில், “அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ்” என மாற்றப்பட்டது. 14.12.1945இல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் முதல் அலுவலகம், நாகர்கோவிலில் பி.எஸ். மணியின் பனிமலர் நிலையத்தில்தான் செயல்பட்டது. இந்த அமைப்பு 1946ஆம் ஆண்டு ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்’ எனப் பெயர் மாற்றப்பட்டு முதல் தலைவராக எஸ். நத்தானியல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த காலத்தில், காங்கிரஸ் கட்சியிலும் சிலர் ஆதரவாக இருந்தனர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஜீவா போன்ற தலைவர்களும் மொழிவரியாக தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
கேரளத்தில் காங்கிரஸ் தலைவர் கேளப்பன், பட்டம் தாணுப்பிள்ளை, கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ஏ.கே. கோபாலன் ஆகியோர் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு நின்றனர். டில்லியில் பிரதமர் நேருவின் சகா வி.கே. கிருஷ்ணன் மேனன், வெளி உறவுத் துறைச் செயலாளராக இருந்த கே.பி.எஸ். மேனன், உள்துறைச் செயலாளராக இருந்த வி.பி. மேனன், துணை அமைச்சராக இருந்த லட்சுமி மேனன் மற்றும் டில்லியில் மலையாள அதிகாரிகளும், உயர் அதிகாரிகளும் கேரள மாநிலத்தை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பகுதிகளைக் கைப்பற்றுவதிலும் தீவிரமாக பணிபுரிந்தனர்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த தமிழர்கள் ஒன்றுபட்டு ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்’ என்ற அமைப்பின் கீழ் மொழி உணர்வுடன் போராடினார்கள். 1957ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் பணியால் அரசியல் கட்சிகள் திசைமாறி எல்லைப் பகுதிகளை மீட்க வேண்டும் என்கிற உணர்வு மங்கிப் போனது.
24.1.1946இல் நத்தானியல் தலைமையில் இரா. வேலாயுதம் பெருமாள், பி.எஸ். மணி, வி. க்õஸ் ஆகியோர் கொண்ட தூதுக்குழு சென்னைக்குச் சென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரான காமராஜர், எம். பக்தவத்சலம், தினமணி ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம், துணை ஆசிரியர் ஏ.என். சிவராமன், கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ப.ஜீவானந்தம், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், டி.கே.எஸ். சகோதரர்கள் ஆகியோரைச் சந்தித்து திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்கள்.
1947ஆம் ஆண்டு மாதத்தில் மீண்டும் நத்தானியல் தலைமையில் ஒரு தூதுக்குழு சென்னை சென்று தமிழ்நாட்டின் தலைவர்கள் பலரையும் சந்தித்தது.
தியாகி பி.எஸ். மணியின் போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், செங்கோட்டை வட்டம் ஆகிய பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை வழி நடத்தியவர் பி.எஸ். மணி ஆவார். எம். நத்தானியல், நேசமணி போன்ற போர்க்குணம் கொண்டோரின் தலைமையில் இக்கோரிக்கை உருப்பெற்று, வலு அடைந்தது. பி.எஸ். மனி அழைப்பு இருந்தாலும், அழைப்பு இல்லை என்றாலும் தமிழகத்தில் நடக்கும் அனைத்து மாநாட்டுக்குச் சென்று, குமரியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற தீர்மானங்களை முன்மொழிய வேண்டிக் கொள்வது அவரது சலியாத நடவடிக்கை ஆகும். மணியின் கோரிக்கையை பலர் காதில் வாங்கிக் கொள்ளாமல், அவரைத் தவிர்த்தபொழுதும் கூட அதற்காகச் சற்றும் கவலைப்படாமல் அவர் தொடர்ந்து போராடினார். மணிக்கு, ம.பொ.சி. அவர்களுடைய ஆதரவும் கிடைக்கப் பெற்றது.
1948ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கும் குஜராத்துக்கும் ஏற்பட்ட எல்லைச் சிக்கலில், சிமோதி பகுதியை குஜராத்துக்கு அன்றைய துணைப் பிரதமர் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேல் மாற்றம் செய்ததை ‘தினமணி’ கார்ட்டூன் படமாக வெளியிட்டது. அந்தக் கார்ட்டூனை 1000 தாள்களில் அச்சிட்டு , அதேபோல் ஏன் திருவிதாங்கூரை தமிழகத்தில் சேர்க்கக் கூடாது என்று நியாயம் கேட்டார் மணி.
1950இல் கன்னியாகுமரி எல்லைப் போராட்டம் மிகவும் வேகம் அடைந்தது. இதுகுறித்து கொச்சி முதல் அமைச்சரும், அன்றைய தமிழக அமைச்சர் பக்தவத்சலமும் பாளையங்கோட்டையில் சந்தித்துப் பேசினர். ஆனால், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மணி ஏற்றுக் கொள்ளாமல், கேரளத்துடன் குமரி மக்கள் இருக்க முடியாது என்பதையும், எந்த சமரசத் திட்டத்திற்குத் தயார் இல்லை என்றும் தெரிவித்தார். குஞ்சன் நாடார் போன்ற பல்வேறு போராட்டத் தளபதிகள் இப்பிரச்சினையில் அணிவகுத்தனர். அரசு அலுவலகங்களுக்கு முன்னால் மறியல், பொதுக்கூட்டங்கள் நாள்தோறும் குமரி மாவட்டத்தில் நெடைபெற்றன. 1054 ஆகஸ்ட் 11 அன்று பதினாறு தமிழர்கள் போலிஸாரால் சுடப்பட்டு மாண்டனர்.
நேசமணி கைது
1954ஆம் ஆண்டில் தேவிகுளம் - பீர்மேடு பகுதியில் திட்டமிட்டு வெளியேற்றும் நிலைமையை ஆராய நேசமணி தலைமையில் மூவர் குழு சென்றது. அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். ம.பொ.சி. அச்சமயத்தில் மூணாறு சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். நேசமணி கைதைக் கண்டித்தும் குரல் கொடுத்தார். திருவிதாங்கூரில் கல்குளத்தில் நேசமணி கைதைக் கண்டித்து மக்கள் பேரணி நடத்தினர்.


இதனைத் தொடர்ந்து பெரும் போராட்டங்கள் நடந்த. குஞ்சன் நாடார் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் சிறைப்பட்டனர். கேரள அரசு கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டது. இந்தப் போராட்டத்தின்போது 8.8.1954 அன்று நாகர்கோவில் செங்கோட்டை நீதிமன்றங்களின் முன்பாக தி.மு.க. தொண்டர்கள் அறிஞர் அண்ணாவின் வேண்டுகோளை ஏற்று மறியல் போராட்டம் நடத்தி கைதானார்கள்.
குமரி பகுதிகளில் 11.8.1954 அன்று தமிழர் விடுதலை நாளாகக் கொண்டாடப்பட்டது. அன்று தமிழர் பகுதிகளில் முழு கடை அடைப்பு நடத்தப்பட்டது. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். அரசு அலுவலங்களின் முன்னால் மறில் போராட்டம் தொடர்ந்தது. புதுக்கடையில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, கலைந்து ஓடிய மக்களை வழிமறித்துக் காவல் துறையினர் வெறிகொண்டு தாக்கினர். போராட்டத் தளபதியான குஞ்சன் நாடார் சிறைப்பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து கடுமையாகத் துன்புறுத்தப்பட்டார். அதனாலேயே அவர் உயிர் துறக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த அடக்குமுறைகள் அனைத்தையும் மீறி, ‘திரும்பி வந்தால் மகன்’ என்று பச்சை இரத்தத்தால் எழுதி வைத்துவிட்டு, இரண்டு மாத காலம் வீட்டை விட்டுத் தலைமறைவாக இருந்த குமரி மாவட்ட இளைஞர்களும், மாணவர்களும் எல்லைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நேசமணியில் தொடர் போராட்டம் நிறுத்தப்பட்ட பின்பும், போராட்டத் தளபதிகள் போலிஸாரின் குண்டாந்தடியால் அடித்து உதைக்கப்பட்டனர். அச்சமயம் தலைமறைவாக இருந்து போராட்டத்தை நடத்தி வந்த பி.எஸ். மணியை திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள போலிஸார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் அடைத்தனர். இதுபோன்று செங்கோட்டையிலும் போராட்டடங்கள் நடத்திய கரையாளர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
தேவிகுளம், பீர்மேடு ஆகிய தமிழ்ப் பகுதிகளைத் திரும்பவும் தமிழகத்தில் சேர்க்க அனைத்துக் கட்சி ஊர்வலம் சென்னையில் நடைபெற்றது. முதல் நாள் ஜீவா கைது செய்யப்பட்டார். சென்னையில் காவல் துறை கண்ணீர் புகை வீச்சு, கல் வீச்சு என்று பதட்ட நிலையில் சென்னைக் கடற்கரைக்கு மக்கள் பேரணி சென்றதும் பி.டி.ராஜன் தலைமை தாங்கினார். அண்ணா கலந்து கொண்டார்.
சட்டமன்றத்தில் விவாதம்
பசல் அலி தலைமையில் அமைக்கப்பட்ட மாநில எல்லைகள் மறுசீரமைப்பு ஆணையம் அளித்த பரிந்துரைகளின் பேரில் சென்னை மாகாண சட்டமன்றத்தில் 21.11.1955 முதல் 26.11.1955 வரை விவாதம் நடந்தது. பல கட்சித் தலைவர்களும் இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.
அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து சில பகுதிகள்:
கொல்லங்கோடு காட்டுப் பகுதி கோவை மாட்டத்தை ஒட்டி இருக்கிறது. இப்பகுதியில் வாழும் மக்கள் தமிழர்கள் ஆவார்கள். காட்டுவாசிகளாக இருந்தாலும் அவர்கள் பேசும் மொழி தமிழே ஆகும். எனவே, இப்பகுதியை சென்னை மாகாணத்திலேயே சேர்க்க வேண்டும் என்பதை ஆணையத்தின் முன்னால் நாம் எடுத்துக் காட்டினோம். இப்பகுதியின் மீது நமக்கு உள்ள அசைக்க முடியாத உரிமைகள் ஒருபுறம் இருந்தாலும், நிர்வாக வசதி என்ற முக்கியமான விஷயத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கொள்ளேகாலம்
கோவை மாவட்டத்தில் கொள்ளேகாலம் தாலுகா கர்நாடக மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு இருப்பதை நாம் ஆட்சேபித்தது இல்லை. இந்தத் தாலுக்காவின் தென் பகுதியில் அமைந்து உள்ள கிராமங்கள் முழுக்க முழுக்க தமிழர்கள் வாழும் பகுதிகள் ஆகும். எனவே கொள்ளேகாலம் தாலுக்காவின் தென் பகுதியை சென்னை மாகாணத்திற்கு அளிக்க வேண்டும் என்று நாம் வற்புறுத்தி இருக்கிறோம். தாலுக்கா முழுவதுமே ஒரு அளவுகோலாக கொள்ள வேண்டுமே தவிர, அதைப் பிரிக்க முடியாது என்று கமிஷன் நமக்கு சொல்லிவிட்டது. ஆனால், மற்ற மாநிலங்களைப் பொறுத்த வரையிலும் தாலுக்காக்களைப் பிரிப்பதற்கு கமிஷன் சம்மதித்து இருக்கிறது.
தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு,
செங்கோட்டை இந்த ஐந்து தாலுக்காக்களை சென்னை மாகாணத்தில் சேர்க்க வேண்டும் என்று கமிஷன் பரிந்துரை செய்து உள்ளது. ஆனால் நெய்யாற்றங்கரை, சித்தூர், தேவிகுளம், பீர்மேடு ஆகிய நான்கு தாலுக்காக்களை நமக்குத் தருவதற்கு கமிஷன் மறுத்துவிட்டது. சித்தூரைப் பொறுத்தவரையில் அதில் இரண்டு பகுதிகள் உள்ளன. திருவாங்கூர் - கொச்சி மாநிலத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் தமிழர்களே பெரும்பான்மையினராக வாழ்கிறார்கள். இப்பகுதியில் உள்ள 14 கிராமங்களில் வாழும் மக்களில், 72 சதவீதம் தமிழர்களே ஆவார்கள். கோவை மாவட்ட மக்களுக்கும் அவர்களுக்கும் இடையே நெருக்கமான உறவுகள் உண்டு. எனவே சித்தூர் பகுதியும், மலபார் மாவட்டத்தில் உள்ள தமிழ் பேசும் பகுதியும் பண்பாடு, பழக்க வழக்கங்கள், மொழி போன்ற எல்லாவற்றாலும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டிய பகுதிகள் ஆகும்.
தேவிகுளம், பீர்மேடு இரண்டு தாலுக்காக்களையும் சேர்த்து 57 சதவிகிதம் தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையைக் கமிஷன் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுத்து விட்டது. இந்த இரண்டு தாலுக்காக்களில் உள்ள எல்லா கிராமங்களிலும் தமிழர்கள் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். பீர்மேடு தாலுக்காவில் பெருவந்தானம் என்ற கிராமத்திலும், தேவிகுளம் தாலுக்காவில் பள்ளிவாசல் என்ற கிராமத்திலும் மட்டுமே மலையாளிகள் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். இந்த இரண்டு கிராமங்களில் மிகப் பெரும்பான்மையான மலையாளிகள் குடியேறி இருப்பதால் மொத்த விகிதாசாரத்தில் அவர்களின் எண்ணிக்கை கூட்டிக் காட்டப்பட்டு உள்ளது.
காடு மண்டிக் கிடந்த இந்தத் தாலுக்காக்களை தமிழர்கள் தங்களின் கடும் உழைப்பினால் வெட்டித் திருத்தி வளம் கொழிக்கும் பூமியாக ஆக்கினார்கள். அவ்வாறு ஆன பிறகு மலையாளிகள் குடியேறி தமிழர்களின் உழைப்பின் பயனை அறுவடை செய்தார்கள் என்பதே உண்மை ஆகும். மதுரை மாவட்டத்தில் இருந்துதான் இந்தப் பகுதிகளுக்குச் செல்வதற்குச் சாலைகள் உண்டு. திருவாங்கூர் பகுதியில் இருந்து வழிகளே கிடையாது. வி.சி.பி. இராமசாமி அய்யர் திருவாங்கூர் சமஸ்தான திவானாக இருந்த போதுதான் இந்தத் தாலுக்காக்களுக்கு திருவாங்கூர் பகுதியில் இருந்து சாலைகள் போடப்பட்டன. அதற்குப் பிறகே மலையாளிகள் குடியேறத் தொடங்கினார்கள்.
காமராஜர் - கோவிந்த மேனன் சந்திப்பு
இறுதியாக காமராஜரும், திருவிதாங்கூர் - கொச்சி பகுதிகளை உள்ளடக்கிய சமஸ்தான முதல் அமைச்சர் பனம்பள்ளி கோவிந்த மேனன் ஆகியோரும் பேசிய பின்பு, தேவிகுளம் - பீர்மேடு பகுதிகளை கேரளம் எடுத்துக் கொண்டது. கன்னியாகுமரி - செங்கோட்டை பகுதிகள் தமிழகத்துடன் இணைந்தது. தேவிகுளம் - பீர்மேடு கேரளத்திற்குச் சென்றதற்குத் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. இருப்பினும் கேரளம் பெரியாறு அணையைக் கையகப்படுத்த வேண்டும் என்று முயற்சித்த பொழுது காமராஜர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. மாநில மறுசீரமைப்புக் குழுவான பசல் அலி கமிஷன் உறுப்பினராக இருந்த பணிக்கரால் தேவிகுளம் - பீர்மேடு தமிழகத்தை விட்டுப் போய்விட்டது என்ற குற்றச்சாட்டும் அப்பொழுது எழுந்தது.
மாநில மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கேபாடு, செங்கோட்டை நகர்ப் பகுதி ஆகியவை தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டன. தமிழக முதல் காமராஜரைச் சந்தித்த மார்ஷல் நேசமணி, தமிழகத்துடன் இணையவிருக்கின் பகுதிகளை, ‘கன்னியாகுமரி மாவட்டம்’ என்ற பெயரில் தனி மாவட்டமாக அறிவிக்கும்படி வேண்ட, காமராஜரும் அக்கோரிக்கையை ஏற்றார். 1.11.1956இல் நாகர்கோவிலில் இணைப்பு விழா நடைபெற்றது. இதில் காமராஜர் கஅந்து கொண்டார். அதே நாளில் செங்கோட்டை இணைப்பு விழாவிற்கு, செங்கோட்டையில் பி.டி.ராஜன் தலைமை ஏற்க, தமிழக அன்றைய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பங்கேற்றார். செங்கோட்டை தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைந்தது.
நாகர்கோவிலில் நடந்த விழாவிற்கு தியாகி பி.எஸ். மணி அவர்களை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதைப் பொருட்படுத்தாத மணி, இரண்டு நாள் கழித்து நாகர்கோவிலில் ம.பொ.சி., என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோரைக் கொண்டு குமரி மாவட்டம் இணைப்பு விழாவைச் சிறப்பாக நடத்தினார்.
***********************************************************************************
இவ்வளவு தியாகங்கள் செய்த தென்குமரி மாவட்டத்தில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, நெய்யாறு அணைப் பிரச்சனை, இந்தியாவிலே முதலில் போட்ட காங்கிரீட் சாலை “நாகர் கோவில்-திருவனந்தபுரம்” இடையிலானது. ஆனால், இன்றைக்கு அந்தச் சாலையில் பயணமே செய்யமுடியாத அளவுக்குச் சூழ்நிலை. ரப்பர் தோட்டப் பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனைகள் அங்கு உள்ளன. அவையெல்லாம் கவனித்து தீர்க்கப்பட வேண்டும்.
குமரி மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் உள்ள ஏதோ ஒரு கிராமத்தில் கேரள அரசின் பொது விநியோக அட்டைகள் வழங்கியதாக செய்திகள் வந்தன. எனவே குமரி மாவட்டத்தின் தேவைகளை கவனிக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பாகும்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-10-2015.
‪#‎KsRadhakrishnan‬ ‪#‎KSR_Posts‬
‪#‎kanyakumariAnnexation‬ ‪#‎TamilNadu50‬ ‪#‎kanyakumari‬Annexation

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...