1892ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி கன்னியாகுமரி வந்த விவேகானந்தர் கடலுக்குள் நீந்தி சென்று இரட்டை பாறை என்றும் அழைக்கப்படும் இந்த பாறையில் 3 நாட்கள் தியானத்தில் இருந்தார். அற்புதமான இந்த கருப்புவெள்ளைப் படம்
வெள் உவன் உபயத்தில் கிடைத்தது.
முக்கடலும் சங்கமிக்கும் குமரித்தாய் நித்தம் காக்கும் குமரிமுனையை கடந்தகால காட்சி மனத்தைக் கொள்ளைகொள்கிறது. ரம்மியமான அமைதி, ஆர்ப்பரிக்கும் கடலலைகள் இந்த காட்சிகள் அன்றைக்கு இருந்தன. அன்றைய காட்சியையும் இன்றைக்குள்ள குமரிமுனையினையும் சற்று ஒப்பிட்டுப் பார்த்தால் சுற்றுச்சூழலை மானிடம் எவ்வளவு பாழ்படுத்தியிருக்கிறது என்பதற்கு சாட்சிகளே வேண்டாம்.
வானுயர்ந்த அய்யன் வள்ளுவர் சிலையை தலைவர் கலைஞர் அவர்கள் நாட்டுக்கு அர்ப்பணித்தார். விவேகானந்தர் மண்டபமும், இன்றைக்கு தென்முனைக் குமரிக்கு அடையாளங்களாக கம்பீரமாகத் திகழ்கின்றன. இந்தியாவின் வடக்கே பனிபடர்ந்த பர்வதமும், தெற்கே நீரால் சூழப்பட்ட முக்கடல் சங்கமமும் இப்படி உலகத்தில் எந்தஒரு நாட்டிற்கும் எல்லைகளாக அமையவில்லை.
மற்றொரு சிற்பத்தின் படம், தெற்குச்சீமை நெல்லை அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் வைகுண்ட நாதர் கோவிலில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள அர்ச்சுனன் சிலை. கல்லிலே கலைவண்ணம் கண்டார் என்னும் சொல்லுக்கு விளங்க கம்பீரமும் கலைநயமுமாக நிற்கும். இந்த சிலையின் வலது காதின் துளையில் தென்னங்குச்சியினை நுழைத்தால் அது இடதுகாது வழியாக வெளியேறும். அப்படி ஒரு சிற்பக்கலைநயத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
நம்மாழ்வார் ஸ்ரீவைகுண்டத்தை வைப்புத் தலமாகப் பாடியுள்ளார். இக்கோவிலில் உள்ள திருவேங்கடமுடையான் சந்நிதியில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த அற்புதமான சிற்பங்கள் உள்ளன.
அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவரால் வழிபடப்பட்ட கோயில். இங்குள்ள சிவன் கோவிலிலும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள் உள்ளன. எதிரே உள்ள கோபுரம் திருமலை நாயக்கரால் துவங்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டத்தில் தான் குமரகுருபரர் பிறந்தார். கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ், மீனாட்சி அம்மை குறம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் போன்றவற்றை இயற்றினார். காசி சென்று அங்கு சைவ மடத்தை நிறுவ விரும்பினார். அதற்கு நிலம் தந்து உதவி செய்ய வேண்டி தில்லி சுல்தானை அணுகினார். அவரிடம் பேச இந்தி மொழி அறிவு தேவைப்பட்டது. கலைவாணியைக் குறித்துப் பத்துப் பாடல்கள் அடங்கிய சகலகலா வல்லி மாலை என்ற நூலை இயற்ற, கலைவாணியின் அருளால் இந்தி மொழியில் அப்போதே வல்லமை பெற்று சுல்தானிடம் வேண்டிய உதவியைப் பெற்றார் என்பதும் வரலாறு ஆகும்.
இதன் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கோவிலும் சிற்பங்களுக்குப் பெயர்பெற்றது. அங்குள்ள ரதி, மன்மதன் சிலை கலைநயம் மிக்கது. கவனத்தை ஈர்ப்பவை. அதைக்குறித்து ஒரு முழுமையான பதிவும் செய்யவேண்டும்.
-கே.எஸ்இராதாகிருஷ்ணன்.
26-10-2015.
#kanyakumari #Srivaikundam #KsRadhakrishnan #KSR_Posts
No comments:
Post a Comment