Sunday, October 25, 2015

தொலைக்காட்சி விவாதங்கள் - Television Debates

தொலைக்காட்சி விவாதங்கள்  - Television Debates
________________________________________________

புதியதலைமுறை தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு சமீபத்தில் நண்பர் ஞானி அவர்கள் எழுதிய கடிதமும், இன்றைக்கு அன்புக்குரிய நண்பர் புதியதலைமுறை.நெறியாளர் ஜென்ராம் அவர்களுடைய பதிவையும் வாசித்தேன். ஏற்கனவே இதுகுறித்து தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு ஒரு திறந்த மடல் எழுதலாம் என்று நினைத்திருந்தேன்.

1987காலகட்டத்திலிருந்து தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவன். அப்போது சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் இயக்குனராக அகிலா சிவராமன் இருந்தார்.  அப்போதெல்லாம் முன்கூட்டி இதுபோன்ற விவாதங்கள் பதிவு செய்து இரவில் குறிப்பிட்டநேரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள்.

இதுமாதிரி விவாதங்கள் நடக்கும்போது குளிர்சாதனங்களை அணைத்துவிட்டு இடைவெளி விட்டுவிட்டு பதிவுகள் நடக்கும். மின்விசிறிகூட ஒலிப்பதிவு  செய்யும்போது சத்தமெழுப்பும் என்று அணைத்துவிடுவார்கள். உழைக்கும் தொழிலாளியைப்போல வியர்வையில் ஆடைகள் நனைந்து சில சமயம் வேறு ஆடைகள் மாற்றிக்கொண்டு பேசுவதும் உண்டு.

இன்றைக்கிருக்கும் நவீன வசதிகளெல்லாம் அப்போது கிடையாது. தொலைக்காட்சிகளுக்கு விவாதத்திற்கு வருகின்றவர்கள்  அனுபவமிக்க அரசியல், சமூக பிரக்ஞை கொண்டவர்கள். அவர்களோடு எப்படி விவாதிக்கப்போகிறோம் என்ற அச்சத்தோடு சென்றாலும், திரைக்குப்பின்னே தட்டிக்கொடுத்து அவர்கள் உற்சாகப்படுத்துகிறவர்களாக இருப்பார்கள்.

அப்படி, விவாதங்களில் கலந்துகொண்டவர்களில் முக்கியமானவர்கள், இரா.செழியன், முன்னாள் அமைச்சர்கள் க.ராஜாராம், செ.மாதவன், சிதம்பரம் வி.வி. சுவாமிநாதன், வேலூர் விஸ்வநாதன், வாழப்பாடி ராமமூர்த்தி, கம்யூனிஸ்டு தலைவர்கள் எம்.கல்யாண சுந்தரம், சங்கரைய்யா, உமாநாத், வி.பி. சிந்தன், ரமணி, காங்கிரஸ் தலைவர்களான குமரி அனந்தன், தி.சு.கிள்ளிவளவன், ஜனதாகட்சித் தலைவர் முகம்மது இஸ்மாயில்,  ஜி.சுவாமிநாதன், மூத்த பத்திரிகையாளர் என்.ராம், கல்கி ராஜேந்திரன், நா பார்த்தசாரதி போன்ற பலர் நினைவுக்கு வருகின்றனர். இவர்களுடன் விவாதிப்பது மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்தத் தகுதிகளின்  அடிப்படையில் நல்லநோக்கத்தோடு இங்கு சிலவற்றை சொல்லியாகவேண்டும். யாரையும் குறைசொல்வதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

இன்றைக்குச் சூழலில் விவாத நிகழ்ச்சிகளில் என்ன நடக்கின்றது? விவாதப்பொருளுக்கு சம்பந்தம் இல்லாமல் பேசுவதும், ஏதாவது பேசவேண்டுமென்று காலவிரயம் செய்வதும் தான். இதற்காகவே அடியேனை அழைக்கும்போது, விவாதத்தின் கருப்பொருள் என்ன, யார் யார் விவாதத்திற்கு வருகிறார்கள் என்றெல்லாம் அறிந்து, முறைப்படுத்தி வருவேன். இது தன்னகந்தையாக அல்ல; ஒரு சௌகரியமான சூழ்நிலைக்கான முன்னேற்பாடாக இந்த முறையைப் பின்பற்றி வருகிறேன்.

தினமும் ஒவ்வொரு செய்தித் தொலைக்காட்சிகளும் மக்கள் பார்ப்பதற்காக  ஏதாவது விவாதிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் உள்ளது. நல்ல விவாதத் தலைப்புகளை எடுத்துக்கொள்வது இல்லை என்பது வேதனையான வி்டயம். ஒரு விவாதத்தில் நான்குபேர் இருந்தால் ஒரே கருத்துக்கு ஆதரவாக மூன்றுபேரையும், அதற்கு எதிர்கருத்துள்ள ஒருவரையும் அழைத்துவைத்து விவாதம் நடத்துவதென்பது ஏற்புடையதுதானா?

அதேப்போல தொலைக்காட்சி விவாதத்திற்கு அழைப்பவர்களுக்காக ஏதேனும் நெறிமுறை இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. ஒரு சிலநேரங்களில் யாருமே இல்லையென்றால் மாலை ஆறுமணி அளவில் ஒருமணிநேர அவகாசத்தில் அழைப்பார்கள். அப்படி அழைக்கும் தொலைக்காட்சிகளிடம் நேரடியாகவே, “ இன்றைக்கு யாரும் கிடைக்கவில்லையா?” என்று வேடிக்கையாகக் கேட்பதும் உண்டு. முன்பு போல விவாதப் பொருள்களும் மனத்தை ஈர்க்காததாலும்,  பிரச்சனைகளைப் பற்றித் தெரியாதவர்களிடம் விவாதித்து என்ன பயன் என்றும் சிலநேரங்களில் கலந்துகொள்வதில்லை.

அதுமட்டுமில்லாமல் கடந்தகால வரலாற்று நிகழ்வுகளைச் சொல்லும்போதும் அதை நெறியாளர்கள் தடுப்பதும், “அதை ஏன் பேசுகிறீர்கள்” என்று கூறுவதும் வேதனையாக உள்ளது. குறிப்பாக நண்பர் ஆர்.முத்துகுமாரும், நானும் பழைய நிகழ்வுகளைச் சொல்வது வாடிக்கை. அதைப்பேசவிடாமல் தடுப்பதும் சிலசமயங்களில் வேதனையைத்தரும்.

ஈழத்தமிழர் பிரச்சனை விவாதங்களில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே நவநீதம்பிள்ளையை ஆண் என்றார். கச்சத்தீவு பிரச்சனையில் ஒருவர் தஞ்சாவூர் - நாகப்பட்டிணம் பக்கம் கச்சத்தீவு உள்ளது எனச்  சொல்லும் போது இவர்களிடம் என்ன நாம் விவாதிக்க?

செய்தித் தொலைக்காட்சிகளுக்கு என்னுடைய கோரிக்கைகள் எல்லாம், “சரியான விவாதப் பொருளை தெரிவு செய்யுங்கள், ஆரோக்கியமான விவாதம் நடத்த வழிவகை செய்யுங்கள். உண்மைகளை மக்களுக்கு உணர்த்துங்கள். சற்றேனும் விவாதப்பொருள் குறித்து அறிந்தவர்கள் மற்றும் அச்செய்திகளோடு தொடர்புள்ளவர்களை அழையுங்கள். பாரபட்சமில்லாமல் நடுநிலையாக துலாக்கோல்நிலையில் விவாதங்களை மக்களிடம் கொண்டு சேருங்கள்” என்பதுதான்.

இன்றைக்கு ஐ.நா அமைப்பு நிர்மாணித்து 70ஆண்டுகள் ஆகின்றன. இதுபற்றி ஏதாவது ஆக்கப்பூர்வமான விவாதம் உண்டா? ஐ.நா அப்படியென்ன சாதாரணமாகிவிட்டதா? இங்கே ஒரு குழாயடிச்சண்டையினையே விவாதிக்கும் நீங்கள் பன்னாட்டு அவையினைப் பற்றி விவாதிக்கக்கூட உங்களுக்குத் தோன்றவில்லையா அல்லது அது அவசியமில்லை என்று நினைக்கின்றீர்களா?

43ஆண்டுகாலம் அரசியல் களத்தில் பணியாற்றியவன் மட்டுமில்லாமல், தமிழகத்தின் ஒரு அரசியல்கட்சிக்கு முதன்முதலாக 1993ல் செய்தித் தொடர்பாளர் என்ற பொறுப்புக்கு  வந்தவன் என்ற  என்ற நிலையிலும்,  புதிய தலைமுறை தொலைக்காட்சி துவங்கும்போது அன்புக்குரிய மாலன் அவர்கள் மற்றும் நிர்வாகத்தின் விருப்பத்தின்படியும், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் புதியதலைமுறைக்கான பதிவை முறைப்படுத்தி செய்தவன் என்ற தகுதியிலும் நட்புணர்வோடு இதைச் சொல்லிக்கொள்கிறேன்.

அதேப்போல,1993காலகட்டங்களில் தினத்தந்தி ஏட்டில் பிரச்சனைகள் ஏற்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் வரை வழக்குகள் சென்றதை தீர்த்தவன். இது மறைந்த பண்பாளர் சிவந்தி ஆதித்தன் மற்றும் தினத்தந்தியின் தலைமை பொறுப்பாசிரியராக இருந்த திருவடிக்கும் நன்கு தெரியும்.

இந்த உண்மைகளெல்லாம் இன்றைக்கு வைகோ அவர்களிடமும், மாலைமலர் முருகனிடமும் மற்றும் வழக்கறிஞர் நண்பர்கள் பாத்திமா நாதன், அறிவுடைநம்பி ஆகியோர்களிடம் கேட்டாலே முழு விபரங்களும் தெரியும். அந்த அடிப்படையில் தந்தி தொலைக்காட்சி, மற்றும் சன், பாலிமர், சேனல்7, சத்தியம் மற்ற  செய்தித் தொலைக்காட்சிகளுக்கும் இந்தக்கருத்தை அன்போடும், ஆக்கப்பூர்வமாகவும் பகிர்ந்துகொள்கிறேன்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-10-2015.

 #KsRadhakrishnan #KSR_Posts  #TelevisionDebates

R Muthu Kumar | Sathyam tv | Polimer news | Sun TV​

No comments:

Post a Comment

When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*

*When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*. But always remember so are You. Belive the stren...