கடந்த 16-10-2015 அன்று நீதிபதிகள் நியமனம் குறித்த வழக்கை ஆங்கிலத்தில் எழுதி இருந்தேன். சுருக்கமாக தமிழில் எழுதினால் நல்லதென்று சிலர் கேட்டனர்.
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை கடந்த பல ஆண்டுகளாக “கொலீஜியம்” எனப்படும் நீதிபதி குழுக்கள் ஆய்ந்து, பட்டியலை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால் புதிதாக கொண்டு வந்துள்ள சட்டத்தின்படி, நீதிபதிகளை நியமிக்க ஒரு கமிஷன் அமைத்து, அந்தக் கமிஷனில் இந்தியத் தலைமை நீதிபதிகள், இரு மூத்த நீதிபதிகள், மத்திய அரசின் சட்ட அமைச்சர் மற்றும் இரு சட்ட வல்லுநர்கள் (இந்த சட்ட வல்லுநர்களை தலைமை நீதிபதியும், பிரதமரும், மக்களை எதிர்கட்சித் தலைவரும் சேர்ந்து அமர்ந்து நியமிக்கவேண்டும்) இடம்பெறுவார்கள்.
இது சட்டத்துக்குப் புறம்பானது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் செல்வமேஸ்வர், ஜே.எஸ்.கேஹர், குரியன் ஜோசப், ஆதர்ஷ் குமார் கோயல், மதன் லோக்கூர் ஆகிய ஐந்து நீதிபதிகள் விசாரித்து, “நீதிபதிகள் நியமனக் கமிஷன் கூடாது என்று தீர்ப்பளித்தது.
Courtesy : Times of India 17-10-2015 |
22ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவந்த கொலீஜியம் முறைதான் நீதிமன்றத்தினுடைய புனிதத்தையும், சுயமாக இயங்கும் தன்மையையும் பாதுகாக்கும். நீதித்துறை கமிசன் மூலம் நியமிக்கப்படும்போது தேவையில்லாத அரசியல் தலையீடுகளும் ஏற்படுமென்று இத்தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
ஆனால், நீதிமன்ற நியமன ஆணையம் நாடாளுமன்றம் மட்டுமல்லாமல் 20மாநில சட்டமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இதே கொலீஜியம் முறையும் மாற்றப்படவேண்டுமென்று வி.ஆர். கிருஷ்ண ஐயர் ஜே.எஸ்.வர்மாவும் தங்கள் கருத்துகளைத்தெரிவித்துள்ளனர்.
1950லிருந்து 1993வரை மத்திய அரசினுடைய விருப்பத்தின் பேரில் தான் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இவை கடந்தகால செய்திகள்.
இந்தத் தீர்ப்பில் நீதித்துறையின் தனித்தன்மையும் அதன் சுதந்திரத்தையும் அரசியல் தலையீடுகள் இல்லாமல் நீதிபதிகளின் நியமனத்தையும் பாதுகாப்பது அரசியல் சட்டத்தின்படி அடிப்படையான கடமையாகும்.
நீதித்துறை அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமான அம்சமாகும். அதை என்னாளும் மாற்றமுடியாது.
Courtesy : Times of India 17-10-2015 |
இராஜேந்திரபிரசாத் குடியரசுத் தலைவராக இருந்தபொழுது, “நீதிபதிகள் நியமனம் குறித்தான இறுதி முடிவில் இந்தியத் தலைமை நீதிபதியிடம் தான் இருக்கவேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்து குடியரசுத் தலைவர் முடிவெடுக்கலாம். அரசு நிர்வாகத்தின் தலையீடுகள் கூடாது” என்ற கருத்தைத் தெளிவுபடுத்தினார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் அரசியல் அமைப்பின் அடிப்படையை மறந்துவிட்டு இந்த ஆணையத்தை கொண்டு வர ஆதரவு திரட்டப்பட்டிருக்கிறது. நீதிபதிகள் அல்லாதவர்கள் நீதிபதிகளை தேர்ந்தெடுப்பது அரசியல் அமைப்பின் அடிப்படையை சிதறடிப்பது போன்றதாகும். கென்யா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியுசிலாந்து, பங்களாதேஷ், அமெரிக்கா உள்ளிட்ட 15 நாடுகளில் நீதித்துறை நியமனத்தில் ஆட்சி நிர்வாகத்தின் பங்கு உள்ளது.
Courtesy : Times of India 17-10-2015 |
ஆனால், நமது அரசியல் அமைப்பு சட்டம் அந்த நாடுகளின் அரசியல் சட்டங்களுக்கு மாறுபட்டது. இங்கு நீதித்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண சட்டம் திருத்தம் போன்று இந்த நியமன ஆணையத்தை நினைக்க முடியாது. இது நீதித்துறையின் சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் விஷயமாகும். மாநில முதல்வர்கள், கவர்னர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஆகியோரின் ஆலோசனைக்கு பிறகு சட்டத்துறை அமைச்சர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் ஆய்வு செய்து நீதிபதிகள் நியமனம் செய்யும் போதுதான் சாதாரண சமூகத்தில் இருந்து வருபவர்களுக்கும் நீதிபதியாக வாய்ப்பு கிடைக்கும்.
இந்த வழக்கில் ஆஜரான பிரசாந்த் பூஷன், அனில் பி.திவான், சந்தோஸ் பால் ஆகியோர் இந்தச் சட்டத்திற்கு எதிராக வாதிட்டனர். கொலீஜியம் முறை திரைமறைவில் நடக்கும் செயல்கள் ஆகும். இதில் தவறுகள் நடக்கலாம். இப்படியான சூழலில் உச்சநீதிமன்றமே நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டனர். ஆனால் இந்த ஐந்து நீதிபதிகளில் செல்வமேஸ்வர் மட்டும் தன்னுடைய தீர்ப்பில் கொலீஜியம் முறைக்கு மாறாகக் குறிப்பிட்டிருந்தார்.
2002ல் நீதிபதி வெங்கடாச்சலையா குழு, நீதித்துறையும் நாட்டின் நிர்வாகமும் இணைந்து நீதிபதிகள் விஷயத்தில் முடிவுகளை மேற்கொள்ளலாம் என்றுதனது அறிக்கையில் பரிந்துரைத்தது. இவ்வாறான நிலையில் நீதிபதிகள் நியமனக் கமிஷன் வழக்கின் தீர்ப்பு மீண்டும் கொலீஜியம் முறைக்கு வழிகாட்டியுள்ளது.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-10-2015.
#KsRadhakrishnan #KSR_Posts #JudgesAppointmentCase #SupremeCourt
No comments:
Post a Comment