Thursday, October 29, 2015

இந்திய பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா? - Patent Right for Intellectual Property





பாசுமதி அரிசிக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைப்பதில் பிரச்சனைகள் எழுந்துள்ளன. இந்தியாவும் பாகிஸ்தானும் இதுகுறித்து கலந்துபேசினால்தான் முடிவுகள் ஏற்படுமென்று தெரிகிறது.

பாசுமதி அரிசி பஞ்சாப் மாநிலத்தில் அதிக அளவில் விளைகின்றது. விடுதலைக்குப் பின் நாடு பிரிக்கப்பட்டதும் பஞ்சாபில் ஒருபகுதி பாகிஸ்தானோடு இணைந்துவிட்டது. இந்தியாவில், ஹரியானா, மேற்கு உத்திரபிரதேசம், ஜம்மு -காஷ்மீர், இமாச்சலபிரதேசம், டெல்லி நகரத்தை ஒட்டிய கிராமப்புறங்கள், உத்ராகண்ட் போன்ற மாநிலங்களில் பாசுமதி நெல்மணிகள் விளைகின்றன. மத்திய பிரதேசத்தின் சில இடங்களிலும் பாசுமதி ரக நெற்பயிர்கள் பயிராகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தானிலும் இதே ரக அரிசிவகை சாகுபடிசெய்வதால் பாசுமதி அரிசிக்குப் புவிசார் குறியீட்டை இந்தியா பெறுவதற்கு பிரச்சனை செய்கின்றது. இதற்கிடையில் சீனாவும் பாகிஸ்தானிடமிருந்து நெல்மணிகளைப் பெற்று பாசுமதி ரகங்களைப் பயிரிடுகிறது. சீனாவின் உதவியால் ஆப்பிரிக்காவிலும் கென்யா, தான்சானியா, எஜியோப்பியா, கிழக்கு ஆப்ரிக்கப் பகுதிகளிலும் இந்த பாசுமதி ரக நெற்பயிர் உற்பத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

உலகின் 95% சதவிகிதம் பாசுமதி நெல் இந்தியாவில் தான் விளைகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடைய பிரச்சனைகளினால் இந்தியாவுக்குக் கிடைக்கவேண்டிய புவிசார் காப்புரிமைக்குறியீடு தள்ளிப்போகின்றது, தற்போது இந்தியாவுக்கு பாகிஸ்தானோடு காஷ்மீர் பிரச்சனையைவிட பாசுமதி பிரச்சனையை பேசித்தீர்க்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவின் புவிசார் காப்புரிமைப் பட்டியலில், திருப்பதி லட்டு, மதுரை மல்லிகை, காஞ்சிபுரம் பட்டு, பனாரஸ் பட்டு, பாஷ்மினா சால்வை, சந்தேரி பட்டு, கும்பகோணம் வீணை, நாக்பூர் ஆரஞ்சு, டர்ஜிலிங் தேயிலை, அசாம் தேயிலை, நீலகிரி தேயிலை, கூர்க் காபி, மலபார் மிளகு, காங்ரா பெயிண்டிங், மொராதாபாத் மெட்டல் பாத்திரங்கள், பிரோசாபாத் கண்ணாடி, கன்னோஜ் வாசனை திரவியம், சகரான்பூர் மர வேலைப்பாடுகள், தர்மாவரம் கைத்தறி பட்டு, கான்பூர் குதிரை சேணம், கோல்காபுரி வெல்லம், வார்லி பெயிண்டிங் வேலைப்பாடுகள், மணிப்பூர் மாநிலத்தின் 3 வகையான கைவினைப் பொருட்கள் , கோலாப்புரி செருப்பு , உள்ளிட்ட 210க்கும் மேலான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

புவிசார்பட்டியலில் சேர்க்கப்படும் பொருட்களுக்கு முதலில் சட்டபூர்வமான பாதுகாப்பு கிடைக்கிறது. இதன்மூலம் புவிசார் குறியீடு வாங்கப்பட்ட பொருட்களை தவறான வழிகளில் விற்பனை செய்வது தடுக்கப்படுகிறது. இப்பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிப்பதும் உற்பத்தியாளர்களுக்கான அங்கீகாரமும் கிடைக்கிறது. சர்வதேச அளவிலான சுதந்திர வர்த்தகத்தில் புவிசார் குறியீடுகள் நமக்கான சட்ட பாதுகாப்பினை உறுதி செய்கிறது.

திருப்பதி லட்டும், மதுரை மல்லியும் இப்பட்டியலில் சேர்க்கும் போது, திருநெல்வேலி அல்வா, கடம்பூர் போளி, கோவில்பட்டி கடலைமிட்டாய், தூத்துக்குடி மக்ரோனி போன்ற தமிழகத்தில் தயாராகும் முக்கியத்துவம்பெற்ற பல பொருட்களை இந்த புவிசார் காப்புரிமைக் குறியீட்டில் சேர்க்கப்படவேண்டாமா?

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-10-2015

#KsRadhakrishnan #KSR_Posts #BasmatiRice #IntellectualProperty #PatentRight

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...