Sunday, October 18, 2015

நடிகர் சங்கத்தேர்தல்களும் வேடிக்கைகளும்




நண்பர்களே, இந்தப்படத்தைப் பார்த்தால் ஏதோ நாட்டில் பரபரப்பாக ஒரு மாற்றத்தை உருவாக்கி, மக்களின் ஏற்றத்திற்கான காரியம் நடப்பதுபோல பத்திரிகையாளர்களும் ஊடகவியலாளர்களும் இந்த இரவிலும் காத்திருக்கிறார்களே என்று தோன்றும்.

வேறொன்றுமில்லை, நடிகர் சங்கத் தேர்தலில் யார் வெற்றிபெறப்போகிறார்கள் என்ற முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் காட்சிதான் இது.

ஏனென்றால் இத்தேர்தல் முடிவுகளின் மூலம் தமிழ்நாட்டின் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். காவேரியிலும், முல்லைப்பெரியாரிலும் தமிழகத்திற்குத் தண்ணீ ர் வந்துவிடும். ஈழப்பிரச்சனைக்கும், மீனவர் பிரச்சனைக்கும் தீர்வு கிடைத்துவிடும். விவசாயிகளும் நெசவாளர்களும் நிம்மதியாக இருப்பார்கள். தொழிலாளர்கள் போராட்டங்கள் ஏற்படாது.

இப்படியாக தமிழகத்தின் அனைத்து உரிமைப்பிரச்சனைகளுக்கும் ஒரே இரவில் தீர்வு கிடைத்துவிடும்.

3500பேர் வாக்களித்து தமிழ்நாட்டை ஒளிமயமாக்கப் போவதாக கடந்த ஒருமாதமாக இதே வேலையாக ஊடகங்களும், செய்தித்தாள்களும் அலப்பறை பண்ணியது தாங்கமுடியவில்லை.

நடிகர் சங்கத்தேர்தலில் ஏன் இவ்வளவு ஆர்வமும் அக்கறையும். வேலைவெட்டியில்லாமல் இதற்குப்போய் ஒரு பிரதானப் பிரச்சனையினைப் போல் அலட்டிக்கொள்வதை நினைத்தால் வெட்கமாக இருக்கின்றது.

எத்தனை வேடிக்கை மனிதர்கள்...............

நடிகர் சங்கத்தைப் பற்றி ஒரு அதிர்ச்சியான செய்தி வாட்ஸப்பில் வந்திருந்தது. அதைப் படித்தாலே நடிகர் சங்கத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்.

“சரத்குமாரை ஆதரித்து பேசிய சேரன் சரத்குமாரை புகழ்வதற்க்காக ஒரு உண்மையை போட்டு உடைத்தார்.
நடிகர் சங்கம் ஐந்து கோடிரூபாய் கடனில் இருந்ததாகவும் அந்த கடனை அடைக்க அனைத்து நடிகர்களும் சேர்ந்து திரட்டிய நிதி ஒன்னரைகோடி ரூபாய் என்றும், மீதி மூன்றரை கோடி ரூபாயை சரத்குமார் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பேங்க் மேனேஜரிடம் பேசி தள்ளுபடி செய்யவைத்தார் என்கிறார் சேரன்.

சாதாரண மனிதன் ஆயிரம் இரண்டாயிரம் விவசாயத்திற்க்காக கடன் கேட்டால் ஆயிரம் செக்யூரிட்டி கேட்கும் அரசு வங்கிகள் நடிகர் சங்கத்திற்கு ஐந்துகோடி ரூபாயை எந்த செக்யூரிட்டியும் இல்லாமல் எப்படி கடனாக கொடுத்தது? ஒரு நடிகர் ஒரு படம் நடிக்க 100 கோடிவரை சம்பளம் வாங்கும்போது, அந்த சங்கத்திற்க்கு அரசு வங்கி கடன் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

அப்பாவிகள் ஆயிரம் இரண்டாயிரம் கடனை கட்டாவிட்டால் வட்டிக்கு வட்டி போட்டு வீட்டை ஜப்தி பண்ணும் வங்கி
நடிகர் சங்கத்திற்க்கு மட்டும் ஏன் தள்ளுபடி செய்தது.?
நடிகர்கள் ஒண்ணரை கோடி வசூல் செய்ததுகூட துபாயில் ஆட்டம்பாட்டமென மக்களிடம் வசூல் செய்த பணம்தான்.
கோடி கோடியாக சம்பளம் வாங்கியும் ஒரு ரூபாய்கூட சொந்த காசை போடாமல் பேங்கிற்க்கு சங்கு ஊதியது எந்த வகையில் நியாயம்?

நடிகர்கள் என்ன எல்லைபாதுகாப்பு படையினரா? என்ன முக்கியத்துவம் கருதி இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டது?
உணவுக்காக தன்னை வருத்தி சேற்றில் உழைக்கும் உழைப்பாளிக்கு உதவி கிடைப்பதில்லை. நடித்துச் சம்பாதிக்கும் நடிகர்களிடம் மக்கள் பணத்தை தாரைவார்க்கிறார்கள்.

மக்களிடம் வட்டிக்கு வட்டி போட்டு வசூல் செய்யும் பணத்தை இவ்வாறு வாரிவழங்கும் பொதுவுடமை வங்கிகைள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.

உணவளிக்கும் விவசாயி
நாட்டைக்காக்கும் இராணுவ வீரன்
உடல் மானத்தைக்காக்க ஆடைகள் நெய்யும் நெசவாளர்
உழைக்கும் தொழிலாளி
இவர்களுக்கெல்லாம் கிடைக்காத சலுகை
மேனாமினுக்கி நடிகர்களுக்கா!
இதற்குபோய் இவ்வளவு அலட்டல்களா”

பாரதி வார்த்தைகளான, “ விதியே விதியே தமிழ் சாதியே” என்ற பாடல்தான் நினைவுக்கு வருகின்றன.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-10-2015.

#KsRadhakrishnan #KSR_Posts #TamilNaduCinema

No comments:

Post a Comment

When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*

*When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*. But always remember so are You. Belive the stren...