நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கைகள், கமிஷன் அறிக்கைகள் என கட்டுக்கட்டாக காகிதங்கள் வழங்கினாலும் அப்படியே அவர்களுடைய விடுதிகளில் கட்டிக்கிடக்கும். கட்டுகளைக் கட்டிய சணல் கயிற்றைக்கூட பிரித்துப்பார்க்கப் படுவதில்லை.
ஒரு கட்டத்தில் அந்தக்காகிதங்கள் சட்டமன்ற விடுதிகள் அருகில் கடலை விற்பவர்களுக்கு பொட்டலம் மடிக்கக் கொடுத்துவிடுவதுண்டு. இதே நிலைமை தான் நாடாளுமன்றத்திலும்.
நமது உறுப்பினர்களுக்குத்தான் படிப்பதென்றாலே பிடிக்காதே. ஆனால் எல்லா உறுப்பினர்களையும் இப்படிச் சொல்லிவிட முடியாது. பெரும்பாலானவர்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் வழங்கும் இந்தப் பிரசுரங்களைப் பிரித்துப் படிப்பதே கிடையாது. வாசித்துப்பார்ப்பதும் கிடையாது. அதை எதற்குத் தொடுவானேன் என்ற தீர்க்கமான முடிவில்தான் உள்ளனர்.
டெல்லி சட்டமன்றத்தில் இனிமேல் காகிதங்கள் இல்லாத மின்பிரதியாகப் படிக்கக்கூடிய வகையில் வழங்கும் திட்டத்தை அறிவித்துவிட்டார்கள். ஏற்கனவே இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. 70சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டமன்றத்திலும் இனிமேல் காகிதம் மற்றும் புத்தகக் குறிப்புகள் வழங்கப்பட மாட்டாது.
இதனால் 15கோடி ரூபாய் மிச்சப்படுவது மட்டுமில்லாமல், காகிதங்கள் தயாரிக்கப்பயன்படும் 6096மரங்களின் தேவை கட்டுப்படுத்தப்படும் என்ற ஒரு கணக்கையும் டெல்லி சட்டமன்றம் தெரிவித்துள்ளது.
இத்திட்டம் நடைமுறைக்குவந்தால் காகிதங்கள் வீணாவதும், அதற்கான மரங்கள் வெட்டப்படுவதும் தடுக்க முடியும்.
இமாச்சலபிரதேசத்தில் உள்ள நடைமுறையினை அறிந்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தன்னுடைய ஆட்சிகாலத்தில் டெல்லி சட்டமன்றத்திலும் இது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று அக்கறைப்பட்டுள்ளார்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-10-2015
#PaperlessDelhiAssembly #KsRadhakrishnan #KSR_Posts
No comments:
Post a Comment