Tuesday, October 27, 2015

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், பாண்டிபஜாரும்



Yesterday (26.10.2014), New Indian Express brought a news item on Pandi baazar Geetha cafe. That is the place were LTTE Suprema Prabhakaran and Plot Leader Uma Mageshwaran (a) Mukundan were fighting suddenly gun fight took place more than 30 years back. That is the moment world came to know about LTTE . I am the first person to visit there. Prabhakaran,Baby Subramaniam and other its associates stayed in my house 39,salai street,Mylapore.Thiru.Nedumaran immediately directed me to file bail petition for Prabhakaran and others.

நேற்றைய (26.1.2014) ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டின் 2ஆம் பக்கத்தில், தி.நகர், பாண்டி பஜாரில் உள்ள கீதா கபேவில் தீ விபத்து ஏற்பட்டு அதை அணைக்கும் காட்சி படமாக வந்துள்ளது. அந்த படத்தைக் கண்டவுடன், மனம் 30 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1983இல் என்று எண்ணுகிறேன். ஈழப் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தபொழுது, சென்னையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை அசை போட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர், ஈழத் தமிழ் மக்களின் தேசியத் தலைவர் பிரபாகரன், எனது வசிப்பிடமான 39, சாலை தெரு, மயிலாப்பூரில் (பழ.நெடுமாறன் 70களில் வசித்த வீடு; இயக்குநர் பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் இடம் பெற்ற தெய்வம் தந்த வீடு.. .. என்ற பாடல் காட்சி இந்த பகுதியில்தான் எடுக்கப்பட்டது) என்னோடு தங்கியிருந்தபோது, இதே கீதே கபேவில், படத்தில் ஏணி இருக்கும் இடத்தில்தான் பிரபாகரனும், பிளாட் இயக்கத் தலைவர் முகுந்தனும் மோதிக் கொண்டும், துப்பாக்கி ரவைகள் வெடித்தன. அதன் பிறகு தான் இலங்கை தமிழர் பிரச்சினையில், விடுதலைப் புலிகள் மற்றும் ஆயுதம் தாங்கிய போராளி இயக்கங்கள் இருப்பது வெளி உலகுக்குத் தெரிய வந்தன.

சம்பவம் நடந்தவுடன், நான் பாண்டி பஜார் சென்றுவிட்டு,பாண்டி பஜார் காவல் நிலையத்தில் கைதியாக இருந்த பிரபாகரனை சந்தித்தேன். என்னுடைய வீட்டில், தமிழ்நாடு காவல் துறையின் ஐ.ஜி., எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான மோகன்தாஸ் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. பிரபாகரன், பேபி சுப்பிரமணியம் ஆகியோரின் துணிமணிகள், அவர்களுக்கு சொந்தமான ரெமிங்டன் டைப் ரைட்டர், போர், ஆயுதம் சம்பந்தமாக இருந்த புத்தகங்கள், ஈழப் போராட்டம் சம்பந்தமான புத்தகங்கள் என அவர்களுடைய பொருட்கள் அனைத்தையும் எடுத்து சென்றுவிட்டனர்.

 அதேபோல் எனது துணிமணிகள், வழக்கறிஞர் தொழில் தொடர்பான வழக்கு கட்டுகள் போன்றவற்றையும் கொண்டு போய்விட்டனர். எனது வீட்டில் கட்டில், சோபா, டேபிள், நாற்காலிகள், சமையல் பாத்திரங்கள், எனது டைப் ரைட்டர் தவிர வேறு எதுவுமில்லாமல், வீடு வெறுமனே கிடந்தது. இன்று வரை நான் இழப்பாக கருதுவது, இந்திரா காந்தி, காமராஜர், கவிஞர் கண்ணதாசன், தாரகேஸ்வரி சின்கா, தேவராஜ் அர்ஸ், கழுகுமலை வந்தபோது ஜெயபிரகாஷ் நாராயணன், சஞ்சீவ ரெட்டி, என்.ஜி.ரங்கா ஆகிய பல தலைவர்களுடன் சேர்ந்து நான் எடுத்துக் கொண்ட பல கருப்பு வெள்ளைப் புகைப்படங்களையும் சேர்த்து அள்ளிச் சென்று விட்டனர்.

 அவற்றைத் திரும்பப் பெற முயன்றும் முடியவில்லை. இது இன்றும் குறையாக உள்ளது. முகுந்தன் 2 நாட்களுக்குப் பின் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பிரபாகரன், முகுந்தன், ரவீந்திரன் மற்றும் அவர்களது சகாக்கள், சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இன்றைய தலைவர்கள் சிலரை அழைத்துச் சென்று, மத்திய சிறையில் பிரபாகரனை அறிமுகம் செய்து வைத்தது வேறு செய்தி.

விடுதலைப் புலிகளைப் பற்றி பேசவே அப்போது யோசித்தபோது, அவர்களை பிணையில் எடுக்க வேண்டும் என என்னிடம் நெடுமாறன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, முயற்சிகள் மேற்கொண்டு, மூத்த குற்றவியல் வழக்கறிஞர்கள் என்.டி.வானமாமலை, என்.நடராசன் ஆகியோர் இவர்களுக்காக ஆஜராகினர். இரண்டு மாதம் சிறையில் கழித்தபின், இவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜாமின் கிடைத்தது. பிணையில் வந்த பிரபாகரன், மதுரையில் தங்கி இருக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டிருந்தது. அதன்படி பிரபாகரன், மதுரையில் உள்ள நெடுமாறன் இல்லத்தில் தங்கினார். முகுந்தன், சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில், தெரிந்தவர் ஒருவர் அறையில் விருந்தினராக சில காலம் தங்கியிருந்தார்.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...