உலகமெங்கும் வெப்பமயமாதல் பிரச்சனைகளினாலும், பனிப் பர்வதங்கள் உருகுவதாலும், கடல்மட்டம் உயர்ந்து கடல்மட்டத்திலிருந்து ஆழம் குறைவான தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுவருகிறது.
கிரிபட்டி அல்லது கிரிபாஸ் என்பது மத்திய பசிபிக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு. அது உத்தியோகபூர்வமாக கிரிபாஸ் குடியரசு என்று அழைக்கப்படுகிறது. மொத்தம் 33 தீவுகளைக் கொண்டுள்ள இத்தீவுக்கூட்டம் ஒவ்வொன்றும் ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான அகலத்தையே கொண்டுள்ளன.
பிரிட்டன் ஆட்சிக்காலத்தில், இந்தத் தீவுகள் கில்பர்ட் என்று அழைக்கப்பட்டன. இந்த பெயரே மருவி கிரிபட்டி என ஆனது. பெருகிவரும் நீர்ப்பரப்பால், இந்த தீவுகள் விரைவில் மூழ்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.
வெப்ப மாறுதலால் கடல்நீர் மட்டம் உயர்ந்து இந்தத் தீவுகளை விழுங்கிவிடுமோ என்ற அச்சத்தில் இத்தீவுகளில் வாழும் மக்கள் அகதிகளாக, அருகேயுள்ள ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, டாஸ்மேனியா ஆகிய நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்தனர்.
இப்போது கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடம் முன்னால் தஞ்சம் புகுந்த இந்த அகதிமக்கள் நியூசிலாந்தில் தங்கி, வேலை செய்ய அனுமதியும் கொடுத்தபிறகும் அவர்களுடைய துயர் நின்றபாடில்லை. ஆஸ்திரேலியாவிலும் அகதிகள் வழக்குகளில் இருந்து நீதிமன்றத்திற்கு அலைக்களிக்கப் படுகின்றனர்.
ஈழ அகதிகளைப் போன்று சர்வதேச அளவில் பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு நாடுகளில் எவ்வளவு மக்கள் அகதிகளாய் இருக்கின்றார்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் பல லட்சங்களைத் தாண்டி விட்டது. அதுபோல நமது இந்தியாவிலும் கிழக்குக் கடற்கரை மற்றும் மேற்குகடற்கரைப் பகுதிகளில் இம்மாதிரி ஆபத்துகள் ஏற்படும் என்று எச்சரித்து வருகின்றன.
நேற்றைக்கு அமெரிக்காவின் தேசிய அறிவியல் மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அமெரிக்காவின் கடற்பகுதியை ஒட்டியுள்ள நிலங்கள் காணாமல் போய்விடும். 2200ல் ஹாலிவுட் நகரமே கடலுக்குள் மூழ்கிவிடும். நியூயார்க், பாஸ்டன், மியாமி போன்ற நகரங்கள் கடல்த்தண்ணீரில் மிதக்கும். கரியமில வாய்வு வெளியேறுவதைத் தடுக்காவிட்டால் இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க முடியாது என்று ஆய்வு செய்துல்ள விஞ்ஞானிகள் தெளிவான அறிக்கையினைக் கொடுத்துள்ளார்கள்.
அமெரிக்க மாகாணங்களைப் பொறுத்தவரையில், கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா, புளாரிடா, வடக்கு -கரோலினா, நியூ ஜெர்ஸி, நியூயார்க் போன்ற மாகாணங்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகும். இயற்கையின் பேராற்றல் முன்பு மனித ஆற்றல்
என்ன செய்யமுடியும். எனவே, இயற்கையைப் பாழாக்காமல் அதனைக் காத்து மானிடத்தையும் காப்போம் என்ற உணர்வு உலக அளவில் பரவவேண்டும்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-10-2015.
#KsRadhakrishnan #KSR_Posts #GlobalWarmingEffects
No comments:
Post a Comment