Monday, October 26, 2015

நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்....



நேற்றைக்கு தொலைக்காட்சி விவாதங்கள் குறித்து என்னுடைய பதிவை வாசித்துப் பகிர்ந்த பலர், பின்னூட்டத்திலும், செல்பேசியிலும் தங்கள் கருத்தையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.

சிலர் என்மீதுள்ள அன்பினால், இப்படி எழுதிவிட்டீர்களே! நாளை தொலைக்காட்சிகளில் உங்களை இனி அழைப்பார்களா என்று வெகுளித்தனமாகவும், அப்பாவித்தனமாகவும் கேட்டார்கள். அது எனக்கு வேடிக்கையாகப்பட்டது.

அவர்களிடம்,” இதையெல்லாம் என்னைப் பொறுத்தவரைக்கும் பிரச்சனையில்லை, நியாயம் என்று பட்டால் கருத்தைத் துணிவோடும், அழுத்தத்தோடும் அக்கரையோடும் சொல்லவேண்டியது என் கடமை” என்றேன்.

பத்திரிகையாளர் நண்பர் லோகநாதன்  எழுதிய பின்னூட்டம் என்னிடம் அப்பாவித்தனமாகக் கேட்ட கேள்விகளுக்கு பொறுத்தமான பதிலாக இருக்கும்.
________________________________________________
Loganathan Thangasamy shared your post.

Yesterday at 21:13 ·

எதையும் வெளிப்படையாக பேசுபவர்.. யதார்தத்தை அறிந்தவர்.. உண்மையை உரைக்கத் தயங்காதவர்.. அரசியல் கட்சிகளின் செய்தி தொடர்பாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர்.. நட்புக்கு மரியாதை கொடுப்பவர் .. சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டத் தயங்காதவர்.. தூக்கு தண்டனை எதிர்ப்பு, சேதுசமுத்திர திட்டம் போன்றவற்றின் முன்னேற்றத்துக்கு மூல காரணமாக இருப்பவர்.. இன்றைய தொலைக்காட்சி விவாதங்கள் பற்றிய அவரது கருத்து சிந்தனைக்குரியது..

விவாதங்கள் நாளைய சமுதாயத்திற்கு நன்மை பயக்கவேண்டும் என்றால் அவை எப்படி இருக்க வேண்டும் என்ற  கே.எஸ்.இராதாகிருஷ்ணனின் கருத்து வரவேற்கத்தக்கது... நடைமுறைப் படுத்தும் நிலையில் உள்ளவர்கள் அவரது ஆதங்கத்தை உணர்ந்தால் நன்மை பயக்கும்..

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் அவருடன் பழகியவன் என்ற உரிமையிலும் சமூகம் பால் கொண்ட அக்கறையிலும் தான் இந்த பதிவிடுகிறேன்.
_____________________________________

இத்தோடு நேற்றைக்கு எட்டையபுரம் பாரதி மணிமண்டபம் மோகன் ஒரு வார்த்தையைச் சொன்னார்.  “ஒதுக்கப்பட்ட கல் தான் அடிக்கல் ஆகும்” என்று குறிப்பிட்டார்.  அதுவும் இதற்கு பொறுத்தமாக இருக்கின்றது.

நான்கு தசாப்தத்திற்கும் மேலான என்னுடைய அரசியல் பணியில் பெற்றது ஒன்றுமில்லை. இழந்தவைகள் தான் அதிகம். தற்போது ஐ.நா.மன்றத்தில் பெரிய பொறுப்பில் இருந்திருக்கலாம் அல்லது உச்சநீதிமன்றம் வரை நீதிபதியாகச் சென்றிருக்கலாம். என்னுடன் பணியாற்றி, எனக்குத் தேர்தல் காலத்தில் பணியாற்றியவர்களும் இன்றைக்கு எட்டுபேருக்குமேல் உயர்நீதிமன்ற / உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருக்கின்றார்கள். அதைக்கண்டு மகிழ்ச்சிதான் அடைகிறேனேயொழிய நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் எப்போதும் ஏற்பட்டதில்லை. எனக்கென்று ஒருபாணியை வைத்துக்கொண்டு இயங்குகின்றேன்.

தகுதியே தடை என்ற நிலையில் எனக்கு உதவியாக இருந்தவர்கள், என்னால் வளர்ந்தவர்கள் எல்லாம் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று ஆனதையும் நான் பெரிதாக எடுத்துக்கொண்டதும் இல்லை. எனக்கென்று ஒருபாணியை வைத்துக்கொண்டு இயங்குகின்றேன்.



எதிர்க்காற்றில் சைக்கிள் பிரயாணம் போல, சுகமான சுமைகளைச் சுமந்துகொண்டு செல்வதிலும் ஒரு மகிழ்ச்சி உள்ளது. அந்தவகையில் நதிநீர் இணைப்பு, காவேரி பிரச்சனை, தமிழ்நாட்டிற்கு கண்ணகி கோயில் உரிமை, ஈழத்தமிழர் பிரச்சனைகள், விவசாயிகள் மீது திணிக்கப்பட்ட ஜப்தி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தியது, வீரப்பன் வழக்கு தொடர்பாக மைசூர் சிறையில் வாடிய தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்தது, சிறையிலிருக்கும் குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்கும் வாக்குரிமை, தேர்தல் சீர்திருத்தம், தூக்குதண்டனை கூடாது என்று வழக்குகள், சுற்றுச்சூழல் குறித்து கூடங்குளம் பிரச்சனை, சிவகாசி அருகே ஆலங்குளம் சிமெண்ட் ஆலை கழிவுகள், தமிழக சட்ட மேலவை குறித்து எனப் பல வழக்குகள் தொடுத்து பொதுவான பலப் பிரச்சனைகளை நீதிமன்றம் மூலம்  தீர்வுகண்ட பெருமிதம் போதுமே. தொடர்ந்து 1979லிருந்து ஈழப்பிரச்சனைகளில் மேற்கொண்ட பணிகளெல்லாம் யாராலும் மறுக்கமுடியுமா?

முன்னாள், இன்னாள், பல்வேறு பதவிகளில் இருப்பவர்கள் இந்த அளவு களப்பணியில் இருந்திருப்பார்களா என்று என்னிடம் அப்பாவியாகக் கேட்டவர்களிடம் பதிலாகச் சொன்னதும்,
அவர்களே அதை உணர்ந்து  “அப்படியா” என்று வியப்போடு பாராட்டியதே போதுமானது. வேறு என்ன வேண்டும்.

நெஞ்சில் துணிவும், நேர்மையான அணுகுமுறையும், திடமான செயல்பாடும் போதும் என்று நினைப்பவன் நான். பாரதியின் கவிதைகள்தான் எனக்கு ஆதர்சனம். அந்த உயிரோட்டமான வரிகள் துணிவைத் தருகின்றது. இந்தப் பதிவு சம்பந்தமாகத் தங்கள் உணர்வுகளை என்னோடு பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

சொல்வது உண்மையென்றால் திரும்பத் திரும்பச் சொல்வோம்.

http://ksr1956blog.blogspot.in/2015/10/television-debates.html

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-10-2015

 #KsRadhakrishnan #KSR_Posts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...