Saturday, October 31, 2015

பழைய நினைவுகள் - எளிமையின் அடையாளம் ஏ.எஸ்.பொன்னம்மாள்.



பழைய நினைவுகள் - எளிமையின் அடையாளம் ஏ.எஸ்.பொன்னம்மாள். ______________________________________________ எந்த மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் மறைந்த கக்கன் அவர்கள் வெறும் பாயில் படுத்துக்கொண்டு தன்னுடைய வயதான காலத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டாரோ, அதே மருத்துவமனையில் காமராஜரின் படைவரிசையிலிருந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்கள் புற்று நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கிட்டத்தட்ட ஒன்பது முறை நிலக்கோட்டை மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் நினைத்தால் வசதிவாய்ந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அரசு மருத்துவமனையில் சிக்கிச்சைபெற்று வருகின்றார். முன்னாள் அமைச்சர் என்ற தோரணைகள் இல்லாமல் கக்கன் எப்படி எளிமையாக சிகிச்சை எடுத்துக்கொண்டாரோ அதுபோல அவரது வழித்தோன்றலான ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்களும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஏ.எஸ். பொன்னம்மாள் அவர்களைப்பற்றி சில செய்திகள் இந்த இடத்தில் சொல்லவேண்டும். காங்கிரஸிலிருந்து பழ.நெடுமாறன் அவர்களை இந்திராகாந்தியார் நீக்கியபோது, அவரோடு ஏ.எஸ்.பொன்னம்மாள், பாரமலை போன்றோரெல்லாம் உடன்வந்து, பழ.நெடுமாறன் மதுரையிலும், ஏ.எஸ்.பொன்னம்மாள் நிலக்கோட்டையிலும், பாராமலை மானாமதுரையிலும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களாக 1980ல் வெற்றிபெற்றார்கள். இந்த சமயத்தில் நான் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் கூட்டணியில் போட்டியிட வேண்டுமென்று பழ.நெடுமாறன் அவர்கள் எம்.ஜி.ஆரிடம் கேட்டபோது, எம்.ஜி.ஆர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சோ. அழகர்சாமி தொடர்ந்து வெற்றி பெற்றுவருகின்ற தொகுதி அதை ஒதுக்க இயலாது என்று சொல்லிவிட்டார். அப்போது விடுதலைப்புலிகளோடு நெருக்கத்தில் இருந்த காரணத்தினால் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரோடு தொடர்பில் இருந்தேன். எம்.ஜி.ஆர் அவர்கள் என்னை சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் நிற்கச் சொன்னபோது எனக்குத் தயக்கம். அ.தி.மு.கவிலும் சரியான வேட்பாளர் இல்லாத காரணத்தினால் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள். ஆனால், அப்போது நான் வழக்கறிஞர் தொழிலில் சீனியர் வழக்கறிஞர் காந்தி அவர்களிடம் ஜூனியராக இருந்த நேரம். நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடுவது சாதாரணமான காரியமில்லை என்று மனத்தளவில் முடிவெடுத்து மறுத்துவிட்டேன். டாக்டர்.ஹாண்டே அவர்கள் தனக்குத் தெரிந்த நல்லவன் என்ற சௌந்தர் ராஜனைப் பரிந்துரைத்து கூட்டணியில் அ.தி.மு.க. வேட்பாளராக சிவகாசி தொகுதியில் போட்டியிடவைத்தார். அப்போது ஏ.எஸ். பொன்னம்மாள் அவர்கள், “ தம்பி நீங்கள்லாம் இங்கிலீஷ் பேசுற ஆட்கள்; பார்லிமெண்டுக்குப் போனா நல்லதே” என்று அக்கறையோடு சொன்னது இன்றைக்கும் காதில் ஒலிக்கின்றது. ஏ.எஸ்.பொன்னம்மாள், பாராமலை எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் பழ.நெடுமாறன் அவர்களோடு உறுப்பினர்களாக இருந்தவர்கள். தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பழ.நெடுமாறன். துணைத்தலைவர்களாக தஞ்சை ராமமூர்த்தி, பாரமலை, ஏ.எஸ்.பொன்னம்மாள் ஆகியோர் பொறுப்பு வகித்தனர். எம்.கே.டி.சுப்பிரமணியம் (பேரறிஞர் அண்ணா தி.மு.க.வை ராபின்சன் பார்க்கில் துவக்கும் போது அழைப்பிதழில் இடம்பெற்ற ஏழெட்டுப் பெயர்களில் இவர் பெயரும் இருந்தது. பெரியார் அண்ணாவுக்கு நெருக்கமானவர், பிற்காலத்தில் காமராஜருக்கு தளபதியாகவும் இருந்தார்.) தி.சு.கிள்ளிவளவன் (இவரும் அண்ணாவுக்கு செயலாளராகவும், தி.மு.க. நடத்திய ஹோம்லேண்ட் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பிரபல வழக்கறிஞர் வி.பி.ராமனுடன் இருந்தார்) இவர்களுக்கு அடுத்து இளம் வயதில் நானும் பொதுச்செயலாளர்களாக கட்சியில் பதவியிலிருந்தேன். கவிஞர் கண்ணதாசன் ஆரம்பக்கட்டத்தில் இக்கட்சிக்கு ஆதரவாக இருந்தவர். மையிலாப்பூரில் நெடுமாறன் அவர்களும் நானும் அருகருகே குடியிருந்தோம். அவர் பக்கத்தில் இருந்தால் உதவியாக இருக்குமென்று, எனக்கு அந்த வீட்டைக் கொடுத்தார். நான் இருந்த அந்த வீட்டில் தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் என்னுடன் தங்கியிருந்தார். இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈழவேந்தன், இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதி ராஜா, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், காசி ஆனந்தன், சம்பந்தன், கரிகாலன், சந்திரஹாசன், என அனைத்து ஈழத்தலைவர்கள் தங்கியிருந்தும், சிலர் வந்து சென்ற இடமும் அந்த வீடு. அந்தத் தெருவில் தான் பாலச்சந்தர் இயக்கிய நடிகை சுஜாதா நடித்த முதல்படமான, அவள் ஒரு தொடர்கதை படமாக்கப்பட்டது. பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பிரபாகரன் அவர்கள் கைதுசெய்யப்பட்டபோது, அவர் என்னோடு தங்கியிருந்த வீடு எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் “ரெய்டு” செய்யபட்டது. அப்போது, என்னுடைய உடைமைகளும், தம்பி பிரபாகரன் உடைமைகளும் காவல்துறையினர்களால் எடுத்துச் செல்லப்பட்டன. அந்த வீட்டில் வெறும் கட்டிலும், நாற்காலியும் மட்டும் இருக்கும்போது, சம்பவங்களைக் கேள்விப்பட்ட ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்கள் ஒரு ஆட்டோவில் வந்திறங்கி, ரெய்டு செய்யப்பட்டது குறித்து ஆறுதலாகப் பேசிவிட்டுச் சென்றார்கள். ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்கள் கதர் ஆடைகளையே உடுத்துபவர். நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டு தன் தொகுதியிலுள்ள பிரச்சனைகள் குறித்த மனுக்களை ஒரு கருப்பு ஜிப் பைலில் வைத்து, கக்கத்தில் இடுக்கிக்கொண்டு வருவது இன்றைக்கும் நினைவில் வருகின்றது. 1984ல் ராஜ்யசபைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் வை.கோ மற்றும் ஆற்காடு வீராசாமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள். இருவருக்கும் மொத்தம் 68வாக்குகள் தேவை ஆனால், 20க்கும் மேலான வாக்குகள் பற்றாக்குறையாக இருந்தது. அந்த சமயத்தில் நெடுமாறன் அவர்கள், ஏ.எஸ்.பொன்னம்மாள், பாரமலை மற்றும் தன்னுடைய வாக்கையும் தி.மு.கவுக்கு அளிக்கலாம் என்று சொன்னார். ஆனால் நிகழ்வுகள் வேறுமாதிரி அமைந்துவிட்டன. ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்கள் எளிமையாக, நேர்மையாக, தன்னுடைய அரசியல் தளத்தில் இயங்கியவர். இன்றைக்கிருக்கும் அரசியல்வாதிகளின் பந்தாவும், பகட்டுமில்லாமல் எளிமையாக மக்களிடம் பழகியும், தொடர்புகொண்டும் தன் பணிகளை ஆற்றியவர். அவர் விரைவில் குணமடைந்து நலம்பெறவேண்டும். -கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 30-10-2015. #KSR_Posts #KsRadhakrishnan #ASPonnammal #TamilnaduKamarajCongress

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...