Friday, October 30, 2015

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் - தமிழக மீனவர்கள் - Tamil Nadu Fishermen



தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் 15கோடி அபராதம் விதிப்பதற்கான சட்டங்களைத் திருத்த உள்ளதாக இலங்கை அரசின் மீன்வளத்துறை தலைமை இயக்குனர் பெர்னாண்டோ சொல்லியுள்ளது மிகவும் அபத்தமாக உள்ளது.

நாகப்பட்டிணம் முதன் ராமேஸ்வரம், தெற்கே தூத்துக்குடி, கன்னியாகுமரி வரை ஏறத்தாழ 600கி.மீ நீளமுள்ள கடற்கரையில் மூன்று லட்சம் மீனவர்களுக்கு மேல் வாழ்கிறார்கள். இவர்களுக்கு வாழ்வாதாரமே வங்கக்கடலில் மீன் பிடிப்பதுதான். எதிர்புறத்தில் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து காங்கேசத்துறை வரை ஈழத் தமிழ் மீனவர்கள் மீன் பிடிக்கின்றார்கள்.

3லட்சம் மீனவர்கள் இருந்த இலங்கையில் இப்போது 60,000மீனவர்கள் எனக் குறைந்துவிட்டார்கள். மீனவர் பிரச்சனை 1964கட்டத்திலே துவங்கிவிட்டது. அன்றைக்கு இருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் சிங், நாடாளுமன்றத்தில் “இலங்கையோடு பேசி, பிரச்சனையை தீப்போம்” என்று சொல்லி 51வருடங்களாகஇன்றைக்குவரை டெல்லி அரசாங்கம் இலங்கை அரசுடன் பேசிக்கொண்டி இருக்கின்றது.

இடைப்பட்ட காலங்களில் 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். சுமார் 2000 மீனவர்கள் துப்பாக்கிச்சூட்டினால் ஊனப்படுத்தப் பட்டுள்ளனர். பலகோடி மதிப்பிலான படகுகளும், வலைகளும் இலங்கைக் கடற்படையினரால் நாசமாக்கப்பட்டுள்ளது.

வலைவீசும் மீனவனுக்கு இதுதான் எல்லை என்பது தெரியாது. மீனவர்களுடைய மீன்பிடிக்கும் வரைமுறைகளை 1742ல் டச்சு சட்ட நிபுணர் “ஃபிங்கர்ஷா” சட்டப்பூர்வமாக வடிவமைத்தார். அதை மற்ற ஐரோப்பிய நாடுகளும் பின்பற்றத் துவங்கின.

1948வரை பருத்தி இலைகளை வலைகளாகவும், பாய்மரப்படகுகளையும், கட்டுமரப்படகுகளையும் பயன்படுத்திய மீனவர்கள் அதன்பின் இயந்திரப்படகுகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அப்போதுமுதல் இலங்கை நமது மீனர்வர்கள் மீது பிரச்சனைக்ளை ஏற்படுத்தியது.

கிட்டத்தட்ட இதுவரை சுமார் 1,400 சம்பவங்கள் (துப்பாக்கிச்சூடு, படகுகளைச் சேதமாக்குதல், தமிழக மீனவர்களை கைது செய்து அழைத்துச் செல்வது ஆகியவை) நடந்துள்ளன.

1921ல் இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் மீன்பிடி எல்லைகளில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அப்போதெல்லாம் காவல்துறைதான் இரண்டு நாடுகளின் மீனவர்களின் இந்தப் பிரச்சனையை கண்காணித்தது. இரு நாடுகளிடமும் கடற்படைகள் அப்போது கிடையாது.

ஐரோப்பாவில் இதேப்போல நாடுகளுக்குள்ளே, பிரிட்டனுக்கும், ஐஸ்லாந்துக்கும் மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்குமிடையே மீன்பிடிப் பிரச்சனைகள் நடைபெற்றாலும் அவற்றைப் பெரிதாக்காமல் இருதரப்பு நாடுகளும் அமர்ந்துபேசி உடனுக்குடன் தீர்வு காண்கின்றம.

கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் 1976ல் தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவு மேலிருந்த முழுமையான உரிமைகளும் பறிக்கப்பட்டது.

1973 டிசம்பரில் ஐ.நா.மன்றம் சர்வதேச கடல் சட்டங்களை நியூயார்க்கில் விவாதித்து, கரையொட்டிய கடற்பிராந்தியத்தில் 20கி.மீட்டர் கடலோர நாடுகளின் ஆளுமைக்கு உட்பட்டது என்று முடிவெடுத்தது. 1982ல் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த கடல் எல்லை மாநாட்டிலும் இதுகுறித்து விவாதித்து, கடல் எல்லை 3கடல் மைல்கள் என்பதை, 12 கடல் மைல்கள் என நீட்டிக்கலாம் என்று பரிந்துரைகள் செய்யப்பட்டு அது நடைமுறைக்கும் வந்தது.

1700கி.மீட்டர் பரப்பளவுள்ள தமிழகக் கடற்கரையில் 8லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் வங்கக்கடலை நம்பி தங்களுடைய வாழ்க்கையை நடத்துகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை அரசு அடாவடித்தனமாக, 15கோடி அபராதம் விதிப்போம் என்று சொல்லியிருக்கும் அபத்தத்தைத் தட்டிக்கேட்கக்கூட மத்திய அரசுக்கு மனதில்லை.

ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்கே, “தமிழக மீனவர்கள் எல்லைதாண்டினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும் என்று பேசினதைக்கூட மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை!?


தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான் .. என்பதுதான் தமிழக மீனவர்களின் நிலைமை .

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-10-2015

#TamilNaduFishermen#KSR_Posts‬ ‪#KsRadhakrishnan‬ ‪




No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...