Friday, October 23, 2015

ஐ.நாவிலும் ஊழலா? உலகம் தாங்காது.





ஐ.நா.விலும் பலர் தொழில்ரீதியாக, நாடுகளுடைய சலுகைகள் பெறுவதைக் குறித்தும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்று கடந்த ஒன்னரை மாதங்களாகச் செய்திகள் கசிந்துகொண்டு வருகின்றன.

ஐ.நா. சபையின் முன்னாள் தலைவர் ஜான் ஆஷே(61) சீன தொழிலதிபர்களிடமிருந்து லஞ்சமாக சுமார் 13லட்சம் அமெரிக்க டாலர்கள் லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்டிருந்தார். இந்திய மதிப்பில் 8.45கோடி ரூபாய். இதுகுறித்து ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் தன்னுடைய அதிர்ச்சியையும் தெரிவித்திருந்தார்.

2013ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 2014 வரை ஐ.நா. பொதுச் சபை தலைவராக ஜான் ஆஷ் பதவி வகித்தார். அதற்கு முன்பு ஆண்ட்டிகுவா மற்றும் பார்படாவின் நிரந்தர பிரதிநிதியாக இருந்தார்.

2011-ம் ஆண்டு தொடங்கி பல தொழிலதிபர்களிடம் லஞ்சம் பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. சீனாவின் மகாவு பகுதியில் ஐ.நா. நிதியுதவியில் கருத்தரங்கு மையம் கட்டுவம் பணிகளுக்காக, என்ஜி லாப் செங் என்னும் தொழிலதிபருக்குச் சாதகமாகச் செயல்பட அவரிடம் 5 லட்சம் டாலர்களை லஞ்சமாகப் பெற்றுள்ளார் ஆஷ்.

இதுபோன்று சுமார் 13 லட்சம் அமெரிக்க டாலர்களைத் தான் பதவியில் இருந்த காலத்தில் லஞ்சமாக வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்க அட்டர்னி பிரீத் பராரா குற்றச்சாட்டின் பேரில் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டுள்ளார் ஆஷ். மேலும் ஐ.நா.வுக்கான டொமினிக் குடியரசு துணை தூதர் பிரான்சி லோரன்ஸே, என்ஜி லாப் செங், ஜெஃப் யின், சுவேய் யான், ஹெய்தி ஹாங் பியாவோ ஐந்துபேரையும் கைதுசெய்துள்ளனர் அமெரிக்க அதிகாரிகள்.

ஐ.நா.வின் இறையாண்மையையே கேள்விக்குள்ளாக்கி இருக்கும் இந்த லஞ்ச ஊழல் உலகத்தையே தலைகுனிய வைத்துவிட்டது.
மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்.,கங்கையே சூதகமானால் எங்கே போவது ?

ஏற்கனவே, ஈழப்பிரச்சனையில் முள்ளிவாய்க்கால் அறிக்கையில் பக்கங்களை திட்டமிட்டு ஐ.நா.அதிகாரிகள் கிழித்தெரிந்தார்கள். நிர்வாகத்திலும் நேர்மையில்லாமல் போய்விட்டது. இப்போது ஊழல்குற்றச்சாட்டு வேறு.

இன்றைக்கு நண்பர் மணா தன்னுடைய முகநூலில் குறிப்பிட்டவாறு,“காரியம் செய்பவனைவிட வேஷம் போடுகிறவனுக்குத் தான் நினைப்பது நடக்கிறது.
நான் ஏற்கனவே சொல்லியிருப்பதைப் போல - சர்வாதிகாரத்தில் ஒரே ஒரு அயோக்கியனைத்தான் மக்கள் தாங்க வேண்டியிருந்தது.
ஆனால் -ஜனநாயகத்தில் ஒவ்வொரு அயோக்கியனையும் மக்கள் தாங்க வேண்டியிருக்கிறது.'' -கவிஞர் கண்ணதாசன் - ' “எண்ணங்கள் ஆயிரம்'' -தொடரில் படித்த வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றன.

எனவே, ஊழலும் உலகமயமாகிவிட்டது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-10-2015

#ScaminUN #CorruptioninUN

#KsRadhakrishnan #KSR_Posts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...