மன்னர் இராஜராஜ சோழனின் 1030வது சதயவிழா நேற்று (22-10-2015) தஞ்சையில் நடைபெற்றது.
சோழப்பெருந்தகை ராஜராஜசோழன் உலகிலேயே பெரும் கப்பற்படைகட்டி கீழைக்கடல் முழுக்க சோழர்களின் பேரரசுக்குள் கொண்டுவந்தார். நாவாய்கள், வணிகக்கப்பல்கள், போர்க்கப்பல்கள் என வகைப்படுத்தில் தமிழகக் கடல் எல்லையில் மிதந்தது.
பாண்டியர்கள் காலத்திலே முதல் கப்பற்படைகள் கட்டினாலும் இராஜராஜசோழன் அதை விரிவு படுத்தினார். அவருடைய புதல்வர் இராஜேந்திர சோழன் கப்பற்படையின் மூலம் தன்னுடைய பராக்கிரமங்களினால் இலங்கை, சுமத்ரா, மலேசியா, கம்போடியா, ஜாவா, கடாரம் உள்ளிட்ட நாடுகளுக்கு ராஜேந்திர சோழன் போர் தொடுத்துக் கடற்படை மூலம் வெற்றிகளைக் குவித்தார்.
அந்தகாலத்தில் சோழர்களின் கப்பற்படையில் பயன்படுத்தப்பட்ட சொற்களும் அதன் பொருள்களும் வருமாறு.
"நாவாய்" பண்டைய தமிழர்களின் "நாவாய்" என்ற கப்பற்படையின் பெயர் தான் ஆங்கிலத்தில் "நேவி" (Navy) என்று அழைக்கப்படுகிறது.
"கனம்"
இந்த கப்பற்படையில் நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ஒன்று பிரிக்கப்பட்டிருக்கும், அவர்களை "கனம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களை தலைமை தாங்கி இருந்தவரை, "கனாதிபதி" என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.
"கன்னி"
தமிழில் "கன்னி" என்பதற்கு இளம் மங்கை என்று மட்டும் பொருள் அல்ல, "பொறி" என்ற மற்றொரு பொருளும் இருக்கின்றது. எதிரிகளை பொறி வைத்துப் பிடிக்கும் கப்பற்படை வீரர்களை, "கன்னி" என்று அழைத்திருக்கின்றனர். இவர்கள் தான் சிறப்பு பணியில் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை நிர்வாகிப்பவர், "கலபதி" என்று அழைக்கப்படுவார்.
"ஜதளம்" அல்லது "தளம்"
கப்பற்படையில் சக்தி வாய்ந்த குழுவாக திகழ்பவர்களை, ஜதளம் என்பார்கள். சுருக்கமாக இவர்களை "தளம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்களை நிர்வகிப்பவர், "ஜலதலதிபதி" என்னும் நபர் ஆவார்.
"மண்டலம்"
கப்பற்படையின் பாதி நிரந்திர போர் குழுவை, மண்டலம் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களை தலைமை வகிக்க மண்டலாதிபதி என்பவர் நியமிக்கப்பட்டிருப்பார். இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும். இவர்கள் தனி, தனியாகவும், குழுவாகவும் சென்று போர் புரிவதில் வல்லமைப் பெற்றவர்கள்.
நிரந்திர போர் பிரிவு நாம் முன்பு குறிப்பிட்டிருந்த, "கனம்" பிரிவை சேர்ந்தவர்கள் தான் நிரந்திர போர் பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களிடம் 100 இருந்து 150 கப்பல்கள் வரை இருக்கும். மூன்று "மண்டலம்" குழுவை உள்ளடக்கி இருக்கும் குழுவானது "கனம்" என்று கூறப்படுகிறது.
"அணி"
பெரிய போர்களில் ஈடுபட மட்டுமே உபயோகப்படுத்தப்படும் குழுவை "அணி" என்று கூறுகின்றனர். ஒரு அணியில் மூன்று "கனம்" குழு உள்ளடங்கி இருக்கும். 300-500 கப்பல்கள் வரை இந்த குழுவில் இருக்கும். மாபெரும் அணியான இதை தலைமை தாங்குபவர், "அணிபதி" என்று அழைக்கப்படுவர்.
"அதிபதி"
இதெல்லாம் போக இந்த அனைத்து குழுக்களையும் தலைமை தாங்கும் நபர் தான் "அதிபதி". இவரின் கட்டளைகளுக்கு இணங்க அனைத்து குழுக்களும் இயங்கும். இவர் இளவரசருக்கு கீழ் இருப்பவர்.
பண்டையக் காலத்திலே மிகப் பெரிய கப்பல்களை கட்டியிருக்கிறார்கள். ஹரப்பா நாகரிகத்திலேயே, அதாவது கி.மு.3,000-த்திலேயே கடல் போக்குவரத்து இருந்ததாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கேரளத்தில் தற்போது கரங்கனூர் என்றழைக்கப்படும் துறைமுகம் அந்தக் காலத்தில் முசிறி என்ற பெயரில் புகழ்பெற்றிருந்தது.
கி.பி. முதலாம் நூற்றாண்டில் அரேபியா, கிரீஸ், ரோம் (இத்தாலி) ஆகிய நாடுகளில் இருந்து வணிகர்கள் இந்தியாவிற்கு வந்தனர். அவர்களை யவனர்கள் என்றழைத்துள்ளார்கள். மிளகு, சந்தனம், நறுமணப் பொருட்கள், பட்டு உள்ளிட்ட பொருட்களைத் தங்கக் காசுகளைக் கொடுத்து அவர்கள் வாங்கிச் சென்றனர்.
தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றைக்கும் ரோமக் காசுகள் கிடைத்துவருகின்றன. அரேபியாவிலிருந்து குதிரைகள் கடல் வழியாகத்தான் இங்கே வந்தன. தென்கிழக்கு ஆசியாவில் இருந்து இட்லியும் கடல் வழியாகத்தான் வந்தது.
இந்தியாவின் முதல் நீராவிப் படகை ஊ பகுதியின் நவாபாக இருந்த காஸி உத்தின் ஹைதருக்கு 1819-ல் ஒரு ஆங்கிலேயர் கட்டி கொடுத்தார். இராஜராஜனும், இராஜேந்திர சோழனுடைய தாக்கம்தான் வ.ஊ.சியை தூத்துக்குடியில் ஆங்கிலேயரை எதிர்த்து முதல்முதலாக சுதேசி கப்பலைச் செலுத்தவைத்தது. விடுதலைக்குப் பிறகு, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் நவீன கப்பலை ஜவாஹர்லால் நேரு 1948-ல் கடலில் செலுத்தித் தொடங்கிவைத்தார். ஜல உஷா என்ற அந்தக் கப்பல், நீராவியில் செல்லும் சரக்குக் கப்பல். விசாகப்பட்டினத்தில் சிந்தியா கப்பல் கட்டும் தளத்திலிருந்து அது செலுத்தப்பட்டது.
கப்பற்படைகளைக் கொண்டு கடல் வாணிபத்தில் கொடிகட்டிப் பறந்த பாண்டியர்களும், சோழர்களும் இன்றைக்கும் முன்னோடிகளாக இருக்கின்றார்கள்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-10-2015.
#KsRadhakrishnan #KSR_Posts #Cholas #historyofindianships
No comments:
Post a Comment