Thursday, October 15, 2015

கேரள உள்ளாட்சித் தேர்தலில் தமிழர்கள் புறக்கணிப்பு - Kerala Local Body Elections

இன்றைக்கு கேரளா மாநில தமிழ் பாதுகாப்பு இயக்க தலைவர் , நண்பர் பேச்சிமுத்து தொடர்பு கொண்டு பேசினார். கேரளா உள்ளாட்சி தேர்தலில் தமிழர்கள் வாழும் பகுதியில் , தமிழர்கள் போட்டியிட வாய்புகள் மறுக்கபடுகிறது என் கவலையோடு கூறினார். 
கேரளத்தில் நவம்பர் 2,5,7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பாலக்காடு, வயநாடு, இடுக்கி, திருச்சூர், பத்தினம்திட்டை, கொல்லம், கோட்டயம், திருவனந்தபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். கேரளத்தின் மொத்த மக்கள் தொகை 3.5 கோடியாகும். அதில் 75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தமிழர்கள் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதில், சுமார் 35 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றவர்கள் ஆவர்.
இவர்கள் பூர்வீகமாக கேரளத்தில் வசித்து வரும் தமிழர்கள், வேலைக்காக கேரளத்துக்குச் சென்று வாக்குரிமை பெற்றவர்கள், வாக்குரிமை இல்லாமல் கேரளத்தில் வசிக்கும் தமிழர்கள் ஆகியோர் அடங்குவர். பாலக்காடு மாவட்டத்தில் மட்டும் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் அதாவது 7.5 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர்.


கேரளத்தில் வாழும் தமிழர்களை அந்த மாநில அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதால், தமிழர்கள் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்கின்றனர் . மொழிச் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள், சலுகைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கேரள அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித பலனும் கிட்டவில்லை.. அதே நேரத்தில், கேரளத்தில் மாறி,மாறி ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தமிழர்கள் புறக்கணிப்பில் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகின்றன.
மொழிச் சிறுபான்மையினருக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கேரளத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தமிழர்களையே வேட்பாளர்களாக அறிவிக்க காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கேரளக் கட்சிகள் முன் வர வேண்டும் என கேரள மாநிலத் தமிழ் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே கேரள அரசு தமிழர்களைப் புறக்கணிக்கிறது. இதே நிலைப்பாட்டை காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கேரளக் கட்சிகள் அனைத்தும் கடைப்பிடிக்கின்றன. கேரளத்தில் பலமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டும், இதுவரை தமிழர்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்க கேரள அரசு மறுத்து வருகிறது. தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழர் பகுதியில் தமிழர்களைத் தான் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளனர். 
இந்த கவலையான செய்திகளை திரு. பேச்சிமுத்து வேதனையுடன் தெரிவித்தார்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-10-2015
‪#‎KSR_Posts‬ ‪#‎KSRadhakrishnan‬ #Kerala_Tamils

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...