#தேர்தல்-1 *நாட்டின் முதல் இரண்டு தேர்தல்களும், அதன் சுவாரசியங்களும்.*
----------------
இந்திய நாடு விடுதலை அடைந்து இதுவரை 16 மக்களவைத் தேர்தல்கள் நடந்துவிட்டன. இருந்தாலும் முதல் பொதுத் தேர்தலை நடந்த காலம், பின்னணி, வசதி, வாய்ப்புகளை பார்க்கும்போது அது பெரிய இமாலய சாதனையாகவும் இப்போதும் தோன்றுகிறது. முதல் பொதுத்தேர்தல் நான்கு மாதங்களுக்கு (25-10-1951 முதல் 21-02-1952) 68 கட்டங்களாக நடத்தப்பட்டது. பெரும்பாலான மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் மக்களவையுடன் சேர்த்தே தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது வாக்குரிமைக்கான வயது 21 ஆனும். ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர், சாதி வேறுபாடு என்று எதுவும் பார்க்கப்படாமல் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது இந்திய அரசியல் வரலாற்றில் மாபெரும் திருப்பு முனை. சுமார் 36 கோடி மக்களில் 17.3 கோடி பேர் வாக்காளர்கள். 85 சதவீத மக்களுக்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது என்பதால் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வாக்குப்பெட்டிகள் வெவ்வேறு வண்ணங்களில் தனித்தனியாக வைக்கப்பட்டன.
வாக்குப்பெட்டியின் மீது வேட்பாளரின் பெயர்களும் சின்னங்களும் எழுதி ஒட்டப்பட்டன. பனிக்காலம் வந்துவிட்டதால் போக்குவரத்துக்கு எளிதாக இருக்காது என்பதால் இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மட்டும் தேர்தல் நீண்டகால இடைவெளிகளில் வெவ்வேறு மாதங்களில் நடந்தது. முதலில் 1951இல் இமாசலத்தில் சினி என்ற இடத்தில் முதல் வாக்குப்பதிவு நடந்தது. அம்மாநிலத்தின் பிறபகுதிகளிலும் ஜம்மு - காஷ்மீர் அதிலும் பிப்ரவரி மாதம் 1952இல் தேர்தல் நடந்தது. காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு இருந்தாலும் 1967 வரையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவில்லை, சட்டப்பேரவை தேர்தல் மட்டுமே நடத்தப்பட்டது. அப்போது மக்களவையில் மொத்தம் 489 தொகுதிகள். 2 பேர் ஆங்கிலோ இந்தியர்களின் பிரதிநிதிகளாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டனர். மொத்தம் 489 தொகுதிகளில் 314 ஒற்றை உறுப்பினர் தொகுதிகள். 86 இரட்டை உறுப்பினர் தொகுதிகள். ஒரே ஒரு தொகுதியில் மட்டும் மூன்று பேர் உறுப்பினர்கள். சமூகத்தின் ஒடுக்கப்பட்டோருக்கும் போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதற்காக இப்படி ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு தொகுதியில் எத்தனை பேர் போட்டியிட்டாலும் அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் வருபவரே வெற்றியாளர் என்ற முறை இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அளவு வாக்குகள் பதிவாகி வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அதே போல வாக்களிப்பது வாக்காளர்களின் விருப்பத்துக்குரியது. முதல் பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளின் சராசரி 45.7 சதவீதம். பதிவான வாக்குகளில் காங்கிரசுக்கு கிடைத்தது சுமார் 45 சதவீதம் வாக்குகள். வென்ற தொகுதிகள் 374.
அதேபோல, இரண்டாவது பொதுத் தேர்தல் 1957 பிப்ரவரி 24இல் தொடங்கி ஜூன் 9 வரை நடந்தது. மக்களவைக்கும் பல மாநில சட்டப்பேரவைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடந்தது. மக்களவைக்கு புதிதாக ஐந்து தொகுதிகள் சேர்க்கப்பட்டன. 1956 நவம்பர் 1இல் மொழிவாரி மாநிலங்கள் உதயமாகின. தமிழ்நாட்டிலிருந்து மலபார் மாவட்டம் கேரளாவிலும், குடகு கொள்ளேகால் பகுதிகள் மைசூர் மகாகணத்துடனும் சேர்க்கப்பட்டன. கேரளத்தில் இருந்து கன்னியாகுமரி தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நடந்த தேர்தல் என்பதால் இந்த தேர்தலுக்கு கூடிய கூடுதல் முக்கியத்துவம் உண்டு. காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் 47.8 சதவீத வாக்குகளை பெற்று 370 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. நேரு உத்தரப்பிரதேசத்தில் புல்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 27 இடங்களில் வென்று பெரிய எதிர்க்கட்சியானது. நாடாளுமன்ற குழுத் தலைவர் எஸ்.ஏ.டாங்கே எதிர்க்கட்சிச் தலைவராக செயல்பட்டார். அவர் மும்பை மத்திய தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் பிரஜா சோசலிஸ்ட் கட்சிக்கு 19 இடங்கள் கிடைத்தன. நாடு முழுக்க சுயேட்சைகளுக்கு 19.3% வாக்குகள் கிடைத்தன. அவர்கள் 42 தொகுதிகளை கைப்பற்றினர்.
முதல் தேர்தலில் போட்டியிட்ட தலைவர்கள் அம்பேத்கர், ஜே.பி.கிருபளானி இருவரும் தோல்வி அடைந்தனர் . முதல் பொதுத் தேர்தலின்போது அமைச்சரவையில் இருந்து விலகிய சியாமா பிரசாத் முகர்ஜி பாரதிய ஜன சங்கம் என்ற கட்சியையும், அம்பேத்கர் தொடங்கிய “பட்டியல் இனத்தவர் சம்மேளனம்” என்ற கட்சியையும் தொடங்கினார். இரண்டாவது தேர்தலில் இந்த கட்சி 6 தொகுதிகளை பெற்றது. பின்னாளில் இக்கட்சி குடியரசு கட்சி என்று பெயரை மாற்றிக் கொண்டது. இரண்டாவது மக்களவைத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 47.8% காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது. அதற்கு முந்தைய தேர்தலில் 45% வாக்குகள் கிடைத்து. 27 இடங்களில் வென்ற கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்ததைப் போல ஐந்து மடங்கு வாக்குகள் காங்கிரசுக்கு கிடைத்தன.
இப்படிப்பட்ட தேர்தல் களத்தில் சில கட்சிகள் உதயமாகின்றன, சில கட்சிகள் இல்லாமலும் போகின்றன.
தமிழக சட்டப்பேரவைக்கு 1952இல் நடந்த தேர்தலில் 150 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.58 இடங்களில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி 4 தொகுதிகளில் வென்றது. 23 இடங்களில் போட்டியிட்ட பிரஜா சோசலிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் தான் கிடைத்தன. தேர்தலில் போட்டியிட்ட 602 சுயேட்சைகளில் 48 பேர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் மாணிக்கவேல் நாயகர் தலைமையில் அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தின் காமன்வீல் கட்சி , ராமசாமி படையாச்சி தலைமையில் உழைப்பாளர் கட்சி போட்டியிட்டது. இரண்டு கட்சிகளும் 19 இடங்களில் வெற்றி பெற்றனர். கம்யூனிஸ்ட் கூட்டணியே தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியாக அதிக இடங்களைப் பெற்று இருந்தது.மைய அரசின் ஆதரவால் இராஜாஜி ஆட்சி அமைத்தார் காமராஜருக்கு எதிர்ப்பாக காங்கிரசிலும் சீர்திருத்த காங்கிரஸ் என்று கட்சி அமைத்து 10 இடங்களில் சட்டமன்றத்திற்கு வெற்றி பெற்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா தலைமையில் 1957இல் தேர்தல் களம் கண்டு 15 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றன. சுதந்திரா கட்சியும் தமிழகத்தில் வெற்றிபெற்றதுண்டு. பி. எஸ். பி (BSP), எஸ்.எஸ். பி (SSP) என்ற சோசிலிஸ்ட் கட்சிகளும் தமிழகத்தில் தேர்தல் களம் கண்டு சட்டமன்றத்திற்கு சென்றன. ஆனால் அன்றைக்கு இருந்த கட்சிகளில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் இன்றும் களத்தில் இருக்கிறது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-04-2019
No comments:
Post a Comment