Tuesday, April 30, 2019

இந்த மந்திரிகளை எந்திரி என்றால் காணாமல் போய் விடுவார்கள். அதுவரை இவர்களின் தறுதலை ஆட்டங்கள்.என்ன செய்ய?

இந்த மந்திரிகளை எந்திரி என்றால் காணமல் போய் விடுவார்கள். அது வரை இவர்களின் தறுதலை ஆட்டங்கள்.என்ன செய்ய? 

————————————————-

நேற்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொண்ட போது, அங்கு சந்தித்த நண்பர்கள் என்ன அண்ணாச்சி ஓட்டு கேட்க வந்து இருக்கீங்க, அதிமுக அமைச்சர் 70 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அமைச்சரே சொல்லி இருக்காரு இதுக்கு அப்புறம் நீங்க எல்லாம் ஓட்டு கேட்கணுமா? என சிரித்தவாறே கேலியாகப் பேசினார்கள்.

சற்று பின்னோக்கி நினைத்துப் பார்க்கின்றேன். காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் ராஜேந்திர பாலாஜி என்ற அமைச்சர் இருக்கின்றாராம். நானும் அதே பகுதியில் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ள பல பணிகளை செய்துள்ளேன். அப்போதெல்லாம் இப்படி ஒரு பெயரை கேள்விப்பட்டதே இல்லை.
Image may contain: 1 person
கடந்த 2000ஆம் ஆண்டு வரை இன்னும் சொல்லப்போனால் துணை முதல்வராக இருக்கின்ற பன்னீர்செல்வம் கூட நாங்கள் அறிந்தது இல்லை. திடீரென 2001ல்உயர்நத பதவிகள்; தமிழக மக்களுக்கு சரியான வகையில் அறியா ஒருவர் வரலாற்றில் முதன் முறையாக பெரிய ஆளுமையன தலைவர்கள் அமர்ந்த முதலமைச்சர் நாற்காலியில் பண்ணீர்செல்வம் அமர்ந்த கேவலமான நிலை ஏற்ப்பட்டது. அப்படித்தான் இந்த ராஜேந்திர பாலாஜி, இவரை பற்றி எங்கள் பகுதியில் 9ஆண்டுகளுக்கு யாருக்கும் தெரியாது. எந்த பொது வாழ்வு தியாகம் இல்லாமல் என்ன பேசுகிறோம் சற்று கூச்சம் இல்லாமல் இவர் பேசுகிறார். இந்த வட்டாரத்தில்
எங்களை போன்றவர்கள் 1972லிருந்து அரசியலில் இப்படி வந்தவர்கள் போனவர்களை பார்த்து கொண்டுதான் உள்ளோம். இந்த மந்திரிகளை எந்திரி என்றால் காணாமல் போய் விடுவார்கள். அது வரை இவர்களின் தறுதலை ஆட்டங்கள்.என்ன செய்ய?

அந்த காலகட்டத்தில் வைகோ அவர்கள் சிவகாசி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது நான் முக்கிய பணிகளை ஆற்றினேன் அப்பொழுது கூட ராஜேந்திர பாலாஜி பெயரை நான் கேள்விப்பட்டது இல்லை. இவர்கள் சொல்வதை எல்லாம் பத்திரிக்கைகளும் கூச்சநாச்சமின்றி அப்படியே பதிவிடுகின்றனர். சமூக ஊடங்களில் அது குறித்த பேச்சுக்கள் எழுந்து, ஆயிரக்கணக்கானவர்களின் நேரம் விரயமாகின்றது. அமைச்சர்தான் பொறுப்புடன் செயல்பட வில்லை என்றாலும் இந்த பத்திரிகையாவது கொஞ்சம் பொறு ப்புடன் செயல்பட்டு இருக்கலாம்.
நான் அறிந்த வரையில் விருதுநகர் மாவட்டம் என்றால் திமுகவில் எஸ்.எஸ்.தென்னரசு பெ.சீனிவாசன். சத்தியேந்திரன்,முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தந்தையார் தங்கபாண்டியன் காங்கிரஸில் எஸ்.ஆர்.நாயுடு, ரா.கிருஷ்ணசாமி நாயுடு, முன்னாள் அமைச்சர் பாகநேரி ஆர்.வி.சவாமிநாதன் அவர்கள், ப.சிதம்பரம் ராஜபாளையம் அன்னமராஜா, ஸ்ரீரங்கராஜா , முன்னாள் சட்டமன்ற தலைவர் காளிமுத்து கம்யூனிஸ்ட் வத்தாரயிருப்பு அழகர்சாமி எனப்பலர். இவர்களுக்கெல்லாம் நீண்ட நெடியதொரு வரலாறு ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உண்டு. அதனை புரட்டினால் மொழி, இனம், சமூகநீதி போராட்டங்கள் என தழும்புகள் வரிவரிகளாக இருக்கும். ஆனால் இப்பொழுது இருக்கும் அதிமுக அமைச்சர்களுக்கு அமைச்சர்கள் என்ற ஸ்டிக்கர் மட்டுமே உண்டு. அதற்கான எந்த தகுதியும் இருப்பதாக அவர்களின் பேச்சினில் செயல்பாட்டில் தெரிவதில்லை. இதனை எல்லாம் நினைத்தால் வெட்கி தலைகுனிய வேண்டியதாக இருக்கின்றது.
ஒன்றுபட்ட நெல்லை மாவட்டம் என்றால் காங்கிரஸில் செல்லபாண்டியன், மஜீத், திராவிட இயக்கங்களில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ரத்னவேல் பாண்டியன், மதிமுக பொதுச் செயலர் வைகோ, தினகரன், கே.பி.கந்தசாமி, கருப்பசாமி பாண்டியன், ஜி.ஆர்.எட்மன்ட், கம்யூனிஸ்ட் இயக்கங்களில் சோ.அழகிரிசாமி, நல்லசிவன், நல்லகண்ணு மற்றும் காயிதேமில்லத் என பல நெடிய வரலாறு கொண்டவர்கள் அரசியல் வரலாறு அறிந்தவர்கள், வரலாற்றில் இடம் பிடித்தவர்கள். தங்களுடைய கருத்தை நாகரிகமாகவும், தவறில்லாமாலும் முன்வைக்க தவறாதவர்கள்.
இன்றைக்கும் அதிமுக அமைச்சர்கள் இருக்கின்றார்களே இவர்களை பற்றி அண்டை மாநில நண்பர்களுடன் ஏதாவது பேச முடியுமா? அல்லது அவர்களைப் பற்றி கேட்டால் வெட்கப்பட வேண்டியதாக இருக்கின்றது. தெர்மாகோல் செல்லூர் ராஜு, பெண்கள் அதிகமாக ஷாம்பு போட்டு குளித்தால் நநிநீர் நுரையாக வருகின்றது என்று கூறிய கருப்பண்ணன் போன்ற அமைச்சர்கள் எல்லாம் வைத்துக்கொண்டு என்ன சொல்ல முடியும்?
அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் தடை இல்லை ஆனால் தான்தோன்றித்தனமாக பேசுவது ஏற்றுக்கொள்ள இயலாது அல்லவா?

பண்டித நேரு பிரதமராக இருந்தபோது நாட்டிற்கு ஏதாவது சிக்கல் வந்தாலும் குழப்பம் ஏற்பட்டாலும் முடிவெடுப்பதற்கு முன் மூதறிஞர் ராஜாஜி என்ன சொல்கின்றார்? ஓமந்தூரார் என்ன கருத்துரைக்கின்றனர்? பெரியார் என்ன சொல்கின்றார், அண்ணாவின் கருத்து என்ன? என்றெல்லாம் தமிழகத்தின் கருத்தறிந்து இவர்களின் ஆலோசனைகளை பெற்று அரசியல் செய்ததுண்டு. இன்னும் சொல்ல போனால் இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் காலகட்டத்திலும் கலைஞர் என்ன சொல்கின்றார் பி.இராமமூர்த்தி என்ன சொல்கின்றார் என கருத்தறிந்து அவர்களின் கருத்துக்களை உள்வாங்கி செயல்பட்டார். இப்படியாக இருந்த இந்த தமிழகத்தின் தமிழகத்தின் மாண்புகளை அதிமுக-அமைச்சர்கள் அடித்து நொறுக்கி சிதைத்து விட்டனர்.
இந்த ராஜேந்திர பாலாஜிக்கு ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியுமா குடியரசு என்றால் என்னவென்று தெரியுமா? கிரேக்கத்தில் பிறந்தது ஜனநாயகம் என்பதாவது தெரியுமா, இத்தாலியில் தோன்றியது குடியரசு என்பதாவது தெரியுமா? ஒட்டப்பிடாரத்தில் எத்தனை வாக்குகள் உள்ளது என்பதே தெரியாத ராஜேந்திர பாலாஜியிடம் நான் ஐந்து கேள்விகளை முன் வைக்கின்றேன். யாருடைய உதவியும் இன்றி அவரால் பதிலளிக்க முடியுமா?
1) நேருவின் அணிசேராக் கொள்கை என்றால் என்ன?
2) பஞ்சசீல கொள்கைகள் யாவை?
3) இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டதன் போராட்ட வரலாறு என்ன?
4) இந்தியாவின் நதிகளை இணைக்க 30 ஆண்டுகாலம் போராடினேனே அந்த வழக்குகள் சந்தித்த பிரச்சினைகள் என்ன என்பது தெரியுமா?
5) கச்சத்தீவு பிரச்சனைகளை சொல்ல முடியுமா? இவற்றையெல்லாம் விடுங்கள் அவருடைய பகுதிக்கு அருகிலுள்ள ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலை போராட்டமும் உயர் நீதிமன்றத்தை அணுகி ஆணை பெற்று அந்த ஆலையை நவீனப்படுத்த உத்தரவு பெற்றேனே என்பது தெரியுமா?
அரசியலை ஆழப்புரிந்தவர்கள், ஆர்வமாக வாசித்தவர்கள் இங்கு ஏராளம். இவர்களை எல்லாம் பார்த்து என் போன்றவர்களின் இதயம் ரணமாகியிருக்கின்றது. பெரியார் கூறியதைப் போல நெஞ்சில் குத்திய முள் போல இவர்களை எல்லாம் பார்த்து வேதனை அடைகின்றோம்.
ஒரு கிராமம் அலுவலர் பதவிக்கு சென்றால் கூட நேர்காணல் என நிறைய கேள்விகளை கேட்கிறார்கள் ஆனால் அமைச்சராக வருவதற்கு எந்த தகுதியும் தேவையில்லை. இதனால் தான் என்னவோ இப்படிப்பட்ட முட்டாள்கள் எல்லாம் அமைச்சர் ஆகிவிட்டார்கள்.
Image may contain: 2 people, people standing, wedding and indoor
இந்தியாவின் வடநாட்டில் உள்ள மாநிலங்களை ஒப்பிட்டால் தமிழகம் மெத்த படித்த மாநிலம். அறிஞர்களையும் திறமையான அமைச்சர்களையும் விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் மருத்துவர்களையும் பெற்ற மாநிலம். இப்படிப்பட்ட மாநிலத்திலிருந்து அடிமுட்டாள்தனமான அமைச்சர்களை என்று என்னால் எளிதில் போக முடியவில்லை. இந்த அறிவிலிகள் விரட்டியடிக்கப்பட வேண்டும் களங்கம் துடைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் பிறந்து விட்டோம் இதை எளியதாக கடந்து செல்ல முடியாது. 

#பொதுவாழ்வு
#அரசியல்
#ஒட்டப்பிடாரம்_இடைத்தேர்தல்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
29-04-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...