————————————————
இன்று (20-4-2019)திருவனந்தபுரத்தில்......
தமிழகத்தில் நடந்த தேர்தலில் சுவரொட்டிகளை அதிகம் காண முடியவில்லை. ஆனால் தேர்தல் சுவரொட்டி கலாச்சாரத்தை நாம் தான் துவக்கி வைத்தோம்.இருப்பினும் இங்கு இன்று போஸ்டர்கள் காண முடிவதில்லை. சுவர் விளம்பரங்கள் எழுதினோம்.அதையும் தற்போது அதிகம் காணமுடிவதில்லை. இதற்கு ஆகும் செலவுகளை வேறுவிதமாக செலவு செய்ய துவங்கிவிட்டது காரணமாக இருக்கலாம்.
அவ்வாறாக வரையப்பட்ட சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் பொதுமக்களாகிய வாக்காளர்களுக்கு வேட்பாளர் பெயரையும் சின்னத்தையும் அடிக்கடி நினைவூட்டுவதாக இருந்தது ஆனால் தற்போது இவற்றை பார்க்க முடியவில்லை . சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் படிபடியாக 2001தேர்தலிருந்து குறைய தொடங்கியது.
தேர்தல் ஆணையம் இதற்காக நிபந்தனைகளை வரையறுத்து இருந்தாலும் அதற்கு உட்பட்டு கேரளத்தில் பரவலாக சுவரொட்டிகள் காணப்படுகின்றது. அவர்கள் பிரச்சார செலவுகளை மிகவும் குறைவாக செய்தாலும் சுவரொட்டிகளை ஓரளவு விடுகின்றார்கள். அதில் வேட்பாளர்கள் பெயர், கட்சி சின்னம் மட்டுமே உள்ளது. சில சுவரொட்டிகளில் தலைவர்களின் படங்கள் உள்ளன.
திருவனந்தபுரத்தில் இருக்கும் அரசியல் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது உங்களைப் போல நாங்கள் ஓட்டுக்குப் பணம் தரமாட்டோம்.பூத் செலவுக்கும், தொண்டர்களின் செலவுக்கு மட்டுமே பணம் கொடுப்போம் என்று சொன்னபோது ஒரு பக்கம் கேட்க சங்கடமாக இருந்தாலும்,அவர்களிடம் சபாஷ் என்றுதான் என்னால் பதில் சொல்லமுடிந்தது.ஒரு சமயத்தில் அதிமுக வேட்பாளர்கள் பணம் கொடுத்து அசிங்கப்படுத்தியதும் உண்டு என்று கேரளத்து அரசியல் தோழர்கள் நொந்து போய் சொன்னார்கள்.
நாளை 21 ஏப்ரல் 2019 பிரச்சாரம் நிறைவுபெற்று, 23ஏப்ரல்2009 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நண்பர் டாக்டர் சசிதருர் போட்டியிடுகின்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (LDF)சார்பில் சி.திவாகரன் போட்டியிடுகின்றார்.
திருவனந்தபுரம் தொகுதியில் கும்மனம் ராஜசேகர் பிஜேபி சார்பில் போட்டியிடுகின்றார்.
அங்கு பரவலாக அரசியல் பேச்சுக்ள் விவாதங்கள் நடைபெறுகின்றனவே தவிர தமிழகத்தைப் போல சினிமாக்காரர்களை சித்தாந்தவாதிகளாக கருதி வாக்களிக்கும் நிலை இல்லை.
தமிழகத்தில் நடக்கும் அரசியல் கலாச்சாரங்களை குறித்து அவர்களுடன் பேச சற்று வெட்கமாகவே இருந்தது அதனால் பேசவுமில்லை.
உண்மையிலேயே அவர்களின் அரசியல் கலாச்சாரம் பாராட்டத்தக்கது.
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
20.04.2019
No comments:
Post a Comment