Thursday, April 18, 2019

தேர்தலில் அழிக்கமுடியாத “*மை*”யின் வரலாறு

தேர்தலில் அழிக்கமுடியாத “*மை*”யின் வரலாறு
----------------------

இன்று (18-04-2019) நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கோவில்பட்டி மாரியப்ப நாடார் மேல் நிலைப் பள்ளியில் வாக்கை பதிவு எனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினேன்.
வாக்குச் சாவடியில் இருந்தபோது ஒருவர் கையில் மை தவறுதலாக பட்டுவிட்டது. இதை துடைக்க முடியுமா? என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தான் அந்த அடையாள மையை பற்றியதான சில செய்திகளை நினைவுகூர்ந்தேன்.
ஜனநாயக முறைப்படி ஆட்சி நடக்கும் உலக நாடுகள் அனைத்திலும் பல காலமாக தேர்தல்கள் நடந்து வருகின்றன. பல நாடுகளிலும் வெவ்வேறு வகையான தேர்தல் முறைகள் கடைப்பிடிக்கப்பட்டாலும் தேர்தல் நடைபெறுகையில் பெரும்பாலான நாடுகளில் முக்கியமாக பயன்படுத்துகிற ஒரு பொருள் தான் இந்த அடையாள மை.
இந்த அடையாள மை என்பது தேர்தலில் வாக்கை பதிவு செய்யும் வாக்காளரின் இடது கை ஆள்காட்டி விரலில் இந்த மை வைக்கப்படுகிறது. இது அவர் வாக்களித்ததற்கு அத்தாட்சியாக அமைகிறது. போலியாக யாரேனும் வாக்களிக்க வந்தால் அவருடைய இடது கையில் உள்ள நடுவிரலில் இந்த மை வைக்கப்படுகிறது. ஜனநாயகத்தை காப்பதில் இந்த மை என்பது மிகவும் சிறிய பொருளாக இருந்தாலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த மை வைக்கப்பட்ட நாளிலிருந்து குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு அழியாது. இதனால் ஒருமுறை வாக்கு செலுத்தியவர் மறுபடி மறுபடி வாக்கை செலுத்த முடியாது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வாக்காளர் அடையாள மை தயாரிக்கும் நிறுவனம் நமது நாட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் கர்நாடகாவில் தசரா நிகழ்வுகளுக்கு புகழ்பெற்ற நகரமான மைசூர் நகரில் இயங்கி வரும் மைசூர் வண்ணப் பூச்சிகள் மற்றும் வார்னிஷ் லிமிடெட் என்ற நிறுவனம்தான் மிக நீண்ட காலமாக இந்தியாவில் இந்த மையை தயாரித்து வரும் பெருமை பெற்ற நிறுவனமாகும். 1937 ஆம் ஆண்டு மைசூர் மன்னர் நல்வடி கிருஷ்ணராஜ உடையார் இந்த நிறுவனத்தை வண்ணப் பூச்சிகள் மற்றும் அது தொடர்பான தொழில்கள் தயாரிப்புக்காக தொடங்கினார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்த நிறுவனம் நாட்டுடைமையாக்கப்பட்டு 1962 ஆம் ஆண்டு நம் நாட்டில் மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தலில் அடையாள மை தயாரிக்கும் அரும்பணி இந்த மைசூர் வண்ணப் பூச்சிகள் மற்றும் வார நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது முதல் இப்போது வரை இந்த பணியை இந்த நிறுவனம் சிறப்பாக செய்து வருகிறது. இந்த மையை தயாரிக்க இந்த பொருட்கள் என்னென்ன அளவில் கலக்கப்படுகிறது என்பது ரகசியமாக வைக்கப்படுகிறது 5 மிலி, 7.5 மிலி, 20 மிலி, 80 மிலி, 500 மிலி பாட்டில்களில் அடைக்கப்பட்டு தேவைக்கேற்ப வழங்கப்படுகிறது.
5 மிலி அடையாள மை சுமார் 300 வாக்காளர்களுக்கு போதுமானது என்று கூறப்படுகிறது. இந்த மையில் அடங்கியிருக்கும் முக்கிய வேதிப்பொருள் சில்வர் நைட் ஆகும். இந்த வேதிப்பொருள் கருமையாக உள்ள ஒரு கரைசலுக்கு மேலும் அதிகமாக அடர்த்தியை கொடுக்கும் தன்மை உடையது. விரலில் இடப்படும் போது விரலில் உள்ள தோளோடு இந்த சில்வர் நைட் வினைபுரிந்து சில்வர் குளோரைடு ஆக மாறுகிறது. இந்த சில்வர் குளோரைடு நீரில் கரையாத தன்மையுடையது. அதனால் தான் வாக்காளர் அடையாள மை இடப்பட்டு ஒருவர் வாக்களித்து விட்டு வந்தபின் அதை அவரால் எளிதாக அழிக்க முடிவதில்லை.
மேலும் இந்த சில்வர் குளோரைடு வெந்நீர் ஆல்கஹால், நச்சுகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் வேதிப் பொருள்கள், நெயில் பாலிஸ் ரிமூவர் மற்றும் பிளீச்சிங் செய்வதால் அளிக்க முடியாது. விரலில் மை இடப்பட்ட பகுதியில் இருக்கும் தோல் பழையதாகி அகன்று புதிய தோல் வரும் வரை இந்த மை மாறாமல் அப்படியே இருக்கிறது. அதனால் இந்த அழிக்க முடியாத மை தேர்தல்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பழைய தோல் அழிந்து புதிய தோல் வளர ஆரம்பித்தவுடன் மை இடப்பட்ட அடையாளம் இல்லாமல் போய்விடுகிறது. இந்தியாவில் மட்டுமில்லாமல் இதுபோல் தேர்தல் சமயங்களில் அடையாள மையை விரல் வைக்கும் வழக்கம் உலக நாடுகள் பலவற்றிலும் இப்போதும் இருந்து வருகிறது. தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்கும் இந்த பெருமைக்குரிய மை அடையாளம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி ஆகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் கம்போடியா நாட்டில் நடைபெறும் தேர்தலிலும் இந்த அடையாள மையை பயன்படுத்துகிறார்கள்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-04-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...