#தேனி தகவல் கொள்கை , மக்கள் நலன் சார்ந்த அரசியல் நதிபோல ஒடட்டும்.
————————————————
அரசியலில் தியாகமும் , பொதுவாழ்வு பணி, மக்கள் நலன், கொள்கைகள் இல்லாமல் அந்த காலத்தில் கிராமத்தில் சினிமா கொட்டகை நோட்டீஸ் சூறை விடுவது போல பணத்தை மக்களிடம் அள்ளி வீசினால் வெற்றி பெறலாம் என்ற எண்ணம் தேனி போன்ற பல தொகுதிகளில் இருந்தது.வேட்பாளர்கள் தைரியமாக பணத்தை விதைத்தார்கள்.
அவ்வாறாக விதைத்த பணம் வெற்றி பெற்றுத் தராது, வியாபாரம் பொய்த்து விட்டதை அறிந்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்கின்றனராம் என தகவல்.
அப்படியானால் மக்கள் பணத்தை பெற்றுக்கொண்டு வாக்குச்சாவடிக்கு வரவில்லையோ என்ற செய்தியை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக பணம் இருந்தால்தான் தேர்தலில் நின்று வெற்றி பெறலாம் என திமிராக வியாபார அரசியல் செய்து வந்தது இனி படிப்படியாக குறையும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளன .
இப்படியான மன மாற்றம் எதிர்கால அரசியலுக்கு ஆரோக்கியத்தை வித்திடும் என நம்புகின்றேன். மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மக்களிடமே கொடுத்து வெற்றியை விலைக்கு வாங்கி விடலாம் என பலர் நம்பினர். இன்று அந்த நம்பிக்கை பொய்த்துப் போய் பணத்தை திருப்பிக் கொடு என கேட்பதாக செய்திகள் கிடைத்த போது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
நடந்த தேர்தலில் பல தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை என்ற செய்தியும் கிடைத்தது. எதிர்கால அரசியலுக்கு நேர்மையான போக்கை வித்திடும் என்ற நம்பிக்கை மேலோங்குகிறது. நிம்மதி பெருமூச்சு விடுகின்றேன். சாக்கடைகள் இனி வறண்டு போகட்டும். கொள்கை , மக்கள் நலன் சார்ந்த அரசியல் நதிபோல ஒடட்டும்.
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
22-04-2019
No comments:
Post a Comment