Friday, April 26, 2019

#விளாத்திகுளம்சாமிகளின் நினைவு நாள்

-------------------------
இன்றைக்கு (25-04-2019) விளாத்திகுளம் சாமிகளின் நினைவுநாள். விளாத்திகுளம் சென்று அவர் நினைவிடத்தில் மலர் மாலை வைத்தேன். திமுக பொதுக்குழு உறுப்பினர் ப.மு. பாண்டியன், க. அண்ணாதுரை, டி.ஆர்.குமார்,நாமக்கல் கொ.நாகராஜன் மற்றும் பலர் உடனிருந்தனர். காடல்குடி ஜமீன் நல்லப்பசாமி தன்னுடைய இசைவளத்தால் விளாத்திகுளம் சாமிகள் என்று பெருமையுடன் அழைக்கப்பட்டார். இன்னும் அவரைப் பற்றி அறியாத மக்கள் கரிசல் வட்டாரத்திலேயே இருக்கிறார்கள் என்பது வருத்தமான செய்தி. விளாத்திகுளம் பேருந்துநிலையம் அருகில் அவரது பெயரில் ஒரு கலைக்கூடம் இருந்தது தற்போது இல்லை. தூத்துக்குடியில் நடந்த ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தலைமையில் நடந்தது. அந்த கூட்டம் முடிந்தபின்னர் விளாத்திகுளம் வந்து சாமிகளுக்கு மரியாதை செலுத்தினோம். விளாத்திகுளம் சாமிகளின் புகழ் உலகெங்கும் சென்றடைய வேண்டுமென்பது என்போன்றவர்கள் மட்டுமன்றி, இந்த வட்டார மக்களின் அவா ஆகும்.
Image may contain: 4 people, people standing and outdoor

அவரைக் குறித்தான எனது கடந்துகால பதிவுகள் வருமாறு.
*விளாத்திகுளம் சுவாமிகள்*
இவரது முழுப் பெயர் நல்லப்பசாமி ஆகும். #வீரபாண்டிய கட்டபொம்மனின் உறவினர். ராஜகம்பளம் வகையைச் சேர்ந்தவர். #காடல்குடி ஜமீன்தார் வழித்தோன்றல். விளாத்திகுளத்தில் வந்து குடியேறி, கூரை வீட்டில்தான் துறவி போல வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். கருத்த மேனி; ராஜ களையான முகம்; நெற்றியில் வாடாத திருநீற்றுப் பூச்சு, வெள்ளையான அடர்த்தி மீசை. பழுத்த ஆன்மிகவாதி. வெள்ளை வேஷ்டி, மஞ்சள் நிறத் துண்டு, சில நேரங்களில் பச்சை நிறத்தில் பீதாம்பரம். திருநீற்றுப் பை எப்பொழுதும் மடியில் இருக்கும். அப்பையில்தான் அனைத்தையும் வைத்துக்கொள்வார். பாதுகாப்புக்குப் பெட்டியோ, பீரோவோ எதுவும் கிடையாது. கோபமோ, ஆத்திரமோ வந்தது கிடையாது. #கச்சேரியில் #ராகதாளத்தில் யாராவது தவறு செய்துவிட்டால் கை ஜாடை மூலம் உணர்த்துவார்.
யாராவது இவரைச் சந்திக்க வந்தால் ‘சாப்பிட்டாயா?’ என்றுதான் முதலில் கேட்பார். அப்படிச் சாப்பிடவில்லையென்றால், உடனே கையிலுள்ள விபூதிப் பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்துச் ‘சாப்பிட்டு வா’ என்று அனுப்புவார். கச்சேரிக்கு யாராவது தொகை என்ன? என்று கேட்டால், "கொடுப்பதைக் கொடுங்கள்; என்னுடன் வருவோர்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்பதை மட்டும் சொல்வார்.
Image may contain: 2 people, people standing, tree and outdoor

இவருக்கு மிகவும் நெருக்கமாகக் கட்டப்பூச்சி முதுலியார் உடன் இருப்பார். ஒரு தடவை மைசூர் மகாராஜா, சுவாமிகளை மைசூர் அரண்மனைக்குத் தசரா விழாவையொட்டி அழைத்த பொழுது, இந்தக் கட்டப்பூச்சி முதலியார், மைசூர் அரசரிடம் "விளாத்திக்குளம் சுவாமிகள் ஜமீன் பரம்பரையைச் சார்ந்தவர். அவர் தங்களைத் தலை தாழ்த்தி வணங்க மாட்டார்" என்று சொல்ல, விளாத்திகுளம் சுவாமிகளுடைய பாட்டை முழுமையாக இருந்து கேட்டு, மைசூர் அரசர் தங்க மெடல் ஒன்றைச் சன்மானமாகக் கொடுத்துவிட்டார். அதை மிகவும் வறுமையில் கஷ்டத்தைப் பார்த்துக் கொடுத்துவிட்டார். இதைக் கண்ட முதலியார், "வீட்டில் செலவுக்குக் கஷ்டப்படும்போது, சுவாமிகள் இப்படித் தானம் செய்கிறாரே" என்று புலம்பினாராம். அது போலவே சங்கரன் பிள்ளையும் சுவாமிகளுக்கு உறுதுணையாக இருந்தவர்.
சுவாமிகளிடம் குருமலை லட்சியம்மாள் இணைந்து பயின்றார். இவர், கே.பி. சுந்தராம்பாள் மாதிரி பாடக்கூடியவர். சுவாமிகளுக்குத் தமிழகமெங்கும் ரசிகர்கள் உண்டு. சுவாமிகளின் இசையில் சொற்கள் கிடையாது. ராகங்கள்தான் இருக்கும். உச்சத்தில் 5 கட்டத்திற்கு மேலேயே பாடுவார். ஒலிபெருக்கி, மின்சாரம் இல்லாத நேரத்தில் இவருடைய பாட்டு ஒரு மைல் தொலைவுக்குக் கேட்கும். கே.பி. சுந்தராம்பாள், டி.ஆர். மகாலிங்கம் போன்றவர்கள் சுவாமிகளைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பெறுவதுண்டு.
ஒருமுறை தியாகராஜ பாகவதர் பரமக்குடியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, காரில் விளாத்திகுளம் வழியாக வந்தபொழுது, விளாத்திகுளத்தில் காரை விட்டு இறங்கி நடந்து வந்தாராம். ஏனென்றால், விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகள் இருந்த இடம். அதில் மரியாதை நிமித்தம் நடந்து வர வேண்டும் என்பதற்காக நடந்து சென்றார்.
Image may contain: 2 people, people standing and indoor

விளாத்திகுளத்தில் கனமழை. சுவாமிகளுடைய குடிசை வீடு முற்றிலும் சேதமடைந்த நிலையில் இருந்தது. ஊர் மக்கள் சுவாமியைக் காணோமே என்று தேடியபொழுது, குளக்கரையில் தவளை கத்தும் சத்தத்தை ரசித்துக் கொண்டிருந்தார் சுவாமிகள். அதுபோன்று மதுரை வைகையில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, நாதசுவரக் கலைஞர் பொன்னுசாமியின் தகப்பனாருடைய நாதசுவர இசைக்கு ஏற்றவாறு தன்னுடைய வேட்டி துண்டுகளை அடித்துத் துவைத்தார். திடீரென்று இசை நின்று போனபொழுது மிகவும் வருத்தப்பட்டார். "நயமான தாளம் போட்டுத் துவைத்துக் கொண்டிருந்தேன். இசை நின்றவுடன் விட்டுவிட்டேனே; போச்சு போச்சு" என்றாராம்.
இறுதிக் காலத்தில் சிவகிரி அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆசிரமம் கட்டி வாழ வேண்டுமென்று விரும்பினார். பொருளாதாரச் சிக்கலால் அப்பணியைத் தொடர முடியாமல் வேதனையடைந்தார்.

திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம், ராஜரத்தினம் பிள்ளையின் மைத்துனர் திருவெண்காடு சுப்பிரமணியம் ஆகியோர் சுவாமிகள் மீது பக்தியோடு கூடிய மரியாதையை வைத்திருந்தனர். விளாத்திகுளம் சுவாமிகளின் மணிவிழாவைக் காருகுறிச்சி அருணாசலம் ஏற்பாடு செய்தார். புதூர் ஆசிரியர் முருகையா இந்நிகழ்ச்சிகளின் அனைத்துப் பணிகளையும் கவனித்துக் கொண்டார். மணிவிழா நிகழ்ச்சியில் ம.பொ.சி., சிவாஜி கணேசன், ஏ.பி. நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விளாத்திகுளத்தில் சுவாமிகளின் சமாதி பராமரிப்பு இல்லாமல் பஸ் நிலையம் அருகே இருக்கின்றது. இந்த நினைவிடத்தைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கை பல சமயங்களில் எழுந்தும் பாராமுகமாகவே அரசு நிர்வாகம் இருக்கின்றது.
சேத்தூர் ஜமீன் "சோத்துக்கு அலைந்தவன் சேத்தூருக்குப் போ; சோறு மணக்கும் சேத்தூர்" என்ற பெருமைக்குரிய சேத்தூர் ஜமீன், இன்றைக்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்தாலும், இந்த ஜமீன் ஒரு காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு முக்கிய ஜமீனாகத் திகழ்ந்தது. அந்த ஜமீனில் கிஸ்தி வசூலிக்க வந்த வெள்ளையரை எதிர்த்துப் பெண்களே போராட்டம் நடத்தியது அக்காலத்தில் பெருமையாகப் பேசப்பட்டது. இந்த ஜமீனைச் சேர்ந்த ஜமீன்தார் சேவுகப் பாண்டியத் தேவர் பிற்காலத்தில் செம்மை, சித்தார் போன்ற பக்கவாத்தியங்களை வாசிக்கக்கூடிய அளவுக்குப் புகழ்பெற்றார்.

அதிசய சாதனை புரிந்த வித்துவானுக்கு மகாராஜா பண முடிப்பும் வைரக்கல் பதித்த தங்க மோதிரமும் பரிசாக அளித்தார். பரிசைப் பெற்றுக்கொண்ட வித்துவான், என்னைப் போல் யாராவது ஒரே ராகத்தை மூன்று நாட்கள் ஆலாபனை செய்து பாடினால், அவருக்குத் தான் பெற்ற பரிசுகளைத் திருப்பி அளித்துவிடுவதாகக் கூறினார். இதைக் கேட்ட விளாத்திகுளம் சுவாமிகள் மேடையேறி ‘கரகரப் பிரியா’ ராகத்தை ஐந்து நாட்கள் வரை பாடினார். சவால்விட்ட வித்துவான் மெய்ம்மறந்து சுவாமிகளின் காலடியில் விழுந்து வணங்கி, தான் பெற்ற பரிசுகளை சுவாமிகளுக்குத் திருப்பி அளித்தார். மகாராஜா சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து, நல்லப்பரை அணைத்துப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, சன்மானமும் தங்கப்பா பதக்கமும் அணிவித்துச் சிறப்பித்தார்.
"கோவில்பட்டிக்கும் விளாத்திகுளத்துக்கும் இடையில் 32 கி.மீ. தொலைவு. சப்த நெரிசல் இல்லாத காலம். கோவில்பட்டி ஆலைகளில் சங்கு ஊதினால், விளாத்திகுளம் மந்தைக்குக் கேட்கும். உள்ளே இருக்கும் தொழிலாளிகளை வெளியே அனுப்பவும், வெளியிலிருப்பவர்களை உள்ளே அழைக்கவுமான சங்கு ஊதல் ஐந்து நிமிடங்கள் நீடிக்கும். சங்கொலி மெல்ல மெல்ல ஏறி உச்சிக்குப்போய் ஒரு பாட்டம் அந்தரத்தில் நிற்கும், ஆகாயத்தில் நின்று ‘எல்லாம் சரியா இருக்கா’ என்று பார்ப்பதுபோல் தோன்றும். வழுக்கு மரம் ஏறியவன் தானே கீழிறங்குவதுபோல், மெதுமெதுவாக வழுக்கிக்கொண்டே வரும். விளாத்திகுளம் மேற்கில் வடகயிறு போல் கிடக்கும் வைப்பாற்றின் வெட்டவெளியில் நின்று சங்கொலிக்கு இணையாக நல்லப்பர் குரல் பிடிப்பார். மேலே மேலே ஏறி ‘கும்’மென்று உச்சியில் நிறுத்திக் கீழே கொண்டுவருவார்" என தகவல்கள் ...
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25-04-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...