#ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களின் #கோரிக்கைகள்
1. வ.உ.சிதம்பரனார் வழக்கறிஞராக பணியாற்றிய ஓட்டப்பிடாரம் நீதிமன்றக் கட்டடம் பாழடைந்து போய் இடிந்தநிலையில் காணப்படுகிறது. இப்போது நீதிமன்றம் இங்கு இல்லை. மூன்று பேருந்துகள் மாறி விளாத்திகுளம் செல்ல வேண்டும். ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாளைய கோரிக்கை.
2. தூத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலி போன்ற பெருநகரங்களை இணைக்கும் போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு. 25 கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே நகரப்பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற விதி இருப்பதால் பெருநகரங்களில் இருந்து 40 கி.மீ.தூரத்தில் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து வசதிகள் கிடையாது. அதனால் ஓட்டப்பிடாரத்தை தலைமையிடமாகக் கொண்டு போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
3. ஸ்டெர்லைட், கோஸ்டல் எனெர்ஜென், விவி டைட்டானியம், இந்த் பாரத், நிலா சீ புட்ஸ், டயமண்ட் சீ புட்ஸ் உள்ளிட்ட தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி, மூன்று அனல் மின் நிலையங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட காற்றாலைகள் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அமைந்துள்ளன. உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லை. கோவை, திருப்பூர், சென்னையில் இளைஞர்கள் வேலை தேடி செல்கின்றனர். தொழில் நிறுவனங்களில் 90 விழுக்காடு உள்ளூர் மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பது கோரிக்கை.
4. சூழல் சீர்கேட்டை உண்டாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை சிறப்பு சட்டம் இயற்றி நிரந்தரமாக மூட வேண்டும், ஒரே தாலுகாவில் நெருக்கமாக சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஆலைகள் அமைக்கக் கூடாது. இப்போது உள்ள ஆலைகள் தீவிர கண்காணிப்பிற்கு உள்ளாக்க வேண்டும்.
5. புதியம்புத்தூர் பகுதியில் ஆயத்த ஆடை தொழில் பிரபலமாக இருந்தது, இப்போது நலிந்து வருகிறது. கோவை, சென்னை, கேரளா உள்ளிட்ட வெளியூர்களுக்கு ஆயத்த ஆடைகள் தயாரித்து அனுப்புகின்றனர். ஆயத்த ஆடை தொழிற்பூங்கா ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் பகுதியில் அமைக்க வேண்டும் என்பது பல நாள் கோரிக்கை. ஜவுளிப்பொருட்களை எடுத்துச் செல்ல, புதியம்புத்தூரில் இருந்து கோவை, சென்னைக்கு அரசுப் பேருந்து வசதி செய்து தரவேண்டும் என்பது ஒரு கோரிக்கை. புதியம்புத்தூர் - மணியாச்சி ரயில் நிலைய தொடர்பை ஏற்படுத்த வேண்டும்.
6. மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், பண்டாரம்பட்டி, குறிஞ்சிநகர் பகுதிகளின் குடிநீர் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. ஒரு குடம் 5 ரூபாய், 10 ரூபாய் என்று விலை கொடுத்து வாங்கும் நிலைதான் உள்ளது. ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி ஒன்றியத்தின் பல கிராமங்களில் குடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சனை. நிரந்த திட்டங்களோ, தீர்வுகளோ இல்லை.
7. பேய்க்குளம், அத்திமரப்பட்டி, குலையன்கரிசல், கூட்டாம்புளி, கோரம்பள்ளம் பகுதி தாமிரபரணி வரத்துக் கால்வாய் தூர்வாரப்பட வேண்டும், இருபோக விவசாயத்திற்கும் உரிய காலத்தில் தண்ணீர் விட வேண்டும், கோரம்பள்ளம் குளத்தில் எல்லா காலத்தில் நீர் தேக்கி வைத்து, படகுப் போக்குவரத்து சுற்றுலாவாக அமைக்க வேண்டும், முறப்பநாடு பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் உள்ளிட்டவை தாமிரபரணி சார்ந்த கோரிக்கைகள்.
8. தாமிரபரணி நதியில் கடனா கல்லாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நெல்லை மாவட்டத்தில் ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே உள்ள கடனா அணை மூலமாக அரசபத்து கால்வாய், குருவபத்து, வடகுருவபத்து, ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், மஞ்சள்புளிகால், காக்கநல்லூர் கால்வாய், காங்கேயன் கால்வாய் ஆகிய 8 கால்வாய்கள் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பிலான விளைநிலங்கள் பயிரிடப்படுகிறது.
இந்த அணையிலிருந்து கிளம்பும் காங்கேயம் கால்வாய் மூலம் பாப்பாக்குடி, இடைக்கால், அடைச்சாணி, முக்கூடல், அரியநாயகிபுரம், சங்கந்திரடு, கல்லூர் வரையுள்ள பகுதிகள் பாசனம் பெருகின்றன. அதிக வெள்ளம் வரும் காலங்களில் காங்கேயன் கால்வாயில் இருந்து மேட்டுக்கால்வாய் அமைத்து ஓட்டப்பிடாரத்துக்கு நீர் கொண்டுசெல்லும் புதிய திட்டம்தான் அது.
இதன்மூலம் கங்கைகொண்டான் அருகே சிற்றாறும், கயத்தாறு அருகே உப்போடையும் குறுக்குச்சாலை அருகே கல்லாறும் இணைக்கப்படும். எப்போதும்வென்றான் அருகே வைப்பாறும் இணைக்கப்படும். அதாவது விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் தூத்துக்குடி, திருநெல்வேலி இரண்டு மாவட்டங்களும் செழிப்பாகும் தொலைநோக்கு திட்டம்தான் அது.
9. தூத்துக்குடி புதுக்கோட்டை பகுதியில் உப்பாற்று ஓடையில் கழிவுகள் கொட்டக் கூடாது, உப்பாற்று ஓடையின் ஆக்கிரமிப்புகள் ஆரைக்குளம் அணைக்கட்டில் இருந்து அத்திமரப்பட்டி அணைக்கட்டு வரை இருக்கின்றன. முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும், இடைப்பட்ட கொம்பாடி அருகே மறிச்சுக்கட்டி என்ற இடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பதும் ஒரு கோரிக்கை.
உப்பாற்று ஓடையில் இருந்து புதியம்புத்தூர் மலர்குளம், ஓட்டப்பிடாரம் பெரியகுளம் பகுதிகளுக்கு நீர்வரத்துக்கான கால்வாய்களை சீரமைத்திடவும் நீண்டநாள் கோரிக்கை உள்ளது.
10. ஓட்டப்பிடாரம், கவர்னகிரி, புதியம்புத்தூர், குலசேகரநல்லூர், வல்லநாடு, புதுக்கோட்டை, அல்லிகுளம், கோரம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், விவசாய கிணறுகளில் இருந்தும் தொழிற்சாலைகளுக்கு அதிகளவில் லாரிகளில் நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. நிலத்தடி நீர் கொள்ளை அதிகமானதால் அப்பகுதியின் நிலத்தடி நீர் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
11. ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், புதுக்கோட்டை, வல்லநாடு பேரூராட்சி உருவாக்க வேண்டும் என்பது ஒரு கோரிக்கை.
ஓட்டப்பிடாரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும், அரசு தொழில்நுட்ப கல்லூரி அமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை.
12. தூத்துக்குடி தொழில்வளம் மிகுந்த நகரம், இங்கிருந்து சென்னைக்குச் செல்ல ஒரே ஒரு ரயில் மட்டுமே உள்ளது, அதனால் தூத்துக்குடி – மீளவிட்டான் – மணியாச்சி பகுதிகளை இணைக்கும் இருவழிச்சாலை அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது. அதனை செயல்படுத்தினால் தூத்துக்குடி நகரில் இருந்து மணியாச்சி ரயில் நிலையத்திற்கு நேரடி தொடர்பு கிடைக்கும்.
13. கோவில்பட்டி – காமநாயக்கன்பட்டி – பசுவந்தனை – ஓசநூத்து – கைலாசபுரம் – புதுக்கோட்டை – குரும்பூர் – திருச்செந்தூர் இருவழிசாலை அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது. இந்தப் பாதையில்தான் இப்போது திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். கொற்கை துறைமுகத்தோடு தொடர்பு கொண்ட வண்டிப்பாதை என்றும் சொல்கின்றனர். இந்த மாநிலநெடுஞ்சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியில் தொழில் வளம் பெருகும், கோவில்பட்டி திருச்செந்தூர் பயண நேரம் குறையும்.
14. புதியம்புத்தூர் -ஓட்டப்பிடாரம் - குலசேகரநல்லூர் - ஒட்டநத்தம் - கயத்தார் இணைப்பு மாநில நெடுஞ்சாலை, பேருந்து வசதி.
சில்லாங்குளம் - ஒட்டநத்தம் - சீவலப்பேரி - பாளையங்கோட்டை பேருந்து வசதி.
15. வெள்ளப்பட்டி, தருவைக்குளம் பகுதியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், அனல்மின்நிலையம், மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மூலமாக மீன்வளம் குறைந்து விட்டது. மீனவர் நலனுக்கான திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. மீனவர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் தேவை.
16. தட்டாப்பாறை பகுதியில் செயல்பட்டு வந்த சிறுவர் சீர்திருத்த பள்ளி இடமாற்றம் செய்யப்பட்டு விட்டது. அந்த இடத்தில் தொழிற்பயிற்சி கூடம் அமைத்து மாணவர்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை.
17. தூத்துக்குடி – மதுரை இண்டஸ்டிரியல் காரிடார் திட்டத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில் நிறுவனங்களை, தற்சார்பு உற்பத்தி தொழில்களை கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.
18. வல்லநாடு, மணக்கரை, அத்திமரப்பட்டி, கோரம்பள்ளம் பகுதிகளில் தாமிரபரணி விவசாயம் நடந்தாலும், மானாவாரி விவசாயம் அதிகம் உள்ள பகுதி விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லாமல், தொழிற்சாலைகள், காற்றாலைகள் வருகையால் விவசாய நிலங்கள் சுருங்கி விட்டன. இடம்பெயர்தல் அதிகம் நடந்துள்ள தொகுதி. கம்பு, சோளம், கடலை, பருத்தி, மிளகாய், நெல், வாழை, பூ விவசாயம் மேம்படுத்த வேண்டும்.
19. ஓட்டப்பிடாரம், புதுக்கோட்டை, ஒட்டநத்தம், மாப்பிள்ளையூரணி பகுதி அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்த வேண்டும், 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும், 108 ஆம்புலன்ஸ் சேவை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது ஒரு கோரிக்கை.
20. ஓட்டப்பிடாரம், பரிவில்லிகோட்டை, காசிலிங்கபுரம், வல்லநாடு, குலையன்கரிசல் அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்பட வேண்டும், அரசு மாணவ, மாணவியர் விடுதிகள் தரம் உயர்த்த வேண்டும் என்பது கோரிக்கை. அங்கன்வாடி மையங்கள் சிறப்புத் திட்டத்தில் சீரமைக்கப்பட வேண்டும். பரிவில்லிகோட்டை ஆசிரியர் பயிற்சி மையம் தொழிற்பயிற்சி கூடமாக மாற்ற வேண்டும்.
21. தரமற்ற முறையில் கட்டப்பட்ட தருவைக்குளம் சமத்துவபுரம், தொகுதியின் பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள், காலனி வீடுகள் இடிந்து மோசமான நிலையில் குடியிருக்க முடியாத நிலையில் உள்ளன. அவற்றை சீரமைத்து வறுமையில் உள்ள அனைவருக்கும் தரமான குடியிருப்பு வசதிகள் செய்து தர வேண்டும் என்பது கோரிக்கை.
22. முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்றும், வீட்டுமனைப் பட்டா வேண்டியும் ஆயிரக்கணக்கான மனுக்கள் கொடுத்து வருகின்றனர் பொதுமக்கள்.
23. வ.உ.சிதம்பரனாருக்கு சொந்த ஊரான ஓட்டப்பிடாரத்தில் நினைவு மணிமண்டபம் அமைக்க வேண்டும். அதில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நூலகம், போட்டித்தேர்வு பயிற்சி மையம், காவலர் பயிற்சி வழங்க வேண்டும் என்பது கோரிக்கை.
24. வீரன் சுந்தரலிங்கம், அவரது மனைவி வடிவு இருவரும் ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கில் முதன்முதலாக தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய அதே இடத்தில் நினைவு மண்டபம் அமைத்து, தொல்லியல் துறை மூலம் பராமரிக்க வேண்டும். பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை, வல்லநாடு வெள்ளையத்தேவன் மணிமண்டபம் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக மாற்ற வேண்டும்.
ஆங்கிலேயர்கள் கல்லறை அமைந்துள்ள கவர்னகிரி பகுதியில் கோட்டைச்சுவர் அமைத்து, சுற்றுலா துறை, தொல்லியல் துறை சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
25. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த வல்லநாடு வெளிமான் உய்விடம், சாலிகுளம் காப்புக்காடு, மயூரா தோட்டம் உள்ளிட்ட இடங்கள் சிறப்புக் கவனம் செலுத்தி பாதுகாப்பதோடு, சுற்றுலா மேம்பாடு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment