*#
*
*
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. முதன்முதலாக டெல்லிக்கு சென்றபோது பீகாரைச் சேர்ந்த தாரகேஸ்வரி சின்ஹா தான் என்னை நாடாளுமன்றத்துக்கு அழைத்துச் சென்றார். ஸ்தாபன காங்கிரஸின் தலைவர்களில் ஒருவரான இவர், அனைவரும் நன்கறிந்த புகழ்பெற்ற மேடைப்பேச்சாளர். தமிழகத்திற்கு 1970களின் துவக்கத்தில் ஸ்தாபன காங்கிரஸ் கூட்டங்களுக்கு வருவார்.
பல ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் சென்னைப் பக்கம் வரும்போதெல்லாம் உடனிருப்பது வாடிக்கை. திருப்பதி கோவிலுக்கும், புதுவை அரவிந்தர் ஆசிரமத்துக்கும் செல்வது வாடிக்கை. கன்னியாகுமரி சென்றாலும் என்னையே உடன் அழைத்துச் செல்வார். முதன்முதலாக 1973 காலக்கட்டத்தில் என்னை டெல்லி நாடாளுமன்ற வளாக கட்டிடத்திற்கு அனுமதி சீட்டு வாங்கி என்னை அழைத்துச் சென்றார். என்னை அவர் மகன் போலவே பாவித்தார்.
அவர் ஒரு முறை இவ்வாறு சொன்னார்.
*My dear son, “One day you will come to this circular mighty building.”*
அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் இதயசுத்தியானவை. ஏனோ அந்த வாக்கு பலிக்கவில்லை.
நாடாளுமன்றத்துக்கு 46 வருடங்களுக்கு முன்னர் சென்றாலும் இன்னும் உறுப்பினராக செல்லமுடியாத சூழலே இருக்கின்றது. நான் நாடாளுமன்றம் இதுதான் என்று அடையாளம் காட்டியவர்கள் எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகி உள்ளனர். அடியேனுக்கு அந்த வாய்ப்பு ஏனோ கிட்டவில்லை. ஏனென்றால் அரசியலில் தகுதியே தடை என்பது அனைவரும் அறிந்ததே. நேற்றைக்கு காலை ஆங்கிலப் பத்திரிக்கையில் தாரகேஸ்வரி சின்கா பற்றிய குறிப்பு வந்துள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் 1926இல் பிறந்த இவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இவர் பெருமளவில் பங்குகொண்டார். விடுதலைக்குப்பின் பீகார் மாணவர் காங்கிரசின் தலைவராக இருந்தார். லண்டனில் பொருளாதாரம் பயின்ற அவர் பீகார் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வென்றார். தனது 26வது வயதிலேயே 1952 நாடாளுமன்றத் தேர்தலில் பாட்னா கிழக்கு நாடாளுமன்றத் தொகுதி மூலமாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேருவின் அமைச்சரவையில் இடம்பெற்ற முதல் பெண் துணை நிதியமைச்சர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
சிறந்த மேடைப் பேச்சாளர் மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்திலேயே சரளமாக இந்தியிலும், ஆங்கிலத்திலும் அருமையாக உரையாற்றக் கூடியவர். அவர் பேசும்போது இந்திரா காந்தி அவரையே கூர்ந்து கவனித்துக் கேட்பார். சில சமயம் அவரது பேச்சில் கோபக்கணைகளும் எழும். அந்த காலத்திலேயே அவருக்கு சினிமா ரசிகர்களை போல தனி ரசிகர் கூட்டம் உண்டு. தலையில் பாப் வெட்டிக் கொண்டு அவர் பேசும், ஆங்கிலமும், இந்தியின் உச்சரிப்பும் அருமையாக இருக்கும். இன்றைக்கு இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட தாரகேஸ்வரி சின்காவைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு அரசியலுக்கு வரும் இளைஞர்களுக்கு தாரகேஸ்வரி சின்கா ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பார். அவரது பேச்சுத் திறனும், ஆளுமையும் வியக்கத்தக்கது.
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
01-04-2019
No comments:
Post a Comment