*எரிவதென்பது இலங்கையின் சாபம் போலும் வேறென்ன சொல்ல.*
அப்படித்தான் ஈழம் இலங்கையில் இருக்கிறது என்ற ஈழச்சகோதரியின் பதிவைப் பாரீர்.
விதியே, விதியே, தமிழ்சாதியே!
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-04-2019
உளைச்சல் ஆகும் என்பதை அறியமுடிகிறது, ஈழத்து தங்கை Sharmila Vinothini Thirunavukarasuயின் பதிவுகள்
யுத்தம் முடிந்து,
மொத்தமும்
வேறு திசையில் பயணிக்கலாம்
என்று நினைக்கையில்,
திடீரென
பெரும் அவல சப்தம்,
நெஞ்சு பிளக்கிறது,
மனிதநேயமற்ற மனிதர்கள் மத்தியில் எப்படித்தான் வாழ்கிறீரோ…?
திடமாக இருங்கள்......
**************
ஏன் எங்கள் வாழ்வு இப்படி மாறிப்போய்விட்டது? யுத்தம் கருக்கொண்டு உருக்கொள்ளும் காலத்தில் பிறந்து சதா யுத்த வலயங்களில் உழன்று கந்தக் காற்றுக்கு கதை சொல்லும் காலத்தை எங்களுக்குள் திணித்தவர் யார்?
அதிரடிப்படைகளின் முகத்தை சும்மாவே பார்க்கப்பிடிக்காது, யுத்த காலத்தில் அவர்கள் செய்த அட்டூளியங்கள் அப்படி. இப்போது மீண்டும் அவர்களுக்குரிய காலம் அதுவும் முகத்தை உர் என்று படு பயங்கரமாக வைத்தபடி ஏதிலிகளிடம்தான் அவர்களுக்கு தங்களது வீரத்தைக் காட்டத்தெரியும்.
யுத்தகாலத்திலும் இப்படித்தான் ஒரு கிலோ மீற்றர் தூரம் பயணப்படுவதற்குள் ஒன்பது சோதனைச்சாவடிகளைக் கடக்க வைப்பார்கள். இறங்கு, ஐடி இருக்கா? எங்க போறாய்? இப்படி ஒருமையில் தரக்குறைவாக வந்து விழும் ஆயிரத்தெட்டுக் கேள்விகளால் வந்த எரிச்சலால் சிங்களத்தின்மீதுகூட அப்படி ஒரு வெறுப்புத் தொற்றிக்கொண்டது, அந்த வெறுப்பால் நீண்ட நாட்களாக அலுவலகத்தில் கூட ஒரு வார்த்தை தட்டுத்தவறி சிங்களத்தில் கதைத்துவிடக்கூடாது என்று மிகக் கவனமாக இருந்தேன். அதுவும் ஒரு மொழிதானே மொழி மீது நமக்கென்ன கோபம் என்ற புரிதல் வர நீண்ட நாட்கள் எடுத்தது.
ஆனால் இப்போது மீண்டும் அதே நிலை,
காலையில் 6.15 கு பேருந்து எடுக்க வேண்டும், 5.45 கு வீட்டை விட்டு முச்சக்கர வண்டியில் புறப்பட்டுவிட்டேன். வீட்டை விட்டு புறப்பட்டு இரண்டு தெரு கடந்திருப்பேன் முன்னால் துப்பாக்கிகளை லோட் பண்ணிய படி அதிரடிப்படைக் குவியல் முச்சக்கரவண்டியை மறித்தது, முன்பு நான் வெறுத்த அதே வார்த்தைகள், சகித்துக்கொண்டு ஐடி யை நீட்டினேன், பார்த்து விட்டு ஓகே நீங்க இறங்கிப்போங்க முச்சக்கர வண்டியை சோதித்துவிட்டுத்தான் அனுப்ப முடியும் என்றனர். ஒரு வாறு கதைத்து வேறு தெருவால் போகலாம் என்றால் அங்கும் அதே நிலை. கடைசியில் வேறு வழியின்றி சிவனே என்று நடந்து வந்து பேருந்தில் ஏறி அமர ஓட்டோ அண்ணாவின் அழைப்பு 'பஸ் எடுத்திற்றீங்களா?' 'ஓம் அண்ணா நீங்க போய்ரீங்களா வீட்ட? ஓம்..
---------------------------------
வாழ்வு குரூரமாக்கப்பட்ட காலத்தில்
ஏதுமறியாதவொரு நத்தையைப் போல
வாழப் பணிக்கப்பட்ட சாபத்தைச்
சுமந்தபடி நடக்கிறேன்
ஆழ் சமுத்திரமொன்றினுள்
மறைந்திருக்கின்ற நீரோட்டத்தைப்போல..
உடல் கிழித்துக் குருதி குடித்த
கழுகுகளின் வலிய நகங்கள்
கூர்மையிழந்து
ஒடிந்து விழுவதற்கு முன்னம்
மீண்டுமோர் பிணவாடை நாசியைத் துளைத்து
முகம் வாடச்செய்யும் இக் காலத்தை
சபிப்பதைத் தவிர
வேறென்ன செய்ய?
என்ன செய்தது இச் சிறு தீவு?
அதில் சாம்பல் மேடுகளைத் தூவாமல்
தயவுகூர்ந்து தள்ளிப் போய்விடுங்கள்
பூகோளம் பேசவும் பெருவணிகம் செய்யவும்
இந்நிலத்தின் சனங்களை
இனாமாக்கி விடாமல்
விட்டுவிட்டுப் போய்விடுங்கள்
வாழட்டும் இத்தீவு.
No comments:
Post a Comment