தூத்துக்குடி நாடாளுமன்ற கழக வேட்பாளர் கவிஞர் #கனிமொழி, #விளாத்திகுளம் சட்டமன்ற #இடைத்தேர்தல் வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து இன்று(8-4-2019) புதூர் ஒன்றியத்தின் வெம்பூர், மெட்டல்பட்டி, அயன்கரிசல்குளம், மாவில்பட்டி, சென்னமரெட்டிப்பட்டி, முத்துசாமிபுரம், புதூர், பட்டிதேவன்பட்டி, கீழக்கரந்தை, செங்கோட்டை, மேலக்கரந்தை, மாசார்பட்டி போன்ற கிராமங்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
இந்த சுற்றுப்பயண நிகழ்ச்சியில் என்.செல்வராஜ் (புதூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர்), மும்மூர்த்தி (முன்னாள் ஒன்றியக் கழகச் செயலாளர்), தவசி (பேரூர் கழகச் செயலாளர்), சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எல்.இராதாகிருஷ்ணன், கே.கணேஷ் ராமானுஜம், பொதுக்குழு உறுப்பினர் ப.மு.பாண்டியன், வழக்கறிஞர் மகேஷ், எட்டையபுரம் டாக்டர். சௌந்தர்ராஜன், க. அண்ணாதுரை, டி.ஆர்.குமார், எம். மாடசாமி, ஜெயராமன், அறிவழகன், அன்புநிதி, மேகலிங்கம், சிங்கராஜ், ராஜபாண்டியன் (கழக தொழில்நுட்ப பிரிவு), செல்லமாரியப்பன் மற்றும் கழக தோழர்கள் உடன் வந்தனர். நீண்ட நாட்களுக்குப்பின் புதூர் ஒன்றிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருந்தது.
இறுதியாக 2001 மார்ச் மாதத்தில் புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக நினைவு. பலதரப்பு மக்களையும் சந்தித்து வாக்குகளை கேட்டோம். அவர்களுடைய கோரிக்கைகளையும் முன்வைத்தனர். இது வானம் பார்த்த விவசாய பூமி. வேறு தொழில்கள் இல்லை. புதூரில் மட்டும் பிரிட்டிஷார் காலத்தில் அமைக்கப்பட்ட பருத்தி அரவை ஆலை தான் இருக்கிறது. பருத்தி, மிளகாய், காய்கறிகள், எள், தானிய வகைகள், எலுமிச்சை இந்த மண்ணில் பிரதானப் பயிர்கள். மழையில்லாமல் வாடிய நிலையில் உள்ளது.
இந்த பகுதிக்கு உச்சநீதிமன்றத்தில் நதிநீர் இணைப்புக்காக நான் தொடுத்த வழக்கின் உத்தரவுப்படி கேரளாவில் உள்ள அச்சன்கோவில் - பம்பை, தமிழகத்தின் சாத்தூர் வைப்பாற்றில் இணைத்தால் தான் இந்த பகுதிக்கு நீர்பாசனக் கால்வாய் வெட்டினால் தான் இந்த பகுதி வளம்பெறும். அதுமட்டுமல்ல, இந்த வட்டாரத்தில் விவசாய விளைபொருட்களை பாதுகாக்க குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும்.
இசைமேதைகள் தியாகராஜ பாகவாதர், காருக்குறிச்சி அருணாச்சலம், கே.பி. சுந்தராம்பாள் போன்ற ஆளுமைகளெல்லாம் முன்னோடியாக விளங்கிய விளாத்திகுளம் சாமிகளுடைய நினைவிடம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தின் அருகில் சரியாக பராமரிக்கப்படாமல் இருக்கிறது. அதையும் கவனிக்கப்பட வேண்டும் போன்றவை எல்லாம் நீண்டகால கோரிக்கை.
மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை, புதூர், விளாத்திகுளம், தூத்துக்குடி வரை இணைக்கும் இரயில் பாதை திட்டம் பிரிட்டிஷாரால் திட்டமிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. அதுவும் இன்றைக்கு முக்கியமான கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கைகளெல்லாம் விளாத்திகுளம் பகுதிக்கு தேவையானவை என்பதை இந்த பதிவின் மூலம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
கிராமம், கிராமமாக சென்று வந்தது கடமையாற்றியது மட்டுமல்ல மனதிற்கும் ஆறுதல் அளிப்பதாக இருந்தது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
08-04-2019
No comments:
Post a Comment