Friday, April 19, 2019

#தேர்தல் -2 *பசுமையான தேர்தல் நினைவுகள்!*


Image may contain: text

*பசுமையான தேர்தல் நினைவுகள்!*
--------------------------------------

தேர்தல் திருவிழா களைகட்டி விட்டது. இன்று (18-04-2019) தேதி நமது ஆட்காட்டி விரலில் அடையாள மையிட்டு நமது ஓட்டுரிமையை பயன்படுத்த இருக்கின்றோம். நமக்குத் தேர்தல்கள் புதியதல்ல. பண்டைய காலத்தில் குடைஓலை மூலம் நமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தோம் என உத்திரமேரூர் கல்வெட்டுகள் சொல்கின்றன. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சொத்து கணக்குகள் தெரிவித்ததாகவும் பாலாறு கல்வெட்டுகளில் உள்ளது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற மொழிக்கேற்ப, தேர்தல், ஜனநாயகத்தின் நாற்றங்கால் மற்றும் அச்சாணியாகும்.
ஆங்கிலேயர் காலத்தில் 1909ஆம் ஆண்டு சட்டத்தின்படி சொத்து வரி செலுத்துவோருக்கு மட்டும் 1910இல் வாக்குரிமை அளிக்கப்பட்டு, தேர்தல் முறை அறிமுகமானது. நாட்டின் விடுதலைக்குப் பின் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப் பட்டது. பிரிட்டனில் பெண்கள் போராடிதான் வாக்குரிமையை பெற்றனர். பிரிட்டனில் ஒரு பெண்ணை பார்சலில் கட்டி, பிரிட்டிஷ் பிரதமருக்கு அனுப்பி வாக்குரிமை பெற்றதான செய்தி, அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த தேர்தல் நிகழ்வுகளை திரும்பிப் பார்த்தால் மிகவும் ருசிகரமாக இருக்கும். அவற்றை பதிவு செய்ய விருப்பம் ஏற்படும். தமிழகத்தில் நாட்டின் விடுதலைக்குப் பின், முதல் பொதுத் தேர்தல் 1951 அக்டோபர் மாதம் துவங்கி 1952 ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது. தமிழகத்தில் 1952 ஜனவரி மாதத்தின் ஒன்பது நாள்கள் தேர்தல் நடந்தன. அப்போதிருந்த சென்னை ராஜதானியில் மொத்தம் 375 சட்டப்பேரவை தொகுதிகள். அதில் தமிழ்நாட்டில் 190 தொகுதிகளும், மற்றவை மலபார், ஆந்திரத்தில் இருந்தன.
அப்பொழுது சின்னங்கள் கிடையாது. மஞ்சள் பெட்டி காங்கிரஸ், சிவப்புப் பெட்டி நீதிக் கட்சி, பச்சை முஸ்லிம் லீக், ஊதாவும் கரு நீலமும் சுயேச்சைகளுக்கும் என்று வாக்களிக்க தனித்தனி வண்ணப் பெட்டிகளாக இருந்தன. வாக்குப் பதிவு நாளன்று வாசிக்கத் தெரியாத வாக்காளரிடம் அரசியல் கட்சிகளின் வர்ணங்களை அழுத்திச் சொல்வது 1950களில் வாடிக்கையாக இருந்தது. 1950இல் சுகுமார் சென் இந்திய முதன்மை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர், மற்ற நாடுகளில் தேர்தல் நடப்பை ஆராய்ந்து வாக்குச் சீட்டு எப்படி அமைய வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன்பின் தான் சின்னங்கள் நடைமுறைக்கு வந்தன.
1972இல் அரசியலுக்கு வந்து, 42 ஆண்டுகளில் தேர்தலில் வேட்பாளராகவும், தலைமை முகவராகவும், கோவில்பட்டி மற்றும் சங்கரன்கோவில், விளாத்திகுளம், சிவகாசி நாடாளுமன்ற தொகுதி என்று களப்பணி ஆற்றிய நினைவுகள் பளிச்சிடுகின்றன. அந்த வகையில் தேர்தல் குறித்த பசுமையான நினைவுகள் சிலவற்றை பதிவு செயய விரும்புகிறேன்.
இரண்டாவது பொதுத் தேர்தலில் காங்கிரசின் சின்னமாக நுகைத்தடி பூட்டிய இரட்டை காளை சின்னம், கம்யூனிஸ்டு கட்சிக்கு கதிர் அரிவாள் சின்னம்; 1957இல் அண்ணா தலைமையில் தி.மு.க. உதயமானது. 1962இல் துவக்கப்பட்ட இராஜாஜியின் சுதந்திரா கட்சிக்கு நட்சத்திரம் சின்னம் கிடைத்தது. 1969இல் காங்கிரஸ் இரண்டாக பிரிந்ததன் விளைவாக நுகைத்தடி பூட்டிய இரட்டை காளை சின்னம் முடக்கப்பட்டது. இந்திரா காங்கிரசுக்கு பசுவும் கன்றும், ஸ்தாபன காங்கிரசுக்கு கை ராட்டை சுற்றும் பெண் சின்னமும் ஒதுக்கப்பட்டன. அதேபோல கதிர் அரிவாள் சின்னம் கம்யூனிஸ்டு கட்சிக்கு இருந்தது. 1964இல் பிளவுபட்டபோது இந்திய கம்யூனிஸ்டுக்கு கதிர் அரிவாள் சின்னமும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
ஏர் உழவன் சின்னம் 1977 வரை பாரதிய லோக் தள் (பி.எஸ்.பி.) பயன்படுத்தியது. 1977இல் காங்கிரஸ் இந்திரா காந்தி தலைமையிலும், பிரமானந்த ரெட்டி தலைமையிலும் பிளவுபட்டபோது காங்கிரஸ் (இ) கட்சிக்கு கை சின்னமும், காங்கிரஸ் (இ) எதிர்ப்பான கர்நாடக முதல்வராக இருந்த தேவராஜ் அர்ஸ் கட்சியான காங்கிரஸ் (யு)க்கு இரட்டை காளை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
1977 அவசர நிலை காலத்திற்கு பிறகு ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், சோசலிஸ்ட் கட்சி, பாரதிய லோக் தள் ஆகிய கட்சிகள் இணைந்து ஜனதா கட்சி என உருவாகி, பி.எஸ்.பி.யின் சின்னமான ஏர் உழவர் சின்னத்தில் போட்டியிட்டனர். அதுவரை ஜனசங்கம் தீபத்தை தனது சின்னமாக பயன்படுத்தியது.
1980இல் ஜனதா கட்சியிலிருந்து வாஜ்பாய் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி என்றும், சந்திரசேகர் தலைமையில் ஜனதா கட்சியென்றும் தனித்தனியாக பிரிந்தனர். பா.ஜ.க.வுக்கு தாமரை சின்னமும், ஜனதாவுக்கு குடை சின்னமும் கிடைத்தது. ஜனதா கட்சியிலிருந்து சரண்சிங்கும், ராஜ்நாராயணனும் பிரிந்தனர். சரண்சிங்கின் லோக் தள் கட்சிக்கு பெண் சின்னமும், ராஜ்நாராயணனுக்கு சைக்கிள் சின்னமும் கிடைத்தது. அந்த சைக்கிள் சின்னம்தான் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் பயன்படுத்துகிறார். திரும்பவும் வி.பி. சிங் தலைமையில் 1989இல் உருவான ஜனதா தளத்திற்கு சக்கரம் சின்னம் கிடைத்தது. இவையெல்லாம் தேசிய கட்சிகள் பெற்ற சின்னங்களின் வரலாறாகும். நான்கு மாநிலங்களில் ஒரு மாநில கட்சி செயல்பட்டால் அது தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படும்.
இந்தியாவின் ஆளுமையுள்ள மாநில கட்சியாக வலுவாக உருப்பெற்ற தி.மு.க.வின் முதல் சின்னம் சேவலாகும். முறையான அங்கீகாரம் கிடைத்த பிறகு தி.மு.க.விற்கு உதயசூரியன் சின்னம் கிடைத்தது. மாநிலக் கட்சியாக உள்ள கட்சிகள் பயன்படுத்தும் சின்னங்களை மற்ற மாநிலங்களில், வேறு கட்சிகள் பயன்படுத்தலாம். அதுபோலதான் ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் சைக்கிளையும், உ.பி.யில் சமாஜ்வாடி சைக்கிளையும் பயன்படுத்துகின்றனர். அசாமில் அசாம் கன பரிஷத்துக்கும், தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுக்கும் ஒரே சின்னம்தான். இப்படி பல கட்சிகளின் பிளவுகளின்போது சின்னங்கள் குறித்து பல வழக்குகள் தேர்தல் ஆணையம் முதல் உச்சநீதிமன்றம் வரை வழக்குகள் சென்றன.
1950 இறுதியில் ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி, சிவகாசி சட்டமன்ற தொகுதி, சாத்தூர் சட்டமன்ற தொகுதி என நான்கு சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகள் கூடும் இடத்தில் தான் எங்கள் கிராமம் இருக்கிறது. 1950களில் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பதில்லை. கிராமத்தில் ஒரு பொதுவான இடத்திலோ அல்லது ஏதாவது ஒரு வீட்டிலோ வந்து கிராம மக்களை வேண்டி எனக்கு வாக்களியுங்கள் என்று சொல்லிவிட்டு வேட்பாளர்கள் போவார்கள். இந்த நிகழ்வுகள் மங்கலாக என் நினைவில் இருக்கிறது. அப்போது அனல் கக்கும் பேச்சுகள், பிரச்சாரங்கள் இல்லை.
சாத்தூரில் பெருந்தலைவர் காமராசர், சிவகாசியில் எஸ்.ஆர். நாயுடு, கோவில்பட்டியில் வி. சுப்பையா, ஆலங்குளத்தில் வேலுச்சாமி, சங்கரன்கோவிலில் ஏ.ஆர். சுப்பையாமுதலியார் போன்றோர் போட்டியிட்டபோது, எந்தவிதமான சுவரொட்டியும் இல்லாமல், வெறும் சின்னம் பெயரை சொல்கின்ற, டெண்ட் கொட்டகையில் திரைப்படத்திற்கு பல வண்ணங்களில் நோட்டீஸ்கள் கொடுப்பது போல பல வண்ண கலரில் அச்சிட்டு பிட் நோட்டிஸ்களாக கொடுப்பார்கள். அதை வேட்பாளர் வரும்போது விநியோகிப்பார்கள். பலர் அந்த வண்ணவண்ண நோட்டிஸ்களை சேகரித்து வைப்பதற்கு போட்டி போட்டு வாங்குவார்கள்.
1962ல் தேர்தலை, ஆரவாரங்களைக் கவனிக்க, அதைப் புரிந்து கொள்கின்ற வயது வந்தது. அப்பொழுது சாத்தூரில் போட்டியிட்ட பெருந்தலைவர் காமராசர், புளியங்குடியில் போட்டியிட்ட ஊர்காவலன், சங்கரன் கோவிலில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.ஏ. மஜீத், கோவில்பட்டியில் போட்டியிட்ட வேணுகோபால கிருஷ்ணசாமிநாயுடு, ஏ.பி.சி.வீரபாகு, திருநெல்வேலியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் திருமதி ராஜாஜி குஞ்சிதபாதம் போன்றோருக்கு எனது உறவினர்கள் தேர்தல் பணியாற்றிய காட்சிகள் யதார்த்தமாக இருந்தன.
சுதந்திரா கட்சி நிர்வாகிகள் டி.எஸ். ஆதிமூலம், லட்சுமி மில் அதிபர் ஜி.கே. சுந்தரம், சுதந்திரா கட்சி தலைவராக இருந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் என்.ஜி.ரங்கா போன்றோர் பிரச்சாரத்தை திண்ணையில் அமர்ந்து வாக்காளர்களுடன் அளவளாவினர்.
அக்காலத்தில் வாகனங்கள் அவ்வளவு வசதி இல்லை. ‘பிளசர் கார்’ என்று கிராமப்புறத்தில் சொல்லக் கூடிய, அம்பாசிடர் நிறுவனம் முதன் முதலாக அறிமுகப் படுத்திய நீள வண்டியில் வேட்பாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வருவார்கள். கிராமங்களில் பிரதான தெருக்களில் நடந்து சிறிது நேரம் இருந்துவிட்டு சென்று விடுவார்கள்.
1962இல் ஆலங்குளத்தில் சபாநாயகர் செல்லப்பாண்டியனை எதிர்த்து போட்டியிட்ட ஆலடி அருணா எங்கள் கிராமத்திற்கு வரும்பொழுது என்னுடைய சகோதரர் கிராமத்தில் உள்ள படித்த இளைஞர்களை திரட்டிக் கொண்டு, ஆலடி அருணாவை ஊருக்கு ஒதுக்குப்புறமாக அவரை அழைத்து சென்று கீழாப்பாவூர் குண்டு சோடா, கருப்பட்டி மிட்டாய், காராசேவ் கொடுத்து உபசரிப்பார். 
அப்பொழுது ஆலடி அருணா, கதவிலும் சுவரிலும் ஒட்ட கருப்பு சிவப்பு வண்ணத்தில் அச்சிட்ட உதயசூரியன் நோட்டீஸ்கள் தருவார். அதை கையில் தொடும்பொது அதிசயமாக இருந்தது. சட்டையில் குத்திக் கொள்கின்ற உதயசூரியன் அட்டை கொடுப்பார். சுதந்திரா கட்சி நீல வண்ணத்தில் அச்சிட்ட நட்சத்திர சின்னம் அடங்கிய அட்டைகள், காங்கிரசின் காளை மாட்டு சின்னம் பொறித்த அட்டைகள் கொடுப்பார்கள். 
தோழர் ஜீவானந்தம், பாலதண்டாயுதம் போன்றோர் அங்கு வரும்போது கூட்டம் நடக்கும். அப்போது சிவப்பு நிறத்தில் கதிர் அரிவாள் அட்டை தருவார்கள். இதெல்லாம் அப்பொழுது அரிய பொருளாக அஞ்சல் தலைகள், தீப்பெட்டி லேபிள்களை சேகரிப்பது போல், கட்சிகளின் பேட்ஜ்களை சேகரிப்பது இருந்தது. கிராமத்தில் சிறுவர்களுக்கு வேட்பாளர் ஆரஞ்சு சுளையைப் போன்ற பப்பிரமெண்டுகள் அளிப்பதும் உண்டு.
1962இல் பல வேட்பாளர்கள் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் கிராமப்புறங்களில் 5 மைல் தூரம் நடந்து சென்று வாக்காளரை சந்தித்தனர். வேட்புமனு தாக்கல் செய்ததிலிருந்து 40 நாட்கள் பிரச்சாரம் செய்ய அவகாசம் அப்போது இருந்தது. சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்ட ஊர்காவலன் கிராமப்புறங்களில் ஓடும் பம்பு செட்டுகளில் தனது துணிகளை துவைத்து கட்டிக் கொண்ட காட்சிகளும் பார்க்கப்பட்டது- வாக்காளர்களை சந்திக்க இயலாமல் தலைமறைவாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி மணலி கந்தசாமியும், பி.ராமமூர்த்தியும் தேர்தலில் வெற்றி பெற்றது மக்களிடம் வியப்பாக பேசப்பட்டது.
நீதிக் கட்சியைச் சார்ந்த பி.டி. ராஜன் 2 தொகுதிகளில் போட்டியிட்டு கம்பம் தொகுதியில் வெற்றி பெற்று, மதுரை தொகுதியில் டெபாசிட்டை இழந்தார். காங்கிரஸ் கோட்டையாக விளங்கிய சென்னை வண்ணாரப் பேட்டை தொகுதியில் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களில் ஒருவரான ப.ஜீவானந்தம் தனது பேச்சாற்றலால் வெற்றி பெற்றார். <ஈரோடு மாவட்டம் ஒத்தக்கடையைச் சேர்ந்த க.ர.நல்லசிவம், சோசலிஸ்ட் கட்சியின் சார்பாக நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் தேர்தலில் போட்டியிட்டபோது இவருக்காக மக்கள் நிதி திரட்டி தந்துள்ளனர். கையில் காசில்லாதவர்கள் ராகி, மக்காச்சோளம் போன்றவற்றை கொடுக்க, அதை சந்தையில் விற்று தேர்தலில் செலவு செய்தார்.
அக்காலத்தில் நாடகக் கலைஞர்கள் கே.பி.சுந்தராம்பாள், அவ்வை சண்முகம், கா.மு. கண்ணம்மாள் போன்றோரை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார் தீரர் சத்தியமூர்த்தி. புதுவைக்கு பிரெஞ்சு காலனியிலிருந்து விடுபட்டு 23.8.1964ஆம் ஆண்டுதான் தேர்தல் நடந்தது.
பிரச்சாரத்தில் குறிப்பாக குடிநீர், சாலை வசதி, பள்ளிக்கூட வசதிகள், மின்சாரம், தெருவிளக்கு, பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் மற்றும் பாசன வசதி போன்ற பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டது. பாடசாலைகளில் மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இப்போது உள்ள பிளக்ஸ் போர்டுகள், பலபிட்டு சுவரொட்டிகள், கொடி தோரணங்கள் எல்லாம் அப்போது இல்லை. எந்தவித பந்தாவும் இல்லாமல் 1962இல் தேர்தல் பிரச்சாரம் நடந்தது. தற்போது தேர்தலில் பணம் பிரதானம் என்ற நிலை உருவாகி விட்டதை நினைத்து நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
1967 தேர்தலில் ஒலிபெருக்கி குழாய் கட்டி, மஞ்சள் – கருப்பு வாடகை கார் என வேட்பாளர் ரோடு வலம் வரும் காட்சியை பார்க்க முடிந்தது. தி.மு.க. மக்களை ஈர்க்கும் முழக்கங்கள், கொடிகள், வண்ண சுவரொட்டிகள், வாக்காளரைக் கவரும் போஸ்டர்கள், மேடைப் பேச்சுகள் என பிரபலமானது. அப்போதுதான் முதன் முதலில் வலுவான கூட்டணியாக தி.மு.க. தலைமையில் அமைந்தது. தி.மு.க. தொண்டன் வெறும் தேநீர், பன் உண்டு இரவும் பகலும் உழைத்த தேர்தல் இது. மிட்டா மிராசுகளை எதிர்த்து போட்டியிட சாதாரண தி.மு.க. தொண்டனுக்கு வாய்ப்பு தேடி வந்தது.
1989/90 வரை தேர்தல் அன்று பணியாற்றும் தோழர்களுக்கு, வேட்பாளர் சார்பில் டீ செலவுக்காக, பூத் செலவிற்கு கொடுக்கும் பணத்தை கூட கிராமத்தில் வாங்க மறுத்ததுடன், அது அநாகரிகம் என்று எண்ணினர். அதுமட்டுமல்லாமல் வேட்பாளருக்கு அவர் போகின்ற கிராமங்களில் வரி வசூலித்து கொடுத்தனர். 1990/91 வரை இந்நிலை இருந்தது. 1996 பொது தேர்தலில் பூத் லெவுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்கின்ற மனநிலை இருந்தது. அதன்பின் வந்த தேர்தல்களில், பொது காரியம், கோவில் கட்டுகிறோம், மடம் கட்ட வேண்டும் என்று நாகரீகமாக பணம் கொடுக்கப்பட்டது.
1999 நாடாளுமன்ற தேர்தலின் போது “இத்தனை பேர் தேர்தல் வேலை பார்க்கின்றார்கள். அவர்களுக்கு ஏதாவது சம்பளம் போட்டு கொடுத்தால் நல்லது” என்று நிர்வாகிகள் கேட்டனர். அது படிப்படியாக மாறி 100 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக போய் இன்று பன்மடங்ககு தேர்தல் செலவு உயர்ந்து விட்டது. 1970 வரை நடைபெற்ற தேர்தலில் சட்டமன்ற வேட்பாளர் கையிலிருந்து வெறும் ரூ.1,000 – 2,000, நாடாளுமன்ற தொகுதிக்கு ரூ.3,000 – 4,000 வரை செலவு செய்திருக்கலாம். இன்று கோடியில் செலவழிக்கிறார்கள். வேட்பாளர் தேர்தல் செலவுகளை ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் அரசாங்கமே ஏற்றுகொள்வதுபோல், இங்கும் அரசே ஏற்று கொள்ள வேண்டுமென்று இந்திரஜித் குப்தா குழு அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், இந்திய அரசுக்கும் வழங்கி சுமார் 10 ஆண்டுகள் ஆகிறது.
50 ஆண்டுக்கு முன்பிருந்த தேர்தலையும், இன்றைக்குள்ள தேர்தலையும் பார்த்தால், அன்று எளிமையாக இருந்தது. இன்று ஓட்டு போட வாக்காளர்களும் பணம் எதிர்பார்க்கிறார்கள். இது பெரிய சீரழிவு.
சாதி, மத, பூகோள எல்லைகளை கடந்து சென்னையைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். தினமணி ஏட்டின் நிறுவனர் ராம்நாத் கோயங்கா வடநாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், திருக்குறள் முனுசாமியை எதிர்த்து திண்டிவனம் நாடாளுமன்றத் தொகுதியில் களம் கண்டார். கோவையை சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடு பெருந்தலைவர் காமராசரை எதிர்த்து திருவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். பெருந்தலைவர் காமராசர் குடியாத்தத்திலும், குளித்தலையில் தலைவர் கலைஞர் அவர்களும், பேராசிரியர் திருச்செங்கோட்டிலும் போட்டியிட்டனர். கேரளாவை சேர்ந்த வி.கே.கிருஷ்ணன்மேனன் பம்பாயில் போட்டியிட்டார். இப்போதெல்லாம் இதை எண்ணி பார்க்க முடியுமா?
வர்ண வாக்குப் பெட்டிகள், சின்னங்கள் அடங்கிய வாக்குச் சீட்டுகள், இன்றைக்கு பொத்தானை அழுத்தக் கூடிய மின்னணு வாக்கு இயந்திரங்கள் என வளர்ச்சியைப் பெற்றாலும் தேர்தல் நடக்கும்பொழுது நியாயமாக நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. 1951-52இல் 173 இலட்சத்து 212 ஆயிரத்து 343 வாக்காளர்கள் இந்தியாவில் இருந்தனர். இன்று அது 4.7 மடங்காக உயர்ந்துள்ளது. 1962 மூன்றாவது பொதுத் தேர்தலில்தான் முறையாக அச்சிட்ட வாக்குச் சீட்டில் விரும்பும் வேட்பாளரின் சின்னத்தில் அம்புக் குறி ரப்பர் முத்திரைப் பதிக்கும் வசதி ஏற்பட்டது. 
இன்றைக்கு 7 அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், 40 மாநிலக் கட்சிகள் உள்ளன. இந்தியாவில் மொத்தம் இதுவரை 2,301 கட்சிகள் இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் கணக்கு. இதில் எத்தனை கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றது என்பது கேள்விக்குறி,. இத்தனை கட்சிகள் போட்டியிட்டு தேர்ந்தெடுக்க சின்னங்கள் கிடைக்குமா என்பது கேள்விக்குறி. மொத்தம் 86 சின்னங்கள் தான் சுயேட்சைக்காக ஒதுக்க முடியும். இத்தனை கட்சிகளுக்கு எப்படி சின்னங்களை ஒதுக்கமுடியும். ஒப்புக்கு சில கட்சிகள் விளம்பரத்திற்காகவும் தேர்தலில் நின்று ஊடக வெளிச்சத்திற்காக கட்சி என்ற பெயரில் பதிவு செய்து தனிநபராக கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு பத்தாண்டுகளும் தேர்தலின் நடைமுறைகள் மாறிக் கொண்டு வருகின்றன. தேர்தலில் சீர்திருத்தம் வேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தகுதியானவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சிந்தனை ஓட்டம் வரவேண்டும். தகுதியான நபர்கள் புறக்கணிக்கப்பட்டு, பணபலம் கொண்டவர்களும், கிரிமினல்களும் அகில இந்திய அளவில் நாடாளுமன்றத்திற்கு சென்று விடுகின்றனர். பழைய தேர்தல் நிகழ்வுகளையும், இன்றைக்குள்ள ஆர்ப்பாட்டமான தேர்தல் நிகழ்வுகளையும் எண்ணிப் பார்க்கும்போது மலைக்க வைப்பது மட்டுமல்லாமல், கவலைப்படவும் வைக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் 910 மில்லியன் வாக்காளர்கள் இந்தியாவில் வாக்களிக்க உள்ளனர் என்றும், உலகத்தின் பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவில் கூட 2012ல் அதிபர் தேர்தலில் 193.7 மில்லியன் வாக்காளர்களே வாக்களித்தனர் என குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, இந்தியாவில் 2009ஆம் ஆண்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களில் 30 சதவீதத்தினர் குற்றவாளிக் கூண்டில் நிற்பவர்கள் என்று வேதனையோடு செய்தியை தெரிவித்துள்ளது.
தேர்தல் திருவிழா அல்ல. நாட்டின் வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்கின்ற மக்களால் மக்களுக்காக ஜனநாயக முறையில் முடிவெடுக்கின்ற முறை தான் தேர்தல் என்று மனதில் நிறுத்த வேண்டும். இன்றைக்கு தேர்தல்களில் எவரும் போட்டியிடலாம் என்ற நிலைப்பாடு. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதில் மக்கள் தவறான புரிதலோடு தீர்ப்பளிப்பதால் மக்கள் விரோத சக்திகளும் ஆட்சிக்கட்டிலுக்கு வந்துவிடுகின்றன. இவையெல்லாம் இந்த அவலப் போக்கை எல்லாம் மாற வேண்டும். இதற்கு ஒரு மாற்றம் தான். மக்கள் தங்களது பிரதிநிதிகளை திரும்ப அழைத்தலாகும்.
விசாரணைக் கைதிகளுக்கு ஓட்டளிக்க விருப்பமா? என்று சிறைத்துறை கேட்கும் பட்சத்தில், விசாரணைக் கைதிகளுக்கு விருப்பம் என்றால் அவர் எந்த தொகுதி, அவருடைய வாக்காளர் அட்டை, எந்த வாக்குச் சாவடியைத் சேர்ந்தவர் என்பதை அறிந்து அதை ஆய்வு செய்தபின் தற்போது அவர் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்சியைச் சேர்ந்த விசாரணைக் கைதி என்றால் வேட்பாளரோ, அல்லது அவரைச் சார்ந்த முகவரோ, வழக்கறிஞரோ அவர் வாக்களிக்கக் கூடிய ஏற்பாடுகளை செய்யலாம்.
என்னதான் திட்டங்களை தீட்டினாலும், சட்டங்கள் இருந்தாலும், சீர்திருத்தங்கள் கொண்டு வந்தாலும், வாக்காளர்களின் விழிப்புணர்வும் ஒத்துழைப்பும் இல்லாமல் ஒரு ஆரோக்கியமான தேர்தலை எதிர்பார்க்க முடியாது. தகுதியே தடை என்பதை புறக்கணித்து பொறுத்தமான, நல்லவர்கள், மக்கள் பிரச்சினைகளில் புரிதல் உள்ளவர்கள் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் உறுப்பினர்களாக செல்ல வேண்டும். தேர்தல்களில் பணம் விளையாடுவதும், வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் எதிர்பார்ப்பதும், கிரிமினல்கள் சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் நிலை ஏற்படும். இந்நிலை காலப்போக்கில் நமது ஜனநாயக அமைப்பையே பலவீனப்படுத்தி விடும். இந்த சீரழிவை தடுக்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஊர் கூடி தேர் இழுத்தால் தான் தேர் நகரும்!

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...