Monday, April 1, 2019

பாலச்சந்தர் இயக்கிய தண்ணீர் தண்ணீர் திரைப்படம் எடுத்த மஞ்ச நாயக்கன்பட்டியும் #தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தல் களப்பணியும்

பாலச்சந்தர் இயக்கிய தண்ணீர் தண்ணீர் திரைப்படம் எடுத்த மஞ்ச நாயக்கன்பட்டியும் #தூத்துக்குடி
நாடாளுமன்றத் தேர்தல் களப்பணியும்————————————————



இன்றைக்கு மாலையில் நாடாளுமன்றத் தேர்தலில் #தூத்துக்குடியின் கழக வேட்பாளர் கவிஞர் கனிமொழியை ஆதரித்து குமாரகிரி, புதூர், குளத்துள்ளாப்பட்டி, பிதப்புரம், கீழஈரால், துரைசாமிபுரம்,மஞ்சநாயகன்பட்டிஆகிய கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டேன். 
பாலச்சந்தர் இயக்கிய தண்ணீர் தண்ணீர் திரைப்படம் எடுத்த மஞ்ச நாயக்கன்பட்டி சென்றோம். கடந்த 84 லிருந்து தேர்தல் பிரசாரத்திற்கு வந்த நினைவுகள் வந்து சென்றன. பாலச்சந்தர், கோமல் சுவாமிநாதன், அறந்தை நாராயணன் போன்றவர்களோடு எண்பதுகளின் துவக்கத்தில் இந்த கிராமத்திற்கு வந்து சென்ற நினைவுகள் உள்ளன. அப்போது இலங்கை தமிழர் பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்த காலகட்டம் . ‘’தண்ணீர் தண்ணீர்’’படமும் வந்தது.நானும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும் சென்னை தேவி திரையரங்கில் இந்த திரைப்படத்தை பார்த்த நினைவு.பல ஆண்டுகளுக்குப் பிறகு மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்திற்கு சென்ற போது இந்த நினைவுகள் எல்லாம் வந்தன. இயக்குனர் பாலச்சந்தர் பல கிராமங்களை பார்த்துவிட்டு இந்த மஞ்ச நாயக்கன்பட்டி கிராமம் பொருத்தமானது என்று சொன்னது நினைவில் உள்ளது. வானம் பார்த்த கரிசல் பூமியினுடைய கஷ்டங்களையும் ரணங்களையும் தவித்த வாய்க்கு தண்ணீருக்கு பட்ட கஷ்டங்களை அந்த திரைப்படத்தில் சொன்ன சோகங்களையெல்லாம் இன்றைக்கு மனதில் வந்து சென்றது. அதேபோல கோவில்பட்டி தாலுகா ஆபீசில் அந்த கிராமத்து மக்கள் கொடுத்த மனுக்கள் எல்லாம் அடுத்த ஐந்தாவது நிமிடம் குப்பைத் தொட்டிக்கு சென்ற காட்சிகள் எல்லாம் மனதை விட்டு அகலாது. அப்படிப்பட்ட படத்தை எடுத்த மஞ்ச நாயக்கன்பட்டி இன்றைக்கும் தண்ணீர் இல்லாமல் இருக்கின்றது. இதற்கு நதிநீர் இணைப்பு ஒன்றே வழி. இதற்காக உச்ச நீதிமன்ற வரை 30 ஆண்டுகள் போராடி 2012இல் தீர்ப்பை பெற்றேன். நிலத்தடி நீரும் குறைந்துவிட்டது. விவசாயமும் பயனளிக்கவில்லை. இன்றைக்கும் அந்த மக்கள் அப்படியே தான் இருக்கின்றார்கள். இதில் மேக் இன் இந்தியா இந்தியா முன்னேறுகிறது போன்ற கோஷங்களுக்கும் வெற்றுச் சொற்களுக்கும் மஞ்ச நாயக்கன்பட்டி ஒரு அடையாளமாக இருக்கின்றது. அந்த ஊர் அடங்கிய கோவில்பட்டி தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டபோது பல உறுதி மொழிகளை அளித்தேன். ஆனால் எனக்கான வெற்றிகள் அங்கே கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு 48 ஆண்டு காலமாக இந்த கிராமத்தினுடைய தொடர்புகள் எனக்கு உண்டு. இன்றைக்கு போனபோது இந்த சிந்தனைகள் எல்லாம் மேலோட்டமாக மனதில் எழுந்தன. அதேபோல 2000 ஆண்டில் என்னிடம் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி கேட்டார்கள். வாங்கிக் கொடுத்தேன். அதேபோல அன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வைகோ அவர்கள் கலையரங்கம் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார். 




இன்றைக்கும்  இந்த கிராமங்கள் முன்னேறாமல் அப்படியே இருப்பதை பார்க்கும்போது என்ன சொல்வது என்று என்பது புரியவில்லை. ரௌத்திரம் பழகு என்று சொன்ன பாரதி பிறந்த எட்டயபுரத்தின் அருகே உள்ள கிராமம் தான் இது.

உடன் முன்னாள் அமைச்சர் ச.தங்கவேலு, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எல். இராதாகிருஷ்ணன், ராஜகுரு, கழக பொதுக்குழு உறுப்பினர் ப.மு.பாண்டியன், அண்ணாதுரை, டி.ஆர். குமார், பவுன்ராஜ், மதிமுக ஒன்றியச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட தேர்தல் பணி நிர்வாகிகளும், கழகத் தோழர்களும் உடனிருந்தனர்.

#KSRpostings
#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
31-03-2019

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...