விதியே விதியே தமிழச் சாதியை என்செய
நினைத்தாய் எனக்கு உரையாயோ?
சார்வினுக்கெல்லாம் தகத்தக மாறித்
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றுமோர் நிலையாய் இருந்து நின்னருளால்
வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடுவாயோ
தோற்றமும் புறத்தொழிலுமே காத்துமற்று
உள்ளுறு தர்மமும் உண்மையும் மாறி
சிதைவுற்றழியும் பொருள்களில் சேர்ப்பையோ
அழியாக்கடலோ? அணிமலர் தடமோ?
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?
கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?
நாட்பட நாட்பட நாற்றமும் சேறும் பாசியும்
புதைந்து பயநீர் இலதாய் நோய்க்
களமாகி அழிக எனும் நோக்கமோ?
விதியே விதியே தமிழச் சாதியை
எவ்வகை விதித்தாய் என்பதன் மெய்
எனக்கு உணர்த்து வாய் மன்னோ?
- பாரதி.
No comments:
Post a Comment