Monday, July 5, 2021

தென்பெண்ணை_சிக்கல்_2 குறுக்கே கர்நாடகம் அணை கட்ட எல்லாம் நம்ம தமிழ்நாட்டு பிரமுகர்கள்தான்.

#தென்பெண்ணை_சிக்கல்_2
குறுக்கே கர்நாடகம் அணை கட்ட எல்லாம் நம்ம தமிழ்நாட்டு பிரமுகர்கள்தான்.
———————————————————-

தென்பெண்ணை ஆற்றுக்கு குறுக்கே கர்நாடகம் அணை கட்ட கம்பி, சல்லி, மணல், சிமெண்ட், கையாள், வேலையாள் னு அனுப்பிய யாரு….?

எல்லாம் நம்ம தமிழ்நாட்டு பிரமுகர்கள்தான்.

தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யறமே?
வாழ்க இந்த பெருமக்கள்…

சமீபத்தில், பதிவிட்ட தென்பெண்ணை ஆறு பிரச்சனை குறித்து பலர் என்னை தொடர்புகொண்டு பேசினார்கள். இன்னும் விரிவாக சற்று கூறுங்கள் என கேட்டு கொண்டதன் காரணமாக இந்தப் பதிவு.
கர்நாடகத்தில் 112, தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் 180, திருவண்ணாமலை மாவட்டத்தில் 34, விழுப்புரம்,  கடலூர் மாவட்டங்களில் 106 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து தென்பெண்ணை ஆறு வங்கக்கடலில் சேருகின்றது. 

இதன் முக்கிய துணை நதி மார்க்கண்டேய நதி ஆகும். கர்நாடக வனப் பகுதியான எல்லைப்பகுதியில் முத்தையாள் மதகு பகுதியிலிருந்து இந்த நீர் வெளிவந்து தமிழக எல்லையைச் சேருகின்றது.
கேஜிஎஃப்,பங்காருபேட்டை வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுழைகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தீர்த்தம்பாலனபள்ளி, சிக்கிரிப்பள்ளி வழியாக மாரசநதிரம் தடுப்பணைக்கு வருகின்றது. அங்கிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் எண்ணெய் கொல் புதூர் என்னும் பகுதியில் தென்பெண்ணை ஆற்றோடு சேருகின்றது.
மேலும் இந்தக் கால்வாயின் வாயிலாக கிருஷ்ணகிரி படேல் லாவ் ஏரிக்கு இந்த நீர் வந்து பர்கூர் பகுதிகளில் பாசனத்துக்குப் பயன்படுகின்றது.

ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தென்பெண்ணை நீர் ஆதாரமாக இருக்கின்றது. தொடர்ந்து கர்நாடகம் இந்த  அணையில் தடுப்பணைகள் கட்டுவதால், நீர்வரத்து குறைந்து கொண்டே வந்து கொண்டிருந்தது.  
இப்பொழுது அதையும் தடுக்கக்கூடிய அளவிற்கு இதன் நடுவில் அணை கட்டுவது பெரும் பாதிப்பைத் தமிழகத்திற்கு ஏற்படுத்தும்.
இந்த அணை கர்நாடக யார்கோள் பகுதியில் கட்டப்பட்ட அணை. கிட்டத்தட்ட 1410 அடி அளவு கொண்டது.. உயரம் 164 அடி ஆகும்.
இதுபோன்று அணை கட்டினால் தமிழகத்திற்கு எப்படி நீர்வரத்து வரும் என்பதுதான் நம்முடைய கேள்வி.  

ஏற்கனவே பாலாறிலும் 29 (குப்பம் முதல் வேலூர் வரை)தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது.  இதனால் சாத்தனூர் அணைக்கு நீர் வருவதில் சிக்கலை உருவாக்கும்.

ஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்தேக்கம், கிருட்டிணகிரி அணை, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ள நெடுங்கல் அணை, திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை, சாத்தனூர் பிக்கப் அணை, விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோயிலூர் அணை, எல்லீஸ் அணை, தளவானூர் தடுப்பணை, சொர்ணாவூர் அணை ஆகியவை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்த்தேக்க கட்டமைப்புகள் ஆகும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அணை கட்டுவதற்கு பொருட்களை விநியோகிக்க தமிழகத்திலிருந்து தொழிலதிபர்கள் போட்டி போட்டுக் கொண்டு செல்வதுதான் வேதனையான விடயம். இந்த அணையைக் கட்டுவதற்கு தமிழகத்திலுள்ள தொழிலதிபர்கள் துணைபோனால் தமிழகத்திற்கு தானே பாதகம் என்று எண்ணிப் பார்க்காமல் இருக்கின்றனர். 
என்ன செய்ய? எல்லாம் பணம், சுயநலம். இப்படியான போக்கு. 

இப்படி நதிநீர் ஆதாரங்களில் தமிழகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டால் என்ன செய்வது. காவிரியும் முல்லைப் பெரியாறும், அதேபோல் கொங்கு மண்டலத்தில் ஆழியாறு....... பாண்டியாறு.......... என பதினாறு நதி நீர் பிரச்சினைகளுக்கு இன்றும் தீர்வு எட்டாமல் கடந்த 40 ஆண்டுகளாக தமிழகம் போராடிக் கொண்டு வந்தாலும், அதை சரியாக எடுத்துச் செல்லக்கூடிய அளவில் கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் இல்லை என்பதுதான் ஒரு வருத்தமான பகுதி.

அதேபோல கர்நாடகமும் ஆந்திரமும் விருப்பத்திற்கேற்ப பாலாறிலும், தென்பெண்ணை ஆறிலும் காவிரி தடுப்பணைகளோ, அணைகளோ கட்ட, ஆர்வம் செலுத்துகின்றது.

ஆனால், நமது காவிரியில் வெள்ள காலத்தில் வரும் நீரை தடுப்பதற்காக 40 தடுப்பணைகள் கட்ட கூட சரியான திட்டங்கள் இல்லை என்பதுதான் வருத்தமான விடயம்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
05.07.2021.
#ksrposts


No comments:

Post a Comment