Sunday, July 25, 2021

#கச்சத்தீவைப்_பற்றி_வெளிவராத_செய்திகள் தலைவர் கலைஞர், அமிர்தலிங்கம், நல்லசிவம்,ஜனா கிருஷ்ணமூர்த்தி

#கச்சத்தீவைப்_பற்றி_வெளிவராத_செய்திகள்
தலைவர் கலைஞர், அமிர்தலிங்கம், நல்லசிவம்,ஜனா கிருஷ்ணமூர்த்தி
——————————————————-
இலங்கையில், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக இருந்த  மறைந்த அண்ணன் அ.அமிர்தலிங்கம் அவர்கள் தன்னுடைய மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வர 17.12.1974ல் திட்டமிட்டிருந்தார். அப்போது அவரை இந்தியாவுக்குச் செல்ல விடாமல் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா அரசு தடுத்து அவரது பாஸ்போர்டையும் முடக்கியது. இந்த நிலையில் அமிர்தலிங்கம் அவர்கள் நண்பர் இரா.ஜனார்த்தனத்தை (எம்.எல்.சி) கச்சதீவுக்கு வந்து தன்னை சந்திக்க வரும் படி கூறினார்.  கச்சதீவு அன்றைய இந்தியாவின் நிலபகுதியாக இருந்தது. அமிர்தலிங்கம் ரகசியமாக படகு மூலமாக கச்சதீவுக்கு திட்டமிட்டவாறு சென்றடைந்தார். அதே குறிபிட்ட நாளில் சென்னையில் இருந்து புறப்பட்டு ஜனார்த்தனமும் கச்சதீவுக்கு சென்றடைந்து அமிரை சந்தித்தார். ஜனார்த்தனன் எம்.ஜி.ஆர்க்கு நெருக்கமான அ.தி.மு.க பிரமுகர்.

அமிர்தலிங்கம் தன்னோடு எடுத்துவந்த பல கடிதங்களை ஜனார்த்தனனிடம் ஒப்படைத்து விட்டு; இலங்கைத் தமிழர் பிரச்சனையை பற்றி தமிழக தலைவர்களுக்கு தனித் தனியாக கடிதம் இங்கே கொடுத்துள்ளேன். இந்த கடிதங்களை தி.மு.க தலைவர் முதல்வர் கலைஞர், பெருந்தலைவர் காமராஜர், மா.பொ.சி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் எம்.கல்யாணசுந்தரம்(சி.பி.ஐ), பி.ராமமூர்த்தி(சி.பி.எம்), அ.தி.மு.க பொதுச்செயளாலர் எம்.ஜி.ஆர், மத்திய அமைச்சர் சி.சுப்ரமணியம், பார்வோர்டு பிளாக் தலைவர் மூக்கையாதேவர், முஸ்லீம் லீக் தலைவர் அப்துல் சமது, ஜனசங்கத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி  போன்ற தமிழக தலைவர்களுக்கு முறையாக முகவரியிட்டு அந்த கடிதங்களை உடையவர்களுக்கு சேர்க்கும் படி சொல்லிவிட்டு அமிர்தலிங்கம் இலங்கையின்  அககரைக்கு சென்றார்.
 
அதன் பின்புதான் ஆயுதபோராட்டத்தை இலங்கையில் உள்ள இலைஞர்கள் (பிராபகரன்)முன்னெடுத்தனர். இது வட்டுகோட்டை தீர்மானத்தை ஒட்டிய காலம். 

ஜனார்த்தனன் சென்னை திரும்பி அனைத்து கட்சி தலைவர்களை சந்தித்து அமிர்தலிங்கத்தின் கடிதங்ளை சொன்ன படி வழங்கினார். இந்த கடிதத்தில் இலங்கையில் தமிழர்கள் படும் பாட்டை அமிர்தலிங்கம் எழுதியது அந்த காலத்தில் முக்கியமான செய்தியாக இருந்தது. ஆனால் எப்படி இந்த கடிதங்கள் வந்து சேர்ந்தன என்பது குறித்தான நிகழ்வுகள் இது வரை வெளிவரவில்லை. 

அமிர்தலிங்கம் அவர்களை 1984 காலக்கட்டங்களில் அண்ணன் பழ நெடுமாறன் மதுரைக்கு அழைத்த ஒரு நிகழ்ச்சிக்கு வைகை எக்ஸ்பிரசில் அவரை நான அழைத்துக்கொண்டு சென்றபோது என்னிடம் கச்சதீவுக்கு வந்து சென்ற இந்த நிகழ்வுகளை எல்லம் குறிப்பிட்டார். 

இலங்கை தமிழரசு கட்சித் தலைவர் மாவை.சேனாதிராஜா சமீபத்தில் அனுப்பி வைத்த கதிர் பாலசுந்தரம் எழுதிய அமிர்தலிங்கம் சகாப்தம் என்ற நூலினை வாசித்த போது (பக்கம்-130) அமிர்தலிங்கம் சொன்ன அந்த தகவல் நினைவில் எட்டியது.

கச்சதீவை இந்திய அரசு இலங்கைக்கு வழங்கக்கூடாது என்று தமிழகம் மட்டும் அல்ல ஈழத்தமிழகம் அதே கருத்தை தான் அப்போது தெரிவித்தார்கள். அமிர்தலிங்கமும் அதே கருத்தை அப்போது கொண்டிருந்தார். 

கச்சதீவை இலங்கைக்கு வழங்ககூடாது என்று கோட்டையில் அன்றைய முதல்வர் தலைவர் கலைஞர் அனைத்து கட்சி கூட்டத்தையும் நடத்தினார். தமிழ்நாடு முழுவதும் கண்டன கூட்டங்களையும் தி.மு.க அன்று நடத்தியது உண்டு. 
Socialist Party சட்டமன்ற உறுப்பினர் நல்லசிவம் ராமேஸ்வரம் சென்று போராட்டம் நடத்தியது.ஜன சங்க கட்சி தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதி மன்றத்தில்  தமிழ் படைப்பாளி நா.பார்த்தசாரதி மற்றும் என்னிடமும் கச்சத்தீவு குறித்தான தகவுகளை ஜனாப் தனது வழக்கு விஷயமாக பெற்றுக்கொண்டு சென்றதும் உண்டு. 

ஜனா கிருஷ்ணமூர்த்தி மதுரையில் வழக்கறிஞராக இருந்தவர். ஜனா கிருஷ்ணமூர்த்தி அவர்களை சந்திக்கும் போது கச்சத்தீவு மட்டும் அல்ல அமிர்தலிங்கம் அனுப்பிய கடிதத்தைப் பற்றியும் என்னிடம் பேசியதுண்டு. ஜனா ஒருமுறை என்னிடம் சொன்னார், தமிழகத்தில் ஜனசங்கத்தின் வழக்கறிஞர் டாக்டர் வி.கே.ஜான் முதன்முதலாக தலைவராக 03.10.1958ல் பொறுப்பேற்றார் என்றார். இவர் ஒரு கிருஸ்த்துவர் பாரிஸ்டர் தமிழக மேலவை உறுப்பினரும் கூட, ஜன சங்க நிறுவனர் சியாமாபிரசாத் முகர்ஜியின் நெருங்கிய நண்பர் என்று சொன்ன போது என்னால் நம்ப இயலவில்லை ஆனால் உண்மை அது தான்.   ஜனசங்கம்  Good Friday அன்று  தொடங்கப்பட்டது.தலைவராக பொறுப்பேற்ற ஜான் இலங்கைக்கு சென்றார். அங்கு தமிழர்களுடைய தலைவர் செல்வாவை சந்தித்தார். தமிழர்களுடைய நிலமைகள், சிக்கல்களை குறித்து சியாமாபிரசாத் முகர்ஜியிடம் கூறினார் என்று ஜனா கிருஷ்ணமூர்த்தி என்னிடம் குறிப்பிட்டார்.இவை கவனத்திற்க்கு வந்த செய்திகள்…..
அவ்வளதான்……

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

#KSRPost
25-7-2021.


No comments:

Post a Comment