Sunday, October 25, 2015

அணு சக்தி - கூடங்குளம் அணு உலை | Atomic Energy | Kudankulam Nuclear Power Plant.








மானுட சக்திக்கு எதிராக அணுசக்தியைப் பயன்படுத்துவது நல்லதல்ல என்ற நல்வினையை யாரும் புரிந்துகொள்வதில்லை. இதனால் என்னென்ன பிரச்சனைகலும், எதிர்வினைகளும் இருக்கின்றன என்று எடுத்துச் சொன்னாலும், அதுபற்றி ஆய்வுகள் ஏதும் செய்யாமல் உடனே குதர்க்க வாதம் தான் வைக்கின்றார்கள் சிலர்.

1985லிருந்து இதைக்குறித்து, தொடர்ந்து படித்துவருகிறேன். கூடங்குளத்தில் 1988ல் அணு உலை அமைக்கப்போகிறார்கள் என்ற உடன் , அப்போது நெல்லைமாவட்ட தி.மு.க.வின் செயலாளராக இருந்த சகோதரர் டி.ஏ.கே.இலக்குமணனுடன்
அந்த இடத்திற்கேச் சென்று, அந்த இடத்தைப் பார்வையிட்டோம்.

பின்பு, சென்னையிலிருந்து பல பத்திரிக்கையாளர்களுடனும் 1988ல் அங்கு சென்றுள்ளேன். அப்போதெல்லாம் எங்களை அவ்வூர்மக்கள் அணுசக்தி தொழிற்சாலை வந்தால் எங்களுக்கு வேலை கிடைக்கும், பேச்சிப்பாறையிலிருந்து இந்தப்பகுதிக்கு தண்ணீர் வரும். எதற்காக நீங்கள் இந்த அணுஆலை வரக்கூடாது என்று தடுக்கிறீர்கள்? உங்கள் வேலையைப்பார்த்துவிட்டுப் போங்கள் என்று எங்களை விரட்டாத குறையாகச் சொன்னதுண்டு.

அக்காலகட்டத்தில் ராஜீவ்காந்தி, நரசிம்மராவ் பிரதமர்களாக பதவியேற்றிருந்தார்கள் அணு உலை துவங்குவதற்கான நில ஆர்ஜிதப் பணிகள் குறித்த விவாதங்கள் எழுந்த நேரம் அது. ஒன்றுபட்ட சோவியத் யூனியன் பிளவு ஏற்பட்டபின் கூடங்குளம் அணு உலை அமைப்பதின் பணிகளில் தொய்வு ஏற்பட்டன.

இந்த ஆலை வரக்கூடாது என்ற எண்ணத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்முதலாக இரண்டுமுறை ரிட் மனுக்களையும் தாக்கல் செய்தேன். 2012ல் தாக்கல் செய்த மனுவில் விசாரணை நடந்து தீர்ப்பும் வெளியாகி, உச்சநீதிமன்றம் வரை இவ்வழக்கு சென்றது. இவையெல்லாம் கடந்தகால வரலாறுகள்.

ஆனால், இன்னும் அணு உலைகளால், கதிர்வீச்சுகளால் ஏற்படும் கேடுகளை ஏன் ஏற்க மறுக்கிறோம்? அதைச் சரிசெய்ய என்ன செய்யவேண்டுமென்று நினைக்க மறுக்கிறோம். அதில் உள்ள நியாயங்களை சிந்திக்க மறுக்கின்றோம். அணு சக்தி எதிர்ப்பாளர்கள் சொல்கின்ற கருத்துகளையும் ஏற்கமறுக்கின்றோம் என்றால் என்ன செய்வது?

கூடங்குளம் அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தலைவர் சகோதரர் சுப. உதயகுமார் தலைமையில், தியாக உணர்வோடு நீண்ட போராட்டங்கள் நடத்தியும், அதற்கான காரண காரியங்களையும் அவர் பல்நோக்குடன் எடுத்து வைத்தும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமலும், அவர்கள் மீதே வழக்குத் தொடுத்துவருவதும் கொடுமையிலும் கொடுமை.

கடந்த 24-10-2015 தமிழ் இந்துவில் வெளியிட்ட கட்டுரையும், மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் பாலமுருகன் பதிந்திருக்கும் முகநூல் பதிவும் அவசியம் படிக்கவேண்டியவை.

********************************************************************

26 பேர் மரணத்தின் மர்மம் என்ன?
தி இந்து | அக்டோபர் 24, 2015 | ந. வினோத் குமார்|
இந்திய அணுசக்தித் துறை சார்ந்த பல கேள்விகளுக்கு விடை கிடைக்காது. உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்புடைய விஷயம், அதனால் ராணுவ ரகசியம் என்பதே பெரும்பாலும் பதிலாகக் கிடைக்கும். அணுசக்தியைப் பொறுத்தவரை அரசு, ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களும் மவுனம் காப்பது மரபாகிவிட்டது.

இப்படி மவுனங்களும் மர்மங்களும் நிரம்பிய அணுசக்தித் துறையில் பணியாற்றிய 26 பேரின் மரணம், சமீபத்தில் மிகப் பெரிய கேள்வியை எழுப்பியிருக்கிறது!

இயற்கைக்கு மாறாக

‘மரணம் என்பது இயற்கையான ஒன்றுதானே. அதில் என்ன பிரச்சினை?' என்ற கேள்வி எழலாம். ஆனால், அந்த 26 பேரின் மரணமும் இயற்கைக்கு மாறான முறையில் நடந்திருப்பதுதான், இப்போதைய விவாதத்துக்கான காரணம்.

ஹரியாணாவைச் சேர்ந்த ராகுல் ஷெராவத் என்ற ஆர்.டி.ஐ. செயல்பாட்டாளர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தாண்டு செப்டம்பர் 21-ம் தேதி பெற்ற தகவலின்படி, 2009 முதல் 2013-ம் ஆண்டுவரை அணுசக்தித் துறையில் 11 பேர் இயற்கைக்கு மாறாக மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இது அரசுத் தகவல் சொல்லும் கணக்கு. இந்தத் தகவலின் கீழ் வராமல் மேலும் 15 அணுசக்தி விஞ்ஞானிகள் இயற்கைக்கு மாறான முறையில் மரணமடைந்துள்ளனர்.

முதல் மர்மம்

கடந்த சில ஆண்டுகளாக நிலவிவரும் நிலை என்று இதை கருத முடியாது. காரணம், ‘இந்திய அணுசக்தித் துறையின் தந்தை' என்று அழைக்கப்படுகிற ஹோமி ஜஹாங்கிர் பாபாதான் இப்படி இயற்கைக்கு மாறான முறையில் மரணித்த முதல் அணு விஞ்ஞானி.

1966-ம் ஆண்டு ‘சக்தி வாய்ந்த அணுஆயுதம் ஒன்றைக் குறைந்த காலத்தில் இந்தியாவால் தயாரிக்க முடியும்' என்று ஒரு கூட்டத்தில் ஹோமி பாபா பேசினார். அடுத்த சில நாட்களில் விமான விபத்து ஒன்றில் அவர் மரணமடைந்ததாகக் கூறப்பட்டது.

எங்கே விமானம்?

அவர் சென்ற விமானம் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மான்ட் பிளாங்க் என்ற பகுதியில் மோதி விழுந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அங்கு விமானத்தின் சிதறிய பாகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்டது. அநேகமாக இது அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் வேலையாக இருக்கலாம் என்று இன்றுவரை நம்பப்பட்டுவருகிறது. ஆக, அணு விஞ்ஞானிகள் இயற்கைக்கு மாறாக இறப்பது புதிதல்ல. கடந்த 50 ஆண்டுகளாகவே இந்த நிலை நீடித்து வருகிறது.

இஸ்ரோவிலும்...

இதுகுறித்து அமெரிக்காவில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக அணுசக்தித் துறையில் ஆய்வு மேற்கொண்டுவரும் ஆய்வாளர் எம்.வி.ரமணாவிடம் கேட்டோம்.

"இந்த இறப்புகள் குறித்து இன்னும் விசாரிக்கப்படவில்லை. எனவே, எந்த ஒரு சாட்சியமும் இல்லாமல் யார் மீதும் குற்றஞ்சாட்டிவிட முடியாது. ஆனால், இந்த மாதிரியான இறப்புகள் அணுசக்தித் துறையில் மட்டும்தான் ஏற்படுகிறதா என்பதைக் கவனித்தாக வேண்டும்" என்றார்.

இவருடைய கூற்று முற்றிலும் சரி. கடந்த 15 ஆண்டுகளாக இஸ்ரோ அமைப்பிலும் 684 பேர் இயற்கைக்கு மாறான முறையில் இறந்திருக்கிறார்கள். அதாவது, ஓர் ஆண்டுக்கு 45 இறப்புகள் என்ற கணக்கில் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

பிரதமருக்குக் கடிதம்

ரமணா மேலும் தொடர்ந்தார். "சில மாதங்களுக்கு முன்பு ‘பாபா அணு ஆராய்ச்சிக் கழக'த்தை (BARC) சேர்ந்த ஊழியர்கள், ‘பார்க்' அமைப்பின் நிர்வாகத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள்.

அங்கு நிலவிவரும் அதிகாரப் போட்டி, ஊழியர்களைத் தரக்குறைவாக நடத்துதல், பதவிஉயர்வுகளில் காட்டப்படும் வேறுபாடுகள் போன்ற பிரச்சினைகள்தான், இவ்வாறு அந்த ஊழியர்கள் கடிதம் எழுதக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

இதுபோன்ற பிரச்சினைகள் எல்லா அறிவியல் அமைப்புகளிலும் காணக்கூடியவைதான். ஆனால் குறிப்பாக ஓர் ஊழியர், ஒரு பிரச்சினையை அந்தக் கடிதத்தில் சொல்லியிருந்தார்.

கடலில் அணுக்கழிவு?

அது, அணுவை மறுசுழற்சி செய்யும் உலைகளிலிருந்து வெளிவரும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலுள்ள கதிரியக்க அணுக்கழிவுகளை நேரடியாகக் கடலில் விட வேண்டும் என்று உயரதிகாரி தன்னை நிர்பந்திப்பதாக அந்த ஊழியர் கூறியிருந்தார். இது உண்மை என்றால், அது குறித்து நாம் கவலைப்பட்டே ஆக வேண்டும்.

இதுபோன்ற உயரதிகாரிகள் தங்களுக்குக் கீழ் உள்ள பணியாளர்களைத் தரக்குறைவாக நடத்தினால், அந்தப் பணியாளர்கள் அணுக்கழிவுகளை நேரடியாகக் கடலில் கொட்டக்கூடாது என்பது போன்ற விதிகளை மீறலாம்.

ஆனால், இந்தப் பிரச்சினைகள் குறித்து அணுசக்தித் துறை ஏன் இன்னும் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பது உங்களைப் போலவே எனக்கும் தெரியவில்லை" என்றார்.

ஆர்வம் குறைவு

இதுபோன்ற பிரச்சினைகள் வருங்கால அணுசக்தி விஞ்ஞானிகளை எப்படிப் பாதிக்கும் என்று அவரிடம் கேட்டதற்கு, "1940 மற்றும் 1950-களில் இருந்ததைப் போன்ற சவால்களோ, தீர்க்க முடியாத பிரச்சினைகளோ அணுசக்தித் துறையில் இன்றைக்கு எதுவும் இல்லை. எனவே, இந்தத் துறையில் இளைஞர்களின் ஆர்வம் குறைந்துகொண்டே வருகிறது. அதனால் மேற்கண்ட பிரச்சினையால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது" என்றார்.

இந்தப் பிரச்சினை குறித்து அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.கோபாலகிருஷ்ணன் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இந்தத் துறையில் பலர் பணியாற்றுகின்றனர். அவர்களில் சிலர் இறந்துபோகின்றனர். இதற்கு மேல் அது பற்றி எந்தக் கருத்தும் எனக்கு இல்லை" என்கிறார். அதேநேரம் அரசும், இந்தப் பிரச்சினை பற்றி எந்தக் கருத்தும் இல்லை என்று இருந்துவிட முடியுமா?

யார்... எப்படி இறந்தார்கள்?

இயற்கைக்கு மாறான முறையில் இறந்த சிலரின் விவரங்கள் இங்கே. இவர்களில் பெரும்பாலோர், தேசப் பாதுகாப்பு தொடர்பான முக்கியத் திட்டங்களில் ஈடுபட்டவர்கள். அப்படியென்றால், அந்தப் பாதுகாப்பு ரகசியங்களைத் தெரிந்துகொள்வதற்காகத்தான், இவர்கள் கொல்லப்பட்டார்களா? இந்தக் கொலைகளுக்குக் காரணம் யார்?

பெரும்பாலான வழக்குகளில் போதிய சாட்சியங்கள் எதுவும் கிடைக்காதபட்சத்தில், அந்த மரணங்கள் தற்கொலையாக மாற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

1) ஹோமி பாபா (1966) - விமான விபத்து

2) அவ்தேஷ் சந்திரா (பார்க், 2000) - தற்கொலை

3) டாலியா நாயக் (எஸ்.ஐ.என்.பி., 2005) - விஷம் குடித்துத் தற்கொலை

4) ஜஸ்வந்த் ராவ் (இந்தியன் ரேர் எர்த், 2008) - தற்கொலை

5) லோகநாதன் மகாலிங்கம் (கைகா, 2009) - ஆற்றில் விழுந்து தற்கொலை

6) உமங் சிங் (பார்க், 2009) - தீ விபத்து

7) பார்த்தா பிரதிம்பாக் (பார்க், 2009) - தீ விபத்து

8) திருமலா பிரசாத் தென்காசி (ராஜா ராமண்ணா சென்டர் ஃபார் அட்வான்ஸ்டு டெக்னாலஜி, 2009) - தற்கொலை

9) எம்.ஐயர் (பார்க், 2010) - தற்கொலை

10) அஷுதோஷ் ஷர்மா (பார்க், 2010) - தூக்கிட்டுத் தற்கொலை

11) செளமிக் சவுத்ரி (பார்க் - 2010) - தூக்கிட்டுத் தற்கொலை

12) அக்ஷய் பி. சவான் (பார்க் - 2010) - மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை

13) சுபாஷ் சோனவானே (பார்க் - 2010) - தற்கொலை

14) உமா ராவ் (பார்க், 2011) - தற்கொலை

15) முகமது முஸ்தபா (கல்பாக்கம், 2012) - தற்கொலை

16) கே.கே.ஜோஷி (ஐ.என்.எஸ். அரிஹந்த், 2013) - தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை

17) அபிஷ் ஷிவம் (ஐ.என்.எஸ். அரிஹந்த், 2013) - தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை

18) ரவி மூல் (என்.சி.பி.எல்.) - கொலை

19) டைட்டஸ் பால் (பார்க்) - தூக்கிட்டுத் தற்கொலை

20) ஜி.கே. குமரவேல் - விமான விபத்து

21) பல்தேவ் சிங் - தற்கொலை

**************************************************************************
கூடங்குளம் அணு சக்தி உலை-சட்டமீறலின் சாட்சியம்
-பால முருகன்.

கூடங்குளம் அணு சக்தி உலை (KKNPP), ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 6 அணு உலைகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது. பத்திரிகைச் செய்திகளிலிருந்து இதனுடன் இன்னும் இரண்டு உலைகளும் சேர்த்து மொத்தம் 8 அணு உலைகள் நிர்மாணிக்கப் படலாம் எனத் தெரிகிறது. தற்போது, உலை எண் 1 மற்றும் 2 ஆகியவை கடலிலிருந்து 300 மீட்டர் தொலைவிலேயே கட்டப்பட்டுள்ளன.
கூடங்குளம் அணு சக்தி உலை (KKNPP), இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான, இந்திய அணு சக்திக் கழகத்தின் (Nuclear Power Corporation of India -NPCIL) ஒரு தொழில் சார்ந்த மின் உற்பத்தி நடவடிக்கையாகும். NPCIL, கம்பெனி சட்டத்தின் கீழ் வரும் ஒரு கம்பெனியாகும். இந்த நிறுவனத்தின் குறிக்கோள்களில், வணிக அடிப்படையில் மின் உற்பத்தி செய்வதும் அடங்கும்.

அணு சக்தியைப் பற்றி ஒரு சிறு பின்விவரம்
அணு உலைக்கான அடிப்படை எரிபொருள் யுரேனியம்-235 ஆகும். இது மெட்டல் குழாய்களில், செராமிக் மாத்திரைகளில் வைக்கப் பட்டிருக்கும். இந்த எரிபொருள் குழாய்கள் பயன்படுத்தப்படுவதற்கு முன், சிறிதளவே கதிரியக்கம் கொண்டிருக்கும் என்பதால், அவற்றைக் கையாள்வதற்கு பெரிதாக சிறப்புக் கவசம் எதுவும் தேவையில்லை. அணுக்கரு வினையின் போது, அணுப்பிளவு ஏற்படுகிறது. அதாவது, யுரேனியம் அணு, இரண்டு மூன்று நியூட்ரானாகப் பிளந்து, சிறிதளவு வெப்பத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த நியூட்ரான்கள் மீண்டும் மற்ற அணுக்களின் மீது மோதி, அவற்றைப் பிளக்கச் செய்கின்றன. இப்படியாக தொடர் வினையின் (சங்கிலி வினையின்) மூலம், ஏராளமான வெப்பம் வெளியிடப்படுகிறது. இந்த வெப்பம்தான், அணு உலையில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது.
இந்த வினையின் கழிவாக அதிகக் கதிரியக்கம் கொண்ட யுரேனியம் உருவாகிறது. இந்தப் பயன்படுத்தப் பட்ட எரிபொருள் வினையில் ஈடுபட்டு வெப்பத்தை உருவாக்காது என்பதால் மீண்டும் அதனைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க இயலாது. இந்த பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருள் (Spent Nuclear Fuel (SNF)) மிகவும் வெப்பமாகவும், அதிக கதிரியக்கம் கொண்டதாகவும் இருக்கும். எனவே இதனைக் கையாள சிறப்பு கவசம் தேவைப் படுகிறது.
கீழேயுள்ள அட்டவணை கூடங்குளம் அணு சக்தி உலை (KKNPP)யின் முக்கியக் கட்டங்களை விவரிக்கிறது.
1. 1988 கூடங்குளம் பகுதியில், அணு உலை நிறுவுவதற்காக, அணு சக்தி ஒழுங்காற்றுக் கழகம்(AERB) சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு (Site Evaluation Report (SER)) கீழ்கண்ட காரணிகள் அடிப்படையில் இருந்தது.
1) இரண்டு அணு உலைகள் மட்டும் அங்கு அமைப்பது.
2) அணு உலையில் பயன்படுத்தப்பட்ட எரி பொருளை (SNF), கடல் வழியாக சோவியத் யூனியனுக்குக் கொண்டு சென்றுவிடுவது.
2. 26.12.1988 அணு உலைக்கு தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கியது.
3. 13.02.1989 தமிழக அரசு, 26.12.1988 அன்று வழங்கிய அனுமதியில் கூடுதலாகக் கீழ் கண்ட நிபந்தனைகளைச் சேர்த்தது.
1) கடலின் மீன் வளம் பாதிக்கப் படாமலிருக்க, அணு உலையிலிருந்து கடலில் வெளியேற்றப்படும் தண்ணீரின் வெப்பம், கடல்நீரின் வெப்பத்தினை விடக் கூடுதலாக 6 சென்டிகிரேட் அளவுக்கு மேல் இருக்கக்கூடாது.
2) அணு உலைக் கழிவானது மறு உபயோகத்திற்காக எடுத்துச் செல்லப்படும் காலம் வரை, அக் கழிவு பாதுகாப்பாக தண்ணீர் தொட்டியில் வைக்கப்பட வேண்டும்.
3) பேச்சிப் பாறை அணையிலிருந்து குழாய் வழியாக, நன்னீர் எடுக்கப்படும். குழாயில் பிரச்னைகளோ அல்லது அணையிலிருந்து நீர் வராமல் போனாலோ, நிலத்தடி நீர் எடுத்துக் கொள்ளப்படும்.
4.
09.05.1989 மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, அணு உலைக்கு அனுமதி வழங்கியது. மேலும் 1981 ஆண்டு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அரசு வெளியிட்ட உத்திரவான கடற்கரையின் உயர் அலைப் பகுதியிலிருந்து (High Tide Line) 500 மீட்டருக்குள் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்ற உத்திரவிலிருந்து அணு உலைக்கு மத்திய அரசு விலக்கு அளித்தது. இந்த அரசாணையில் அணு உலையிலிருந்து கடலில் வெளியேற்றப்படும் தண்ணீரின் வெப்பம் கடல்நீர் வெப்பத்திலிருந்து 5 சென்டிகிரேடுக்கு மேல் இருக்ககூடாது என்றும், பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.
5. 10.11.1989 அணுசக்தி ஒழுங்காற்று கழகம் (AERB) அணு உலைக்கு முடிவு செய்யப்பட்ட பகுதியில், அணு உலை கட்ட அனுமதி வழங்கியது.
6. 20.11.1989 இந்திய அரசு, சோவியத் யூனியனுடன் 1000 மெகாவாட் திறனுள்ள இரண்டு V.V.E.R ( Vodo-Vodyanoi Energetichesky Reactor or Water-Water Power Reactor) அணு உலை வாங்க ஒப்பந்தம் செய்தது. இதில் அணு உலைக் கழிவை (SNF), சோவியத் யூனியனுக்கே எடுத்துச் சென்று விடுவது என முடிவானது. ஆனால் சோவியத் யூனியன் உடைந்ததால், இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை.
7. 19.02.1991 கடற்கரை ஒழுங்காற்றுப் பகுதி (CRZ) அறிக்கை, 1986 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் படி வெளியிடப்பட்டது. இதன் படி கடற்கரையின் உயர் அலைப் பகுதியிலிருந்து (High Tide Line), 500 மீட்டர் தூரத்துக்குள் தொழிற்சாலைக் கட்டுவது தடை செய்யப்பட்டது. ஆனால், கடற்கரையைப் பயன்படுத்த வேண்டிய தொழிற்சாலைகள், பாதுகாப்புத் துறைக்கானத் தேவைகள், மற்றும் அணுசக்தித் துறையின் (DAE) திட்டங்கள் ஆகியவை விதிவிலக்கு அளிக்கப்பட்டன. இதன்படி பார்த்தால், 500 மீட்டருக்குள் KKNPP –யை கட்ட இயலாது. ஏனெனில், அணு உலை, கடற்கரையைப் பயன்படுத்த வேண்டிய தொழிற்சாலை அல்ல, மேலும் KKNPP இந்திய அணுசக்தி கார்பரேசன் லிமிட். (NPCIL) என்ற வணிக நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள, அரசுக் கம்பெனி ஆகும். இது அரசுத் துறையான அணுசக்தி துறை (DAE) யின் சலுகைகளைக் கோர முடியாது. அரசுத்துறையும், அரசுக் கம்பெனிகளும் வெவ்வேறானவை என்பதை ஏற்கனவே பல உச்ச நீதி மன்ற தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன.
8. 27.01.1994 சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்-1986 மாசினைக் கட்டுப் படுத்தவும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் பல வழிமுறைகளைக் கொண்ட EIA (Environment Impact Assesment) அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை, ஒரு புதிய தொழிற்சாலை ஒரு பகுதியில் வருவதற்கு முன், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், பின் பொது மக்களின் கருத்து கேட்பு நடத்தப்படவேண்டும் எனவும், எதிர்ப்புக் கருத்துக்கள் பதிவு செய்யப் பட வேண்டும் எனவும், அதற்கான விளக்கத்தை அந்தத் தொழிற்சாலைத் தர வேண்டும் எனவும், பின்பு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் வல்லுநர் ஆய்வுக் குழு (Expert Appraisal Committee (EAC)) அந்த தொழிற்சாலைக்கு அனுமதி வழங்குவது பற்றி முடிவு செய்யும் என்றும், இந்த அனுமதியும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே செல்லும் எனவும், அந்த 5 ஆண்டுகளுக்குள் தொழிற்சாலை தொடங்கப் பட வேண்டும் எனவும் குறிப்பிட்டது. அதே போல், 1994க்கு முன் அனுமதி பெற்றத் தொழிற்சாலைகள், நிலத்தை கையகப்படுத்தி, அந்த மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதியும் பெற்றிருக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில், அந்த தொழிற்சாலைகள் மீண்டும் அனுமதி பெற வேண்டும் எனவும் இந்த அறிக்கை குறிப்பிட்டது. ஆனால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டத் தேதி வரை, KKNPPக்கான நிலம் கையகப்படுத்தப்படவுமில்லை, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து அனுமதி பெறப்படவுமில்லை. எனவே, மீண்டும் அணு உலை செயல் பட அனுமதி புதியதாக வாங்கியிருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.
9. 25.03.1997 அணு உலை திட்டத்தினை மறுபடியும் புதுப்பிக்க புதிதாக உருவான ருஷ்ய நாட்டுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.(ருஷ்யா வேறு, சோவியத் யூனியன் வேறு). புதிய ஒப்பந்தம் படி அணுக் கழிவுகள், இந்தியாவில் வைத்திருந்து பின் ருஷ்யாவுக்கு கடல் வழி எடுத்துச்செல்வது என முடிவானது. பின் அணுசக்தி ஒழுங்காற்றுக் கழகம் (AERB), இந்தக் கழிவுகள் மறு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும் என அறிவித்தது. மறு பயன்பாட்டுக்கான ஆலைகள் எப்போது எங்கே நிறுவப்படும் என்று எந்த அறிப்புமில்லை. பல ஆயிரம் ஆண்டுகள் வரை ஆபத்தான கதிரியக்கத்தை வெளியிடும் தன்மை கொண்ட இக் கழிவினை கொண்டு செல்லும் வழியில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் அச்சப்பட வேண்டியுள்ளது.
10. ஜீன் 2001 தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணுசக்தி கார்பரேசனுக்கு (NPCIL) சுற்றுச்சூழல் பாதிப்பு அனுமதி ( environment clearance) பெறாது அணு உலை கட்டப் படக்கூடாது என்று அறிக்கை அனுப்பியது.
11. 06.09.2001 மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தனது அரசாணையில் அணு உலைக்காக 1989- மே மாதம் பெற்ற அனுமதி செல்லும் எனவும் மீண்டும் பொதுமக்கள் கருத்து கேட்பு நடத்தி, புதிய அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்றது.
12. அக். 2001 அணு உலை கட்டுமானப் பணிகளுக்கு நிலத்தில் அஸ்திவாரம் தோண்ட அனுமதி வழங்கியது, அணுசக்தி ஒழுங்காற்றுக் கழகம் (AERB).
13. ஜன. 2003 அணு உலை கட்டுமானப்பணிகள் துவங்கிவிட்ட நிலையில், சுற்றுச் சூழல் பாதிபு அறிக்கையை (EIA), இந்திய அணுசக்தி கார்பரேசன், சுற்றுச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்துப் (NEERI) பெற்றது. இதில் அணு உலைக் கழிவின் சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து எந்த ஆய்வும் இல்லை. இந்த அறிக்கையும், பேச்சிப்பாறை அணையிலிருந்து குளிர்விப்பானுக்கான நீர் பெறப்படும் என்ற அடிப்படையிலேயே உருவாகியுள்ளது. இதில் கடல் தண்ணீரை நன்னீராக்கி அணு உலைக்கு பயன்படுத்துவதால் ஏற்படும் தாக்கம் குறித்து எந்த ஆய்வுமில்லை. மேலும் இந்த அறிக்கை அணு உலையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வெப்பம், கடல் தண்ணீரின் வெப்பத்தினை காட்டிலும் 7 செண்டிகிரேட் அதிகம் இருக்கலாம் என்றது.
14. 25.02.2004 தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அணு உலை நிறுவ ஒப்புதல் வழங்கியது (consent to establish)
15. 09.06.2012 அணு உலை சுற்றுப்பகுதியில் உள்ள மக்களுக்கு அவசர கால பேரிடர் மேலாண்மை பயிற்சி நக்கநேரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால் மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL) சார்பில் நடைபெற்ற உண்மையறியும் குழு விசாரணையில் அவ்விதமாக எந்த பயிற்சியும் மக்களுக்கு வழங்கப்படவிலை எனவும், வழிமுறைகள் பின்பற்றப் படவில்லை எனவும் உறுதி செய்யப்பட்டது.
15. ஜூலை 2012 தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அணு உலை செயல் பட அனுமதி வழங்கியது.

மேற்கண்டத் தொடர் நிகழ்வுகள், இந்திய அணுசக்தித் துறை, அணுசக்தி ஒழுங்காற்றுக் கழகம், மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆகியவை தொடர்ந்து சட்டங்களையும் பாதுகாப்பு வழிமுறைகளையும் மீறி, கூடங்குள அணு உலை நிறுவியதை வெளிப்படுத்தும். இந்நாள் வரை, அணு உலைகள் 1 & 2 ஆகியவற்றிற்கு, கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் (CRZ) அனுமதி பெறப்படவிலை . அவ்வாறு பெறவும் சட்டத்தில் வழியில்லை. மேலும் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தின் சுற்றுச் சூழல் பாதிப்பு, அணுக் கழிவுகளை பாதுகாப்பது அல்லது அவற்றை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்வது, அவற்றை மறு உபயோகம் செய்வது ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எந்த ஆய்வும் செய்யப் படவில்லை. இந்திய அரசின் வல்லுநர் குழுவின் அறிக்கையின்படி, அணுக்கழிவை எங்கே, எப்படி, எப்போது மறு உபயோகம் செய்யப் போகிறார்கள் என்பது, இந்திய அரசின் அணுசக்தி கார்பரேசன் மற்றும் அணுசக்தி ஒழுங்காற்றுக் கழகம் ஆகியவைகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளது.
*****************************************************************************

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-10-2015

#AtomicEnergy | #KudankulamNuclearPowerPlant #KsRadhakrishnan

#KSR_Posts

http://ksr1956blog.blogspot.in/2014/09/10092014.html
http://ksr1956blog.blogspot.in/2014/09/blog-post_10.html
http://ksr1956blog.blogspot.in/2015/03/blog-post_62.html
http://www.dinamani.com/editorial_articles/article691529.ece?service=print

No comments:

Post a Comment