Tuesday, October 27, 2015

கி.ரா தொடர் “மனுஷங்க” | திண்ணை



கி.ரா தொடர் “மனுஷங்க” | திண்ணை __________________________________________ தமிழ் இந்தி நாளேட்டில், செவ்வாய் மண்மணம் பகுதியில் கி.ரா எழுதும் “மனுஷங்க” என்ற தொடரில், காருக்குறிச்சி அருணாச்சலத்துக்கு அண்ணன் ஒருவர் இருந்ததாகவும், சின்ன அருணாச்சலம் பிற்காலத்தில் காருக்குறிச்சி அருணாச்சாலம் என்று பிரசித்தி பெற்றதைக் குறிப்பிட்டுள்ளார். தஞ்சை மண்ணில் சின்னப்பக்கிரி என்பவர் நாயனத்தில் கொடிகட்டிப்பறந்ததாகவும், யாரையும் லேசில் பாராட்டிவிடாத விளாத்திகுளம் சாமிகளே சின்னப்பக்கிரியைப் பாராட்டியுள்ளதாகச் சொல்லியுள்ளார். கிராமத்தில் நல்லது பொல்லதுகளுக்கு நகை பட்டுப்புடவை எடுக்கவேண்டுமென்றால் திருநெல்வேலியைவிட மதுரைக்குத் தான் செல்வதுண்டு. குறிப்பாக மதுரை விஜயலெட்சுமி ஹால் அப்போது பிரபலம். இதனுடைய விளம்பர போர்டு வித்யாசமாக இருக்கும். முக்கோண வடிவத்தில் சங்கீத வித்வான்கள் நாயனம் வாசிப்பதும், மங்கள மேளம் அடிப்பது போன்ற மங்கள வாத்தியங்களை இசைக்கும் கலைஞர்களுடைய படத்தோடு, வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இருக்கும் அந்த விளம்பரத்தைப் பார்க்கவே ரசிக்கக்கூடிய அளவில் இருக்கும். நகைகள் மட்டும் மதுரை தெற்கு ஆவணிமூலவீதியில் வாங்குவதுண்டு. தமிழகத்திலேயே ஒரே வீதியில் அதிக நகைக்கடைகள் அமைந்திருப்பது, தெற்கு ஆவணி மூல வீதிதான். அந்தக் கடைகளில் ஒவ்வொரு கடைகளுக்கும் ஏறி விதவிதமான நகைகளைப் பார்த்து இறுதி முடிவாக ஒரு கடையில் நகைகள் வாங்குவது இயல்பான காரியம். குறிப்பாக திருமண நிகழ்வுக்கு பட்டு, நகைகள் மற்ற பொருட்களை வாங்கவேண்டுமென்றால் பெரிய பட்டியல் போட்டு மதுரையில் இரண்டுநாட்கள் தங்கியிருந்து அக்காலத்தில் திருமணவீட்டினருக்கு வாடிக்கையாக இருந்தது. குறிப்பாக, மதுரைக்குத் தெற்கே கோவில்பட்டி, இராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, அதேபோல இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி போன்ற பகுதிகளிலிருந்தும் திருமண சாமான்கள் வாங்க மாசி வீதி, ஆவணிமூல வீதிகள், டவுண்ஹால் ரோடு, சித்திரை வீதிகள் என சுற்றியலைந்து வாங்குவது அக்கால வாடிக்கை. இன்றைக்கு பட்டுத்துணி வாங்கவேண்டுமென்றால் சென்னைக்கும், காஞ்சீபுரத்துக்கும் வந்துவிடுகிறோம். அப்போது சென்னை என்றால் எண்ணிப்பார்க்கமுடியாத தூரத்தில் இருந்ததாக மனத்தளவில் மக்களிடன் சிந்தனைகள் இருந்தது. இதைத்தான் மனுசங்க என்ற பகுதியில் பெரியவர் கிராமத்தில் கோவிலுக்கு வேண்டிய அத்தனை சாமான்களையும் வாங்கிவந்ததாக விளக்கத்தோடும், மண் வாசனையோடும் இன்றைய தொடரில் குறிப்பிட்டுள்ளார். கி.ராவின் “திண்ணை” பற்றிய விளக்கம் குமுதம் தீபாவளி சிறப்பிதழிலும் வந்துள்ளது. திண்ணையைப் பற்றி கி.ரா சொல்லுகிறார் நம்ம “வீட்டுச் சத்திரம்” என்று. திண்ணையில் வந்து உட்காருகிறவர்களுக்கு சாப்பாடு கொடுக்கலைன்னாலும், தண்ணியாவது கொடுக்கவேண்டும் என்பதுதான் கிராமத்து வழக்கம். திண்ணையைக் கட்டிவிட்டுத்தான் பாக்கி வீட்டைக் கட்டுவாங்க. திண்ணையில் வெளித்திண்ணை, உள்திண்ணை (இது வீட்டில் உள்ள பெண்களுக்காகக் கட்டப்பட்டது, மணக்கோலத்திண்ணை ( திருமண வைபவங்களுக்காகக் கட்டப்பட்டது) இப்படி திண்ணைகளில் வகைகளும் உண்டு. சத்திரமாக மட்டுமில்லாமல் அந்தகாலத்தில் புறணிபேசும் இடமாகவும், பழைய சமாச்சாரங்களை அசைபோடும் மடமாகவும் தான் திண்ணைகள் இருந்தன. அன்னச் சத்திரங்களைப் போன்று அமரும் திண்ணைகளும் அக்கால வாழ்க்கையில் இணைந்தவை. -கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 27-10-2015. #கிரா #மனுஷங்க #மதுரை #திண்ணை #KsRadhakrishnan #KSR_Posts

No comments:

Post a Comment

*If you're not making mistakes. Then you're not making decisions*

*If you're not making mistakes. Then you're not making decisions*. You know success seems to be connected with action. Successful pe...