Tuesday, October 13, 2015

திருவண்ணாமலை கவுத்திமலை - Tiruvannamalai Kavuthi malai


திருவண்ணாமலை அருகேயுள்ள கவுத்திமலையின் இயற்கையை பாழ்படுத்தும் வகையில் இரும்பு தாது வடிவில் புதிதாக ஆபத்து தோன்றியுள்ளது. அதுகுறித்து கடந்த 11.10.2015 அன்று தமிழ் ஹிந்து நாளிதழில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயற்கை சூழலை பாதிக்ககூடிய வகையில் பல திட்டங்களை கொண்டுவந்து அழிவுக்கு பாதை வகுக்கிறோம். அது குறித்தான பதிவு ...



வரலாற்றுச் சிறப்புமிக்க கவுத்தி மலை, திருவண்ணாமலையில் இருந்து 8. கி.மீ தொலைவில் உள்ளது. மூலிகைச் செடிகள், வானுயர்ந்த மரங்கள்மற்றும் இயற்கை நீர்வீழ்ச்சிகள், நீரூற்றுகள், அரிய வகை விலங்குகள், பறவைகள் உள்ளன. மக்களின் வாழ்வாதாரத்திலும் கவுத்தி மலை முக்கிய பங்கு வகிக்கிறது. தொன்றுதொட்டு பாதுகாக்கப்பட்டு வந்த கவுத்தி மலைக்கு “இரும்புத் தாது” வடிவில் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கவுத்தி மலையில் இரும்புத் தாது இருப்பது அரை நூற்றாண்டுக்கு முன்பே உறுதி செய்யப் பட்டுள்ளது. அதன்பிறகு பல கட்ட ஆய்வுகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டன. அதன் அடிப்படையில் கவுத்தி மலையில் இருந்து இரும்புத் தாது வெட்டி எடுப்பது என்ற முடிவுக்கு அரசுகள் வந்தன. 92.9 மில்லியன் டன் இரும்புத் தாது உள்ள கவுத்தி மலையில் இருந்து 35 மில்லியன் டன் இரும்புத் தாது வெட்டி எடுக்கலாம் என்று உறுதி ஆனது. 325 ஹெக்டர் நிலத்தில் இருந்து இரும்புத் தாது வெட்டி எடுக்கும் பணியை மேற்கொள்ள ஜிண்டால் என்ற எஃகு நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதற்கான ஒப்பந்தம் தமிழ்நாடு இரும்புத் தாது சுரங்க நிறுவனம் - ஜிண்டால் நிறுவனம் இடையே 29-03-2005-ல் கையெழுத்தானது. பின்னர், கவுத்தி மலையில் இருந்து இரும்புத் தாது வெட்டி எடுக்கும் பணியை மேற்கொள்ள, ஜிண்டால் நிறுவனம் முழுவீச்சில் இறங்கியது.

அப்போதுதான், தங்களது வாழ்வாதாரத்துக்கு உலை வைக்க போகிறார்கள் என்பதை கவுத்தி மலையைச் சுற்றியுள்ள 51 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உணர்ந்தனர். விவசாயத்துக்கு வைக்கப்படும் வேட்டு என்பதை கிராம மக்கள் புரிந்து கொண்டனர். கவுத்தி மலை மற்றும் வேடியப்பன் மலை பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி போராட்டத்தைத் தொடங்கினர். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் குரல் எழுப்பினர்.

இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் தடையில்லாச் சான்று கேட்டு 2008-ல், ஜிண்டால் நிறுவனம் விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பத்தில், மக்களிடம் கருத்து கேட்காமலேயே கேட்டதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது. மேலும், கவுத்தி மலையில் இருந்து 8 கி.மீ தொலைவில் ஆன்மிக ஸ்தலமான அண்ணாமலை இருப்பது குறித்து குறிப்பிடாமல் மறைக்கப்பட்டது. அவர்கள் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையில், சாத்தியக்கூறு களை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. 2 ஆண்டுகள் கடந்தும் சமர்ப்பிக்காததால், அந்த விண்ணப்பம் காலாவதி யானது. இதை எதிர்த்து, அந்த நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதற்கட்டமாக 325 ஹெக்டருக்கு பதிலாக 23 ஹெக்டர் நிலப் பரப்பில் இரும்புத் தாது எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

நிம்மதியை இழந்த மக்கள்

ஜிண்டால் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், பி.வி.ஜெயகிருஷ்ணா தலைமையிலான குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்தது. பி.வி.ஜெயகிருஷ்ணா தலைமையிலான குழு, கடந்த 07-02-2014-ல் ஆய்வு நடத்தியது. வருவாய்த் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்த குழு, பின்னர் கவுத்தி மற்றும் வேடியப்பன் மலைக்குச் சென்று ஆய்வு செய்தது. மரங்கள், விலங்குகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குழுவின் அறிக்கை, ஜிண்டால் நிறுவனம் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. அவர்களுக்கு எதிராகவே முடிந்தது.

இது, 51 கிராமங்களின் வசிக்கும் மக்களுக்கு ஆறுதலை அளித்தாலும், நிம்மதி கிடைக்க வில்லை. ஏனென்றால் ஜிண்டால் நிறுவனத்தின் முயற்சி இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கவுத்தி மலையை மட்டும் ஜிண்டால் நிறுவனம் கையகப்படுத்தவில்லை. மலையைச் சுற்றி வனத்துறைக்குச் சொந்தமான 6,483 ஏக்கர், பாசன நிலம் 6,445 ஏக்கர், நீர்பாசனம் இல்லாத நிலம் 7,227 ஏக்கர், விவசாய நிலம் 2,622 ஏக்கர் உட்பட மொத்தம் 26,918 ஏக்கர் நிலத்தையும் வளைத்து போடுகிறது. இரும்புத் தாது பிரித் தெடுக்கும் பணி, அவற்றை கொண்டு செல்ல வழித்தடம், கழிவுகளை கொட்டுவது போன்ற பணிகளுக்காக நிலங்களை பறிக்க முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இரும்புத் தாது எடுக்க அனுமதி கிடைத்து, மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டமும் நிறைவேறி இருந்தால் 26,918 ஏக்கர் நிலம் பறிபோயிருக்கும் என்கின்றனர் போராட்டக் குழுவினர்.

விவசாயம் நசுக்கப்படும்

கவுத்தி மலையை சுற்றியுள்ள 51 கிராமங்களில் நெல், சிறுதானியங்கள், மணிலா ஆகியவை அதிகளவில் பயிரிடப்படுகிறது. மேலும் உளுந்து, வாழை உள்ளிட்டவைகளும் சாகுபடி செய்யப்படுகிறது. நிலத்தடி நீரை நம்பித்தான் விவசாயிகள் உள்ளனர். பருவ மழை பொய்த்துப் போனதால், கடந்த 5 ஆண்டுகளாக வறட்சி நிலவுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து போனது. இந்த நிலையில் கவுத்தி மலையை சிதைத்தால், நீர் ஆதாரமே இருக்காது. அதனால், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிவிடும் என்கின்றனர் விவசாயிகள்.

2,22,397 மரங்கள் வெட்டப்படும்

அபூர்வ மூலிகை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களை கொண்டது கவுத்தி மலை. ஜிண்டால் நிறுவனத்துக்கு வழங்கப்பட இருந்த 325 ஹெக்டர் பரப்பளவில் 2,22,397 மரங்கள் தானாகவே வளர்ந்துள்ளன என்று வனத்துறை தெரிவிக்கிறது. தானாக வளர்ந்த மரங்களை அழிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் 12-12-1996-ல் உத்தரவு பிறப்பித்துள்ளது. மரங்களை அழிக்க வனத்துறை தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மலைகளின் சுற்றுப் பகுதியை எடுத்துக்கொள்கிறோம், மரங்கள் உள்ள மலையின் மேற்பகுதியை வனத்துறை பராமரிக்கட்டும் என்று ஜிண்டால் கூறுகிறது. அந்த பகுதிக்குச் செல்ல சரியான வழித்தடம் கிடைக்காது என்று கூறி, ஜிண்டால் யோசனையை வனத்துறை நிராகரித்து விட்டது.

180 பேருக்கே வேலைவாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் விவசாயத்தை நம்பி உள்ள மாவட்டமாகும். வறட்சி காரணமாக விவசாய தொழிலில் இருந்து விவசாயிகள் வெளியேறுவது என்பது தொடர்கிறது. அதனால், தொழிற்சாலைகளை கொண்டு வந்து வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஜிண்டால் நிறுவனம் வழங்கப் போகும் உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு எண்ணிக்கை என்பது 180 மட்டுமே. நெய்வேலியில் நிலக்கரி வெட்டி எடுக்க நிலம் கொடுத்தவர்களின் நிலையை கண் முன்னே பார்க்கும் நாங்கள், அந்த நிலை எங்களுக்கு ஏற்படாது என்பதற்கு என்ன நிச்சயம் என்கின்றனர் இளைஞர்கள்.

காது கேட்கும் திறன் பாதிக்கும்

இரும்புத் தாது வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் சுகாதாரத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இரும்புத் தாது வெட்டி எடுக்க பயன்படுத்தப்படும் ராட்சத இயந்திரங்களில் இருந்து 36.7 முதல் 56 டெசிபல் சத்தம் ஏற்படும். மலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் 35.7 முதல் 52 டெசிபல் சத்தம் கேட்கும். அதாவது, பணியில் ஈடுபட் டுள்ளவர்களுக்கு காது கேட்கும் திறன் அடியோடு பாதிக்கப்படும். அதேநிலை மலைகளைச் சுற்றி வசிக்கும் கிராம மக்களுக்கும் ஏற்படும். மேலும், இந்த அதிர்வு 15 கி.மீ சுற்றளவில் உணர முடியும். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நன்றாக காது கேட்கும் திறன் உள்ள நாங்கள், எதிர்காலத்தில் செவிடாக வலம் வர வேண்டுமா? என்று கேள்வி எழுப்புகின்றனர் கிராம மக்கள். ஒரு நூற்றாண்டு திட்டத்தின் மூலம் எங்கள் எதிர்கால வம்சத்தையே அழித்து ஜிண்டால் வம்சத்தை வாழ வைக்க மத்திய, மாநில அரசுகள் விரும்புகிறதா? என்று தெளிவுபடுத்த வேண்டும் என்கின்றனர்.

துரிஞ்சலாறு அழிந்துவிடும்

கவுத்தி மலையை சிதைக்கும்போது 15 ஏரிகளுடன் சேர்ந்து, ஒரு ஆற்றின் சுவடும் கூடவே அழிந்து போகும். அந்த மலையில் இருந்து உற்பத்தியாகும் துரிஞ்சலாறு பயணம் முடிவுக்கு வந்துவிடும். மேலும், துரிஞ்சலாற்றின் குறுக்கே கீரனூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டில் இருந்து புறப்படும் நந்தன் கால்வாயும் பாதிக்கப்படும். துரிஞ்சலாறு மற்றும் நந்தன் கால்வாய் மூலம் பயனடைந்து வந்த 100 ஏரிகள் வறண்டுவிடும். 20 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள், தரிசு நிலங்களாக மாறிவிடும். இதனால், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

நுரையீரல் பாதிப்பு

இரும்புத் தாது வெட்டி எடுக்கும்போது சிலிகா தூசிகள் காற்றில் கலக்கும். இதன் தாக்கம் 10 கி.மீ. சுற்றளவுக்கு இருக்கும் என்கின்றனர். சுற்றுச்சூழல் மட்டுமின்றி மனித இனத்தையும் மெல்ல மெல்ல அழிக்கிறது. தொழிலாளர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படும். அவர்களைப் போன்று மலைகளைச் சுற்றி உள்ள கிராம மக்களும் பாதிக்கப்படுவர். அதனால், மூச்சுத் திணறல் ஏற்படும். இந்த பாதிப்பு என்பது, கிராமங்களை கடந்து திருவண்ணாமலை நகரில் வசிக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். காற்று மற்றும் குடிநீர் மாசு ஏற்படும். நுரையீரல் மற்றும் காது கேட்கும் திறன் பாதிப்புக்கு, மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் என்று ஜிண்டால் நிறுவனம் அடிக்கடி கூறி வந்துள்ளது.

வருமுன் காப்போம் என்பதை விட, வந்த பிறகு சிகிச்சை என்பதை ஏற்க மறுக்கின்றனர் 51 கிராம மக்கள். இவர்களது போராட்டமும் இதே திசையை நோக்கித்தான் விடியலுக்காக பயணித்துக் கொண்டிருக்கிறது.

சாத்தனூர் அணை வறண்டுவிடும்

இரும்புத் தாது பிரித்து எடுக்கும் பணிக்கு தண்ணீர் மிக முக்கியமானது. ஒரு நாளுக்கு 560 கன மீட்டர் (5,60,000 லிட்டர்) தண்ணீர் தேவை. இரும்புத் தாதுவை செறிவூட்ட 4 லட்சம் லிட்டர் தண்ணீரும், கழிவை பிரிக்க 1.35 லட்சம் லிட்டர் தண்ணீரும், மரங்களை வளர்க்க 3 ஆயிரம் லிட்டர் தண்ணீரும், தொழிலாளர்களின் குடிநீர் தேவைக்காக 2 ஆயிரம் லிட்டர் தண்ணீரும், இதர தேவைகளுக்கும் சேர்த்து மொத்தம் 5.60 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அந்த தண்ணீரை நிலத்தடி மற்றும் சாத்தனூர் அணையில் இருந்து எடுப்பது என்பது திட்டம். அதற்காக, சாத்தனூர் அணையில் இருந்து 25 கி.மீ தொலைவுக்கு குழாயை புதைத்து தண்ணீர் கொண்டு வரப்படும்.

வறட்சி நிலவுவதால் நிலத்தடியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் எதிர்க்கிறது. சாத்தனூர் அணையில் இருந்து திருவண்ணாமலை, புதுப்பாளையம் மற்றும் செங்கம் நகரங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும், 208 கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. குடிநீர் திட்டத்துக்காக ஆண்டுக்கு 322 மில்லியன் கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஜிண்டால் நிறுவனத்துக்கு தண்ணீர் கொடுத்தால், சாத்தனூர் அணை வறண்டுபோகும் என்கின்றனர் பொதுப்பணித் துறையினர்.

650 டன் பிராணவாயு வீணாகும்

மரங்களை அழிப்பதால், அந்த பகுதிகளில் பிராண வாயு குறைகிறது. ஒரு ஹெக்டரில் உள்ள மரங்கள், 3.7 டன் கரியமில வாயுவை உட்கொண்டு 2 டன் பிராணவாயுவை கொடுக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அப்படி இருக்கும்போது, 325 ஹெக்டரில் உள்ள மரங்களை அழிப்பதன் மூலம் 650 டன் பிராணவாயுவை இழக்க நேரிடும்.

மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் எவ்வளவு பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்த போகிறது என்று உணரவில்லை. ஏதோ மரங்கள் என்று அலட்சியமாக கூறி வெட்டுகின்றனர். மரங்களை அழிப்பது என்பது தற்கொலைக்கு சமமானது என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். கவுத்தி மலையில் உள்ள மரங்களை அழித்தால் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதுமே பாதிப்பை ஏற்படுத்தும்.

இரும்புத் தாதுக்காக விநோத ஒப்பந்தம்

கவுத்தி மலையில் இரும்புத் தாது எடுக்க அனுமதிக்கப்பட்ட ஜிண்டால் நிறுவனப் பங்கு 99 சதவீதம். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் ஒரு அங்கமான தென்னக இரும்பு மற்றும் எஃகு நிறுவனத்தின் பங்கு ஒரு சதவீதம். அதன்படி, ஜிண்டால் நிறுவனம் ரூ.135 கோடியும், தென்னக இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் ரூ.1.35 கோடியும் முதலீடு செய்யும். லாபத்தில் ஒரு சதவீத பங்கை முதல் 3 ஆண்டுகளுக்கு கொடுக்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.

அதன்பிறகு லாப கணக்கு அடிப்படையில் ஜிண்டால் நிறுவனம் தீர்மானிக்கலாம் அதாவது ரூ.99 கோடி தனியாருக்கு, ரூ.1 கோடி அரசுக்கு. இந்த நிலையில் ஒப்பந்தம் போட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு, தென்னக இரும்பு மற்றும் எஃகு நிறுவனத்தை ஜிண்டால் நிறுவனமே வாங்கிவிட்டது. அதனால், அரசுக்கு ஒரு சதவீதம் கூட கிடைக்க வாய்ப்பு இல்லை என்கிறது போராட்டக் குழு.

டி.எஸ்.சங்கர் (வழக்கறிஞர்)

93 மில்லியன் டன் இரும்புத் தாது உள்ள கவுத்தி மலையில் 35 மில்லியன் டன் மட்டும் வெட்டி எடுக்க அனுமதிப்பதாக ஒப்பந்தம் கூறுகிறது. மீதம் உள்ளவை அப்படியே இருக்கும் என்கின்றனர். அதற்கு உத்தரவாதம் தர முடியுமா? கர்நாடக மாநிலத்தில் சுரங்கப் பணிகளில் ரூ.830 கோடிக்கு இழப்பு ஏற்படுத்திவிட்டதாக ஜிண்டால் மீது வழக்கு உள்ளது. அப்படிப்பட்டவர்களை தமிழகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது.

த.ம.பிரகாஷ் (சமூக ஆர்வலர்)

35 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்குத் தொடர்ச்சி மலை உருவானதாக வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர். தொன்மை வாய்ந்த மலை. அதனை, சீரழிக்க அனுமதிக்கக் கூடாது. மலைகள், காடுகள், நதிகள் ஆகியவை மனித குலத்துக்கு இயற்கை கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷம். இயற்கையை அழித்தால், உயிரினங்கள் அழியும். பாலாறு, நொய்யலாறுக்கு ஏற்பட்ட நிலைமை கவுத்தி மலைக்கு ஏற்பட்டுவிடக்கூடாது.

கே.அண்ணாமலை (போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்)

கவுத்தி மலை அழிக்கப்பட்டால் எங்களது வாழ்வாதாரமான விவசாயம் அழிந்துவிடும். கவுத்தி மலையில் இருந்து இரும்புத் தாது எடுக்க ஜிண்டால் நிறுவனத்தை அனுமதிக்கமாட்டேன் என்று சேலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அந்த நம்பிக்கையில் உள்ளோம். கவுத்தி மலையை தொட நினைத்தால் போராட்டம் வெடிக்கும்.

பலராமன் (விவசாயி)

கவுத்தி மலை - வேடியப்பன் மலையை பாதுகாக்க பல்வேறு குழுக்கள், அரசியல் கட்சிகள் தனித்தனியாக போராடுகின்றன. அனைவரும் ஒன்றாக இணைந்து போராடினால், ஜிண்டால் நிறுவனத்துக்கு எதிரான போராட்டம் வலுவாக இருக்கும். அதன் தாக்கம் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரொலிக்கும்.

கவுத்தி மலையில் ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும்

கவுத்தி மலையில் 92.9 மில்லியன் டன் குறைந்த தர இரும்புத் தாது உள்ளது. அதில், 35 மில்லியன் டன் இரும்புத் தாது வெட்டி எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. அதாவது ஓர் ஆண்டுக்கு 1.18 மில்லியன் டன் இரும்புத் தாது வெட்டி எடுக்கப்படும். அதற்காக பூமிக்கு அடியில் 2 கி.மீ ஆழத்துக்கு சுரங்கம் தோண்டப்படும். ஒரு டன் வெட்டி எடுக்கும்போது 40 சதவீத இரும்புத் தாது கிடைக்கும். மீதமுள்ள 60 சதவீதம் கழிவுகள். அதனை, மலையைச் சுற்றி கையகப்படுத்தப்படும் நிலங்களில் 361 மீட்டர் உயரம் வரை கொட்டப்படும். அந்த கழிவுகளால் மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்று கூற முடியுமா என்று கேள்வி எழுப்புகின்றனர் 51 கிராமங்களைச் சேர்ந்த மக்கள்.

கவுத்தி மலை என்பது மிகப்பெரிய பொக்கிஷம். இந்த மலையில் உள்ள இரும்புத் தாதுவை வெட்டி எடுத்து விற்பனை செய்தால் தோராயமாக ரூ.10 ஆயிரம் கோடி வரை கிடைக்கும் என்கின்றனர். இரும்புத் தாதுவை கட்டிகள், துகள்கள், நீல தூசி என்று பல ரகங்களாக பிரித்து விலையை நிர்ணயம் செய்கின்றனர். அதில், ஒரு டன் இரும்புத் தாது குறைந்தபட்சம் ரூ.1,400-ல் இருந்து அதிகபட்சம் ரூ.7,350 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் கிடைக்கும் இரும்புத் தாது சீனாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13-10-2015


‪#‎KSR_Posts‬ ‪#‎KSRadhakrishnan‬ #kavuthimalai #Tiruvannamalai

No comments:

Post a Comment

*திரும்பிப்பார்க்க வைத்துவிட்டார்* #*Annamalai*! *DMKக்கு 2026 ஈசியல்ல*! | *K.S. Radhakrishnan* | #*Vijay* #*Admk*|*KSR*

*திரும்பிப்பார்க்க வைத்துவிட்டார்* #*Annamalai*! *DMKக்கு 2026 ஈசியல்ல*! |  *K.S. Radhakrishnan* | #*Vijay* #*Admk*|*KSR*  #Chanakyaa #ksrad...